சூலை 2023
இயற்கையை அழித்து இரண்டகம் செய்யும் ஆரியமும் திராவிடமும்
பனையூரில் வசிக்கும் ஒரு அழகான குடும்பம். மாறன் அவன் மனைவி பொற்கொடி. அவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன். மகள் அறிவுச்செல்வி. பத்து வயதாகிறது. அவ்வூரிலுள்ள அரசு ஆரம்பப் பாடசாலையில் நான்காம் வகுப்பு தேர்வாகி ஐந்தாம் வகுப்பில் சேர்ந்து ஒரு மாதம் ஆகிறது. படிப்பில் கெட்டிக்காரி. பெயருக்கேற்றார் போல் அறிவோடு திகழ்பவள்.
மகன் தமிழ்ச்செல்வன். ஆறு வயதாகிறது. அதே பாடசாலையில் முதலாம் வகுப்பு தேர்வாகி இரண்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருக்கிறான். துருதுருவென்று எதையும் அறிந்து கொள்ளும் வகையில் ஐயத்துடன் வினாக்களை எழுப்பிக் கொண்டே இருப்பான்.
அக்காள் அறிவுச்செல்வி பாடசாலைக்கு நடந்து செல்லும் வழியிலும், வீட்டிலிருக்கும் போதும், அவனது ஐயங்களுக்குத் தனக்குத் தெரிந்த அளவில் விடையளிப்பாள்.
ஓய்வு நாட்களிலும், மாலையில் ஓய்வு நேரங்களிலும் மாறனும், பொற்கொடியும், அறிவுச்செல்வியும், தமிழ்ச்செல்வனும் தமிழரின் வரலாறுகளைப் பேசி, விவாதிக்கும் அறிவான குடும்பம்.
பள்ளி தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. பாடங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. தமிழ், அறிவு இருவரும் நேர்த்தியாகப் பயின்று வருகின்றனர்.
பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பியதும் இருவரும் கைகால் முகம் கழுவி, தலைவாரிப் புத்துணர்வு பூண்டனர்.
மாறனும் இன்று விரைவாக வீடு திரும்பியிருந்தான். பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், மாலை ஆறு மணியாகியும் வெப்பம் குறையவில்லை.
பொற்கொடி அனைவருக்கும் பழக்கலவை கொண்டு வந்தாள். வெப்பத்திற்கு இதமாக உடலுக்குப் புத்துணர்ச்சி தரும் மா, வாழை, கொடிமுந்திரி, பப்பாளி, தர்பூசணி பழங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பித்தளை வட்டிலில் எடுத்து வைத்தாள். அனைவரும் பழத்துண்டுகளைத் தின்றுக் கொண்டே உரையாடிக் கொண்டிருந்தனர்.
மாறன்:- அப்பப்பா என்ன வெயில்! என்ன வெயில்! வெளியில் தலைகாட்டவே முடியவில்லை!
பொற்கொடி:- வெளியில் என்ன? வீட்டிற்குள்ளும் புழுக்கமாகவே உள்ளது. குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வருவதே கடினமாக இருக்கிறது.
மாறன்:- ஆம்… மாலையாகிவிட்டது! இன்னும் வெப்பம் குறையவில்லையே?!
பொற்கொடி:- ஆமாம், இளவேனில் காலம் தொடங்கி இரு மாதங்களாகிறது. இன்னும் மழையோ காற்றோ இல்லையே?
மாறன்:- அதனால் தான் வெப்பம் அதிகமாக உள்ளது.
பொற்கொடி:- தென்மேற்குப் பருவக்காற்று இன்னும் தொடங்கவில்லை. இந்த ஆண்டும் பருவம் தவறுகிறது.
மாறன்:- முன்னெப்போதும் இல்லாத அளவில் தமிழ்நாட்டில் காலநிலையில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு நிலவுகிறது.
பொற்கொடி:- ஆம்! காலம் தவறியும், இயல்பு நிலைக்கு மாறாகவும் உள்ளது.
அறிவு:- காலநிலை மாற்றத்திற்கு புவி வெப்பமயமாதலும் ஒரு காரணி எனப் படித்திருக்கிறேன் அம்மா.
பொற்கொடி:- ஆம். புவி வெப்பமாவதற்கு இயற்கையை அழிப்பதும், செயற்கையாக அழிவுத்திட்டங்களை உருவாக்குவதும் தான் காரணம்.
அறிவு:- இயற்கையை அழிப்பது என்றால் மலைகளை உடைப்பது தானே அம்மா?
பொற்கொடி:- மலைகளை அழிப்பது மட்டுமல்ல; காடுகளை அழிப்பது, மரங்களை வெட்டுவது, வனவிலங்குகளின் வாழ்விடங்களை, வழித்தடங்களை அழிப்பது.
மாறன்:- ஆறுகள், ஓடைகள், ஏரிகள், குளங்கள் என நீர் நிலைகளில் குடியிருப்புகளைக் கட்டுவது, வீட்டுக் கழிவுகளையும், ஆலைகளின் வேதிக்கழிவுகளையும் கடலில் கலப்பது, ஆற்றுமணலை அளவற்றுத் தோண்டி விற்பது.
பொற்கொடி:- வயல்வெளிகளில் ஆழத் துளைத்து எரியெண்ணெய், எரிகாற்றை உறிஞ்சுவது, ஆற்றின் முகத்துவாரத்தை ஆக்கிரமித்துச் சுருக்குவது.
மாறன்:- கடலோரச் சதுப்பு நிலங்களில், கடற்கரைகளில் அழிவுத் திட்டங்களை நிறுவுவது, அத்திட்டங்கள் கடலுக்குள்ளும் புகுவது, கடலுக்குள் தனது கழிவுகளைக் கொட்டுவது, கடல்வாழ் உயிரினங்களை அழிப்பது.
பொற்கொடி:- கடற்கரையை இடுகாடாக்குவது, போதாதென்று கடலுக்குள் இயற்கைக்கும், தமிழினத்திற்கும் எதிராகப் பேனா வைப்பது எனச் சொல்லிமாளாது.
தமிழ்:- மலைகள் இல்லையென்றால் என்ன ஆகும், அம்மா?
பொற்கொடி,:- மலைகளை அழித்துவிட்டால், மரங்கள் செடி கொடிகள் இருக்காது. மழைக்காடுகள், மலைச்சாரல், சோலைகள் இருக்காது.
மாறன்:- நீரூற்றுகள், நீரோடைகள், அருவிகள், ஆறுகள் இருக்காது. உயிர்ச்சூழல் மற்றும் உணவு உற்பத்திச் சூழல் சுருங்கி, மலைவாழ் காடுகளில் வாழும் உயிரினங்கள் அழிந்து விடும்.
பொற்கொடி:- காற்றின் ஈரப்பதம் குறையும், மலை மேகங்கள் குறையும், மேகங்கள் காற்றின் போக்கில் அடித்துச் செல்லப்படும்.
மாறன்:- மலைமேகங்களைத் தடுத்து நிறுத்திக் குளிர்வித்தால் தான் மழை பொழியும். மலைகள் இல்லை என்றால் மழை மேகங்களைத் தடுக்க வழி இல்லை. மழைக்கு வாய்ப்பு இல்லை.
பொற்கொடி:- மழை இல்லை என்றால் நீர் வரத்து இல்லை. நீர் வரத்து குறைந்தால் மரம், செடிகள், காடு, கழனி, வயல் வரப்பு எதுவும் செழிக்காது.
மாறன்:- மலைகளை அழிப்பதால் கடல் மட்டம் உயரும். நிலம் பாலைவனம் ஆகும். மண் அரிப்பு மண்வளம் பாதிக்கப்படும்.
பொற்கொடி:- நிலத்தடி நீரும் குறையும். நிலம் வறண்டு போகும். வெப்பநிலை உயரும்.
மாறன்:- உணவுப்பஞ்சம் ஏற்படும். உணவுக்குக் கையேந்தும் நிலை சோறுடைத்த சோழநாட்டைக் கொண்ட தமிழருக்கு வரும்.
பொற்கொடி:- உணவுப்பஞ்சத்தால் உணவின்றித் தவிப்பதால் குற்றச் செயல்கள் பெருகும்.
மாறன்:- உணவுக்காகப் போராட்டங்கள் வெடிக்கும். கொடுங்கோல் அரசுகளின் அடக்குமுறைகள் தொடரும்.
