மே 2023
தமிழும் அறிவும்
மே 18 இனயெழுச்சி நாள்
பனையூரில் வசிக்கும் ஒரு அழகான குடும்பம். மாறன் அவன் மனைவி பொற்கொடி. அவர்களுக்கு ஒரு மகள்; ஒரு மகன். மகள் அறிவுச்செல்வி. பத்து வயதாகிறது. அவ்வூரிலுள்ள அரசு ஆரம்பப் பாடசாலையில் நான்காம் வகுப்புத் தேர்வு எழுதியிருக்கிறாள். படிப்பில் கெட்டிக்காரி. பெயருக்கேற்றார் போல் அறிவோடு திகழ்பவள்.
மகன் தமிழ்ச்செல்வன். ஆறு வயதாகிறது. அதே பாடசாலையில் முதலாம் வகுப்புத் தேர்வு எழுதியிருக்கிறான். துருதுருவென்று எதையும் அறிந்து கொள்ளும் வகையில் ஐயத்துடன் வினாக்களை எழுப்பிக் கொண்டே இருப்பான்.
அக்காள் அறிவுச்செல்வி பாடசாலைக்கு நடந்து செல்லும் வழியிலும், வீட்டிலிருக்கும் போதும், அவனது ஐயங்களுக்குத் தனக்குத் தெரிந்த அளவில் விடையளிப்பாள்.
ஓய்வு நாட்களிலும், மாலையில் ஓய்வு நேரங்களிலும் மாறனும், பொற்கொடியும், அறிவுச்செல்வியும், தமிழ்செல்வனும் தமிழரின் வரலாறுகளைப் பேசி, விவாதிக்கும் ஒரு அறிவான குடும்பம்.
இந்த ஆண்டு தூத்துக்குடியில் நடக்க இருக்கும் இனயெழுச்சி மாநாட்டிற்குக் குடும்பத்துடன் செல்லத் திட்டமிட்டு, பனையூர் நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களுடன் பேசி, குடும்பங்களாக இணைந்து செல்ல வாகனத்திற்கும், மற்ற தேவைகளுக்குமான தொகையைக் கொடுத்து உறுதி செய்திருந்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமையாதலால், மாறனுக்கும், பொற்கொடிக்கும் ஓய்வுநாள். அறிவுக்கும், தமிழுக்கும் கோடை விடுமுறையாதலால் நால்வரும் கடைவீதிக்குச் சென்று பயணத்தின் போது தேவைப்படும் இன்றியமையாத பொருட்களை வாங்கத் திட்டமிட்டனர்.
கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்ததும், நான்கு மணியளவில் கடைவீதிக்குப் புறப்பட்டனர். கடைவீதி வீட்டிலிருந்து நான்கு தெரு தள்ளி கோவிலுக்கருகே அமைந்திருந்தது.
இரண்டாவது வீதியிலிருந்து அடுத்த வீதிக்குத் திரும்பும் போது, எதிரில் மிதிவண்டியில் விரைவாக தம்பி சரவணன் வந்து கொண்டிருந்தார்.
தம்பி சரவணன் பனையூர் நாம் தமிழர் கட்சியின் துணைச் செயலாளராகவும், தமிழ்த்தேசியத்தின் மீது பெரும் ஈடுபாடு கொண்ட, செயலாற்றல் மிக்க இருபத்திரண்டு வயது இளைஞராவார். அனைவருக்கும் அவர் தம்பி சரவணன் தான். அப்படித்தான் அழைப்பார்கள். தம்பி என்று அனைவராலும் அழைக்கப்படும் பெரும்பேறு பெற்றவரானார் அவர்.
இவர்களைக் கண்டதும், தம்பி சரவணன் மிதிவண்டியின் வேகத்தைக் குறைத்து, அருகே வந்து நிறுத்திக் கீழே இறங்கினார். இளமுறுவலுடன், வலது கையை உயர்த்தி, புரட்சி வாழ்த்துகள் என்றார். பதிலுக்கு அனைவரும் கையை உயர்த்தி வாழ்த்துச் சொன்னார்கள். பின் நலம் விசாரித்துக் கொண்டனர்.
