spot_img

தமிழும் அறிவும் – அறுவடை நோக்கிய பெருநடை

தமிழும் அறிவும் – அறுவடை நோக்கிய பெருநடை

   பனையூரில் வசிக்கும் ஒரு அழகான குடும்பம். மாறன் அவன் மனைவி பொற்கொடி. அவர்களுக்கு ஒருமகள், ஒரு மகன். மகள் அறிவுச்செல்வி. பதினோரு வயதாகிறது. அவ்வூரிலுள்ள அரசு ஆரம்ப பாடசாலையில்  ஆறாம் வகுப்பில் சேர்ந்திருக்கிறாள். படிப்பில் கெட்டிக்காரி. பெயருக்கேற்றார் போல் அறிவோடு திகழ்பவள்.

    மகன் தமிழ்ச்செல்வன். எட்டு வயதாகிறது. அதே பாடசாலையில்  மூன்றாம் வகுப்பு படிக்கிறான்.  துருதுருவென்று எதையும் அறிந்து கொள்ளும் வகையில் ஐயத்துடன் வினாக்களை எழுப்பிக் கொண்டே இருப்பான்.

   அக்காள் அறிவுச்செல்வி பாடசாலைக்கு நடந்து செல்லும் வழியிலும், வீட்டிலிருக்கும் போதும், அவனது ஐயங்களுக்கு  தனக்குத் தெரிந்த அளவில் விடையளிப்பாள்.

   ஓய்வு நாள்களிலும், மாலையில் ஓய்வு நேரங்களிலும் மாறனும், பொற்கொடியும், அறிவுசெல்வியும், தமிழ்செல்வனும் தமிழரின் வரலாறுகளை பேசி, விவாதிக்கும் அறிவான குடும்பம். அனைவரும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த நிலையில், கடந்த நான்கைந்து மாதங்களாக பேசு பொருளாக இருந்த நாடாளுமன்ற மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்தும் பேச்சு எழுந்தது.

தமிழ்:- தேர்தல் என்றால் என்ன அப்பா?

   மாறன்:-தேர்தல் என்பது, ஒரு நாட்டின் மக்கள் பொது வாழ்வில் பதவிகளை நிர்வகிப்பதற்காக ஒரு தனி நபரைத் “தேர்ந்தெடுக்க முடிவெடுக்கும் செயல்முறை”

என்னும் ஒரு

ஒழுங்குபடுத்தப்பட்ட முறைமையாகும்.

    தற்கால மக்களாட்சியில், பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு உலகம்

தழுவிய ஒரு முறையாக தேர்தல்

கடைப்பிடிக்கப்படுகிறது.

   அறிவு:- தேர்தல் முறை எப்போது தொடங்கியது?

   பொற்கொடி:- இந்த மக்களாட்சி முறை இன்று உலகளாவில் பல்வேறு இடங்களில், நாடுகளில் இருந்து வந்துள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஊர்சபை முறை தமிழகத்தில் இருந்து வந்துள்ளது,

குடவோலை முறை

என்ற பெயரில்.

   சங்ககாலத்தில் குடவோலை முறை இருந்ததைக் குறிப்பிடும்

அகநானூற்றுப் பாடல் 77ல்

மருதன் இளநாகனார் அவர்கள்,

“கயிறுபிணிக் குழிசி ஓலை”

கயிற்றால் கட்டப்பெற்றிருக்கும் பானையில் தகுதியான தலைவனை தேர்ந்தெடுக்கும் பொருட்டு ஒவ்வொன்றாக எடுக்கப்படும் ஓலையினைப் போன்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்களால் தேர்ந்தெடுக்கும் முறையில் தேர்தல் நடைபெற்றுள்ளதை உணரலாம்.

   அறிவு:- இலக்கியச் சான்றின்றி

நிலையான சான்றுகள்

இருக்கின்றனவா?

  மாறன்:- தேர்தல் நடைமுறைகள் பற்றிய கல்வெட்டுகள் ஒரு சில

இடங்களில் கிடைத்துள்ளன.

   தமிழ்:- அந்த கல்வெட்டுகள் எங்கு இருக்கின்றன?

