செப்டம்பர் 2023
தமிழும் அறிவும்
ஆரிய திராவிட கொள்ளை கும்பல் சண்டையில் வீழ்த்தப்பட்ட தமிழர்கள்
பனையூரில் வசிக்கும் ஒரு அழகான குடும்பம். மாறன் அவன் மனைவி பொற்கொடி. அவர்களுக்கு ஒருமகள், ஒரு மகன். மகள் அறிவுச்செல்வி. பத்து வயதாகிறது. அவ்வூரிலுள்ள அரசு ஆரம்ப பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். படிப்பில் கெட்டிக்காரி. பெயருக்கேற்றார் போல் அறிவோடு திகழ்பவள்.
மகன் தமிழ்ச்செல்வன். ஆறுவயதாகிறது. அதே பாடசாலையில் இரண்டாம் வகுப்பு படிக்கிறான். துருதுருவென்று எதையும் அறிந்து கொள்ளும் வகையில் ஐயத்துடன் வினாக்களை எழுப்பிக் கொண்டே இருப்பான்.
அக்காள் அறிவுச்செல்வி பாடசாலைக்கு நடந்து செல்லும் வழியிலும், வீட்டிலிருக்கும் போதும், அவனது ஐயங்களுக்குத் தனக்குத் தெரிந்த அளவில் விடையளிப்பாள்.
ஓய்வு நாள்களிலும், மாலையில் ஓய்வு நேரங்களிலும் மாறனும், பொற்கொடியும், அறிவுச்செல்வியும், தமிழ்ச்செல்வ னும் தமிழரின் வரலாறுகளைப் பேசி, விவாதிக்கும் அறிவான குடும்பம்.
அறிவும் தமிழும் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பியதும் இருவரும் கைகால் முகம் கழுவி, தலைவாரி புத்துணர்வு பூண்டனர்.
மாறனும் பணி முடித்து வீட்டை நோக்கி தனது உந்துருளியை மிதமான வேகத்தில் செலுத்தினான். வழியில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு சற்று நேரத்திலேயே வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
சிறிது நேரம் சொகுசு நாற்காலியில் சாய்ந்து உடலையும் உள்ளத்தையும் சமநிலைப்படுத்திக் கொண்டான். பின்னர் குளித்து முடித்து புத்துணர்வுடன் திரும்பி நாற்காலியில் அமர்ந்தான்.
தொலைக்காட்சிப் பெட்டியில் செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. செய்திகளை கவனிக்க துவங்கினான். அறிவும் தமிழும் தந்தைக்கு இருபுறமும் அமர்ந்து கொண்டு அவர்களும் செய்திகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர். பொற்கொடியும் இவர்களுக்கு அருகில் வந்தமர்ந்தாள்.
பொற்கொடி ஒரு பித்தளை தாம்பாளத்தில் நான்கு கிண்ணங்களில் பாயசத்தை எடுத்து வந்தாள். அனைவருக்கும் கொடுத்து அவளும் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு தாம்பாளத் தட்டை அருகிலிருந்த மர மேடையில் வைத்தாள்.
கைக்குத்தல் அவல், அச்சு வெல்லம், முந்திரி பருப்பு, உலர் கொடிமுந்திரி, ஏலரிசி, தேங்காய் துருவல், பால் சேர்த்து செய்யப்பட்ட பாயசத்தை அனைவரும் விரும்பி அருந்தினர்.
தொலைக்காட்சிச் செய்தியில் இந்திய ஒன்றியத்தின் முதன்மை அமைச்சர் தமிழில் பேசினார், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என மொழிந்தார்; தமிழ் மொழி மிகவும் மூத்த மொழி, செம்மொழி என உரையாற்றினார் எனவும் சிறப்புச் செய்தியாக ஓடிக் கொண்டிருந்தது. அறிவும், தமிழும் அச்செய்திகளை பார்த்து கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு பொற்கொடியிடமும் மாறனிடமும் தங்கள் ஐயங்களை கேட்டார்கள். வினாக்களைத் தொடுத்தார்கள்.
தமிழ் :- தமிழ் மிகவும் மூத்த மொழி என கூறுகிறார்களே ஏன் அம்மா?
பொற்கொடி:- ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் மொழி வழக்கிலிருந்ததை வரலாற்று ஆய்வறிஞர்கள் பலர் நிறுவியிருக்கிறார்கள்.
அறிவு:- அப்படியா! அப்பொழுதே தமிழ் எழுத்துக்கள் இருந்ததா அம்மா?
பொற்கொடி:- தொடக்கத்தில் பேச்சு மொழியாக இருபதினாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு எழுத்து மொழியாக ஆக்கம் பெற்றது.
தமிழ்:- அடேயப்பா! இருபதாயிரம் ஆண்டுகளா! நம் தாத்தாவுக்கும் தாத்தா காலத்திற்கும் முந்தியதா?
மாறன்:- நூற்றுக்கணக்கான தலைமுறைகளை, தாத்தாக்களைக் கடந்த காலம் அது.
அறிவு:- நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டிருப்பதால் தான் இந்திய ஒன்றிய முதன்மை அமைச்சர் தமிழைப் போற்றிப் பேசுகிறாரா அப்பா?
பொற்கொடி:- ஆம். பேசுகிறார். ஆனால் உளமாற பேசவில்லை. ஒப்புக்காக பேசுகிறார்.
தமிழ்:- ஒப்புக்காக பேசுகிறாரா? புரியவில்லையே அம்மா.
மாறன்:- தமிழர் நிலத்தை மற்றவர்கள் அரசாள தமிழை பேசினால் போதும், தமிழர்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தைக் கூட பெருந்தன்மையாகத் தூக்கிக் கொடுத்துவிடுவார்கள்.
அறிவு:- உண்மையாகவா!
பொற்கொடி:- ஆமாம். அது தானே வரலாறாக இருக்கின்றது.
தமிழ்:- இப்படியா ஆட்சியை அடுத்தவரிடம் கொடுப்பது.
மாறன்:- தமிழர்களுக்கு தமிழ் மொழி மீதிருந்த பற்று அந்த அளவிற்கு இருக்கிறது.
அறிவு:- தமிழ் மொழிப்பற்றாளர்கள் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள்… இந்திய ஒன்றிய முதன்மை அமைச்சர் தமிழைப் போற்றுகிறார். இருந்தும் ஏன் தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழி ஆகவில்லை?
பொற்கொடி:- தீய திராவிடமும், மாய ஆரியமும் கைகோர்த்துச் செய்யும் சூழ்ச்சி.
