அக்டோபர் 2023
தமிழும் அறிவும் – ஆரிய சனாதனமும் திராவிட சமாதானமும்
பனையூரில் வசிக்கும் ஒரு அழகான குடும்பம். மாறன் அவன் மனைவி பொற்கொடி. அவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன். மகள் அறிவுச்செல்வி. பத்து வயதாகிறது. அவ்வூரிலுள்ள அரசு ஆரம்பப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பில் படிக்கிறாள். படிப்பில் கெட்டிக்காரி. பெயருக்கேற்றார் போல் அறிவோடு திகழ்பவள்.
மகன் தமிழ்ச்செல்வன். ஆறுவயதாகிறது. அதே பாடசாலையில் இரண்டாம் வகுப்பில் படிக்கிறான். துருதுருவென்று எதையும் அறிந்து கொள்ளும் வகையில் ஐயத்துடன் வினாக்களை எழுப்பிக் கொண்டே இருப்பான்.
அக்காள் அறிவுச்செல்வி பாடசாலைக்கு நடந்து செல்லும் வழியிலும், வீட்டிலிருக்கும் போதும், அவனது ஐயங்களுக்குத் தனக்குத் தெரிந்த அளவில் விடையளிப்பாள்.
ஓய்வு நாள்களிலும், மாலையில் ஓய்வு நேரங்களிலும் மாறனும், பொற்கொடியும், அறிவுச்செல்வியும், தமிழ்ச்செல்வனும் தமிழரின் வரலாறுகளைப் பேசி, விவாதிக்கும் அறிவான குடும்பம்.
அறிவும் தமிழும் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பியதும் இருவரும் கைகால் முகம் கழுவி, தலைவாரிப் புத்துணர்வு பூண்டனர். வீட்டுப் பாடங்களை தாய் பொற்கொடியின் அரவணைப்பில் செய்து முடித்தனர். மாறனும் பணிமுடித்து வீடு சேர்ந்திருந்தான்.
நால்வரும் ஓய்வாக அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.
பொற்கொடி:- இன்று பனையூர் கிளைச் செயலாளர் தம்பி நல்லதம்பி வந்திருந்தார்.
மாறன்:- அப்படியா! என்ன விவரம்?
பொற்கொடி:- தேசியத் தலைவர் பிறந்தநாள், மாவீரர் நாள் கூட்டத்திற்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். நீங்களும் குடும்பத்துடன் வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.
மாறன்:- நல்லது. நாமும் வருவதாக உறுதியளித்து விடுவதுதானே?
பொற்கொடி:- நான் அவரிடம் நாங்கள் நால்வரும் வருகிறோம் என உறுதியளித்துவிட்டேன்.
மாறன்:- சிறப்பு! சிறப்பு!
தமிழ்:- மாவீரர் நாள் என்றைக்கு வருகிறது அப்பா?
அறிவு:- என்ன தம்பி! மறந்துவிட்டாயா? நவம்பர் 26 தேசியத் தலைவர் பிறந்தநாள்; நவம்பர் 27 மாவீரர் நாள்.
தமிழ்:- மறக்கவில்லையக்கா… எந்த கிழமையில் வருகிறது? பள்ளி விடுமுறையாக இருக்குமா எனக் கேட்டேன்…
அறிவு:- எந்தக் கிழமையாக இருந்தால் என்ன? மாவீரர் நாள் நம் ஒவ்வொருவருக்கும் மிக இன்றியமையாத நாளல்லவா!
தமிழ்:- ஆமாம் அக்கா… செங்காந்தள் பூக்கள் பூத்துக் குலுங்கும் கார்த்திகை, நாம் மாவீரர்களைப் போற்றும் மாதமல்லவா!
அறிவு:- சரியாகச் சொன்னாய் தம்பி. மாவீரத்தைப் போற்றி வீரவணக்கம் செலுத்த நாமும் அணியமாவோம்.
பொற்கொடி:- மொழிப்பற்றும், இனப்பற்றும் ஊட்டி உங்களைச் சிறப்பாக வளர்த்தெடுத்ததில், எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி!
