தமிழும் அறிவும் – பற்றுக் கோடு
பனையூரில் வசிக்கும் ஒரு அழகான குடும்பம். மாறன் அவன் மனைவி பொற்கொடி. அவர்களுக்கு ஒருமகள், ஒரு மகன். மகள் அறிவுச்செல்வி. பத்து வயதாகிறது. அவ்வூரிலுள்ள அரசு ஆரம்ப பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கிறாள். படிப்பில் கெட்டிக்காரி. பெயருக்கேற்றார் போல் அறிவோடு திகழ்பவள்.
மகன் தமிழ்ச்செல்வன். ஆறுவயதாகிறது. அதே பாடசாலையில் இரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கிறான். துருதுருவென்று எதையும் அறிந்து கொள்ளும் வகையில் ஐயத்துடன் வினாக்களை எழுப்பிக் கொண்டே இருப்பான்.
அக்காள் அறிவுச்செல்வி பாடசாலைக்கு நடந்து செல்லும் வழியிலும், வீட்டிலிருக்கும் போதும், அவனது ஐயங்களுக்கு தனக்குத் தெரிந்த அளவில் விடையளிப்பாள்.
ஓய்வு நாள்களிலும், மாலையில் ஓய்வு நேரங்களிலும் மாறனும், பொற்கொடியும், அறிவுசெல்வியும், தமிழ்செல்வனும் தமிழரின் வரலாறுகளைப் பேசி, விவாதிக்கும் அறிவான குடும்பம். அனைவரும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த நிலையில், இன்று நாளிதழில் படித்த கோடைக்காலம், கத்திரிவெயில் என்பன குறித்து விளக்கமறிய வினாக்களை தொடுத்தான்.
தமிழ்:- கத்திரி வெயில் என்றால் என்னப்பா?
மாறன்:- தமிழ்த் திங்கள்களான மேழம், விடை திங்கள் களில்(ஏப்ரல்,மே) இளவேனில் காலத்தின் உச்சமாக செங்கதிரோன் தன் வெம்மைக் கதிர்களால் தமிழர் நிலப்பரப்பை தகிக்க விடும் காலமே கத்திரி வெயில் (அக்கினி நட்சத்திரம்) எனப்படும்.
தமிழ்:- அப்படியானால் தற்போது கோடைக்காலம் இல்லையா?
பொற்கொடி:- இதுவும் கோடைக்காலம் தான். இளவேனில் காலம், முதுவேனில்காலம் என நான்கு திங்கள்களைக் கொண்டது கோடைக்காலம்.
அறிவு:- முதுவேனில் காலம் எது?
மாறன்:-ஆடவை, கடகம் திங்கள்கள் முதுவேனில் காலம் என அழைக்கப்படுகிறது.
தமிழ்:- அடுத்தது என்ன?
பொற்கொடி:- மடங்கல், கன்னி திங்கள்களில் கார்காலமும் வர இருக்கிறது.
மாறன்:- தென்மேற்கு பருவமழை தப்பாமல் பெய்திட்டால், முப்போகம் விளைந்த மண்ணில் ஒரு போகமாவது உறுதியாகும்.
பொற்கொடி:- ஆடிப்பட்டம் தேடி
விதை எனும் பழஞ்சொல் இன்றளவும் பயன்பாட்டிலும், செயல்பாட்டிலும் உள்ளது. ஆனால் பட்டமும் பருவமும் தான் நிகழ்காலத்தில் மாறிப்போனது.
மாறன்:- நிழலின் அருமை வெயிலில் தெரியும் எனும் பொன்மொழிக்கேற்ப கோடையின் வெம்மையை தென்மேற்கிலிருந்து வீசும் தென்றல் தணிக்கும்.
அறிவு:- தென்றல் காற்றில் ஆடிய
முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி வள்ளலென படித்திருக்கிறேன்.
தமிழ்:- முல்லைக் கொடிக்கு தேரா? ஏன்? எதற்கு?
பொற்கொடி:- கொழுகொம்பு இல்லாத முல்லைக்கொடி சாய்ந்துவிடாதிருக்க தன் தேரையே கொழுகொம்பாக கொடுத்தார் பாரி.
தமிழ்:- கொழுகொம்பு என்றால் என்ன?
மாறன்:- மரக் கம்புகள், குத்துச் செடிகளின் காய்ந்த சிறகுகள் ஆகியவற்றை கொடிவகைத் தாவரங்கள் பற்றிப் படர்வதற்கு, அவற்றின் அருகில் ஊன்றி வைக்கப்படும்.
பொற்கொடி:- அவற்றைப் பற்றிக் கொண்டு கொடிகள் படர்ந்து வளரும். அதுவே கொழுகொம்பு ஆகும்.
மாறன்:- பற்றிக்கொள்ள ஆதாரமாக இருப்பதால் பற்றுக்கோடு என்றும் கூறுவர்.
தமிழ்:- பற்றுக பற்றற்றான் பற்றினை- அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
பொற்கொடி:- பற்றற்ற இறைவனை இறுகப் பற்றிக் கொள் எனும் தமிழ்மறையல்லவா இது.
அறிவு:- தமிழினமும் இன்று தள்ளாடுகிறதே! அதற்கு பற்றுக்கோடு என்று எதுவும் உள்ளதா?
பொற்கொடி:- ஏனில்லை, இனி எப்போதும் தமிழினம் உய்ய இருக்கும் ஒரே பற்றுக்கோடு நாம் தமிழர் மட்டுமே!
தமிழ்:- எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள் அம்மா?