   பொற்கொடி:- தமிழகத்தின் பண்டைய  ஊர் சபை உறுப்பினர் தேர்வு பற்றிய முறையைத் தொன்மையான கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது. திருநெல்வேலிக்கு அருகே பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் மானூர் என்ற சிற்றூர் உள்ளது. அந்த ஊரில் அம்பலவாணசுவாமி கோயிலில் உள்ள மண்டபத் தூண் ஒன்றினில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டொன்று உள்ளது. இந்த கல்வெட்டு பாண்டிய மன்னன் மாறன்சடையனின் (கி.பி 768-815) முப்பத்து ஐந்தாம்

ஆட்சியாண்டில் நிறுவப்பட்டது. இந்த மன்னனைப் பராந்தக

நெடுஞ்சடைய வரகுணன் எனவும்

அழைப்பார்கள்.

   அறிவு:- வேறு கல்வெட்டுகளும் இருக்கிறதா?

   மாறன்:- காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூரில் புகழ் பெற்ற இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகள் அங்குள்ள திருமால் கோயிலின் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டுகள் முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907-955) காலத்தில் நிறுவப்பட்டது. அதாவது இந்த கல்வெட்டுகள் 1105 ஆண்டுகள் பழமையானது!

ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தின் மானூரில் உள்ள ஊர் சபை உறுப்பினர் தேர்வு பற்றிய கல்வெட்டை நிறுவி 1228 ஆண்டுகள் ஆகின்றன! மேலும் இந்த கல்வெட்டு உத்திரமேரூர் குடவோலை தேர்வு தகவல் அடங்கிய கல்வெட்டுகளை விட 123 ஆண்டுகள்

பழமையானதாகும். ஆனால், உத்திரமேரூர் கல்வெட்டேஅதிகளவில் பெயர் பெற்றுள்ளது.

தமிழ்:- ஏன் அப்படி நிகழ்ந்தது?

   பொற்கொடி:- இந்த 123 ஆண்டுக் கால இடைவெளியில் தமிழ் எழுத்து வடிவில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உதாரணமாக மானூர் கல்வெட்டு வட்டெழுத்திலும், உத்திரமேரூர் கல்வெட்டுகள் தமிழ் எழுத்திலும் காணப்படுகின்றன. இந்த வட்டெழுத்து கல்வெட்டில் உள்ள எழுத்துக்களுக்கும் தற்கால தமிழ் எழுத்து வடிவத்திற்கும் இடையே நிறைய மற்றங்கள் உள்ளன. எனவே தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே வட்டெழுத்தைப் படிக்க முடியும். அதனால் பொதுமக்கள் மானூர் கல்வெட்டைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாது.

மாறாக உத்திரமேரூர் தமிழ் எழுத்து கல்வெட்டுகளாகும். இவற்றை சற்று முயற்சி செய்தால் எளிதில் படித்துவிடலாம். காரணம் இந்த கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களும் தற்கால தமிழ்

எழுத்துக்களும் கிட்டத் தட்ட ஒத்த வடிவங்களே.

    உத்திரமேரூர் கல்வெட்டுகள் செய்திகள் பல கல்வெட்டு ஆய்வாளர்களின் மூலமாகவும், பல புத்தகங்களின் வாயிலாகவும், நிறைய கருத்தரங்க கட்டுரைகள் மூலமாகவும் பிரபலமடைந்துவிட்டன. உத்திரமேரூர் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு அருகே அமைந்திருப்பதாலும்; இது கிட்ட தட்ட தற்கால தமிழில் இருப்பதாலும் இந்த கல்வெட்டுகள் விரைவில் பெயர்பெற்றுவிட்டன எனலாம்.

மாறாக உத்திரமேரூர் கல்வெட்டிற்கு 123 ஆண்டுகள் மூத்த மானூர் கல்வெட்டு பற்றிய உண்மை மக்களைச் சென்றடையவில்லை என்றே சொல்லலாம்.காரணம் மானூர் வட்டெழுத்து கல்வெட்டை மக்கள் படித்துப் புரிந்து கொள்ள முடியாததாலும்; அதிக புத்தங்கள் மற்றும் கட்டுரைகள் இந்த கல்வெட்டைப் பற்றி வெளிவரவில்லை என்பதாலும்; இது தென்தமிழகத்தில் ஒரு சிற்றூரில் இருப்பதாலும் இந்த கல்வெட்டின் பெருமை வெளியுலகிற்குத் தெரியாமல் போனது எனலாம்.