மாறன்:- அருமை…. மக்களே! நாம் அனைவரும் உறுதியாக மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தச் செல்வோம். சமாதானமடையுங்கள்.
மற்ற மூவரும்:- “களுக்” கென்று சிரிக்கின்றனர்.
மாறன்:- ஏன் சிரிக்கிறீர்கள்!
பொற்கொடி:- நீங்கள் வருவதற்கு முன், சனாதனம், சமாதானம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.
மாறன்:- ஓகோகோ! அதுதான் இந்த நகைப்புக்குக் காரணமா?
அறிவு:- ஊர் உலகமே நகைக்கிறது அப்பா!
தமிழ்:- திராவிட மாடலில் இதெல்லாம் சாதாரணமப்பா!!
மாறன்:- இன்று நேற்றல்ல… விசயநகர ஆட்சிக் காலத்திலிருந்து தொன்றுதொட்டு ஆரிய அடிவருடி வேலையைச் செய்வது தானே திராவிடம்.
அறிவு:- விசயநகர அரசு ஆயிரமாண்டுகளுக்கு முன்பானதல்லவா!
தமிழ்:- ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே அவர்கள் ஆரியத் திற்குத் துணை நின்றார்களா?
பொற்கொடி:- விசயநகர ஆட்சியாளர்கள், ஆரியப் பார்ப்பனர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
மாறன்:- தமிழர் கோவில்களில் அவர்களைப் புகுத்தினார்கள்.
பொற்கொடி:- ஆரியர்கள் படிப்படியாகத் தமிழை விடுத்து முற்றிலும் வடமொழியை வழிபாட்டு மொழியாக்கினர்.
அறிவு:- தமிழை நீசமொழி எனத் திரித்ததாகவும், இறைவனுக்குப் புரியாத மொழி எனவும் மாற்றினர் எனவும் படித்திருக்கிறேன்.
தமிழ்:- என்ன! தமிழ்க்கடவுள்களுக்கு தமிழ் மொழி புரியாதா?
பொற்கொடி:- சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்து, அகப்பொருள் முதலான நூல்களை எழுதிய தமிழர் இறைகளுக்கு, தமிழ் புரியாத மொழி எனக் கட்டமைத்தனர்.
மாறன்:- தேவாரம், திருவாசகம், திருவெம்பாவை இசைத்த கோவில்களில் எல்லாம் தெலுங்கு கீர்த்தனைகளை இசையாகத் திணித்தனர்.
பொற்கொடி:- வடமொழி வேதங்களை வழிபாடாகக் கொண்டனர்.
மாறன்:- தமிழர் கட்டிய கோவிலுக்குள் தமிழர்கள் நுழையக் கூடாதெனத் திட்டம் வகுத்தனர்.
பொற்கொடி:- குலக்கல்வி முறை, தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என சாதீய ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கினர்.
மாறன்:- ஐரோப்பியர் வருகைக்குப்பின் சூழல் மாறத் தொடங்குகிறது. மக்கள் விழிப்புற்று எழுச்சிக் கொள்ளத் தொடங்கினர்.
பொற்கொடி:- பல்வேறு போராட்டங்கள் தமிழறிஞர்களால் முன்னெடுக்கப்பட்டன.
மாறன்:- தோள்சீலைப் போராட்டம், கோவில் நுழைவுப் போராட்டம் எனத் தொடர்கிறது.
பொற்கொடி:- போராட்டத்தின் இறுதியில் நுழைந்து, இச்சூழலைப் பயன்படுத்திய ஈரோட்டு ராமசாமி தன்னைத் தலைவராக முன்னிறுத்திக் கொண்டார்.
மாறன்:- தமக்குச் சாதகமான, தெலுங்கு, கன்னடர்களைக் கொண்ட ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.
பொற்கொடி:- அவர்கள் பகுத்தறிவு எனும் பெயரில், தமிழறிஞர்கள், தமிழினத் தலைவர்கள் மீது அவதூறு பரப்பினர்.
