பிப்ரவரி 2024
தமிழும் அறிவும்
எதனை அழிப்பது நம் இலக்கு?
பனையூரில் வசிக்கும் ஒரு அழகான குடும்பம். மாறன் அவன் மனைவி பொற்கொடி. அவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன். மகள் அறிவுச்செல்வி. பத்து வயதாகிறது. அவ்வூரிலுள்ள அரசு ஆரம்பப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பில் படிக்கிறாள். படிப்பில் கெட்டிக்காரி. பெயருக்கேற்றார் போல் அறிவோடு திகழ்பவள்.
மகன் தமிழ்ச்செல்வன். ஆறுவயதாகிறது. அதே பாடசாலையில் இரண்டாம் வகுப்பில் படிக்கிறான். துருதுருவென்று எதையும் அறிந்து கொள்ளும் வகையில் ஐயத்துடன் வினாக்களை எழுப்பிக் கொண்டே இருப்பான்.
அக்காள் அறிவுச்செல்வி; பாடசாலைக்கு நடந்து செல்லும் வழியிலும், வீட்டிலிருக்கும் போதும், அவனது ஐயங்களுக்குத் தனக்குத் தெரிந்த அளவில் விடையளிப்பாள்.
ஓய்வு நாள்களிலும், மாலையில் ஓய்வு நேரங்களிலும் மாறனும், பொற்கொடியும், அறிவுச்செல்வியும், தமிழ்ச்செல்வனும் தமிழரின் வரலாறுகளைப் பேசி, விவாதிக்கும் அறிவான குடும்பம்.
அறிவும் தமிழும் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பியதும் இருவரும் கைகால் முகம் கழுவி, தலைவாரிப் புத்துணர்வு பூண்டனர். வீட்டுப் பாடங்களை தாய் பொற்கொடியின் அரவணைப்பில் செய்து முடித்தனர். மாறனும் பணிமுடித்து வீடு சேர்ந்திருந்தான்.
நாம் தமிழர் கட்சி தக்கலை ஒன்றியச் செயலாளர் திரு. சேவியர் குமார் நியாயத்திற்காகப் போராடிய நிலையில், சூழ்ச்சியாகப் பேசி வரவழைத்து அடித்துக் கொன்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

மாறன்:- அடிதடி, அராஜகம் என்ற அளவில் அட்டூழியம் செய்து கொண்டிருந்தவர்கள், ஆளையே கொல்லுமளவிற்கு இன்று வந்திருக்கிறார்கள். திராவிடத்திற்கு இது புதிதல்ல; அதிலும் திமுகவிற்கு இது வழமையான ஒன்றே. கீழவெண்மணி, தாமிரபரணி முதலாக தூத்துக்குடி வரையிலும், கலியபெருமாள், தமிழரசன் தொடங்கி வீரப்பன் வரையிலும் தீவிரவாதிகளாக, கொள்ளைக்காரர்களாகக் காட்டி, கொலையை கலையாகச் செய்கிறது திராவிடம்.
பொற்கொடி:- போராளிகளையும், தனது கூட்டாளிகளையும் திட்டமிட்டுக் கொல்வது திமுகவின் கோர முகம். டாக்டர் பட்டம் ஏன் என்று கேட்ட உதயகுமார் கொலையில் தொடங்கி தோழர் லீலாவதி, தா.கிருட்டிணன், சாதிக் பாசா என எண்ணற்ற கொலைகளும், தமிழின அழிப்பும் திமுகவின் கைவண்ணங்கள். படிக்க ஆசைக் காட்டி அழிக்கப்பட்ட அனிதாக்கள், குடிக்கு அடிமையாகியதால் உயிர்பறிக்கப்பட்ட கணக்கற்ற தமிழர்கள்…
அறிவு:- அத்தகைய கொடூரக் கொலைகாரர்களாக இந்த திராவிடர்கள்?
மாறன்:- இவர்கள் வரிசையில் இன்று சேவியர்குமார். அழகான குடும்பம், அறம் சார்ந்த வாழ்வு, நேர்மை கொண்ட நெஞ்சுரம். பொறுக்குமா திமுக? வஞ்சகம் பேசி வலைவிரித்து, நெஞ்சம் பொறுக்காத கொலை புரிந்ததே!
தமிழ்:- ஐயகோ! நேர்மையாளர்களின் உயிரை எடுப்பது தான் ஆட்சியாளர்களின் பணியோ?
அறிவு:- இவர்களிடமிருந்து தமிழர்களைக் காக்க வேறு வழியே இல்லையா?
பொற்கொடி:- ஆரியத்திடமிருந்து தமிழரைக் காப்பதாகப் பொய்யுரைத்து, தமிழர்களைக் கொல்லும் நீலச்சாய திராவிட நரிகள்! அதிகார மமதையில் அடக்கியாளத் துடிக்கும் ஆட்சியாளர்கள்! உங்கள் அதிகாரம் எத்தனை நாள் உங்களை பாதுகாக்கும்?
தமிழ்:- காவல் நிலையத்தில் புகாரளிக்கலாமே அம்மா?
பொற்கொடி:- “காவல் துறை உங்கள் நண்பன்”. அவர்கள் யாருக்கு நண்பன் என்பதைத் தோலுரித்துக் காட்டியதே காவல்துறையினரின் செயல்பாடு!
அறிவு:- வழக்காடு மன்றம் சென்றிருக்கலாமே?
மாறன்:- வழக்காடு மன்றங்கள் வடக்கில் பாசிச பாசகவின் கைப்பாவைகளாக மாறிவிட்ட நிலையில், ஆரியத்திடமிருந்து தமிழர்களைக் காப்பாற்றுவதாகப் பொய்யுரைத்துக் கொண்டிருக்கும் திராவிடத்தின் கைப்பாவைகளாக தமிழக வழக்காடு மன்றங்கள் மாறிவிட்டனவே!
பொற்கொடி:- யாரிடமிருந்து யாரைக் காக்க இந்த நாடகங்கள்? கார்ப்பரேட் கைக்கூலிகளான உங்களை நம்பி தமிழும் தமிழர்களும் இழந்தது போதும். எங்களுக்கு ஆயிரங்காலப் பகை ஆரியமும் வேண்டாம்! திருட்டுக் கூட்டம் திராவிடமும் வேண்டாம்! தமிழர்களாகிய நாங்களே எங்களைக் காத்துக் கொள்கிறோம்…!
மாறன்:- அறம் சார்ந்த அரசியலைக் கையிலெடுத்து நாம் தமிழர் என்ற படை உருப்பெற்று பெருவளர்ச்சி அடைந்துள்ளது. திராவிடத்தின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு தீவினைக்கும் எதிர்வினை உறுதி.
பொற்கொடி:- இன்று நீங்கள் கோடிகளில் புரளலாம்; மாடமாளிகைகள் கட்டி வாழலாம்; அதிகாரம், ஆள், அம்பு, சேனை என ஏழைகளை ஏமாற்றி வாழும் இன்றைய வாழ்வு ஒருநாள் தாழும்; அன்று உம் வழித்தோன்றல்கள் வகையறியாது நிற்கும் நிலைவரும்.
அறிவு:- உண்மை தான் அம்மா! பெற்றவர்களின் செயல்பாடுகள் பிள்ளைகளைப் பாதிக்குமல்லவா?
பொற்கொடி:- ஆம்! பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளைச் சேரும் எனும் கூற்றுக்கிணங்க, பாவ புண்ணியக்கணக்கும் உண்டு அல்லவா? இவர்களால் அழிக்கப்பட்ட வளங்களின் மீதியைக் கொண்டு, தமிழகத்தை மீட்டுருவாக்கம் செய்து தமிழினத் தலைமுறைக்குக் காத்து வைப்போம்.
மாறன்:- இன்று நாங்கள் போராடுகிறோம் நாளைய எமது தலைமுறைக்காக! அதிகாரம் மாறும்! ஆட்சி மாறும்! அறம் சார்ந்த அரசு அமையும்! அன்று உங்களுக்கான நியாயத்தீர்ப்பு வழங்கப்படும்.
பொற்கொடி:- இயற்கையைக் காக்கத்தான் தமிழ் முன்னோர்கள் இயற்கையை இறையின் உறைவிடமாக வைத்தார்கள். சிவன் சொத்து குலநாசம் என்றெழுதி வைத்தார்கள். இந்த மரங்கள், மலைகள், ஆறுகள் எல்லாம் அந்த இறையின் சொத்து. பொன்முட்டையிடும் வாத்தை வெட்டித்தின்றதுபோல், இந்த வளங்களை வெட்டியழிக்கும் நீங்கள் அந்தப் பாவத்தை உங்கள் குழந்தைகளின் மீது சுமத்தியிருக்கிறீர்கள். அவற்றை நாத்திகம் பேசி ஆட்டையை போட்டதற்கெல்லாம் உங்கள் தலைமுறை பாத்திரம் ஏந்தி இரந்துண்னும் நேரம் வரும்.
அறிவு:- கணவனைக் கொன்றதற்கே மதுரையை எரித்தாள் எங்கள் பெரும்பாட்டி. இயற்கையைக் கொன்றவர்க்கு என்ன நிலையோ?
தமிழ்:- நாம் இவ்வளவு எடுத்துக் கூறுகிறோமே? இவற்றைக் கவனிப்பார்களா திராவிட திருடர்கள்?
மாறன்:- இவையெல்லாம் இன்று செவிடன் காதில் ஊதிய சங்காகவே அவர்களுக்குப்படும். எதற்கும் செவி சாய்க்க மாட்டார்கள்! சிந்திக்கவும் மாட்டார்கள்!
அறிவு:- அப்படியெனில் இவர்களை என்னதான் செய்வது?
பொற்கொடி:- திராவிடத் தீமையில் மூழ்கி இரக்கமற்றுப் போய் அறம் தவறிய கயவர்களை “மோதி மிதித்துவிடு பாப்பா! அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!” என பாரதி பாடியிருக்கிறாரே?!
தமிழ்:- அறிவற்ற இவர்களிடம் அறிவுரை எடுபடுமா?
மாறன்:- இதற்கும் திருந்தவில்லையெனில் “கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே குகைவாழ் ஒரு புலியே- உயர் குணமேவிய தமிழா!” என பாரதிதாசனின் மொழிதான் வழி.
அறிவு:- இந்த திராவிட மாடலால் தமிழினத்திற்கு மேலும் என்னென்ன இழப்புகள்?
மாறன்:- வேட்டையாடிய வீரம் செறிந்த தமிழினம் இன்று காட்டுக்குள் நுழைய அனுமதி இல்லை. நம் மலைகள் தரைமட்டமாக்கப்படுகின்றன. நமது காடுகள் அழிக்கப்படுகின்றன.
பொற்கொடி:- உழவு செய்து உலக உயிர்கள் வளர்த்த தமிழர் பயிர்த்தொழில் இன்று பாடையிலேறிக் கொண்டிருக்கிறது.
தமிழ்:- அதனால் தான் விவசாயியைக் காப்பாற்ற விவசாயி சின்னத்தை நாம் தமிழருக்குக் கொடுத்திருப்பதாக பெரியப்பா செந்தமிழன் சீமான் கூறி வருகிறார்.
மாறன்:- ஆம்! அதேபோல் நீர் மேலாண்மையில் உலகின் முன்னோடியான தமிழினம், நீருக்காகப் போராடி அடிவாங்கிக் கொண்டிருக்கிறது; இருக்கும் நீர்நிலைகள் அழிக்கப்படுவதையும் நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பொற்கொடி:- “திரைகடலோடியும் திரவியம் தேடு” என மாந்தரினத்திற்கு முன்னோடியாக, உலகக்கடல் முழுவதும் ஓடிய தமிழர்களின் நாவாய் தொழில்நுட்பம், இன்று நாலு நாட்டிக்கல் மைலுக்குள் சுருக்கப்பட்டுவிட்டது. கடலுக்குள்ளும் அண்டை நாட்டினரால் சுட்டு வீழ்த்தப்படுகிறோம்; அடிவாங்கி, கைகளில் சங்கிலி பூட்டி, அந்நிய நாட்டு வீதிகளில் நாணமுற இழுத்துச் செல்லப்படுகிறோம்.
