சிங்களப் பேரினவாத இலங்கை அரசின் அரசபயங்கரவாதத்துக்கு எதிராக புரட்சிகர ஆயுதப்போராட்டத்தை தலைவரது சீரிய தலைமையில் முப்பதாண்டுகளுக்கு மேல் பேரெழுச்சியுடன் நடத்திய வரலாறு தமிழீழ விடுதலைப் புலிகளுடையது. ஒரு போராளிக் குழுவாகத் தொடங்கி, தமிழ் மக்களின் முழு ஆதரவைப் பெற்று வடக்கு கிழக்குப் பகுதியில் அரச நிர்வாகம் வரை செய்தது புலிகள் இயக்கம். அதன் தலைவராக இருந்த பிரபாகரன் அவர்கள், 1984 முதல் 1993 வரை ஆகிய காலகட்டத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகள், பல தரப்பினருக்கு எழுதிய கடிதங்கள், முக்கியமான நாட்களில் வெளியான அறிக்கைகள், மாவீரர் நாள் உரைகள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலைப்பாடுகளை விளக்கும் வெளியீடுகள் ஆகியவற்றின் தொகுப்பு தான், எனது மக்களின் விடுதலைக்காக எனும் நூல்.
சிங்கள அடக்குமுறைக்கு எதிராக ஒரு தனித்தமிழீழ சோசலிசக் குடியரசை அமைக்க விரும்பியதோடு மட்டுமின்றி, அதன் அடிப்படைக் கட்டுமானங்கள் இப்படிப்பட்டதாக இருக்க வேண்டுமென்ற திட்டம் ஒன்று தலைவருக்கு இருந்தது. அதன் தரிசனங்களை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணங்களில் காண இயலும். தனது நாட்டின் குடிமக்கள் எப்படிப்பட்ட வாழ்வை வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ, அதனை பல்வேறு தருணங்களில் எளிமையான ஆனால் காத்திரமான சொற்களில் தலைவர் நமக்கு அறியத் தருகிறார்.
முழுமூச்சாக நடந்த ஒரு போரின் நடுவே, நிர்வாகத்தையும் கவனித்தபடி, இயக்கம் செய்த சமூகப் பொருளாதார பண்பாட்டு அரசியல் சாதனைகள் சாதாரணமானவையே அல்ல. அவை ஓரினத்தின் விடுதலை இலக்குக்கான பாதையை வகுத்துக் கொடுத்தன; தற்சார்பை அடிப்படையாகக் கொண்ட மேம்பாட்டை சாத்தியப்படுத்தின. தனித்துவமான சிந்தனை, தேர்ந்த திட்டமிடல், தெளிவான தொலைநோக்கு, அயராத உழைப்பு, அர்ப்பணிப்புடன் கூடிய ஒழுங்கு, குறையாத மக்கள் நேசம், சமரசமற்ற பாதுகாப்பு வழங்கல் இவற்றைக் கொண்டிருந்த இயக்கத்தைத் தமிழ் மக்கள் ஆதரித்ததில் வியப்பில்லை தான் என்றாலும் தங்களுக்கான அரணாகப் புலிகளை மக்கள் வரித்துக் கொள்ளக் காரணம், தலைவரின் இனத்துக்கான பெருங்கனவும், அதற்கு அவர் உண்மையும் நேர்மையுமாக உழைத்ததும் தான்.
அரசியல் மட்டுமின்றி சமூகம், படைப்பாக்கம், கலை, இலக்கியம், நீதி நிர்வாகம், பெண் விடுதலை, முக்கியமான ஆளுமைகள் குறித்த தலைவரது கருத்துகள் எவ்வளவு தீர்க்கமானதும், பரந்துபட்டதாகவும் இருக்கிறது என்பதை நோக்குகையில் அவரின் ஆளுமை நம்மை மலைக்க வைத்து ஆட்கொண்டுவிடுகிறது. ஒரு சிறு தீவில் அமர்ந்துகொண்டு, இருக்கும் இடத்திலேயே இருப்பதை வைத்துப் படை கட்டி, அனைத்துலகும் வியக்கத்தக்கதொரு விடுதலை இயக்கத்தை வழிநடத்திய அவர், ஒரு சிறந்த மனிதன், சிறந்த தலைவன், சிறந்த தமிழன். அவரது ஆன்மாவின் குரலை, வாழ்வின் பொருளை, வகுத்த வழியை, விடுதலைக்கான பாதையை, போராட்டத்துக்கான நியாயத்தை, விட்டுச்செல்லும் தடங்களை வாசித்தறிய இந்நூல் உறுதியாக உதவும்.
திருமதி. விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா