“… … … வாழிய நெஞ்சே வெய்துற
இடியுமிழ் வானம் நீங்கி யாங்கனும்
குடிபதிப் பெயர்ந்த சுட்டுடை முதுபாழக்
கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்
பொறி கண்டழிக்கும் ஆவண மாக்களின்
உயிர்திறம் பெயர நல்லமர்க் கடந்த
… … …”
- மருதனிள நாகனார் – அகநானூறு 77 (4 – 9)
(தலைமகன் பிரியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்குவித்தது)
விளக்கம் :
இடிகளை உமிழும் வெம்மை மிகுந்த பாலை வழியினூடே செல்லும்போது, மழை இல்லாததால் மாற்றிடங்களுக்கு நகர்ந்துவிட்ட மக்களால் நகரங்கள் கைவிடப்பட்டு பல இடங்கள் பாழடைந்து கிடக்கும். அங்கே குடவோலைப் பானையைச் சுற்றியுள்ள கயிற்றை நீக்கி, பொறிக்கப்பட்ட இலச்சினையைப் பெயர்த்து, அதனுள் இருக்கும் ஓலைக்கட்டுகளைக் கவனமாகப் பிரித்தெடுக்கும் ஆவண மாக்கள் போல செஞ்செவியுடைய பருந்துகள், போரில் அஞ்சாநெஞ்சம் படைத்த வீரரின் குடலைக் கண்டோர் அஞ்சுமாறு கவர்ந்து போகும்.
இக்கால மக்களாட்சிக்கு முன்னோடியான குடவோலை முறை :
பொருளீட்டுவதற்காகத் தலைவியை நீங்கி பாலை நிலம்வழி பயணப்படும் தலைவன், அக்கொடுமையான பாலை நிலத்தின் தன்மைகளை நினைவு கூர்வதோடு, பிரிவுத்துயரால் வாடும் தலைவிக்கு இரங்கும்படியாக இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இறந்த உடல்களைத் தின்று வாழும் எருவைக் கழுகின் செயலொன்றுக்கு உவமையாகக் குடவோலை முறை காட்டப்பட்டுள்ள நயம் வியக்கத்தக்கது.
உள்ளாட்சி அமைப்புகளில் இன்றைய வார்டு போல குடும்புகள் எனப்பட்ட ஊர்ப்பகுதியினர், வாரியங்கள் எனப்பட்ட ஊராண்மை, நாட்டாண்மை ஆற்றும் தன்னாட்சி அமைப்புகளுக்கு உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பார்கள். பஞ்ச வாரியம், நீர் வாரியம், பொன் வாரியம் எனக் கிட்டத்தட்ட பன்னிரு வாரியங்களை ஏற்று நடத்தத் தகுதியுடையார் என உடன்பாடு தெரிவிக்கும் விதமாகப் பலருடைய பெயர்கள் எழுதப்பட்டு குடத்தின்கண் போடப்பட்ட ஓலைகளை ஆவண மாக்கள், பலர் முன் குடத்தின் மேலிட்ட இலச்சினையைக் கண்டு, நீக்கி உள்ளிருக்கும் ஓலைகளை எடுத்து எண்ணி, தேர்ந்து எடுக்கப்பட்டவர் இவரென முடிவு செய்வதொரு வழக்கத்தினை இப்பாடல் குறிக்கின்றது. இது “குடவோலை முறை” என்று அறியப்படும். பின்னாளில் கி.பி 907-953 இல் முதலாம் பராந்தகன் காலத்து உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் இம்முறை பற்றி மிக விரிவாகப் பேசுகின்றன. குடவோலை முறை சங்ககாலம் முதலே தமிழனின் அரசியல் மேலாண்மையில் முக்கியமான வழக்காறாய் நடைமுறையில் உள்ளது என்பது இந்த அகநானூறு பாடல் மூலம் தெரிய வருகிறது.
நீர்நிலைகள் பராமரிப்பு, பொதுச் சொத்துப் பாதுகாப்பு உள்ளிட்ட பல பணிகளைச் செய்யும் இந்த வாரியங்கள், தன்னாட்சி உரிமைகளோடு இயங்கி, அந்தந்த பகுதிகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திட உடனடி முடிவுகளை எடுத்துச் செயல்படும்வண்ணம் தனித்தியங்கும் வல்லமை பெற்றவையாக இருந்தன. இதற்கான உறுப்பினர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவோராக இருந்தமை, முற்றதிகாரம் பெற்ற முடியாட்சிக் காலத்தில் மிகப்பெரிய விடயம் என்பதை மறுக்கவியலாது. இவற்றுக்கான உறுப்பினர்களின் தகுதியும், தேர்ந்தெடுக்கபடும் முறைமையும் பல்வேறு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே நடந்திருக்கின்றன என்பதையும் பல கல்வெட்டு ஆதாரங்கள் வழி அறிகிறோம். உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடாக மார்தட்டும் இந்திய ஒன்றியத்தில், மக்களாட்சி முறை எத்தகையதாக இருக்கிறது என ஒப்புநோக்கையில் தான், சோழர் காலக் குடவோலை முறையின் முக்கியத்துவம் நமக்குப் புரிகிறது. அவ்வகையில் இந்த முன்னோடித் தேர்தல் முறை, தமிழர் நாகரீகத்தை, நிர்வாகத் திறனைக் காட்டும் கண்ணாடியாக மிளிர்கிறது என்றால் அது மிகையில்லை.
திருமதி. விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.