அறிவு:- ஆமாம் அம்மா! தமிழர்களை சிங்களக் காவல்துறை கைகளில் விலங்கு பூட்டிச் சிறையிலடைக்க இழுத்துச் சென்றதைப் பார்க்கிறோம்.
மாறன்:- உயிருக்கும் மேலாக நேசித்து நம் முன்னோர் வைத்துச் சென்ற நமது நிலங்கள் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்படுகின்றன. விளைநிலங்கள் பகட்டான சாலைகளாகவும், விமான நிலையங்களாகவும் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகின்றன.
தமிழ்:- அந்தச் சாலைகளுக்கு நாம் கப்பமும் கட்ட வேண்டும்!
அறிவு:- நம் நிலத்தைப் பறிகொடுத்துவிட்டு நாம் ஆகாய விமானத்தில் பறக்கலாம். என்ன வளர்ச்சி மாதிரியோ!
பொற்கொடி:- காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, பவானியாறு என ஆற்று நீர் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஒன்றிய அரசுகளும், உயர், உச்சநீதி மன்றங்களும் திட்டமிட்டே நம் ஆற்றுநீர் உரிமைகளை மறுக்கின்றன. ஆற்றில் நீர்வந்தால் நிலம் கொழிக்கும், உழவு உயிர்க்கும், நாமும் செழிப்போம், நிலத்தை விட்டு வெளியேறமாட்டோம், அந்நிய மாநிலத்தவரிடம் விற்க மாட்டோம். ஆற்றில் நீர் இருந்தால் உள்ளூர் திராவிடத் திருடர்களுக்கு மணல் திருட முடியாது. நிலத்தில் வளம் இருந்தால் உலகத்திருடர்கள் கார்ப்ரேட்டுகளால் நிலம் கையகப்படுத்த முடியாது. மீத்தேன், ஈத்தேன், நீர்ம கரிம படிமங்கள் என சோறுடைத்த சோழமண்டலத்தைத் துளைக்க முடியாது.
அறிவு:- ஓகோ! சங்கிலித் தொடர்போல ஆற்றுநீர் உரிமைகள் மறுக்கப்படுவதன் காரணம் இது தானோ?
தமிழ்:- எதனையும் நுட்பமாகப் பார்க்க வேண்டும் என பெரியப்பா சீமான் கூறுவது சரிதான்!
மாறன்:- அத்தகைய சூழ்ச்சியின் கிளை தான், நாம் விளைவித்த நெல் கூட கொள்முதல் செய்யப்படாமல் முளைக்கவிட்டு வீணடிக்கப்படுவதும்… விளைபொருட்களுக்கு உரிய விலையும் கிடைப்பதில்லை…
அறிவு:- ஆக, இவையனைத்தும் திட்டமிட்டே நடத்தப்படுகின்றன. நம் உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
பொற்கொடி:- வரியென்ற பெயரால் நம் பொருளாதாரம் பெருமளவில் சுரண்டப்படுகிறது. வறட்சியாலும், புயலாலும் மழையாலும் இயற்கை சீற்றங்களாலும் நாம் துயருறும் போதும், கொடுக்க ஒன்றுமில்லை எனக் கைவிரிக்கிறது ஆரியம். “தவிப்பதும் தத்தளிப்பதும் தமிழர்கள் தானே!” என்ற ஆயிரங்காலத்துப் பகை.
தமிழ்:- தமிழையும் , தமிழரையும் அழிப்பதே ஆரியத்தின் குறிக்கோள்!
அறிவு:- அதற்குத் திராவிடமும் உடந்தை! மேலே சொல்லுங்கள் திராவிடத்தின் திருவிளையாடல்களை!
மாறன்:- கல்வி இன்று சந்தையாகிவிட்டது. அதிலும் கள்ளச்சந்தையாக மாறிவிட்டது. சாராய முதலாளிகள் கல்விக்கூடங்களை நடத்துகிறார்கள்!
அறிவு:- கல்விச்சந்தைகளின் முதலாளிகள் கல்வித் தந்தைகளாக மாறிவிட்டனர். அப்படித்தானே அப்பா?
தமிழ்:- தமிழர்களைப் படிக்க வைத்தது திராவிடம் தான் எனத் திரும்பத்திரும்ப கூவுகிறார்களே?


பொற்கொடி:- தெருவுக்குத் தெரு சாராயக் கடைகள் திறந்து குடிக்க வைத்தது தான் திராவிடம். இவை தமிழர்களின் உயிரையும், உடைமைகளையும் பறிக்கின்றன. போதையிலாழ்த்தி தமிழினத்தின் பட்டறிவையும், படைப்பறிவையும் சிதைக்கின்றன.
அறிவு:- சிந்தை மழுங்கி, கந்தையும் அவிழ்ந்திட, சந்தி சிரிக்க, விந்தையாகிப் போனதே தமிழினம். ஏன்?
தமிழ்:- திராவிடத் தீதைப் புரிந்து கொண்டு தமிழர்கள் தகுந்த வேலை வாய்ப்புகளைப் பெற்று முன்னேறலாமே?
மாறன்:- வேலைவாய்ப்புகள் தமிழ்க்குடிகளுக்கு கண்துடைப்பு. பிற இனத்தவர்க்கு பெரும் வாய்ப்பு? ஏன்? தமிழர்களை வேலை செய்யக்கூடத் தகுதியற்றவர்களாக மாற்றுவதே இவர்கள் திட்டம்
பொற்கொடி:- இப்படி எண்ணற்ற வழிகளில் நாம் நம் நிலங்களை, வளங்களை, வருமானத்தை, இனமானத்தை விட்டுச் சுயத்தை இழந்துகொண்டிருக்கிறோம். இந்நிலைக்கு நம்மைத் தள்ளியது ஆரியமும் அதன் அடிவருடி திராவிடமும். ஆரியம் அண்ணன் தம்பிகளுக்கு இடையே பகைமூட்டி மறைந்திருந்து கொல்லும். அது இதிகாசம். திராவிடம் உடனிருந்தே மேற்கண்ட அனைத்து வழிகளிலும் தமிழர்களை அழிக்கும்.
தமிழ்:- இந்தத் திருட்டுத் திராவிடத் தீமைகளும், ஆரிய மாயைகளும் தமிழினத்திற்கு வேண்டா!
அறிவு:- தமிழ்நாட்டு மக்களே! எம் தாய்த்தமிழ் சொந்தங்களே! நம் வளங்கள் கொள்ளை போகின்றன. நம் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. நமது உரிமைகள் மறுக்கப்படுகின்றன. நம் உயிர்கள் அவர்களுக்குத் துச்சம்! எஞ்சியிருப்பதோ இச்சிறு தாய் நிலம்தான் மிச்சம்!
தமிழ்:- நேற்று அறிவிலும், அறிவியலிலும் சிறந்தோம்!
இன்று அடிமைகளாகக் கையறு நிலையில் நிற்கின்றோம்.
நாளை அகதிகளாக அடித்துத் துரத்தப்படுவோம்.
அறிவு:- இன்று சேவியர் மாமாவுக்கு நடந்தது நாளை நமக்கும் நடக்கலாம்.
தமிழ்:- உடனடியாக விழித்துக் கொள்! உள்ளாடையையாவது காத்துக்கொள்!
அறிவு:- ஆரியமோ புரட்டு!
திராவிடமோ ஏமாற்று!
நாம் தமிழரே மாற்று!!!
தமிழ்:- நமக்கிருக்கும் ஒரே இறுதி வாய்ப்பு!!!
அனைவரும்:- செலுத்துவோம் விவசாயிக்கே நமது வாக்கு!!!
திரு. ம. இராமகிருசுணன்,
செந்தமிழர் பாசறை அமீரகம்.