தமிழ் அன்புடன் அவரது கையைப் பற்றிக் கொண்டான். தம்பியும் தமிழை வாஞ்சையுடன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.
மாறன்:- தம்பி! ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறீர்கள்? என்ன செய்தி?
தம்பி:- உங்களைத்தான் காண வந்தேன். உங்களிடமிருந்து ஒரு உதவி தேவைப்படுகிறது.
மாறன்:- என்ன உதவி வேண்டும் தம்பி?
தம்பி:- அண்ணா! இனயெழுச்சி மாநாடு செல்வதற்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டோம். ஆனால் அதற்காக அச்சடிக்கப்பட்ட சுவரொட்டிகள் இன்று மாலை தான் கிடைக்கும். நானும் மற்ற சில உறவுகளும் சுவரொட்டி ஒட்டத் திட்டமிட்டிருந்தோம். எதிர்பாராவிதமாக அவர்களால் இணைந்து கொள்ள இயலவில்லை.
மாறன்:- அப்படியா! நான் என்ன செய்ய வேண்டும் தம்பி?
தம்பி:- இனயெழுச்சி மாநாட்டிற்குச் செல்ல இரண்டு நாள் விடுப்பு கேட்டிருக்கிறேன். அதனால் நாளை உறுதியாக வேலைக்குச் செல்லவேண்டிய தேவை இருக்கிறது. மாநாட்டிற்கு நான்கு நாட்களே உள்ளன. இன்றே சுவரொட்டிகளை ஒட்டியாக வேண்டும். உங்களால் உதவ முடியுமா? எனக் கேட்கவே வந்தேன்.
மாறன்:- அதற்கு ஏன் நேரடியாக வரவேண்டும்? செய்தியோ, அழைப்போ செய்திருக்கலாமே தம்பி!
தம்பி:- செய்தி அனுப்பினால் தவறாக எண்ணுவீர்களோ என்ற ஐயம் தான் அண்ணா!
மாறன்:- இனத்திற்கான கடமையைச் செய்ய கிடைத்த வாய்ப்பாகக் கருதுவேனே தவிர, தவறான எண்ணம் வர வாய்ப்பில்லை ராசா!
தமிழ், அறிவு:- வாய்ப்பில்லை ராசா!
(அனைவரும் புன்முறுவல் பூக்கின்றனர்)
மாறன்:- தம்பி, சுவரொட்டி ஆயத்தமாக இருக்கிறதா? இப்போதே புறப்படுவோம்!
தம்பி:- இல்லை அண்ணா! ஏழு மணிக்கு சுவரொட்டிகள் அச்சடித்துத் தருவதாகக் கூறியிருக்கிறார்கள். நீங்கள் ஏழரை மணியளவில் வாருங்கள் போதும்!
மாறன்:- நல்லது தம்பி! நான் சரியான நேரத்திற்கு வந்துவிடுகிறேன். முதலில் கடைவீதியிலிருந்து ஒட்டத் தொடங்குவோம். கடைவீதியில் நமது கட்சி உறவின் செந்தமிழ்த் தேநீரகத்திற்கு வந்துவிடுகிறேன்.
தம்பி:- மகிழ்ச்சி! நன்றி அண்ணா! நன்றி அண்ணி!
அனைவரும்:- நன்றி!
(தம்பி சரவணன் மிதிவண்டியைத் திருப்பிப் புறப்பட்டுச் சென்றார்)
அறிவு:- அப்பா! இனயெழுச்சி மாநாடு தூத்துக்குடியில் தானே அப்பா?
மாறன்:- ஆமாடா செல்லம்! ஏன் கேட்கிறாய்?