   எளிதாக படிக்க இயன்றதால் பரவலாக பயன்படுத்தப்பட்ட உத்திரமேரூர் கல்வெட்டுகள், வீரப்பெரும் பாட்டி வேலுநாச்சியாருக்கு பின்வந்த சான்சி இராணியை முன்னிலைப் படுத்தியது போன்று வெகுவாக புகழ்பெற்றது.

    அறிவு:- மேலும் ஊர்சபை தேர்தல் பற்றிய கல்வெட்டுகள் உள்ளனவா?

    மாறன்:- தஞ்சையில் உள்ள பள்ளிப்பாக்கம் எனும் சிற்றூரிலும் சோழர் காலத்து ஊர்சபை தேர்தல் கல்வெட்டு இருக்கிறது. ஆனால், அக்கல்வெட்டு குறித்தான

தரவுகள் வெளிப்படையாக இல்லை.

   தமிழ்:-  ஏன் இல்லை?

   பொற்கொடி:- அறம் பிறழ்ந்து திரவிட பண்பாட்டால் சீரழிந்து நிற்கும் தமிழர்களுக்கு,  தரவுகளை கண்டறிந்து,

தரவுகளை தொகுக்க ஏது நேரம்?

   பள்ளிப்பாக்கம் மட்டுமில்லை, இன்னும் எத்தனையோ கல்வெட்டுக்கள் அடையாளங் காணப்படமலேயே  இருக்கின்றன, அல்லது அழிந்துகொண்டே இருக்கின்றன. தமிழர்களின் மரபுச் செல்வங்களான அறிவுக் கருவூலம் தமிழர் கைகளாலேயே அறியாமையால்

அழிக்கப்படுகிறது.

   அறிவு:- ஒரு சில இடங்களில் தானே தரவுகள் கிடைத்திருக்கின்றன. ஊர் சபைகள் தமிழ்நாடு முழுவதும் இருந்ததா?

    மாறன்:- அதில் ஐயமென்ன? தெற்கே  பாண்டியர் வசமிருந்த நெல்லையிலும், வடக்கே சோழர்கள் வசமிருந்த  காஞ்சியிலும், சோழர் தலைநகரமாக இருந்த தஞ்சையிலும் கல்வெட்டுகள் கிடைத்திருக்கிறதே. இதிலிருந்தே தெரியவில்லையா தமிழ்நாடு முழுவதும் இந்த நடைமுறை இருந்தது.

   அறிவு:- மானூர், உத்திரமேரூர் இவ்விரு இடங்களில் உள்ள கல்வெட்டுகள் எப்போது கண்டுபிடிக்கப்பட்டன?

   பொற்கொடி:- மானூர் வட்டெழுத்து கல்வெட்டு அங்குள்ள சிவாலயத்தில் உள்ள ஒரு தூணில் காணப்படுகிறது. ஆனால் உத்திரமேரூர் தமிழ் எழுத்து கல்வெட்டுகள் திருமால் கோயிலின் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டில் உத்திரமேரூர் தமிழ் எழுத்து கல்வெட்டுகள் 1898ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் இந்தியத் தொல்லியல் துறை 1906ஆம் ஆண்டு மானூர் கல்வெட்டைக் கண்டுபிடித்தது. இவ்வாறாக இவ்விரு கல்வெட்டுக்களும் 8 ஆண்டுகள்

இடைவெளியில் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன.

   தமிழ்:- மானூர் கல்வெட்டில் என்ன எழுதி இருக்கிறது?

   மாறன்:- மானூரில் உள்ள இந்த கல்வெட்டை ஒரு வரலாற்றுக் கருவூலம் எனலாம். காரணம் ஊர் சபையில் எப்படி உறுப்பினர்களை தேர்வு செய்வது என இந்தக் கல்வெட்டு தெளிவாக விளக்குகிறது. அந்த ஊர் சபையை “மானநிலை நல்லூர் மகாசபை” என அழைக்கின்றனர். இந்த சபைக்கு உறுப்பினராவதற்கு கீழ்க்கண்ட தகுதிகள் தேவை. இந்த தகுதிகளை வாசிக்கும் போது பெருவியப்பாக இருக்கிறது.