மாறன்:- தமிழால் இனிக்கப்பேசி தமிழர்களை தமது கைப்பிடிக்குள் அடக்கி வைத்திருக்க வேண்டும் எனும் எண்ணம். தமிழையும் தமிழர்களின் தனித்த அடையாளங்களையும் அழிக்க வேண்டும் எனும் எண்ணம்.
பொற்கொடி:- தொன்மையான தமிழ் நிலத்தின் வளங்களையும், வரலாறுகளையும், பண்பாட்டுக் கூறுகளையும் அழித்து, தமிழின், தமிழரின் தனித்த அடையாளங்களை நீர்த்துப் போகச் செய்யும் திட்டம்
அறிவு:- தமிழரின் தனித்த அடையாளங்கள் நீர்த்துப் போனால் இவர்களுக்கு என்ன பயன்?
மாறன்:- மொழி என்பது தனித்து இயங்க வல்லது அல்ல. ஒரு மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்க அதைப் பேசும் ஒரு மக்கள் கூட்டம் வேண்டும்.
பொற்கொடி:- அவ்வாறு ஒரு மொழியைப் பேசும் மக்கள் கூட்டத்திற்கு அம்மொழி இனத்தவர் என்று பெயர். அப்படியான இனம் இல்லாத மொழி இறந்த மொழியாகக் கருதப்படுகிறது.
அறிவு:- மொழி இறந்துவிடுமா?
மாறன்:- பயன்பாட்டில் இல்லாத மொழிகள் காலப்போக்கில் இறந்துவிடும். கிரேக்கம், சமற்கிருதம் போன்ற உலகின் பல பண்டைய மொழிகள் இவ்வாறு இறந்த மொழியாகவே உள்ளன. ஆக ஒரு மொழி வாழ ஓர் இனம் தேவை.
தமிழ்:- இனம் இருந்தால் மொழி வாழ்ந்துவிடுமா அப்பா?
பொற்கொடி:- மொழியை அழித்து விட்டு இனம் என்ற அடையாளத்தை தக்க வைக்க முடியாது. தங்கள் மொழியை இழந்தவர்கள் ஓர் இனமாகவும் அறியப்படுவதில்லை.
மாறன்:- எனவே மொழியும் இனமும் ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை என இணைந்து நிற்பவை. இங்கு இனம் என்று சொல்லும் போது அது உயிருள்ள ஒரு மக்கள் கூட்டத்தைக் குறிக்கிறது.
பொற்கொடி:- ஒரு இனத்தை அழிப்பது என்பது அந்த மக்கள் கூட்டத்தைக் கொன்றுவிடுவது என்பதல்ல. அந்த இனத்தின் அடையாளத்தை அழிப்பதே இனத்தை அழிப்பதற்கு இணையானது.
அறிவு:- இப்படி எவையெல்லாம் இனப்படுகொலைக்கு காரணியாகின்றன?
மாறன்:- 1948-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐ. நா. வின் இனப்படுகொலை விதிகள், பிரிவு 2 எவற்றையெல்லாம் இனப்படுகொலைக்குக் காரணிகளாக கொள்ளலாம் என்பதை வரையறை செய்திருக்கிறது.
அறிவு:- அப்படியா?
பொற்கொடி:- ஒரு தேசிய, சமய அல்லது இனக்குழுவைத் திட்டமிட்டு பரந்த அளவில் முழுமையாக அழித்தொழிப்பது அல்லது அழித்தொழிக்க முற்படுவது என்ற நோக்கத்தைக் குறிப்பிடுகிறது.
தமிழ்:- நோக்கமா?
மாறன்:- ஆம். இந்த நோக்கம் என்ற சொல் மிக முக்கியமானது. இந்நோக்கத்திற்காக நேரடியாக, மறைமுகமாக செய்யப்படும் செயல்கள் இனப்படுகொலைக்குக் காரணிகளாகின்றன.
அறிவு:- அக்காரணிகள் என்ன அப்பா?
மாறன்:- குறிப்பிட்ட ஒரு இனக் குழுவைச் சேர்ந்தவர்களைக் கொல்வது.
பொற்கொடி:- அவ்வினக் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு உடல் அல்லது உள்ளத்தில் கடுமையான காயத்தை ஏற்படுத்துவது.
மாறன்:- அவ்வினக் குழுவைச் சேர்ந்தவர்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழியும் வகையில் திட்டமிட்ட வாழ்க்கை நிலையை அவர்கள் மீது திணிப்பது.
பொற்கொடி:- அக்குழுவிற்குள் குழந்தைகள் பிறப்பதைக் கட்டாயமாகத் தடுப்பது.
மாறன்:- அவ்வினக் குழுவைச் சேர்ந்த குழந்தைகளை கட்டாயமாக வேறொரு குழுவிற்கு மாற்றுவது என்பதாக வரையறை செய்கின்றது.
அறிவு:- ஒரு இனத்தை அழிக்க இத்தனை வழிகள் உள்ளதா?
பொற்கொடி:- இதில் நாம் கவனிக்க வேண்டியது ஓர் இனத்தை அழிக்கும் வகையில் திட்டமிட்ட வாழ்நிலையை அவர்கள் மீது திணிப்பது என்பதைத்தான்.
மாறன்:- இன்று வரை ஈழத்தில் தொடரும் இனப்படுகொலை குறித்து நாம் பேசி வருகிறோம். 2009 மே மாதத்துடன் ஆயுதப் போர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் இன்று வரை தமிழர்கள் மீதான உளவியல் போர் தொடர்கிறது.
பொற்கொடி:- ஈழத்தில் தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. அடக்குமுறை, ஒடுக்கு முறை தொடர்கின்றது. மக்கள் ஒருவித அச்சமான, விடுதலையற்ற சூழலிலேயே வாழ்கிறார்கள்.
மாறன்:- பண்பாடு கலாச்சாரம் அழிக்கப்படுகிறது. போதைக் கலாச்சாரம் திட்டமிட்டு திணிக்கப்படுகிறது.
பொற்கொடி:- வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டு புத்த விகாரைகளாக மாற்றப்படுகின்றன.
மாறன்:- ஏறத்தாழ பல நூற்றாண்டுகளாக இதே போன்றதொரு இனப்படுகொலை இலங்கையில் அல்ல; இங்கே வாழும் தமிழர்கள் மீதும் நடத்தப்பட்டு வந்ததை, இன்றும் அது தொடர்வதை நாம் உணரவில்லை என்பதுதான் வேதனையானது.
