டிசம்பர் 2023
தமிழும் அறிவும் – தன்னல சர்வாதிகாரம் மிகுந்த திராவிடக் கொடுங்கோன்மை
பனையூரில் வசிக்கும் ஒரு அழகான குடும்பம். மாறன் அவன் மனைவி பொற்கொடி. அவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன். மகள் அறிவுச்செல்வி. பத்து வயதாகிறது. அவ்வூரிலுள்ள அரசு ஆரம்பப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பில் படிக்கிறாள். படிப்பில் கெட்டிக்காரி. பெயருக்கேற்றார் போல் அறிவோடு திகழ்பவள்.
மகன் தமிழ்ச்செல்வன். ஆறுவயதாகிறது. அதே பாடசாலையில் இரண்டாம் வகுப்பில் படிக்கிறான். துருதுருவென்று எதையும் அறிந்து கொள்ளும் வகையில் ஐயத்துடன் வினாக்களை எழுப்பிக் கொண்டே இருப்பான்.
அக்காள் அறிவுச்செல்வி பாடசாலைக்கு நடந்து செல்லும் வழியிலும், வீட்டிலிருக்கும் போதும், அவனது ஐயங்களுக்குத் தனக்குத் தெரிந்த அளவில் விடையளிப்பாள்.
ஓய்வு நாள்களிலும், மாலையில் ஓய்வு நேரங்களிலும் மாறனும், பொற்கொடியும், அறிவுச்செல்வியும், தமிழ்ச்செல்வனும் தமிழரின் வரலாறுகளைப் பேசி, விவாதிக்கும் அறிவான குடும்பம்.
அறிவும் தமிழும் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பியதும் இருவரும் கைகால் முகம் கழுவி, தலைவாரிப் புத்துணர்வு பூண்டனர். வீட்டுப் பாடங்களை தாய் பொற்கொடியின் அரவணைப்பில் செய்து முடித்தனர். மாறனும் பணிமுடித்து வீடு சேர்ந்திருந்தான்.
நால்வரும் ஓய்வாக அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.
தேசியத் தலைவர் பிறந்தநாள் குறித்தும் மாவீரர் நாள் நினைவேந்தலில் கலந்துகொள்வதற்கான பயணத் திட்டத்தைக் குறித்தும் உரையாடிக் கொண்டிருந்தனர்.
தொலைக்காட்சியில் “ஏழு விவசாயிகள் மீது குண்டர் சட்ட நடவடிக்கை” என்று தலைப்புச் செய்தி ஓடிக்கொண்டிருந்தது.
அனைவருடைய கவனமும் செய்தியை நோக்கித் திரும்பியது. செய்தியைக் கேட்டதும் ஆதங்கமும் ஆத்திரமும் பொங்கியது.
அறிவு:- தங்கள் விளைநிலங்களைக் காக்கப் போராடிய விவசாயிகளுக்கு குண்டர் தடுப்புச் சட்டமா?
தமிழ்:- இப்படி விளைநிலங்களை அழித்து, விவசாயிகளை ஒழித்தால் உண்ணும் உணவுக்கு என்ன செய்வார்கள்?
அறிவு:- வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வார்கள், வெட்கங்கெட்ட ஆட்சியாளர்கள்.
பொற்கொடி:- இந்தத் திராவிடத் திருவாளர்களால் இந்த நாடு என்னவாகப் போகிறதோ?
மாறன்:- தன்னலத்தோடு சர்வாதிகாரம் புரியும் திராவிடர்களால் தமிழரும் தமிழ்நாடும் சீர்கெட்டுப் போனதே!
தமிழ்:- தன்னலமற்ற சர்வாதிகார ஆட்சிமுறை என்று பெரியப்பா செந்தமிழன் சீமான் அவர்கள் மேடைகள் தோறும் முழங்கி வருவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் தன்னல சர்வாதிகாரம் என்று இப்போது தான் கேட்கிறேன்.
அறிவு:- தன்னலமற்ற சர்வாதிகாரம், தன்னல சர்வாதிகாரம் என்றால் என்ன அப்பா?
மாறன்:- நாம் தமிழர் கட்சி ஆட்சி வரைவு, எங்களது ஆட்சிமுறை தன்னலமற்ற சர்வாதிகார ஆட்சியாக இருக்கும் என வரையறுத்து உறுதியளித்துள்ளது.
பொற்கொடி:- எது மக்களுக்கும், மண்ணுக்கும் நன்மை பயக்குமோ அதனை நேர்மையுடனும், ஒழுங்கமைப்புடனும், கட்டுப்பாட்டுடனும் செயல்படுத்துவதே தன்னலமற்ற சர்வாதிகார ஆட்சி முறை.
அறிவு:- பெரியப்பா கூறுவது போல், தேனீக்கள் பூவிலிருந்து, பூக்களுக்குச் சேதாரமில்லாமல் தேனை எடுப்பது போன்று, மக்களுக்கு எந்தவித இடையூறுமின்றி செயல்படுவதே தன்னலமற்ற சர்வாதிகாரம்.
தமிழ்:- ஆயிரமாண்டுகளுக்கு மேலாக அடிமைப்பட்ட சமூகத்தில் இது சாத்தியமா?
பொற்கொடி:- சாத்தியமா? இல்லையா? என்பதைவிட தேவையா? தேவையற்றதா? என எண்ணிப் பார்க்க வேண்டும்.
மாறன்:- அந்த நாட்டைப் பார்! இந்த நாட்டைப் பார்! என்று வேடிக்கையைத் தவிர்த்து, தற்சார்புடைய, தன்னலமற்ற, அறம் சார்ந்ததாகத் தமிழ்ச் சமூகம் மாற வேண்டும்.
பொற்கொடி:- ஈழத்தில் தமிழ்ச் சமூகத்தை அறச்சமூகமாக மாற்றி, தன்னலமற்ற அரசை தேசியத் தலைவர் நிறுவினார்.
தமிழ்:- தமிழீழ விடுதலைப்போர் முப்பதாண்டுகளுக்கும் மேலாக நடந்ததே! அப்படியானால் எப்போது அந்த அரசை தேசியத் தலைவர் நிறுவினார்?
பொற்கொடி:- எந்த ஒரு வெளிநாட்டினர் உதவியுமின்றி, பொருளாதாரத் தடைகளைத் தாண்டி, கடும் போர்ச்சூழலிலும் தன்னலமற்ற சர்வாதிகார முறை ஆட்சியை நிறுவினார், நமது தேசியத் தலைவர்.
மாறன்:- மது இல்லை; கொலை, கொள்ளை இல்லை; ஏமாற்று இல்லை; ஏன் பிச்சைக்காரர்களே இல்லாத நாடாகக் கட்டியமைத்தார்.
பொற்கொடி:- நள்ளிரவிலும் பெண்கள் தங்கள் இயல்பான வாழ்க்கை முறையைக் கைக்கொண்டனர். அத்தனை நேர்மையும், ஒழுக்கமும், கட்டுப்பாடும், அறமும் சார்ந்த சமூகமாக ஈழத்தமிழர்கள் மாறினார்கள்.
தமிழ்:- தன்னல சர்வாதிகாரம் என்பது?
பொற்கொடி:- தான், தன் குடும்பம், தன்னைச் சார்ந்தவர்கள் வாழ எத்தகைய படுபாதகச் செயல்களையும் செய்யும் அரசு மக்கள் மீது தன்னல சர்வாதிகாரத்தைச் செலுத்துகிறது.
மாறன்:- அத்தகைய தன்னல கொடுங்கோன்மை ஆட்சி முறையைத் தான் திராவிடம் தற்போதும் தொடர்கிறது.
தமிழ்:- திராவிட ஆட்சியால் திராவிடர்களுக்குத் தானே பாதிப்பு. தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதல்லவா?
அறிவு:- தமிழரல்லாதோர் தமிழர்களை ஏய்ப்பதற்காகப் பிறந்ததல்லவா திராவிடம்?! திராவிடத்தின் தீவினை தமிழ்ச் சமூகத்தின் மேல்தான் விழும்.
தமிழ்:- தமிழர்களுக்கு என்னென்ன தீவினைகளை திராவிடம் தந்தது?
பொற்கொடி:- எண்ணற்றவை இருக்கின்றன; எதையெதைச் சொல்ல? தமிழர் கழகத்தை திராவிடர் கழகமாக்கியதில் தொடங்கியது தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு.
மாறன்:- இந்நிலைப்பாடு, பொய்யும் புரட்டும் உரைத்த திராவிடம் ஆட்சியதிகாரத்தைப் பெற்றதும் எதேச்சாதிகாரமாக மாறிப்போனது.
பொற்கொடி:- தன்னல கொடுங்கோன்மை சர்வாதிகாரமானது.
மாறன்:- தமிழர்களுக்கு எதிராக அதிகாரத்தைப் பயன்படுத்தியது.
பொற்கொடி:- கீழ்வெண்மணி, குறிஞ்சான்குளம், எனத் தொடங்கி, மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களைக் கொன்றொழித்தல், தாமிரபரணி படுகொலை என நீண்டு தூத்துக்குடி படுகொலை எனத் தொடர்கிறது.
