இந்திய ஒன்றியம் விடுதலையடைந்த அதே காலகட்டத்தில் தான் ஆசிய நாடுகள் பலவும் காலனியாதிக்கத்தினின்று வெளிவந்தன. மக்களாட்சியைத் தழுவிக் கொண்ட ஆசிய நாடுகளில், அரசியல் குழப்பங்கள், உள்நாட்டுக் கலவரங்கள், இராணுவ மேலாதிக்கம், பொருளாதார வளர்ச்சியின்மை போன்ற பல சிக்கல்கள் இன்றும் உள்ளன. எண்ணிப்பார்க்க முடியாத வறுமை, பிற்போக்கான சமூகக் கட்டமைப்பு, நலிந்திருந்த தொழில்துறை என உடனடிச் சவால்களுடனும், இன்னும் பல நீண்ட காலச் சவால்களுடனும் தான் இந்திய ஒன்றியம் தனது சனநாயகப் பயணத்தைத் தொடங்கியது. கடந்த எழுபத்தைந்து ஆண்டுகால வரலாற்றில் ஒரு நெருக்கடி நிலை, சில போர்கள், பல முறை அரசியல் நிச்சயமற்ற நிலை, பத்தாண்டு கால தீவிர வலதுசாரி ஆட்சி ஆகியவற்றையெல்லாம் தாண்டி இன்றும் அப்பயணம் தொடர்கிறது.
இன்று உலகிலேயே அதிகமான மக்கள் திரளைக் கொண்ட மிகப்பெரும் மக்களாட்சி நாட்டின் 18வது நாடாளுமன்றத் தேர்தலில், குத்துமதிப்பாக நூறு கோடி மக்கள் வாக்களிக்கவுள்ளனர். 1951 – 52 இல் நடந்த முதல் தேர்தல் தொடங்கி, இந்திய ஒன்றிய அரசியல் படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்த விதம் குறித்து விரிவாக விளக்கும் இந்நூலின் ஆசிரியர் ஆர். முத்துக்குமார். சமகாலத்தில் வரலாற்றைச் சுவைபட தமிழில் எழுதுவோரில் முக்கியமான இவர், தலைவர்கள் பலருடைய வாழ்க்கை வரலாறு, தமிழ்நாடு மற்றும் இந்திய ஒன்றியம் சார்ந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் குறித்துப் பல நூல்கள் எழுதியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் வரையறையின்படி, அனைவருக்குமான வாக்குரிமையுடன் கூடிய சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் நடப்பது சனநாயகத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்று. அவ்வகையில் விடுதலை பெற்ற இந்திய ஒன்றியத்தில் நடந்த பொதுத் தேர்தல்களையும்,
அவற்றால் விளைந்த அரசியல் மாற்றங்களை சமூகப் பொருளாதாரப் பண்பாட்டுப் பின்னணியோடு விளக்கும் இந்நூல், அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிக்கேஷன்ஸ் நிறுவனத்துக்காக 2015 இல் இவர் எழுதிய இந்நூல், நேரு காலம் முதல் மோடி காலம் வரை ஒன்றிய அரசியலில் ஏற்பட்ட நிகழ்வுகள் அனைத்தையும் தெளிந்த பார்வையுடனும், தேர்ந்த தரவுகளுடனும் அலசுகிறது.
வேறுபாடு ஒன்றை மட்டுமே பொதுவான கூறாகக் கொண்டிருக்கும் குடிமக்கள் திரளுடைய இந்திய ஒன்றியம், மாறுபட்ட நிலவமைப்பு, மொழி, பண்பாடு, பழக்கவழக்கம் இவை எல்லாவற்றையும் தாண்டி, எப்படி இன்னும் ஒரு நாடாக உயிர்த்திருக்கிறது என்ற கேள்விக்கான விடை, இந்த நாட்டு மக்களிடையே இருக்கும் பன்மைத்துவம் தான். அது தான் இந்திய ஒன்றியம் எனும் கட்டுமானத்தின் அடித்தளம். “அனைவரின் குரலுக்கும் இந்த அமைப்பு செவிசாய்க்கும்” என்ற வாக்குறுதியின் பெயராலேயே நாடுகளின் நாடாக இந்த நாடு உருவாக்கப்பட்டது; ஆனால் சில குரல்கள் மேலெழுந்து பல குரல்களை நசுக்கும்விதமாக நடந்து கொண்டால் மிஞ்சிக் கேட்கப்போவது யாருக்கும் தெளிவற்ற கூச்சல் மட்டுமே என்பதை ஆள்வோர் உணர வேண்டிய தருணமிது.
தோன்றிய காலத்தே இருந்த தலைவர்களோ, கொள்கைகளோ, அரசியல் நடைமுறைகளோ, பிரச்சனைகளோ இந்திய ஒன்றியத்தில் இப்போது இல்லை தான். களமும் காலமும் மாறியிருந்தாலும், கடந்த பத்தாண்டுகளில் ஒன்றியத் தேர்தல் களங்கள் காட்டும் மாற்றங்கள் கவலையளிப்பதாக இருக்கின்றன. இந்திய ஒன்றியத்தின் உயிரும் எழிலுமான பன்மைத்துவத்துக்கு பதிலாக ஒற்றைமயம் பெரும்பான்மையின் பெயரில் திணிக்கப்படும் பின்புலத்தில், இந்தியத் தேர்தல் வரலாறு கடந்து வந்த பாதையை உற்றுநோக்கி பெற்றுக் கொண்ட பாடங்களை நினைவு கூர்ந்து அறிவது, அறிவார்ந்த குடிமகன் மற்றும் குடிமகளுக்கான கடமை மட்டுமன்று; ஆளும் இடத்திலிருப்பவர்களுக்கும் அவசியமான கடமையும் கூட என்பதால் அதற்கு இந்நூல் உறுதியாக உதவக்கூடும்.
திருமதி. விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.