தமிழ்:- இங்கு தமிழ்நாட்டில் அடக்குமுறை இல்லையே! திரையரங்கம், கேளிக்கை என மக்கள் மகிழ்வோடு தானே வாழ்கிறார்கள்.
பொற்கொடி:- தோற்றத்தில் மகிழ்வான வாழ்க்கை போல் தோன்றினாலும், இயல்பான, நெறியான வாழ்க்கை முறை இதுவன்று.

மாறன்:- நமக்குத் தெரிந்தே, நாம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
அறிவு:- அழிக்கப்படுகிறோமா? எப்படி அப்பா?
மாறன்:- வரலாற்று நோக்கில் இந்தியா என்று அழைக்கப்படும் இந்த நிலப்பகுதியெங்கும் ஒரு காலத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
பொற்கொடி:- சிந்து சமவெளி நாகரிகம் என்பது தமிழர் நாகரிகமாக இருந்தது. இன்று தமிழ்நாடு என்று சுருங்கிய ஓர் இடத்தில் மட்டுமே தமிழர் என்ற அடையாளத்துடன் வாழ்கின்றனர்.
மாறன்:- வெளியில் இருந்து வந்த ஆரியம், தனது திருடி சமைத்த மொழி சமற்கிருதம் மூலமாக இந்த மக்களிடையே ஊடுருவி அவர்களை பல வேறு இனங்களாகக் கூறு போட்டது.
பொற்கொடி:- ஆரியத்துடன் கலந்து இம்மண்ணின் மக்கள் பல்வேறு மொழி இனங்களாக பிரிந்து போய் விட்ட பிறகும் தமிழ் மொழியை விடாமல் பற்றி ஒரு மக்கள் கூட்டம் தெற்குப் பகுதியில் வாழ்ந்து வருகிறது. இவர்களையும் அழிக்க ஆரியம் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்தது. இன்றளவும் திராவிடம் அதற்குத் துணை நிற்கின்றது.
மாறன்:- ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆரியர் இந்த மண்ணில் தொல்குடி மக்களான தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலை பல வடிவங்களை எடுத்தது.
பொற்கொடி:- இந்திய நிலப்பரப்பில் ஆரியக் கலப்புற்ற எண்ணற்ற மொழிகள் இன்று மறைந்தேவிட்டன. இந்தி திணிப்பால் இன்றும் பல மொழிகள் மறைந்து கொண்டிருக்கின்றன.
மாறன்:- தமிழில் வடமொழி கலப்பு தொடர்ந்து வந்தாலும், தமிழ் மட்டுமே இன்றளவும் பெருமளவு ஆரிய, சமற்கிருதக் கலப்பற்று தனித்து இயங்கி வருகிறது. தமிழர்கள் தனித்த இன அடையாளமாக இருக்கிறார்கள்.
பொற்கொடி:- அதனால்தான் இன்றும் ஆரியர்களும், சமற்கிருதத்தைத் தாங்கிப் பிடிப்பவர்களும், தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றனர்.
மாறன்:- வடமொழி கலப்புற்ற பிற இந்திய மொழிகளை விடவும் தமிழை இல்லாதொழிக்க அவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர்.
தமிழ்:- தமிழை, தமிழர்களை எப்படியெல்லாம் அழிக்க வருவார்கள் அப்பா?
மாறன்:- எப்படி இன்று இலங்கையில் தமிழ் ஊர்ப் பெயர்கள் எல்லாம் சிங்களப் பெயர்களாக மாற்றம் பெறுகின்றனவோ, அப்படித்தான் திருமறைக்காடு வேதாரண்யம் எனவும், குடந்தை கும்பகோணம் எனவும், மயிலாடுதுறை மாயூரம் எனவும் திரிக்கப்பட்டது.
பொற்கொடி:- இவ்வாறு ஊர் பெயர்களெல்லாம் திரித்து நம் மீது திணிக்கப்பட்டது. நாமும் அறிந்தும் அறியாமல் ஏற்றுக் கொண்டு நிற்கிறோம்.
அறிவு:- ஊர் பெயர்கள் மட்டும் தானா! மக்களும் வட மொழியில் பெயர் வைக்கிறார்களே!
தமிழ்:- பெரியப்பா சீமான் அவர்களும் பல மேடைகளில் பேசி வருகிறார்களே!
மாறன்:- நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என தமிழ்ப் பெயர் தாங்கிய மன்னர்களின் வழித் தோன்றல்களை விஜயாலயன், இராஜராஜ சோழன் என பெயர் சூட்ட வைத்தது. மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி எனும்படி மக்களும் சமற்கிருதப் பெயர்களுக்கு மாறினர்.
பொற்கொடி:- மக்களும் வடமொழிப் பெயர்களையும், வடமொழி கலந்த பெயர்களையும், வடமொழி பெயர்களின் தமிழாக்கப் பெயர்களையும் தம் மக்களுக்குச் சூட்டி மொழி அழியக் காரணமாகிவிட்டோம்.
மாறன்: – இன்று என்ன நிலை? இன்று எந்த கல்வி நிலையத்திலும் அலுவலகத்திலும், வாக்காளர் பட்டியலிலும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலைப் பார்த்தால் வாய்க்குள் நுழையாத சமற்கிருதப் பெயர்களே நிறைந்திருப்பதைக் காணலாம்.
பொற்கொடி:- பொருள் புரியாமல், மண்ணாங்கட்டி, மயிரவன், எருமைமகள் என வடமொழி பெயர்களை சுமந்து திரிகிறோம்.
அறிவு:- என்னுடைய வகுப்பிலும் மகிசா எனும் தோழி இருக்கிறாள். இது வட மொழி பெயரா?
தமிழ்:- ஆமாம், என்றுடைய வகுப்புத் தோழன் பெயர் கேசவ். இதுவும் வட மொழி பெயரா அம்மா?
பொற்கொடி:- ஆமாம் செல்வங்களே. மகிசா என்பது எருமையையும், கேசம் என்பது மயிரையும் குறிக்கும் வடமொழி சொற்கள்.
மாறன்:- இப்படி இழிவான பல பெயர்களை நம்மீது திணித்து தமிழர்களை இழிவு செய்கின்றார்கள்.
பொற்கொடி:- குழந்தை பிறந்தவுடன் அது ஆரோக்கியமாக உள்ளதா என்ற கேள்விக்கு முன், அது எத்தனை மணிக்குப் பிறந்தது என்று கேட்டு, உடனே நிமித்தக்காரர்களிடம் ஓடிச் சென்று, சாதகம் குறிப்பதும், பிறந்த நட்சத்திரம் அல்லது எண் கணித அடிப்படையில் பெயர் சூட்ட விழைவதுமே இதற்குக் காரணம்.
மாறன்:- இந்தச் சோதிடக்காரர்கள் குறித்துக் கொடுக்கும் எழுத்துக்களில் தமிழ்ப் பெயர்களே வைக்க முடியாது.
அறிவு:- சோதிடம் தமிழ் இல்லையா அப்பா!
மாறன்:- ஆதியில் தமிழர்களில் காலத்தை கணித்தவர்கள் கணியர்கள் என்று இருந்தார்கள். அவர்கள் நாழிகை, நாள், வாரம், திங்கள், ஆண்டு , பிறப்பு, இறப்பு முதலானவற்றைக் கணித்து எழுதினார்கள்.
பொற்கொடி:- ஆரியர்கள் அதையும் திருடி தமக்காகச் சமைத்துக் கொண்டனர். தங்களுக்கேற்ப திரித்து தமிழர்கள் தலையில் கட்டிவிட்டார்கள்.
மாறன்:- ர, ல, நெடுங்கணக்கு எழுத்துக்களை கொண்டு தமிழ் சொற்கள் தொடங்காது என தமிழரின் ஒப்பற்ற இலக்கண நூல் தொல்காப்பியம் உரைக்கிறது.
பொற்கொடி:- இத்தகைய சொற்களைப் பயன்படுத்தக்கூடாது என்ற எண்ணம் இன்னும் தமிழர்களுக்கு உதிக்கவில்லை. இது தமிழுக்கும், தமிழருக்கும் இழிவு என்றும் உறைக்கவில்லை.
மாறன்:- வடமொழி எழுத்துகளை சொற்களின் முதலிலும், இடையிலும், ஈற்றிலும் சொருகவும் , வடமொழிப் பெயர்களைப் பரவலாக்கவும் ஆரியர்கள் இத்தகு உத்திகளை கையாண்டார்கள்.
தமிழ்:- இதற்குத் தீர்வுதான் என்ன அப்பா?
மாறன்:- அடுத்தடுத்த தலைமுறைக்காவது தமிழ்ப் பெயரைச் சூட்ட தற்போது பலர் முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது.
பொற்கொடி:- உங்களுக்கும் அழகான, அறிவான, இனிமையான, அறிவுச்செல்வி, தமிழ்ச்செல்வன் என நாங்களும், தாத்தா, பாட்டி முதல் நம் குடும்பத்தில் அனைவரும் இணைந்து பெயர் சூட்டினோம்.
தமிழ்:- அப்படியா! நல்ல தமிழ்ப் பெயரை எங்களுக்குச் சூட்டியதற்கு மிக்க நன்றி!
மாறன்:- மகிழ்ச்சி. அப்படியே, தமிழர் வழிபாட்டை தன் வசமாக்கியது; முருகனை சுப்பிரமணியன் ஆக்கியது; மாலவனை, திருமாலை, விஷ்ணுவாக்கியது போன்றவற்றோடு ஊர்தோறும் இருந்த சிவ, மாலவ தெய்வங்களுக்கும், பெண் காவல் தெய்வங்களுக்கும் வடமொழிப் பெயர்கள் சூட்டப்பெற்றன.
அறிவு:- பெருவுடையார், பிரகதீசுவரர் எனப் படித்திருக்கிறேன்.
பொற்கொடி:- ஆம். இன்று பெருமளவில் வடமொழிப் பெயர்களை நமது கடவுளர்கள் பெற்றுவிட்டனர்.
மாறன்:- வழிபாட்டு முறைகளில் தமிழை அறவே நீக்கி சமற்கிருதத்தை தெய்வ பாசை ஆக்கியது; அந்த தெய்வ பாசையில் தெய்வத்திடம் பேச தகுதியானவர்கள் என பார்ப்பனர்களை நிறுவியது.
பொற்கொடி:- தமிழர் இசையைப் பறித்து தெலுங்கு கீர்த்தனைகளை திணித்தது; நடனத்தை பரதநாட்டியம் என திரித்து ஆரியமயப்படுத்தியது.
மாறன்:- இவை எல்லாவற்றிற்கும் மேலாக சாதி எனும் கொடிய நஞ்சினால் இச்சமூகத்தை சுக்கல் சுக்கலாக உடைத்தது; மொழியால் ஒன்றாக இருந்தவர்களை மொழியை மறந்து சாதியால் பிரிந்து நிற்க வைத்தது.
பொற்கொடி:- அதனிலும் கொடியதாக, அந்த சாதியைப் படிநிலை அமைப்பாக்கி அதன் உச்சத்தில் ஆரியம் தன்னை நிறுத்திக் கொண்டு, தமிழர் அனைவரும் தனக்குக் கீழானவர்களே என அறிவித்தது; அதைத் தமிழர்களையும் ஏற்றுப் பின்பற்ற வைத்தது.
மாறன்:- இப்படியாகத் தமிழர்கள் தங்கள் வழிபாட்டில், பெயரில், இசையில், நடனத்தில், சமூக வாழ்வில் என அனைத்திலும் ஆரியமயமாகிப் போயினர்.
பொற்கொடி:- இறுதி அடியாக மொழியையும் அழித்து விட்டால் இனி தமிழர் என்ற அடையாளம் முற்றிலும் அற்றுப் போய்விடும் என்ற நிலையில், சமற்கிருதச் சொற்களை மிகுதியாகக் கலந்து எழுதுவதே மேன்மையானது என்ற சிந்தனைப் போக்கை உருவாக்கி, மணிப்பவழ நடையைப் பரவலாக்கியது.
மாறன்:- இந்த நிலையில்தான் மறைமலையடிகள் விழித்துத் துடித்தெழுந்து அந்தப் பேரழிவிலிருந்து தமிழ் மொழியைக் காக்கப் பெரும் முயற்சி செய்தார்.
பொற்கொடி:- அதன் மூலம் தமிழ் இனம் தன் அடையாளத்தை முற்றிலும் இழந்து நிற்கும் பேரபாயத்திலிருந்தும் காத்தார்.
மாறன்:- சதுப்பு நிலத்தில் மூழ்கிக் கொண்டிருந்த தமிழ் இனத்தின் தலையைப் பிடித்து இழுத்து மூச்சு மட்டுமேனும் விடும்படி செய்தார். ஆனால் ஆரியம் – சமற்கிருதம் எனும் சதுப்பு நிலத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழ் இனம் முற்றிலுமாக தப்பிவிடவில்லை. இன்று வரையிலும் அது சிக்கிக் கொண்டுதான் உள்ளது.
பொற்கொடி:- மறைமலை அடிகள் தமிழ் மொழியை சமற்கிருதத்தின் பிடியிலிருந்து மீட்டார். அவரைத் தொடர்ந்து வந்த பேரறிஞர்கள் தமிழர் இனத்தினை சமற்கிருதத்தின், ஆரியத்தின் பிடியிலிருந்து மீட்கப் போராடினார்கள்.
மாறன்:- கடந்த நூற்றாண்டில் முப்பதுகளில் இந்தியைத் திணித்துப் பரவலாக்க முனைந்தனர். அதனால் மொழிப்போராட்டம் பிறந்தது.
பொற்கொடி:- ஈழத்து சிவானந்த அடிகள் தொடங்கி தமிழறிஞர்களின் எதிர்ப்பினால் முப்பதுகளின் இறுதியில் இந்தி திணிப்பு திரும்பப் பெறப்பட்டாலும், மீண்டும் இந்தியைத் திணிக்க முயன்றது ஒன்றிய, மாநில காங்கிரசு.
மாறன்:- அதனால் அறுபதுகளின் தொடக்கத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து, மாணவர்கள், பொது மக்கள் என மாபெரும் போராட்டமாக உருவெடுத்தது.
பொற்கொடி:- மொழிக்காகப் போராடி நூற்றுக்கணக்கானவர்கள் இன்னுயிரை ஈந்தனர்.
தமிழ்:- மொழிக்காகப் போராடி உயிரைக்கூட இழந்தார்களா?
மாறன்:- தாய்மொழி தமிழினை உயிரினும் மேலானதாக தமிழர்கள் கொண்டிருந்தார்கள். அதனால் உயிரைக் கொடுத்தேனும் தமிழைக் காப்போம் என ஈகத்திற்குத் துணிந்தார்கள்.
அறிவு:- பிறகு என்ன நடந்தது அப்பா?
மாறன்:- பெரும் எதிர்ப்பும், போராட்டமும் தொடர்ந்ததை அடுத்து மீண்டும் இந்தி திணிப்பு திரும்பப் பெறப்பட்டது.
தமிழ்:- சிறப்பு! போராட்டம் வெற்றி பெற்றது!
பொற்கொடி:- போராட்டம் வெற்றி பெற்றிருந்தாலும், ஒன்றிய, தமிழக காங்கிரசு அரசு இந்தியைக் கட்டாயமாக்க மாட்டோம் எனப் பசப்பியது.
மாறன்:- படிப்படியாக இந்தியைத் திணிக்க மறைமுகமாகத் திட்டமிட்டது.
அறிவு:- மொழிப்போரில் திராவிடத்தின் பங்கு என்னம்மா?
பொற்கொடி:- விடுதலைக்குப் பின் இந்திய ஒன்றியத்தின் தேசிய ஒருமைப்பாடு என்ற சுழலுக்குள் காங்கிரசும், அதன் தலைவர்களும் உழன்றார்கள்.
மாறன்:- விடுதலைக்கு முன்பிருந்தே, மறைமலையடிகள் தொடங்கி பல தமிழர்கள் ஆரிய எதிர்ப்பைக் கொண்டிருந்தனர்.
பொற்கொடி:- பல அறிஞர்கள் ஒன்றிணைந்து தமிழர் கழகத்தை உருவாக்கத் துணிந்தனர். அதற்கான மாநாட்டைக் கூட்டி தமிழர் கழகமென அறிவிக்கச் சென்ற வேளையில், ஈரோட்டு இராமசாமி திராவிடர் கழகம் என மேடையில் அறிவித்துவிட்டார்.
தமிழ்:- ஐயையோ!! இதென்ன பித்தலாட்டம்?
அறிவு:- இப்படித்தான் திராவிடம் பிறந்ததா அப்பா?
மாறன்:- ஆமாம். இப்படி திருட்டுத்தனமாகத்தான் திராவிடம் தமிழர்கள் தலையில் கட்டப்பட்டது.
தமிழ்:- இதனால் தான் திருட்டு திராவிடம் என அழைக்கப்படுகிறதோ?
பொற்கொடி:- அப்போதே பல தமிழறிஞர்கள் அதிலிருந்து விலகி தமிழர் கழகத்தை உருவாக்கி கூட்டங்களை நடத்தினார்கள்.
தமிழ்:- சிறப்பு. தமிழர்கள் ஒன்றிணைந்திருப்பார்களே?
மாறன்:- தமிழறிஞர்கள் கூடும் கூட்டத்தில் கல்லெறிவது, முட்டைகளை வீசுவது, அவதூறு பரப்புவது என திராவிட கொள்கைகளை கையிலெடுத்தனர் திராவிட கழகத்தினர்.
அறிவு:- ஓகோ! இதுதான் திராவிடத்தின் கொள்கைகளோ?
தமிழ்:- அதனால் தான் இன்றளவும் திராவிடம் அவதூறு பரப்பிக் கொண்டிருக்கிறதோ?
பொற்கொடி:- திராவிடர் கழகத்தவரின், பொய்யுரைக்கும், புரட்டுகளுக்கும், தமிழறிஞர்கள் பதிலடி கொடுத்திருந்தாலும், இன்றைய ஊடகத்தை விலைக்கு வாங்கியிருப்பதைப் போன்று, அன்றைய காலகட்டத்தில் பல ஊடகங்கள் தமிழர்கள் போர்வையில் இருந்த திராவிடர்கள் கையிலிருந்தது.
மாறன்:- திராவிடர்களின் அவதூறுகளுக்கிடையே அறிவார்ந்த அறச்சமூகமான தமிழர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.
மாறன்:- ஐம்பதுகளில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக என அனைத்துமே மதராசு மாகாணம் என்றிருந்தது.
மாறன்:- அப்போது அரசியலில், ஆட்சியில் இருந்தவர்களில் மற்ற மொழி வழியினர் பெரும்பான்மையானவர்களாக இருந்தார்கள். அவர்கள் திராவிடர் கழகத்தை வளர்த்தெடுக்கத் தொடங்கினர்.
பொற்கொடி:- ஆரியர்களுக்கு எதிரான நிலையைக் கொண்டிருந்த தமிழர்கள், காங்கிரசுக்கு எதிராக நீதிக்கட்சியை உருவாக்கினர்.
மாறன்:- நீதிக்கட்சி திராவிடர் கழகமானது. பின்பு அது திராவிடர்களை முன்னேற்றும் கழகமாக, அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமாக, தேசிய முன்னேற்ற திராவிடர் கழகமாக வேர்பரப்பி இன்று ஆரிய அடிவருடியாக, தமிழை அழித்து, தமிழர்களை அழியக் கொடுத்து, தமிழர் நிலங்களை, வளங்களைச் சுரண்டிக் கொழுத்து திராவிடர்களை முன்னேற்றிக் கொண்டிருக்கிறது.
தமிழ்:- தமிழ்நாட்டைத் தவிர வேறு மாநிலங்களில் திராவிடம் இல்லையே ஏன்?
அறிவு:- இது என்ன கேள்வி? அப்பா கூறியது போன்று, தமிழர்களின் நிலங்களையும் வளங்களையும் சுரண்டிக் கொழுப்பது, அவர்களின் அதிகாரத்தைப் பணத்தாலும், ஏமாற்று மொழிகளாலும் பறிப்பது. தமிழர்களை ஏய்த்துப் பிழைப்பது தானே திராவிடம்.
தமிழ்:- ஓகோ!! அதனால் தான் திராவிடத்திற்கு, தமிழ்நாட்டைத்தவிர வேறெங்கும் கிளைகள் இல்லையோ!!
பொற்கொடி:- சரியாகச் சொன்னீர்கள். தென்னிந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் திராவிடம் என்றால் உதைப்பான்.
அறிவு:- திராவிடத்தைத் தோண்டத் தோண்ட திருட்டு வரலாறு வந்து கொண்டே இருக்கிறதே!
தமிழ்:- இந்த திருட்டு வரலாற்றை விடுங்கள். நமது மொழிப் போராட்டத்திற்கு வாருங்கள். அதைப்பற்றி கூறுங்களம்மா!
பொற்கொடி:– நல்லது மக்களே! தமிழர் கழகத்தை அவதூறால் வீழ்த்திய திராவிடர் கழகம், பின்னர், திராவிடர் முன்னேற்றக் கழகமாகவும் பிரிந்து, தமிழர்களின் பல நூற்றாண்டு பகையான ஆரியத்தை எதிர்ப்பதாக உருட்டிக் கொண்டு, நாத்திகம் பேசி, தமிழர் பண்பாட்டு விழுமியங்களை புறங்கூறி, அவதூறுகளை பரப்பி வந்தது.
மாறன்:- பகுத்தறிவு என பேசி, இனத்தறிவைக் கொன்று, திரைக்கவர்ச்சியால் வளர்ந்து வந்தது. தமிழர் மொழிப் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் விலகியே இருந்தது.
பொற்கொடி:- இயற்கையாகக் கொண்டிருந்த ஆரிய எதிர்ப்பையும், இந்தி திணிப்பால் ஏற்பட்ட காங்கிரசு எதிர்ப்பையும், தமிழர்களின் மொழிப்போர் வெற்றியையும் இறுதியில் நுழைந்து திராவிடம் கைப்பற்றிக் கொண்டது.
தமிழ்:- மொழிப்போரிலுமா பித்தலாட்டம்?!
அறிவு:- திராவிடம் பொல்லாதது தான் போலிருக்கிறது.
மாறன்:- மொழிப்போரின் இறுதியில் நுழைந்து வெற்றியைத் தனதாக்கிக் கொண்ட திராவிடம், அக்கால கட்டத்தில் ஏற்பட்ட தொடர்பஞ்சத்தினால் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள் தட்டுப்பாட்டையும் பயன்படுத்திக் கொண்டது.
பொற்கொடி:- மொழிப்போரில் காங்கிரசுக்கு ஏற்பட்ட எதிர்ப்பலையும், உரூபாய்க்கு மூன்று படி அரிசி என பொய்யுரையும் திராவிடர் முன்னேற்றக் கழகத்தை அரியனையில் அமர்த்தியது.
மாறன்:- ஆட்சியை பிடித்ததும் மூன்று படி இலட்சியம் ஒரு படி நிச்சயம் என திருட்டு திராவிட மாடலை இனிதே தொடங்கியது.
பொற்கொடி:- தமிழர்களின் தாய்மொழிப் பற்றினால் வந்த பேரெழுச்சி, தமிழர்களை ஓர்மைப்படுத்தி ஆயிரமாண்டு அடிமை விலங்கொடித்து தலைநிமிரச் செய்திருக்கும். ஆனால்?
அறிவு:- ஆனால் என்னம்மா நடந்தது?
பொற்கொடி:- தமிழர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திராவிடம், மூன்றே ஆண்டுகளில் , தமிழர்களின் எழுச்சியை மட்டுப்படுத்த பண்பாட்டை, ஓர்மையை, அறத்தை குலைக்கும் வேலைகளை செவ்வனே திட்டமிட்டுச் செய்தது.
தமிழ்:- ஆட்சியைப் பறித்துக் கொண்டு அழிக்கவும் திட்டமிட்டார்களா!!
மாறன்:- தமிழால் இணைந்து எழுச்சி கொண்ட மக்களை மடைமாற்ற சாராயக்கடைகளை திறந்து மது மயக்கத்தில் ஆழ்த்தியது.
பொற்கொடி:- போதாக்குறைக்கு திரைப்படங்கள் மூலமும், வாய்மொழிச் சோடனையாலும், ஊழலைத் தோற்றுவித்து இயல்பானதாக மாற்றியதாலும், ஆரியத்தின் சாதீயக் கொள்கைகளை ஊக்கப்படுத்தி சண்டைகளைத் தோற்றுவித்ததாலும் தமிழினம் சிதறுண்டது.
மாறன்:- ஓர்மை கொண்ட தமிழினம், சாதி மதங்களுக்குப் பின்பாகவும், திரைப்படக் கலைஞர்களுக்குப் பின்பாகவும், பகட்டு மொழி ஆட்சியாளர்கள், ஊழல் பேர்வழிகள் பின்பாகவும் சிதறிப் போனார்கள்.
பொற்கொடி:- மது மயக்கத்தில் சிதறடிக்கப்பட்டார்கள். அறம் தவறிச்செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
மாறன்:- ஆனாலும் தமிழறிஞர்களும் மானத் தமிழர்களும் மொழிக்கான போராட்டத்தைத் தொடந்து வந்திருக்கின்றனர்.