பொற்கொடி:- சாலைகள் இருக்கும். சுங்கச்சாவடிகள் இருக்கும்.ஆனால் சாப்பிட உணவு இருக்காது.
மாறன்:- மூன்றாம் உலகப்போர் நீருக்கும் சோறுக்குமாகவே ஏற்படும்.
பொற்கொடி:- வல்லாதிக்கங்கள் ஊடுருவும். மீதமிருக்கும் வளங்களையும் செல்வங்களையும் கோவில்களையும் தொன்மை வரலாறுகளையும் கொள்ளை கொள்ளும்.
மாறன்:- மக்கள் ஏதிலிகள் ஆவார்கள். பிழைப்பு தேடி புலம்பெயர்ந்து அண்டை மாநிலங்களில் அடிமையாகப் போவார்கள். அடிவாங்கிச் சாவார்கள். இனம் இற்றுப்போகும்.
பொற்கொடி:- வரலாறுகள் உணர்த்துகின்றன. விழிப்புற்றால் செழிப்புறலாம். அயர்ந்திருந்தால் அழிக்கப்படலாம்.
தமிழ்:- மலைகளை உடைப்பதற்கு எதிராக பெரியப்பா செந்தமிழன் சீமான் அவர்களும் பேராடுகிறார்கள். காணொளிகளில் பார்த்தேன் அம்மா.
மாறன்:- ஆமாடா செல்லம்! அண்ணன் சீமான் அவர்களும், நாம் தமிழர் கட்சி உறவுகளும் மலைகளை உடைப்பதற்கெதிராக தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள்.
பொற்கொடி:- மலைகளை உடைப்பதற்கு மட்டுமல்ல; இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதற்கு எதிராகவும், விளைநிலங்கள் பறிபோவதற்கு எதிராகவும் போராடி வருகிறார்கள்.
தமிழ்:- மலைகளை உடைத்தால் என்ன என்ன பின் விளைவுகள் ஏற்படும் என பெரியப்பா மேடைதோறும் தெளிவாகப் பேசிவருகிறார்களே அப்பா!
மாறன்:- மலைகள், மரங்கள், ஆறுகள், நீரோடைகள், குளங்கள், ஏரிகள், வாய்க்கால், வயல், உழவு, உழவர், பயிர், உயிர், வயிறு என சங்கிலித் தொடர் விளைவுகளைப் பேசி வருகிறார்.
அறிவு:- இவ்வளவு பாதிப்புகள், பின் விளைவுகள் இருந்தும் மலைகளை ஏன் வெட்டி எடுக்கிறார்கள்?
பொற்கொடி:- காரணம் இந்த நிலம் நம்முடையது; ஆனால், ஆட்சியாளர்கள் வேற்றினத்தவர்களாயிற்றே! அவர்களுக்கு கொள்ளை ஒன்றே கொள்கை!
மாறன்:- அத்துடன் திராவிடம், ஆரியத்துடன் கைகோர்த்து, எந்தெந்த வழிகளிலெல்லாம் முடியுமோ அத்தனை வழிகளிலும் தமிழர்களை, தமிழர் நிலங்களை, வளங்களை அழிவுக்கு உள்ளாக்கும் இரண்டகங்களைத் தொடர்ந்து செய்யும்.
பொற்கொடி:- இவர்களிடமிருந்து எதிர்காலத் தலைமுறைக்கான இயற்கை வளங்களைக் காத்து வைக்க வேண்டும்.
மாறன்:-மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே அதன் அருமையும் பெருமையும் தெரியும். அதைக் காக்க வேண்டும் என்ற அக்கறையும் இருக்கும்.
பொற்கொடி:- ஆரிய மாயையையும், திராவிடத் தீமையையும் தூக்கியெறிந்து, நாம் தமிழர்களாக ஒன்றிணைந்து, இயற்கை வளங்களைப் பேணிப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவருடைய பொறுப்பும் கடமையும் ஆகும்.
அனைவரும்:- நாம் தமிழர்! நாம் தமிழர்!!
தமிழ்:- ஈழத்தில் சந்திப்போம்!
திரு. ம. இராமகிருசுணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்