அறிவு:- அங்கே நடக்கும் மாநாட்டிற்கு இங்கே ஏன் சுவரொட்டி ஒட்ட வேண்டும்?
தமிழ்:- அதானே! இங்கே ஏன் ஒட்ட வேண்டும்?
மாறன்:- நாம் அந்தச் சாலையோரப் பூங்காவில் அமர்ந்து பேசுவோமா?
தமிழ்:- மகிழ்ச்சி ! மகிழ்ச்சி! ஓகோகோ! லலலா!
(குதூகலத்துடன் ஓடிச்சென்று அங்கிருந்த மர இருக்கையில் அமர்ந்து கொண்டான். மற்ற மூவரும் வந்து அமர்ந்தனர். அருகே இருந்த நீண்ட இருக்கையில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, இரு குழந்தைகள் எனக் குடும்பமாக அமர்ந்திருந்தனர்)
பொற்கொடி:- பல நாடுகளின் கூட்டுச் சதியால் தமிழீழ விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டது. 2009 மே மாதத்தில் அறமற்ற போரால் கொன்று குவிக்கப்பட்ட ஈழத்துத் தமிழ் மக்களின் நினைவாக இனயெழுச்சி நாள் கடைபிடிக்கப்படுகிறது. வீழ்த்தப்பட்டுக் கிடக்கும் தமிழினம் எழுச்சி கொள்ள வேண்டும் என்னும் மேலான கொள்கையுடன் நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருகிறது.

( அருகில் அமர்ந்திருந்த குடும்பம் இவர்கள் பேசுவதை உற்று கவனித்தது. பேசுவதைக் கேட்ட தாத்தா மற்றும் பாட்டியின் கண்கள் பனித்தன. பேச முற்பட்டார் தாத்தா)
தாத்தா:- வணக்கம். நீங்கள் நாம் தமிழர் கட்சியா?
அனைவரும்:- வணக்கம் ஐயா! ஆமாம் ஐயா!
தாத்தா:- மகிழ்ச்சி! வரலாற்றில் எந்த ஒரு இனமும் சந்திக்காத ஏற்றத்தாழ்வுகளை நமது தமிழினம் எதிர்கொண்டிருக்கிறது. அதன் வரலாறுகளையும், தாக்கங்களையும் நம் எதிர்காலத் தலைமுறைக்குப் படிப்பினையாக நாம் கடத்த வேண்டும். அந்த வகையில் நீங்கள் ஒரு சிறந்த குடும்பம். அதற்கு ஊன்றுகோலாக இருப்பது நாம் தமிழர் கட்சி. காலத்தின் தேவை அது.
பொற்கொடி:- நன்றி அப்பா! இது நமது கடமையல்லவா அப்பா!
தாத்தா:- நல்லது மகளே! தொடர்ந்து உரையாடுங்கள்; நாங்களும் கேட்கிறோம்.
மாறன்:- இனயெழுச்சிக்கும், தமிழ் மீட்சிக்கும், தமிழர் நிலம், வளம் அனைத்தையும் காக்கத் தெளிவான திட்டமிடுதலுடன், அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வழிநடத்துகிறார்கள்.
பொற்கொடி:- பெரும்பாலான தமிழர்கள் விட்டில் பூச்சிகளாக மீண்டும் மீண்டும் தீமையெனும் தீயைத் தொட்டு வீழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
மாறன்:- திரைக்கவர்ச்சியிலும், மது, புகை மயக்கத்திலும், கேளிக்கைகளிலும் உழன்று கொண்டிருக்கிறார்கள்.
பொற்கொடி:- நிலம் பறிபோவதைப் பற்றியோ, வளம் கொள்ளை போவதைப் பற்றியோ, உரிமை மறுக்கப்படுவது பற்றியோ, தமிழர் மரித்துப்போவது பற்றியோ கிஞ்சித்தும் கவலை கொள்ளாது இருக்கிறார்கள்.