மாறன்:- திரை, ஊடகம், அதிகாரம், காவல்துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் என அனைத்தையும் கைக்குள் வைத்துக்கொண்டு தமிழர்களைக் கொன்றுகுவிக்கும் வேலைகளைச் செய்து வருகிறது திராவிடம்.
பொற்கொடி:- மலை, ஆறு, மணல், நிலம், நீர், மரம், வளம் அனைத்தையும் மனச்சான்றின்றி வரைமுறையற்றுக் கொள்ளையடிக்கின்றது திராவிடம்.
மாறன்:- நமது மீனவர்களைச் சாகக் கொடுக்கின்றது; வடவர்களை வரவேற்றுக் குடியேற்றுகிறது.
பொற்கொடி:- கல்வி பெருவணிகமானது; வேலைவாய்ப்பு எட்டாக்கனியாகிறது.
மாறன்:- நீட்டை காட்டி ஏமாற்றுகிறது;
நோட்டைக் காட்டி ஆட்சியிலேறுகிறது.
பொற்கொடி:- செங்கல்லைக் காட்டும்; முட்டையைக் காட்டும்; சனாதன எதிர்ப்பு பரணி பாடும்; மோடி மஸ்சான் வித்தையாக வெண்குடையையும் காட்டும்.
மாறன்:- புல்டோசர் கொண்டு வயலில் சாலை போடும்; டெல்டாக்காரன் என நாடகமும் போடும்.
பொற்கொடி:- மீத்தேன், ஈத்தேன் திட்டத்தைத் திணிக்கும்; தமிழ் நிலவளத்தைக் கொள்ளையிடும்.
மாறன்:- விளைநிலங்களைத் தொழிற்சாலைகளுக்காய் அபகரிக்கும்; தமிழ்க்குடிகளை தொழிலதிபர்களுக்காக அடித்து விரட்டும்; குடிசைகளையும் வீடுகளையும் இடித்து மிரட்டும்; கண்ணகி நகர் கல்லுக்குட்டை எனத் தொலைவுக்குத் துரத்தும்.
பொற்கொடி:- விலையில்லா அரிசி என்று கூப்பாடு போடும்; விலைமதிப்பற்ற நெல் முளைத்து வீணாவதை வேடிக்கை பார்க்கும்; வெம்பாடுபட்டு உழைக்கும் விவசாயியை வீதியில் விடும்.
மாறன்:- உணவு உற்பத்திக்கு எந்த திட்டமும் இல்லை; சாராயம் விற்க இலக்கு வைக்குது; வெட்கமும் இல்லை.
பொற்கொடி:- சாராயம் ஆறாக ஓடுகிறது; காவிரி வறண்டு தஞ்சை தரிசாகின்றது.
மாறன்:- அடக்குமுறை ஒடுக்குமுறை தொடருது; கொலை கொள்ளை தாக்குதல் அதிருது.
பொற்கொடி:- திராவிடப் புரட்டிலும், பகட்டிலும் பணத்திலும் பதவியிலும் தமிழர்கள் அறம் மறக்கடிக்கப்பட்டது.
அறிவு:- இன்று விவசாயிகளையும் குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்துமளவுக்கு அதிகாரம் கண்ணை மறைக்கிறது.
பொற்கொடி:- தமிழர்களை ஏமாற்றுவதையே பிழைப்பாகக் கொண்டு, பகுத்தறிவுத் திராவிடத் தேரை இழுத்துத் தெருவெங்கும் திரிகிறது.
தமிழ்:- நீட் தேர்வு, மதுவிலக்கு, மாநில உரிமை, காவிரி, பகுத்தறிவு, சனாதன எதிர்ப்பு, சமூக நீதி எனத் தடுமாறுகிறது.
அறிவு:- உறுதியான நிலைப்பாடின்றிச் செயல்படும் திராவிடம், ஆப்பசைத்த குரங்கின் நிலையில் உள்ளது.
மாறன்:- பழம் தின்று கொட்டை போட்ட திராவிடத்தின் எச்சங்கள், இன்று மரங்களையே தின்கின்றன. இனி திராவிடத்தின் வேர் கூட மிஞ்சாது.
தமிழ்:- இற்றுப் போன பரம்பரை திராவிடமும், இருநூறு ரூபாய் பஞ்சத்திற்கான திராவிடமும் ஒழியட்டும்.
அறிவு:- தமிழர் தலைநிமிர்ந்து வாழ தமிழ்த் தேசியம் வளரட்டும்… அன்பான தன்னலமற்ற சர்வாதிகார ஆட்சி மலரட்டும்…
அனைவரும்:- நாம் தமிழர்!!! மாவீரர்களுக்கு வீரவணக்கம்!!! ஈழத்தில் சந்திப்போம்!!!
திரு. ம. இராமகிருசுணன்,
செந்தமிழர் பாசறை அமீரகம்.