மாறன்:- தமிழையும், தமிழர்களையும் இழிவுபடுத்து வதை முதன்மையாகக் கொண்டனர்.
பொற்கொடி:- கோவில் நுழைவுப் போராட்டத்தை மடைமாற்றி, நாத்திகம் பேசி, கடவுள் மறுப்பு, கோவிலுக்குப் போகாதே என ஆரியருக்குச் சாதகமாக தமிழர்களை இறைவழிபாட்டிலிருந்து விலக்கினர்.
மாறன்:- இன்றளவும் தமிழ் வழிபாட்டு மொழியாக ஆகாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
பொற்கொடி:- அவ்வப்போது சனாதன எதிர்ப்பு என்று சலசலத்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ்:- ஆமாம், சனாதனம் என்றால் என்ன?
மாறன்:- திராவிடம் போன்று சனாதனத்திற்கும் சரியான, தெளிவான வரைமுறை இல்லை.
தமிழ்:- சனாதானமும் உருட்டுதானா!
பொற்கொடி:- சூழலுக்கேற்ப திரித்தும், மறுத்தும், சேர்த்தும் மக்களை ஏமாற்றுவதே சனாதனமும் திராவிடமும்.
மாறன்:- வருணாசிரமக் கொள்கையும் சனாதானம் எனக் கூறப்படுகிறது. சாதீய ஏற்றத்தாழ்வுகளைக் கடைப்பிடிப்பதே வருணாசிரமக் கொள்கை.
பொற்கொடி:- சாதியச் சண்டைகளைத் தூண்டிவிட்டு தமிழர்களைப் பிரித்தாளுவதே திராவிடம்.
அறிவு:- வருணாசிரமக் கொள்கையை எதிர்த்து உருவான திராவிடம், இன்று அதனுள்ளே உழன்று கொண்டிருக்கிறதே!
தமிழ்:- இதில் சனாதன எதிர்ப்பு உருட்டு வேறு!!
பொற்கொடி:- இந்தத் திருட்டுத் திராவிடத்தை நம்பித்தான், தமிழர்கள் தங்களின் சுயத்தை இழந்தார்கள்.
மாறன்:- அறமும், அறிவும், அறிவியலும், அரசியலும், கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்த வழிபாட்டிலிருந்து விலக்கப்பட்ட தமிழர்கள், அறம் தவறிய அரசியல், நாத்திகம், பகுத்தறிவு எனத் தடம்மாறிச் சென்றனர்.
அறிவு:- அப்படியா! பகுத்தறிவைப் பேசி, இனத்தறிவைக் கொன்றுவிட்டார்கள்.
பொற்கொடி:- இப்படியாக ஆரியத்தை எதிர்க்கிறோம் எனும் போர்வையில், தமிழர்களை ஆரியத்தின் அடிமைகளாக மாற்றும் வேலையைச் செவ்வனே செய்து வருகிறது திராவிடம்.
மாறன்:- அம்பாள் எப்போதடா பேசினாள் என்ற கதை கட்டிகளின் வழித்தோன்றல்கள், இன்று கோவில் கோவிலாகச் சென்று பூசை, புணசுகாரங்களில் மூழ்குகிறார்கள்.
அறிவு:- அம்பாள் எப்போதடா பேசினாள் என்றவர் இன்று தினகரன் நாளிதழ் படித்துக் கொண்டிருக்கிறார்.
பொற்கொடி:- கடவுள் மறுப்போடு சிலை வழிபாட்டை எதிர்த்து, சிலைகளை உடைத்தவர்களுக்கு, இன்று ஊரெங்கும் சிலைகளும், வழிபாடுகளும், பசனைகளும், தயிர்வடைப் படையலும் சிறப்பாகச் செய்யப்படுகின்றன.
மாறன்:- கடவுளர்களின் சிலைகளை உடைத்துப் புறங்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தங்களுக்குத் தாமே சிலை வைத்துக் கொண்டனர்.