மாறன்:- அவர்களை அறியாமையிலும், மயக்கத்திலும் வைத்திருப்பது, திராவிடமெனும் தீமையும், ஆரியமெனும் மாயையும்.
பொற்கொடி:- இத்தகைய தீமை, மாயைகளிலிருந்து விடுபட்டு தமிழர்களாக உள்ளுணர்ந்து பேரெழுச்சி கொள்ள வேண்டும்.
மாறன்:- தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாம் தமிழராக நிமிர்வதே, நம் இனத்திற்கான நமது கடமையாகும்.
பொற்கொடி:- ஒவ்வொரு தமிழரும் உணரும் வண்ணம் செய்யவேண்டியதும் நமது கடமையாகும்.
மாறன்:- அத்தகைய இனயெழுச்சியை முன்னெடுத்துச் செல்லும் நாம் தமிழர் கட்சியையும், வழி நடத்தும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களையும், நமது செயல்பாடுகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
பொற்கொடி:- இனத்தை அழித்தவர்களும், இனத்தை அழிக்கத் துணை நின்றவர்களும் இன்றும் கைகோர்த்து எக்காளமிடுகிறார்கள்.
மாறன்:- தமிழர்கள் உணர்வால் ஒன்றிணைவது அவர்களது இருப்பைக் கேள்விக்குறியாக்குகிறது.
பொற்கொடி:- ஊடகங்கள் திராவிடத்தையும், ஆரியத்தையும் முன்னிறுத்தி இல்லாத கீரிக்கும் பாம்புக்கும் சண்டை என பாம்பாட்டி வித்தையைக் கைக்கொண்டிருக்கின்றன. தமிழ்த்தேசிய அரசியல் பற்றிப் பேசக்கூட நா எழாமல் அறமற்றுச் செயல்படுகின்றன.
மாறன்:- நாம் ஒவ்வொருவரும் ஊடகமாகி இனயெழுச்சியை ஊட்டி வளர்த்து, காலத்தின் தேவை நாம் தமிழர் கட்சி என்பதை உறுதி செய்ய வேண்டும்.
பொற்கொடி:- அதனால் தான், நாம் தமிழர் கட்சி உறவுகள் தங்களால் இயன்ற பங்களிப்புடன், இனத்திற்கான கடமையாக நமது ஒவ்வொரு நிகழ்வையும் துண்டறிக்கைகளாக, சுவரொட்டிகளாக, சுவர் விளம்பரங்களாக பரப்பிக் கொண்டுள்ளனர்.
மாறன்:- அகப்பகையும், துரோகமும் சூழ்ந்த தமிழினத்தைக் காக்க!
பொற்கொடி:- நாம் அணையாத பெருநெருப்பாய்ப் பற்றியெரிய, அடைகாக்கும் எரிமலையாகக் கனன்றுக் கொண்டிருப்போம்.
தாத்தா:- சிறப்பு! நான் இதுவரை தமிழ்த்தேசியத்தில் பயணித்தாலும், இன்றுவரை எந்தக் கட்சியையும் சாராதவன். நாம் தமிழர் கட்சியால் இன்று உங்கள் குடும்பத்தின் செயல்பாடுகள் ஏற்றம் பெற்றிருப்பதை உணர்கிறோம். நாங்களும் நாம் தமிழராக இணைகிறோம்.
மாறன்:- மகிழ்ச்சி ஐயா! புரட்சி வாழ்த்துகள்!
(அனைவரும் நலம் விசாரித்துக் கொள்கின்றனர். “இன்று முதல் தாத்தா குடும்பமும், மாறன் குடும்பமும் நாம் தமிழர் குடும்பம்”)
அனைவரும்:- இனமே எழுச்சி கொள்!
இனியேனும் விழித்துக் கொள்!
நாம் தமிழர்! நாம் தமிழர்!! நாமே தமிழர்!!!
திரு. ம. இராமகிருசுணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.