பொற்கொடி:- அந்தப் போராட்டம் இன்றளவிலும் தமிழர் சமூகத்தின் தேவையாகவே உள்ளது.
அறிவு:- அந்தப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுத்து வருகிறதே!
பொற்கொடி:- ஆம். ஆனாலும், பிறமொழிக் கலப்பற்ற தமிழ் மொழியைப் பேசவும் எழுதவும் செய்கின்ற பல தமிழர்களும் தங்கள் சமூக வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் தங்களையும் அறியாமல் ஆரியத்தின், திராவிடத்தின் பிடியில் சிக்கி நிற்கின்றோம்.
மாறன்:- ஆரிய வேதமான மனு சாத்திரமே இன்று தமிழரின் சமூக வாழ்வை வழிநடத்துவதாக உள்ளது. மனு தர்மம் என்ற சொல்லை மனு நீதி என்று தமிழில் அழைத்து விட்டு பின்பற்றினாலும் அது ஆரிய வேதமே.
பொற்கொடி:- தொல் தமிழர்கள் தாய் வழிச் சமூகமாக நின்றவர்கள். தமிழ்ச் சமூகத்தில் பல அவ்வைகள் வாழ்ந்தனர் என்று அறிகிறோம். அப்படியான கற்றறிந்த தமிழ்ப் பெண்களைக் கொண்ட அறிவார்ந்த சமூகமாக அன்றைய தமிழ்ச் சமூகம் நின்றது.
மாறன்:- மனு நீதியோ பெண்கள் வீட்டு வேலைக்கு மட்டுமே தகுதியானவர்கள் என்று கூறுகிறது.
பொற்கொடி:- திராவிடமும் பெண்களை போகப்பொருளாக மட்டுமே வைத்திருக்கிறது. அரசியலிலும், வாழ்வியலிலும் சமமான உரிமைகளை வழங்காமல், ஒரு சில சலுகைகளை மட்டுமே வழங்கி வருவதுடன், திருமணம் கடந்த உறவு என சமூகக் கட்டமைப்பை, அறத்தைச் சீரழிக்கும் வேலைகளை மறைமுகமாகத் தொடர்கிறது.
மாறன்:- திராவிடத் திருடர்களும் அவ்வப்போது ஆரிய சனதான எதிர்ப்பைக் காட்டி, அதனையே அவர்கள் சாதனையாக உருட்டி தங்கள் இருப்பை உறுதி செய்து கொள்வார்கள்.
பொற்கொடி:- தங்கள் வசதிக்கேற்ப எப்பொழுதும் ஆரியத்துடன் கைகோர்த்து ஆரியத்தைத் தூக்கிச் சுமப்பது திராவிடமே.
மாறன்:- தமிழ் இலக்கியங்கள் காதலைக் கொண்டாடிக் களித்தன. திருக்குறள் உள்ளிட்ட அனைத்து சங்க இலக்கியங்களும் காதலின் மேன்மையைக் கொண்டாடாமல் விட்டதில்லை. வாழ்வியலை அகம், புறம் என வகுத்து வாழ்ந்தவர் தமிழர்கள்.
பொற்கொடி:- அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்ற வரிகள் வடவர் இலக்கியத்தின் தமிழ்ப் படைப்பான கம்ப இராமாயணத்தில் வருவதை நாம் அனைவருமே அறிந்திருப்போம். அதாவது வில்லை உடைக்கும் போட்டிக்குச் செல்லும் முன்பே சீதையும் இராமனும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் வசப்பட்டனர் என்கிறது கம்ப இராமாயணம். இத்தகைய சந்திப்பு வட இந்திய இராமாயணத்தில் கிடையாது. காதலுக்கு தமிழர் கொடுத்த முக்கியத்துவத்தை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
மாறன்:- மனு நீதியோ காதல் தவறென்றது; காதலின் விளைவான சாதிக் கலப்பு மணங்களைக் குற்றம் என்றது. இன்றைய தமிழர்கள் காதல் மணங்களை எதிர்ப்பது, அதிலும் ஆரியம் நமக்குள் திணித்த, திராவிடம் தூண்டி எரியவிட்ட நஞ்சாகிய சாதியின் அடிப்படையில் எதிர்ப்பது நாம் இன்னும் ஆரிய, திராவிடத்தின் சூழ்ச்சி வலைகளில் இருந்து மீளவில்லை என்பதாகவே உள்ளது.
பொற்கொடி:- தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்த போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. அதில் ஓரளவு வெற்றியும் கிடைத்தது. எந்த அளவில் என்றால், ‘இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்’ எனும் அளவிற்கு. வாய் விட்டுக் கேட்டால் அன்றி தமிழில் வழிபாடு நடப்பதில்லை.
அறிவு:- என்ன கொடுமையிது? ஏன் அப்படிச் செய்கிறார்கள்?
மாறன்:- தமிழ்க்கடவுள் முப்பாட்டன், முதற்சங்கத் தலைவராக இருந்து தமிழ் வளர்த்த இறையனார் என அனைத்து கடவுளர்களுக்கும் தமிழ் புரியாதாம்.
தமிழ்:- நமது முப்பாட்டன் முருகனுக்கே தமிழ் புரியாதா! இப்படியா நாம் ஏமாளிகளாக இருக்கிறோம்.
பொற்கொடி:- அத்தோடு நின்றதா! சமற்கிருதம் தேவபாசை, தமிழ் நீசமொழி எனவும் கட்டமைத்தார்கள்.
அறிவு:- இது அதைவிடக் கொடுமையாக இருக்கிறதே!!
மாறன்:- அதிலும் பார்ப்பனர்கள் மட்டுமே கருவறைக்குள் நுழைய முடியும் என்ற மனுவின் நீதி நடைமுறை தொடர்கின்றது.
பொற்கொடி:- நம் முன்னோர் அறிவியல், கணக்கியல், கட்டிடவியல், சிற்பவியல் என, இன்று உலகமே வியந்து நிற்கும் வானுயர்ந்த கட்டிடங்களை வழிபாட்டுத் தலங்களாகக் கட்டியெழுப்பிய கோவில்களில் நமக்கு நுழையக்கூட அனுமதி இல்லை.
மாறன்:- ஆரியம் இதனைச் சாத்திரம் எனக் கூறி தமிழர்களை கோவில்களுக்கு வெளியில் நிற்க வைத்தது.
பொற்கொடி:- கோவிலுக்குப் போகாதே, சாராயக்கடைக்குப் போ என நாத்திகம் பேசி திராவிடம் தமிழர்களை ஏய்த்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறது.