1. வேட்பாளர்கள் 35 முதல், 70 வயதுக்குள் இருக்க வேண்டும்.

2. கல்வி அறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

3. கல்வி மட்டுமல்ல சம்பாதித்து அரசுக்கு, வரி கட்டுபவராகவும் இருக்க வேண்டும்.

4. அவர்களிடம் அரை வேலி நிலமாவது இருக்க வேண்டும்.

5. அத்துடன் திட்டங்களைச் செய்து முடிக்கும் திறமைசாலிகளாகவும் இருக்க வேண்டும்.

6. அனைத்திற்கும் மேலாக நல்லொழுக்கம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

7. மேலும் வேட்பாளர்கள் நல்ல குணம் படைத்தவராகவும் இருத்தல் அவசியம்.

8. கடந்த ஐந்தாண்டுகளில் எந்த பொது நலப் பணியிலும்

இருந்திருக்கக் கூடாது.

    தமிழ்:- அடேங்கப்பா! இத்தனை தகுதிகள் வேண்டுமா?

    பொற்கொடி:- அதுமட்டுமல்ல. இந்த எட்டு தகுதிகள் மட்டும் இருந்தும் பயனில்லை.

1. பொது நலப்பணியைச் செய்து முடித்து கணக்குக் காட்டாதவர்கள்.

2. மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள்.

3. திருடிய வழக்கில் தண்டனைப் பெற்றவர்கள்

4. கையூட்டு வாங்கியவர்கள்

5. மேற்கண்ட குற்றங்களைச் செய்து பின்னாளில் நல்லவர்களாக வாழ்பவர்கள்.

6. மேற்கண்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களின் தாய் மற்றும் தந்தை வழி சொந்தங்களும் இந்த போட்டியில் பங்கு கொள்ள முடியாது.

    அறிவு:- இத்தனைத் தகுதிகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்

ஆகச் சிறந்தவராக இருப்பாரே!

   மாறன்:- மேற்கண்ட சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மிகச் சிறந்தவராகவே இருப்பார் என்பதில் ஐயமில்லை. இருந்தாலும் இவர்கள் ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே அந்த பணியில் இருக்க முடியும். பின்னர் புது நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். இதற்குக் காரணம் நிறைய தன்னலமற்ற, சிறந்த மற்றும் திறமையானவர்களை

அடையாளம் கண்டு பயன்படுத்தி தமிழினத்தை பண்படுத்தி இருக்கிறார்கள்.

   தமிழ்:- உத்திரமேரூர் கல்வெட்டுகள் கூறுவதென்ன?

   பொற்கொடி:- சபை உறுப்பினராக்க கோரப்படும் தகுதிகள்.

(முதல் கல்வெட்டு) :

1. 1/4 வேலிக்கு மேல் இறை கட்டும் நிலம் வைத்திருக்கவேண்டும்.

2. சொந்த மனையில் வீடு கட்டப்பட்டிருக்க வேண்டும்.

3. வயது 30க்கு மேல் 60க்குள் இருக்கவேண்டும்.

4. வேதம் கற்றவராகவும், தொழிலும் காரியத்திலும்

நிபுணராக இருக்கவேண்டும்.

5. நல்ல வழியிலான செல்வமும், தூய்மையான ஆன்மாவையும் பெற்றிருக்கவேண்டும்.

6. கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக்கூடாது. அவ்வாறு வாரிய உறுப்பினராக இருந்தோரும், அவர்களதுநெருங்கிய உறவினர்களும் உறுப்பினராக

இயலாது.

   தமிழ்:- இரண்டாவது

கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருப்பதென்ன?

   மாறன்:-  முதல் கல்வெட்டிற்கு மூன்றாண்டுகளுக்குப் பின் இரண்டாம் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.

  சபை உறுப்பினராக்க கோரப்படும் தகுதிகள்.

(இரண்டாம் கல்வெட்டு) :

1. கால் வேலிக்கு அதிகமான வரி செலுத்தக் கூடிய சொந்த நிலம் . வேண்டும்.

2. அந்நிலத்தில் சொந்த மனை இருக்கவேண்டும்.

3. வயது வரம்பு முந்தைய கல்வெட்டில் 30க்கு மேல் 60க்குள் என்றிருந்தது. பின் அது மாற்றப்பட்டு 35க்கு மேல் 70க்குள் என்று வயது

உறுதி செய்யப்பட்டுள்ளது.

4. சாத்திரம் அறிந்து அதைப் பிறருக்கு எடுத்துச் சொல்லுபவன்.

5. 1/8 நிலமே பெற்றிருப்பின், ஒரு சாத்திரத்தில் நிபுணராக

இருக்கவேண்டும்.

6. நல்ல வழியிலான செல்வமும், தூய்மையான ஆன்மாவையும்

பெற்றிருக்கவேண்டும்.

7. கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக் கூடாது. அவ்வாறு வாரிய உறுப்பினராக இருந்தோரும், அவர்களது நெருங்கிய உறவினர்களும் உறுப்பினராக இயலாது.

8. ஏதாவதொரு வாரியத்தில் இருந்து கணக்கு காட்டாது சென்றவர்களும் அவர்களது உறவினர்களும் உறுப்பினராகக்கூடாது. (முன் கல்வெட்டில் இவ்விதம் குறிக்கப்படவில்லை); தாயின் சிறிய, பெரிய சகோதரிகளின் மக்கள் – தந்தையின் சகோதரிமக்கள் – மாமன் – மாமனார் – மனைவியின் தங்கையை மணந்தவர் – உடன் பிறந்தாளை திருமணம் செய்தவர் – தன் மகளை மணம் புரிந்த மருமகன் . இது போன்ற சுற்றத்தினர் யாரும் தங்களது பெயர்களைக் குடவோலைக்கு எழுதுதல் கூடாது.

9.வேத நெறிகளுக்கு எதிராக குற்றங்களை செய்தோர், கொள்கையை மீறுபவன், பாவம் செய்தவர்கள், கையூட்டு பெற்றவர்கள் அதற்கான கழுவாய் தேடி (பரிகாரம்) தூய்மை அடைந்திருந்தாலும் அவர்களும் உறுப்பினராகும் தகுதியற்றவரே. அவர்களது உறவினர்களும் உறுப்பினராக இயலாது. கொலைக்குற்றஞ்செய்யத் தூண்டுபவர், கட்டாயத்தினால் கொலைக்குற்றம் செய்பவர், அடுத்தவர் பொருளை பறித்தவர், ஊர் மக்களுக்கு எதிராக இருப்போர் (ஊர்க்கண்டகன், கண்டகம் என்றால் முள். முள் போன்று ஊருக்கு ஊறு விளைவிப்பவர். இன்றைய வழக்கில் ரவுடி) இவர்களுக்கு ஆதரவு அளிப்போர், இவர்கள்

ளல்லாம் உறுப்பினராகத் தகுதியற்றவர்களாவர்.

10. கழுதை ஏறியோரும், பொய் கையெழுத்திட்டோரும் உறுப்பினராகத்

தகுதியற்றோராவர்.

   தமிழ்:- கழுதையேறியோர் என்றால் என்ன?

   பொற்கொடி:- கோவில் சொத்துக்களை கையாடல் செய்தவர்கள், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள்செய்வோரை கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையில் ஊர்வலமாக கொண்டுவரும் பழக்கம் இருந்துள்ளது.  “கழுதை ஏறியோர்” என்றால் இந்த வகை

தண்டனையைப் அனுபவித்தவர் ஆவர்.

    அறிவு:- இத்தகைய தகுதிகளைப் பார்த்தால் இன்றைய ஆட்சியாளர்கள், ஆண்டவர்களில் ஒருவர் கூட தேறமாட்டார்களே!

   தமிழ்:- குடவோலை தேர்வு முறை எப்படி நடத்தப்பட்டது?

   மாறன்:- மேற்குறிப்பிட்ட தகுதியற்றோர் அனைவரையும் நீக்கி,  பிற தகுதி உடையோர் பெயரிட்டுத் தேரந்தெடுத்தல் வேண்டும் என்று கல்வெட்டு கூறுகிறது. இன்றும் இந்த கல்வெட்டு அங்கு இருக்கிறது.

