சூன் 2023
தமிழும் அறிவும்
தமிழுக்கும் தமிழருக்கும் செய்யப்படும் இரண்டகம்
பனையூரில் வசிக்கும் ஒரு அழகான குடும்பம். மாறன் அவன் மனைவி பொற்கொடி. அவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன். மகள் அறிவுச்செல்வி. பத்து வயதாகிறது. அவ்வூரிலுள்ள அரசு ஆரம்பப் பாடசாலையில் நான்காம் வகுப்பு தேர்வாகி ஐந்தாம் வகுப்பில் சேர்ந்து ஒரு வாரமே ஆகிறது. படிப்பில் கெட்டிக்காரி. பெயருக்கேற்றார் போல் அறிவோடு திகழ்பவள்.
மகன் தமிழ்ச்செல்வன். ஆறுவயதாகிறது. அதே பாடசாலையில் முதலாம் வகுப்பு தேர்வாகி இரண்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருக்கிறான். துருதுருவென்று எதையும் அறிந்து கொள்ளும் வகையில் ஐயத்துடன் வினாக்களை எழுப்பிக் கொண்டே இருப்பான்.
அக்காள் அறிவுச்செல்வி பாடசாலைக்கு நடந்து செல்லும் வழியிலும், வீட்டிலிருக்கும் போதும், அவனது ஐயங்களுக்குத் தனக்குத் தெரிந்த அளவில் விடையளிப்பாள்.
ஓய்வு நாள்களிலும், மாலையில் ஓய்வு நேரங்களிலும் மாறனும், பொற்கொடியும், அறிவுச்செல்வியும், தமிழ்ச்செல்வனும் தமிழரின் வரலாறுகளைப் பேசி, விவாதிக்கும் அறிவான குடும்பம்.
பள்ளி தொடங்கி ஒரு வாரமே ஆகியிருக்கிறபடியால் அறிவும், தமிழும் குதூகலத்துடன் பள்ளிக்குச் சென்றுவருகிறார்கள். புதுப்புது நண்பர்களும், புதிய வகுப்பறை மற்றும் புத்தகங்கள் வழங்கப்படாமல், பாடங்களும் நடத்தப்படவில்லை என்பதே குதூகலத்திற்குக் காரணம்.
மாலையில் வீடு திரும்பியதும் இருவரும் கைகால் முகம் கழுவி, தலைவாரி புத்துணர்வு கொண்டனர். தமிழ் அம்மாவிடம் சென்று பள்ளி, நண்பர்கள், விளையாட்டு என இன்று நடந்தவைகளைக் கதையாகக் கூறிக்கொண்டிருந்தான். பொற்கொடியும் அவைகளைக் கேட்டுக்கொண்டே புன்முறுவலுடன் தனது வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள்.
அறிவு கூடத்திற்கு சென்று தனது புத்தகப் பையைத் திறந்தாள் . பையினுள் இரண்டு குறிப்பேடுகளும், எழுதுகோல் பெட்டியும், ஐந்தாம் வகுப்பிற்கான மாணவர் கையேடும் இருந்தன. வீட்டுப்பாடம் எழுத, படிக்க ஏதுமில்லையாதலால் மாணவர் கையேட்டினை எடுத்துத் திறந்து படிக்கலானாள்.
பெயர், வகுப்பு, பள்ளி மற்ற விவரங்களுடன் முதல்பக்கமும், பள்ளி நடத்தை விதிமுறைகள் இரண்டாம் பக்கமும் அச்சிடப்பட்டிருந்தது. மூன்றாவது பக்கத்தில் இந்த ஆண்டுக்கான விடுமுறை நாள்களின் பட்டியல் இருந்தது.
அறிவு விடுமுறை நாள்களை வரிசையாகப் படித்தாள். குழப்பமாகவே, மீண்டும் ஒருமுறை படித்தாள். அதில் தமிழ்நாடு நாள் சூலை 18 என்றும், தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14 சித்திரை 1 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இவையிரண்டும் அறிவை குழப்பத்தில் ஆழ்த்தின.

அறிவு கையேடை எடுத்துகொண்டு அம்மாவிடம் சென்று தனது ஐயத்தைத் தெரிவித்தாள்.
அறிவு:- அம்மா! தமிழ்நாடு நாள் நவம்பர் 1 தானே?
பொற்கொடி:- ஆமாம். அதிலென்ன ஐயம் உனக்கு?
அறிவு:- தமிழ்ப் புத்தாண்டும் தை 1 தானே அம்மா?
பொற்கொடி:-ஆமாம்.
அறிவு:- ஆனால், கையேட்டில் தமிழ்நாடு நாள் சூலை 18 என்றும், தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14 என்றும் தவறாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள் அம்மா!
பொற்கொடி:- ( நீண்ட பெருமூச்சுடன்) ம்ம்ம்….! திராவிட ஆரியத்தின் திருகுத்தாளங்களில் இவையும் அடங்கும்.
அறிவு:- புரியவில்லையே அம்மா?
தமிழ்:- எனக்கும் ஒன்றும் விளங்கவில்லையே?
இவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டே மாறன் வீட்டினுள் நுழைந்தார்.
தமிழ்:- ஐ! அப்பா!
அறிவு:- வாருங்கள் அப்பா!
மாறன்:- மகிழ்ச்சி மக்களே. சற்று பொறுங்கள். இதோ வந்துவிடுகிறேன்.
சற்று நேரத்தில் மாறனும் குளித்துவிட்டு புத்துணர்வு பூண்டு வந்தமர்ந்தார். அனைவரும் கூடத்தில் வந்து அமர்ந்து கொண்டனர். தமிழ் தந்தைக்கருகில் அமர்ந்து கொண்டான்.
மாறன்:- ம்ம்….! சொல்லுங்கள்! இன்றைய கருத்தாடல் என்ன?
தமிழ்:- தமிழ்நாட்டுப் புத்தாண்டு மாறிப்போச்சு அப்பா!
மாறன் :- என்னது?
அறிவு:- அப்படி இல்லை அப்பா! தம்பி உளறுகிறான். தமிழ்நாட்டு நாள், தமிழ்ப் புத்தாண்டு இரண்டும் எங்கள் பள்ளிக் கையேட்டில் பிழையாக உள்ளது அப்பா!
மாறன்:- ஓகோ! தமிழ்நாடு நாள் சூலையிலும், தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரலிலிலும் வந்திருக்குமே!
அறிவு:- ஆமாம் அப்பா. ஆனால் அது தவறு தானே?
மாறன்:- ஆமாம். தவறுதான். தவறானவர்களிடம் சரியானதை எப்படி எதிர்பார்க்க முடியும்?
அறிவு:- என்னப்பா சொல்றீங்க? ஒன்னுமே புரியலையே?!
தமிழ்:- எனக்கு ஒரே குழப்பமாவே இருக்கு!
மாறன்:- அதுதான் திராவிட மாடல்.
பொற்கொடி:- தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ் நாட்டிற்கும் எதிராக எப்பொழுதும் நிலை கொண்டிருக்கும் மாடல் தானே திராவிட மாடல்.

அறிவு:- ஓகோ! திராவிட மாடலின் வேலையா?
பொற்கொடி:- 1956 தமிழர் நாடான சென்னை மாகாணத்தின் பல பகுதிகளை பிரித்தெடுத்து புதிய மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அப்போது மிச்சமிருந்த பகுதிகள் சேர்க்கப்பட்டு தமிழர்களுக்காக சென்னை மாநிலம் உருவாக்கம் பெற்றது. புதியதாக உருவாகிய அண்டை மாநிலங்கள் அந்த நாளை அந்தந்த மாநில நாளாக கொண்டாடி வருகின்றன.
அறிவு:- அந்தநாள் நவம்பர் 1 தானே அப்பா!
மாறன்:- சரியாகச் சொன்னாய் மகளே!
அறிவு:- கடந்த ஆண்டு சென்னையில் கொட்டும் மழையிலும் நாம், நவம்பர் 1 தமிழ்நாடு நாள் பேரணியில் கலந்துகொண்டோமல்லவா?
தமிழ்:- ஆமாம். நானும் வந்தேனே! பெரியப்பா செந்தமிழன் சீமானும் நம்முடன் நடந்து வந்தாரே! எனக்கும் அக்காவுக்கும் வாழ்த்துக்களும் சொன்னாரே!
அறிவு:- ஆமாம் அப்பா. மறக்க இயலாத நிகழ்வு!
பொற்கொடி:- தமிழர்கள் அனைவரும் மாநிலம் உருவான நவம்பர் 1ஐ தமிழ்நாட்டு நாளாக கொண்டாடி வருகிறோம்.
மாறன்:- ஆனால், 1968 ஆம் ஆண்டு தமிழ் நாடு என்று பெயர் சூட்டிய நாளைத் தான் தமிழ்நாடு நாள் என்று கூறுகிறார்கள்.
அறிவு:- யாராவது பெயர்வைத்த நாளை பிறந்தநாளாக கொண்டாடுவார்களா?
தமிழ்:- என்ன இது சின்னப்பிள்ளைத் தனமாக இருக்கிறது? ஆஆகாகா!
பொற்கொடி:- அதுதான் திராவிட மாடல்.
அறிவு:- சரி அம்மா. ஆனால் தமிழ்ப் புத்தாண்டும் சித்திரை 1 ஏப்ரல் மாதம் என்று இருப்பதற்கும் திராவிடத்திற்கும் என்ன தொடர்பு?
பொற்கொடி:- ஆரியம் என்றுமே தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரானது.
மாறன்:- தமிழை, தமிழர் அறிவியலை, தமிழர் மெய்யியலை, தமிழர் இலக்கண இலக்கியங்களை, தமிழர் வரலாறுகளை, தமிழர் சமயங்களை, தமிழர் வழிபாட்டிடங்களை தனதாக்கிக் கொள்ளும்; அல்லது எவ்வகையிலாவது அழிக்கத் துடிக்கும்.
பொற்கொடி:- ஆரியத்தின் கள்ளக் குழந்தைதான் திராவிடம்.
மாறன்:- ஆரியத்தை எதிர்ப்பது போன்று காட்டி, அவர்களிடமே மண்டியிட்டுக் கிடக்கும்.
பொற்கொடி:- ஆரியர்களின் கோட்பாடுகளைத் திராவிடம் ஏற்றுக் கொண்டு தமிழர்கள் மீது திணிக்கும்.
மாறன்:- தமிழுக்கும், தமிழர்களுக்குமானதாக தன்னை காட்டிக்கொண்டு, தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரானவற்றை ஆரியத்துடன் கை கோர்த்துச் செய்யும்.
பொற்கொடி:- அந்த வகையில் தான் திராவிடம், ஆரிய ஆண்டை தமிழர்கள் தலையில் கட்டுகிறது.
மாறன்:- 1921 ஆம் ஆண்டு மறைமலையடிகள் அவர்கள் தலைமையில் 600க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் ஒன்று கூடி, ஆய்ந்தறிந்து, தமிழர் ஆண்டை உறுதி செய்தனர்.
பொற்கொடி:- வள்ளுவராண்டு, திருவள்ளுவராண்டு என அறிவித்தனர். ஆங்கில ஆண்டிற்கு 31 ஆண்டுகள் முந்தையதாக, திருவள்ளுவர் பிறந்த நாளை கணக்கிட்டு அறிவித்தனர்.
மாறன்:- சுறவம் மாதம் எனும் தைமாத முதல் நாளே தமிழர் புத்தாண்டு என அறிவித்தனர். அதனையும் தமிழர்கள் பின்பற்றி வந்தனர்.
பொற்கொடி:- ஆரிய ஆண்டு அறுபது ஆண்டுகளுக்கு சுழற்சியாக வருவதால், தொன்மை வரலாற்று நிகழ்வுகளைத் துல்லியமாகக் கணிக்க இயலாது.
அறிவு:- ஏன் அம்மா?
பொற்கொடி:- ஏதாவது ஒரு ஆண்டைக் கணக்கில் கொள்வோம், திருவள்ளுவராண்டு 1524 எனில் அவ்வாண்டுக்குரிய ஆரிய ஆண்டை எடுத்துக்கொள்வோம்.
மாறன்:- திருவள்ளுவராண்டு 1524– ஆரிய ஆண்டு பிரபவ என வைத்துக் கொள்வோம். அதிலிருந்து முன்னும் பின்னும் அறுபதாண்டுகள் 1464க்கும், 1584க்கும் அதே பிரபவ ஆண்டுதான்.
பொற்கொடி:- ஐந்நூறு, அறுநூறு ஆண்டுகளுக்கு முன் பிரபவ ஆண்டில் பிறந்தார் எனில், 1464லிலா, 1524லிலா, 1584லிலா என உறுதியாக கூறமுடியாது.
அறிவு:- பெருங்குழப்பமாக அல்லவா இருக்கும்!
பொற்கொடி:- ஆம். மேலும், ஆரிய ஆண்டுகளின் வரலாறும் அருவருப்பாக இருக்கிறது.
அறிவு:- அது என்ன வரலாறம்மா?
பொற்கொடி:- அவ்வரலாறு இப்போது வேண்டாம். நீங்கள் பெரியவர்களானதும் சொல்லித்தருகிறோம்.
மாறன்:- இத்தகைய அருவருப்புடைய, குழப்பமான ஆண்டை ஆரியமும், திராவிடமும் ஒன்றிணைந்து தமிழர்கள் தலையில் கட்டுகிறார்கள்.
பொற்கொடி:- நளி மாதத்தில் வரும் தமிழர்களின் விளக்கு வழிபாட்டை ஆரியம் தனதாக்கிக் கொண்டு, சிறிது மாற்றி, தமிழர்களின் முன்னோரான நரகாசுர மன்னனைக் கொன்றதாகக் கதைவடித்து, தமிழர்களையே அவரது இறப்பைக் கொண்டாட வைத்துவிட்டார்கள்.
அறிவு:- பகுத்தறிவு பேசும் திராவிடத்துக்கு ஏன் இதனைப் பற்றிய தெளிவு இல்லை?
பொற்கொடி:- திராவிடமே தெளிவானது இல்லையே!
மாறன்:- ஆனால், அவர்கள் தமிழர்களை ஏய்த்துப் பிழைப்பதில் மட்டும் தெளிவாக இருக்கிறார்கள்; ஏமாற்றுகிறார்கள்; ஏமாறும் தமிழன்தான் தெளிவடைய வேண்டும்.
தமிழ்:- தமிழர்களை ஏமாற்றுவதில் அவர்களுக்கு என்ன பயன் அப்பா?
மாறன்:- தமிழையும், தமிழர்களையும் அடக்கியாள ஆரியமும், திராவிடமும் இணைந்து, தமிழர்களுக்குள் குழப்பங்களையும், சாதிமதச் சண்டைகளையும், அகப்பகையை வளர்த்தும், துரோகிகளை வைத்தும் தமிழினத்தை ஒன்றிணையவிடாது செய்து அதிகாரங்களைப் பறித்துக் கொள்ளும்.
பொற்கொடி:- இன்றும் தமிழர்கள், தமிழ்நாட்டு நாள் நவம்பர் ஒன்றா, சூலை பதினெட்டா என்றும், விளக்கு வழிபாடுநாளா, தீபாவளியா என்றும், தமிழ் புத்தாண்டு தை ஒன்றா, சித்திரை ஒன்றா என்றும் குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள். கூறுகூறாகப் பிரிகிறார்கள்.
மாறன்:- தமிழர்களுக்கென்று தனித்த அடையாளங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள்.
பொற்கொடி:- அப்படியே தனித்த அடையாளங்கள் இருந்தால், அவற்றில் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்.
மாறன்:- நமது வரலாறுகளையும், வாழ்க்கை முறைகளையும் ஆழ்ந்தறியாமல், பகுத்தறிவு எனும் போர்வையில் ஏளனம் செய்வார்கள்.
பொற்கொடி:- தமிழர்கள் தான் திராவிடர்கள் என உருட்டுவார்கள்.
மாறன்:- திராவிட நாகரிகம் என்பார்கள்; திராவிட மொழிக்குடும்பம் என்பார்கள்; திராவிடக் களஞ்சியம் என்பார்கள்; திராவிடப் பொங்கல் என்பார்கள்.
பொற்கொடி:- திராவிடம் ஆரியத்தோடு கைகோர்த்து, தமிழர் வழிபாட்டிடங்களை இந்து அறநிலையத் துறையின் கீழ் வைப்பார்கள்.
மாறன்:- தமிழர் பெருவிழாக்களை இந்துப்பண்டிகைகள் என்பார்கள்.
பொற்கொடி:- தமிழை அரசமைப்பு மொழியாக, வழக்காடு மொழியாக, வழிபாட்டு மொழியாகக் கொண்டுவர மாட்டார்கள்.
மாறன்:- இந்தியை எதிர்ப்போம் என்று கூறிக்கொண்டே, பெயர் பலகை முதற்கொண்டு, போக்குவரத்து, வங்கிச் செயல்பாடுகள் என அனைத்திலும் இந்தியைத் திணிப்பார்கள்.
பொற்கொடி:- தமிழ் நீச மொழி இறைவழிபாட்டிற்கு ஏற்றதல்ல என்று விலக்கி, சமைத்தமொழிக்குச் சாமரம் வீசுவார்கள்.
மாறன்:- தமிழர்களின் தனித்த அடையாளங்களைச் சிதைக்கும் வேலையை திராவிடமும் ஆரியமும் கைகோர்த்துக் கச்சிதமாகச் செய்வார்கள்.
பொற்கொடி:- அதனால் தான், தமிழ்நாட்டுநாள், தமிழ்ப்புத்தாண்டு, தமிழரா -திராவிடரா, தமிழரா- இந்துக்களா, இங்கு “தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் ” என்பது போன்ற இரண்டகங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
அறிவு:- காலக்கொடுமை!

மாறன்:- ஆரியமும், திராவிடமும் தமிழுக்கும், தமிழருக்கும் செய்யும் இரண்டகத்தால் ஆட்சி அதிகாரத்தோடு வாழ்கிறார்கள். தமிழர்கள் தன்னிலை மறந்து அடிமையாக வாழ்வாதாரங்களை இழந்துகொண்டு இருக்கிறார்கள்.
அறிவு:- வருந்தாதீர்களப்பா! வரலாற்றைப் படித்து, வரலாற்றைப் படைப்போம்! நாம் மீண்டெழுவோம்.
மாறன்:- உண்மையை உணர்த்தி, மக்கள் விழிப்புணர்வு பெற்றிட, நாம் தமிழர் கட்சியும், பெரியப்பா செந்தமிழன் சீமான் அவர்களும், தமிழ் மீட்சிப் பாசறை, வீரத்தமிழர் முன்னணி போன்ற பாசறைகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழ்:- ஓகோ! அதனால்தான் தெளிவாக, தமிழ்நாடு நாள் நவம்பர் ஒன்று என்றும், தமிழ்ப் புத்தாண்டு சுறவம் ஒன்று ( தை 1) எனக் கொண்டாடி வருகிறோமோ!
பொற்கொடி:- ஆமாம் செல்லங்களே!
அறிவு:- மகிழ்ச்சி. அப்பா அம்மா இருவரும் விரிவாக விளக்கி கூறினீர்கள்.
அறிவு- தமிழ்:- நன்றி அம்மா, நன்றி அப்பா.
பொற்கொடி:- நல்லது செல்வங்களே!
அறிவு:- #ஈழத்தில்_ சந்திப்போம்
அனைவரும்:- #ஈழத்தில்_சந்திப்போம்
திரு. ம. இராமகிருசுணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.