மாறன்:- தற்போதைய மத விழாக்களை எடுத்துக் கொண்டால், ஒன்றாவது தமிழர் விழாவாக உள்ளதா? அதிலும் தீபாவளியை தமிழர்கள் கொண்டாடுவது என்பது எத்தனை வேதனையான ஒன்று?
அறிவு:- புரியவில்லையே அம்மா?
பொற்கொடி:- புரிதலுக்காகச் சொல்கிறேன். 2009-ஆம் ஆண்டு மே 18-ஆம் நாள் ஈழத்தில் தமிழர்களுக்கு பேரழிவு நடந்த நாள். சிங்களர்களுக்கு பெரும் வெற்றி நாள். இலங்கைத் தீவில் கடந்த 7 ஆண்டுகளாக தமிழர்கள் அதை துக்க நாளாகவும் சிங்களர் வெற்றி நாளாகவும் பாவித்து வருகின்றனர்.
மாறன்:- காலப் போக்கில், நடந்த வரலாற்றை அறியாத வருங்காலத் தமிழர்கள், சிங்களர்களுடன் இணைந்து அந்நாளை வெற்றி விழாவாகக் கொண்டாடினால் அது எத்தகைய வேதனையான செய்தியோ அத்தனை வேதனையானது நரகாசுரன் என்ற தமிழ் மன்னனைக் கொன்ற நாளை நாம் வெற்றி விழாவாக, தீபாவளியாகக் கொண்டாடுவது.
பொற்கொடி:- இப்படி, புத்தர் பிறந்தநாள், மகாவீரர் பிறந்தநாள், உகாதி, ஓணம் என்று திராவிடமும் ஆரியத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது கண்கூடு.
அறிவு:- தை முதல் நாளான தமிழ்ப் புத்தாண்டைக் கூட சித்திரை முதல் நாளெனத் திரித்து திணித்து வைத்திருக்கிறார்களே!
மாறன்:- இப்படி நம் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நாம் ஆரியத்தின் பிடியில் நின்று கொண்டு மொழியை ஆரியத்தின் பிடியிலிருந்து எப்போது மீட்டு எடுப்பது?
பொற்கொடி:- மானமும் அறிவும் கொண்ட மக்களாக தமிழர்கள் மாற வேண்டும். மானமுள்ள மக்கள் எந்தவொரு ஆதிக்கத்திற்கும் அடிபணியார்.
மாறன்:- சமற்கிருதத்தின் பிடியிலிருந்து தமிழ் மொழியை மீட்பதோடு, ஆரிய வாழ்வின் – ஆரியப் பண்பாட்டின் பிடியிலிருந்தும், திராவிட மடைமாற்றிகளிடமிருந்தும் தமிழ் இனத்தையும் நாம் மீட்டாக வேண்டும்.
பொற்கொடி:- மொழி மீட்போடு நின்று விடாமல் தமிழ் இனத்தையும் ஆரியத்தின், திராவிடத்தின் பிடியிலிருந்து மீட்டு தன்மானம் மிக்க தமிழர்களாக வாழ நாம் தமிழர் கட்சி தொடர்ந்து களமாடி வருகிறது.
தமிழ்:- தமிழையும் தமிழரையும் தலைநிமிரச் செய்ய நமது கட்சி என்னென்ன செய்து வருகிறது அப்பா?
மாறன்:- அரசியலமைப்பு மூலமாக மொழிக்கும், இனத்திற்கும், தமிழர் வளத்திற்கும் என்றும் அரணாக நின்று வருகிறது.
பொற்கொடி:- இந்தி எதிர்ப்பு, தமிழ் ஆட்சி மொழி, முதன்மை கல்வி மொழி, வழக்காடு மொழி, வழிபாட்டு மொழி என அனைத்தும் தமிழாக இருக்க வேண்டும் எனப் போராடிவருகிறது.
அறிவு:- ஆமாம் அப்பா! தஞ்சை பெருவுடையார் கோவிலில் தமிழ் மொழியில் குடமுழுக்கு நடந்ததே!
பொற்கொடி:- ஆமாம். அதுவும் நமது வீரத்தமிழர் முன்னணியும், தமிழ் மீட்சிப் பாசறையும் , நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறையும் இணைந்து, நாம் தமிழர் உறவுகளின், தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் நேரடி, சட்ட, வழக்கு, கோரிக்கை எனப் பெரும் போராட்டதிற்கு பிறகே தமிழிலும் குடமுழுக்கு செய்யலாம் என அனுமதி கிடைத்தது.
மாறன்:- நமது தமிழ் மீட்சிப் பாசறை, மொழியறிஞர் பேராசிரியர் அருளியார் முதலான தமிழறிஞர்கள் வழிகாட்டுதலுடன் தமிழ் மீட்சிக்கான சாத்தியக் கூறுகளை செவ்வனே திட்டம் தீட்டிச் செயல்படுத்தி வருகிறது.
பொற்கொடி:- நமது வீரத்தமிழர் முன்னணியும், தமிழர் பண்பாடு, கலை , இலக்கியம், வரலாறு முதலான விழுமியங்களை மீட்டெடுக்கும் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
தமிழ்:- ம்ம்ம்.. தமிழர் நாட்டில் தமிழுக்கான உரிமைகளைக் கூட போராடித்தான் பெற வேண்டும் என்னும் சூழல் உள்ளது.
அறிவு:- தமிழே! வருந்தாதே!
தமிழ்:- இல்லையக்கா. உரிமைகளைப் பெற போராட வேண்டிய நிலையில் தானே இருக்கிறோம். உரிமைகளை நிலைநாட்டும் நிலையில் இல்லையே.
பொற்கொடி:- ஆரியத்தை எதிர்ப்பதாக வந்த திராவிடம் இன்று ஆரியத்துடன் கைகோர்த்து தமிழர்களை அரசியல் அதிகாரமற்ற நிலையில் வைத்திருக்கிறது.
அறிவு:- அதிகாரம் இருந்தால், போராட வேண்டிய தேவை இருக்காதல்லவா! இதற்கான காலம் வரும்.
மாறன்:- அக்காலம் நெருங்கி வருகிறது. விரைவில் நாம் தமிழர் ஆட்சியில் அமரும். அன்று தமிழும், தமிழினமும் தலை நிமிரும்.
அனைவரும்:- நாம் தமிழர்! நாம் தமிழர்! நாம் தமிழர்!
திரு. ம. இராமகிருசுணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.