   ஒவ்வொரு ஊரும் அதன் அமைப்புகளுக்கு ஏற்பப் பல குடும்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. தொண்டை நாட்டு உத்தரமேரூர் முப்பது குடும்புகளையும், சோழ நாட்டுச் செந்தலை அறுபது குடும்புகளையும் கொண்டிருந்தது. ஒவ்வொரு குடும்புகளில் இருந்தும் தகுதியும் விருப்பமும் உடையவர் பெயர்களை, அக்குடும்பைச் சேர்ந்தவர்கள் ஓலை நறுக்கில் எழுதிக் தனிக் குடத்தில் இட்டு துணியால் மூடி முத்திரையிடுவார்கள்.

   அனைத்து குடும்புகளின் குடங்களும் ஊரில் உள்ள எல்லோரும் கூடியுள்ள சபையில் குடங்களை எல்லோருக்கும் எடுத்துக் காட்டி முத்திரை அழித்துக் கட்டவிழ்த்து, சிறு குழந்தையை விட்டு ஒவ்வொரு

குடத்திலிருந்தும் ஒரு ஓலையை எடுக்கச் செய்வர்.

   ஒவ்வொரு குடும்புக்கும் ஒரு ஓலையாக அனைத்து குடும்புகளுக்கும்  ஒலை எடுக்கப்படும். எடுத்த ஓலையை ஊர் பெரியவர் கையில் கொடுப்பர். அவர் தான் கையில் எந்த ஓலையையும் ஒளித்து வைத்திருக்கவில்லை என்று எல்லோருக்கும் தெரிவிக்க தனது கையை அகல விரித்து காண்பித்து பின், அகல விரித்த கையில் சிறுவன் எடுத்த ஓலையை வாங்கி அதில் எழுதியுள்ள பெயரை எல்லோரும் கேட்கும்படி வாசிப்பார்.

   அவ்வோலையை மண்டபத்தில் உள்ள பெரியவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக வாசிப்பர். வாசித்த அப்பெயர் சரிதான்  என உறுதிப்படுத்தப்பட்டு, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆக அறிவிக்கப்படுவார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சேர்ந்தது ஊர்ச்சபை. இவர்களை பெருமக்கள் என கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு ஊர்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட சபைகளே ஊராட்சி புரிந்தன. இவ்வூர்ச் சபையர் சிறு குழுக்களாகப் பல பணிகளைக் கவனிப்பர்.

   அறிவு:- தேர்ந்தெடுக்கப்பட்டவர் தவறிழைத்தால்?

   பொற்கொடி:- தேர்ந்தெடுக்கப்பட்டவர் பதவிக்காலத்தில் இடையில் தவறு செய்தால் உடனே பதவியிலிருந்து விலக்கக் கூடிய நடைமுறை அமைந்திருந்ததையும் உத்திரமேரூர் கல்வெட்டு தெரிவிக்கிறது.

   அறிவு:- இப்பெருமக்களின் பணிகள் என்ன?

   மாறன்:- இளைஞர்கள் உடல் வலி தரும் கடுமையான பணிகளையும், வயதாலும் அனுபவ ஆற்றலாலும் முதிர்ந்தவர்கள் மேற்பார்வை புரியும் பணிகளையும் புரிவர். இவ்வாறுதான் ஏரி வாரியம், தோட்ட வாரியம், நிலவரி வாரியம், பொன் வாரியம் என்றெல்லாம் பல வாரியங்களில் சபையோர் பணிபுரிந்தனர்.

   அறிவு:- ஏரி, தோட்ட வாரியங்களுக்கு என்னென்ன பணிகள்?

   பொற்கொடி:-  ஏரிகளும், குளங்களும் ஆண்டுதோறும் தூர் எடுக்கப் பெற்று சிறந்த நீர்நிலைகளாகத் திகழந்தன. ஏராளமான நீரோடுகால்கள் வெட்டப்பட்டு நீர்பாசனம் நிறைந்து திகழ்ந்தது. பல்லாயிரம் வேலி நிலங்கள் பண்படுத்தப்பட்டு பயிர் செய் நிலங்களாக மாறின.

   தமிழ்:- பொன், வரி வாரியங்களின் பணி என்ன?

   மாறன்:- பயிர் செழித்ததால், பண்டமாற்று சிறப்பாக நடந்தது. விளைச்சலில் ஐந்தில் ஒரு பகுதியை மக்கள் வரியாக வழங்கினார்கள். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி இறக்குமதி சிறந்தது.  நாட்டில் செல்வம் செழித்தது. கல்வி மிகுந்தது. இயல் இசை நாட்டியம் முதலிய கலைகள் மிகுந்தன.