பொற்கொடி:- ஆரியத்திடமிருந்து தமிழர்களை காப்பதென்று புறப்பட்ட திராவிடம். இன்று ஆரியத்தோடு கைகோர்த்து, பல்லாயிரமாண்டுகளாக வளங்கொழிக்கும் தமிழர் வேளாண் நிலங்களை வலுக்கட்டாயமாக பிடுங்கி எடுக்கிறது.
அறிவு:- வளர்ச்சி என்ற பெயரில் பறிக்கப்படும் விளைநிலங்கள் வடநாட்டு, வெளிநாட்டு பெருநிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது என்று பெரியப்பா சீமான் அவர்கள் மேடைதோறும் பேசுகிறாரே!
தமிழ்:- ஆமாம்! ஆமாம்!
பொற்கொடி:- அதே போன்று ஆற்றுவளமான மணல், நீர்வளத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் இந்த ஆற்றுமணல் அளவற்றுச் சுரண்டப்படுகிறது.
அறிவு:- இயற்கையை காப்பது பற்றிய இவர்களின் புரிதல்,கொள்கை தான் என்ன?
பொற்கொடி:- அணை நீரை வேதி நுரைத்தகடுகளால் மூடுவதும், பதநீருக்கு சீனி போட்டீர்களா என்ற அளவிற்குத் தான் இயற்கையைப் பற்றிய இவர்களின் பகுத்தறிவு.
அறிவு:- அழிவுத் திட்டங்கள், நச்சு ஆலைகள், விளைநிலங்கள் பறிப்புத் தான் திராவிடத்தின் சிறப்போ?
மாறன்:- நிலங்களை ஐவகையாக வகுத்து, நீர்வளங்களை நூறுக்கும் மேலாக பகுத்து வாழ்ந்தவர்கள் நம்முன்னோர்கள்.
பொற்கொடி:- இயற்கையை காக்க
மலைகளை, மரங்களை, வனங்களை, ஆறுகளை,குளங்களை இறைகளாகவும், வழிபாட்டுத் தலங்களாகவும் வகுத்து வாழ்ந்த தமிழினம். திராவிட பகுத்தறிவு எனும் பெயரில் காலம்காலமாக வந்த இனத்தறிவை கொன்றுவிட்டோம்.
மாறன்:- அறத்தின் பால் நின்று, பொருட்பால் வென்று, காமத்துப்பால் தெளிந்து, அகம், புறமென வீரத்திலும் மிளிர்ந்து, தமிழமிழ்தோடு இன்பத்துப்பால் கடலைப் படைத்து இன்பம் துய்த்தத் தமிழினம்.
பொற்கொடி:- சாராய, திரை,களியாட்டங்களில் வெறிகொண்டு, தன்னிலை மறந்து, மெய்யழிய, உறவழிய, உடமைகளை இழந்து, உரிமைகளை இழந்து, குற்றச் சமூகமாக திராவிடச் சாக்கடையில் உழன்றுக் கொண்டிருக்கிறது.
மாறன்:- பல்லுயிர்ச் சூழலான மலைகள் அரக்க மனம் கொண்டு அழிக்கப்படுகின்றன. அரக்க பசி கொண்டு வேகவேகமாக வெட்டித் தின்கிறார்கள். தமிழினத்தின் மீது என்ன வன்மமோ! வெறி கொண்டு மலைகளை வேட்டையாடுகிறார்கள்.
பொற்கொடி:- காட்டு வளங்கள் அழிக்கப்படுகின்றன! மக்களை தேன் எடுக்கக் கூட காட்டுக்குள் அனுமதிக்காத அரசுகள் தான், தனிப்பெரும் முதலாளிகளுக்கு காட்டு வளங்களை தாரைவார்க்கின்றன.
மாறன்:- மலைவாழ் பூர்வகுடிகள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து அடித்து, மிரட்டி விரட்டப்படுகின்றனர். தங்கள் உடமைகளை இழந்து வாழ்வாதாரமின்றி தவிக்கின்றனர்.

பொற்கொடி:- பெருநகரங்களிலோ வளர்ச்சி என்ற பெயரில் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் மண்ணின் பூர்வகுடிகளின் குடிசைகளை இடித்து, உடமைகளை அழித்து வாழ்வாதாரமற்ற கல்லுக்குட்டை, கண்ணகிநகர் என தொலைதூரத்திற்கு துரத்தப்படுகின்றனர்.
அறிவு:- அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை யாருக்கு தாரைவார்க்கப் போகிறது இந்த அரசுகள்?
பொற்கொடி;- எதிர்காலச் சிந்தையுமின்றி, நிகழ்காலத் திட்டமுமின்றி, கடந்தகாலத்தின் சுவடின்றித் தமிழை, தமிழரை, தமிழர் நிலத்தை, வளத்தை, உரிமைகளை, உடமைகளை அழித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்:- இதை எப்படி மாற்றப்போகிறோம்?
பொற்கொடி:- கொலை, கொள்ளை, ஊழல், கையூட்டு என சுரண்டிக் கொழுக்கும் திராவிடத்தை விடுத்து…
அறிவு:- அம்மா! அம்மா! நான் சொல்கிறேன். நாம் தமிழர் கட்சியின் ஆட்சி முறையான மண்ணுக்கும் மக்களுக்குமான
தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சியின் மூலம் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
தமிழ்:- அப்படியானால், நாம் தமிழர் கட்சியை உளப்பூர்வமாக நாம் பற்றிக் கொள்ள வேண்டும். சரிதானே?
பொற்கொடி:- மிகச் சரியே! முன்பே கூறியபடி நமக்கான கொழுகொம்பு நாம் தமிழரே!
அனைவரும்:- நாம் தமிழரெனும் பற்றுக்கோடு
நாளைய தமிழினத்தின் வெற்றிக் கோடு. நாம் தமிழர்!!
ஈழத்தில் சந்திப்போம்.
திரு. ம.இராமகிருசுணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.