பொற்கொடி:- திராவிடத்தின் உட்பூசல்களால் தத்தமது சிலைகளை உடைத்துக் கொண்டு, தமிழர் நிலத்தைக் கலவரக் களமாக வைத்திருக்கின்றனர்.
தமிழ்:- ஓகோ! இதுவும் திராவிட மாடலோ!
மாறன்:- ஒரு பக்கம் ஆரிய எதிர்ப்பு என்று வேடமிட்டு, அடைந்தால் திராவிடநாடு, இல்லையேல் சுடுகாடு என்று கூச்சலிட்டு அடங்கி திராவிட இடுகாட்டில் ஒடுங்கிவிட்டார்கள்.
பொற்கொடி:- ஆரிய காங்கிரசை எதிர்த்துக் கட்சி தொடங்கியவர்கள், நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக என மண்டியிட்டனர்.
மாறன்:- ஆர்.எசு.எசு. ஒரு சமூக நல்லிணக்க இயக்கம் எனச் சான்றிதழ் வழங்கினார்கள்.
பொற்கொடி:- ஆரியத்தை எதிர்த்த திராவிடத்தின் தலைமையாக ஒரு ஆரியரே இருந்தது திராவிடத்தின் பேரவலம்.
பொற்கொடி:- சனாதன வெறி கொண்ட ஆரிய பா.ச.க வைத் தூக்கிப் பிடித்து ஆட்சியில் வைத்து அழகு பார்த்ததும் திராவிடமே.
மாறன்:- ஈழத்தில் இனத்தை அழித்த ஆரியத்திற்குத் துணையாக நின்றது திராவிடமே.
பொற்கொடி:- ஈழப்போர் முடிவதற்குள் பதவிக்காகச் சமாதானமானது திராவிடமே.
மாறன்:- பதவியை அனுபவித்தபின், இனத்தை அழித்த காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று பசப்பியதும் திராவிடமே.
பொற்கொடி:- வெட்கமற்று மீண்டும் கௌவுல் பிராமண இராகுல் காங்கிரசுடன் கூட்டணி வைத்தது, இன்றும் தொடர்வது திராவிடமே.
பொற்கொடி:- பதிவு பெறாத அமைப்பான ஆர். எசு.எசு.ன் ஊர்வலம், பயிற்சிகளுக்கு அனுமதியளித்ததும் திராவிடமே.
மாறன்:- டெல்லியில் இரண்டு ஆரியக்கட்சிகளுடன் அளவளாவி கைகோர்ப்பதும், சென்னையில் இறங்கியவுடன் ஆரியத்தை எதிர்ப்பதைப்போல் கட்டமைப்பதும் திராவிடமே.
பொற்கொடி:- அவ்வப்போது சனாதன எதிர்ப்பு என அதீத ஊடக வெளிச்சத்தை வைத்து, வேடம் போட்டு ஏமாற்றுவதும் சமாதானமாவதும் திராவிடக் கும்பலுக்குக் கைவந்த கலை.
மாறன்:- ஆரியம் இல்லையேல் இங்கு திராவிடத்திற்கு வேலையில்லை.
பொற்கொடி:- எனவே. ஆரியக் கூத்துக்குத் தாண்டவமாடும் திராவிடம்.
தமிழ்:- மொத்தத்தில் ஆரியத்தை வளர்த்துவிட்டு, தன்னை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ளும் திராவிடம் என்பது தெளிவு.
அறிவு:- சரியாகச் சொன்னாய் தமிழ். தமிழுக்குப் புரிந்தது, தமிழருக்கு எப்போது புரியுமோ!!
தமிழ்:- ஆகா… சனாதன எதிர்ப்பாளர்களின், சமாதான வெள்ளைக் குடையை விட்டுவிட்டீர்களே!! க க க போ!!
அனைவரும் நகைக்கின்றனர்.
“மாவீரர் நாளுக்கு அணியமாவோம். மானத்தமிழர் விடுதலைக்கு உயிரீந்த மறவர்களை நினைவிலேற்றுவோம்!”
திரு. ம. இராமகிருசுணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.