   தமிழ்:-  ஊராட்சி முறையில் நாடு மிக செழிப்பாக இருந்திருக்கிறது!

   பொற்கொடி:-அடிப்படை ஊராட்சி தேர்தல் முறையில் நாடு முழுவதும் நிறைவாக விளங்கியதால் நாம் வலிவுள்ளவர்கள திகழ்ந்தோம். எளியர் என நம்மைப் பிறர் நகையாமல் வலியர் என வணங்கும் நல்லோராய்த் திகழ்ந்தோம். நம்மோரையே எதிரி எனக் கருதாது உட்பகையின்றி வாழ்ந்தோம் என்கிறது சோழர் கல்வெட்டுக்கள்.

‘ஒருவருடன் ஒருவருக்கும்

ஒன்றினுடன் ஒன்றுக்கும்

வேறுவேறு பகைமை

மனத்தின்றி விழைந்து காதலுடன் சேர

எல்லோரும் தனித்தனியே

வாழ்ந்தனம் என இன்புற்று’

என நம் முன்னோர் புகழை

உணர்த்துகிறது இக்கல்வெட்டு.

   அறிவு:- நமது அரசர்கள் நேர்மைமிகு கடுமையான சட்டங்களை

வகுத்து செயல்படுத்தி இருக்கிறார்கள்?

   மாறன்:- அதனால்தான் அந்த காலத்தில் தமிழகம் சிறந்து விளங்கியுள்ளது. வணிகம், தொழில், கலை என  பல

துறைகளில் பல நாட்டினரை தமிழகம் தன்பால் ஈர்த்துள்ளது எனலாம்.

    பொற்கொடி:- அரசும் மக்களும் செழித்தோங்கி இருந்ததை தான் கோயில் கட்டங்களும், சிற்பங்களும், கல்வெட்டுகளும் இலக்கண, இலக்கியங்களும் ஆயிரக்கணக்கில் இன்றும் சான்று கூறுகின்றன.

    தமிழ்:- சிறந்த திட்டமிட்ட அரசுகளால் தான் எத்தனையெத்தனை மாற்றங்கள்!

   பொற்கொடி:-  தலைசிறந்த தமிழ் மன்னர்கள்,  அரசவை உறுப்பினர்களிடம் உதித்த வளர்ச்சிக்கான எண்ணங்கள், உறுதுணையாக நின்ற மக்கள்! அவ்வெண்ணங்களை சின்னங்களாக நிலை நிறுத்திட, காலச் சுழற்சிகளைத் தாண்டி,அன்று வெட்டிய குளங்கள், கட்டிய அணைகள்,வெட்டிய குளங்கள்,செதுக்கிய சிற்பங்கள்,  மரபுச் செல்வங்களை கோபுரங்களாக  தாங்கி நிற்கும் கோயில்கள் என ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் கம்பீரமாக நிற்கின்றன.

 தமிழ்:- மிக்க மகிழ்ச்சி! தமிழரின் பண்டைய தேர்தல் குறித்தும், தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நாட்டை காத்து, வளமாக்கிய நமது முன்னோர்கள் குறித்தும் விளக்கினீர்கள்.

  அறிவு:- பழந்தமிழர் தேர்தல் வரலாற்று தரவுகளை அறிந்து கொண்டோம். இத்தகைய வரலாறுகளை கேட்டு அறியும் பொழுது தான், மேலும் அதிகமாக  நமது வரலாறுகளை படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.

  தமிழ்:- பெரியப்பா செந்தமிழன் சீமான் அவர்கள் மேடைகளில் எடுத்துரைக்கும், வரலாற்றைப் படி! வரலாற்றைப் படை! என்ற

தேசிய தலைவரின்  கட்டளைக்கிணங்க நாங்கள் வரலாற்றைப் படித்து வரலாற்றை படைக்கிறோம். நன்றி.

  அனைவரும்:- நல்லது.

#ஈழத்தில் சந்திப்போம்!

 திரு. ம.இராமகிருசுணன்,

செந்தமிழர் பாசறை – அமீரகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles