தமிழ்நாட்டு அறிவுலகில் புத்தாயிரத்துக்குப் பின்னாக சூழலியல் சார்ந்த செயல்பாடுகள், இலக்கியங்கள், நூல் வெளியீடுகள் அதிகரித்துள்ளன. இத்துறைசார் எழுத்தாளர்களில் சிறப்பிடம் பெறுபவர் திரு. நக்கீரன் அவர்கள். சூழலியல் சார்ந்த விடயங்களை அரசியல், பொருளாதார அடிப்படையில் அணுகுவதோடு மட்டுமின்றி சமூகம், இலக்கியம், பண்பாடு, மொழியியல் மற்றும் மானுடவியல் பார்வையோடும் விளக்குவது இவரது முக்கியமானதொரு தனித்தன்மை. அவ்வகையில் சூழலியல் சார்ந்த பொருண்மைகளை இந்திய ஒன்றியத்துக்கே உரித்தான சாதியெனும் பெருங்கொடுமையின் பின்னணியில் வைத்துக் காட்டும் இந்நூல், அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கும் தகவல் களஞ்சியமாக இருக்கிறது. இரு பகுதிகளாக எட்டெட்டு தலைப்புகளில் விரியும் பக்கங்கள், இதுவரை நாம் பார்க்காத சாதீய வன்மம் மிக்க வரலாற்றின் இருண்ட பக்கங்களின் மீது ஒளியள்ளிப் பூசியபடி நகர்கின்றன.
கான்கிரீட் காடுகளினூடே வாழும் விலங்குகளாக மாறிவிட்ட நாம், “சாதியெல்லாம் இப்ப யாரு பாக்குறா?” என்ற அலுப்புடன் கூடிய கேள்வியை அடிக்கடி எதிர்கொள்ள நேர்ந்தாலும், எப்படி நம்மைச் சுற்றியுள்ள அனைத்திலும் சாதி நீக்கமற நிறைந்திருக்கிறது என நூலாசிரியர் விளக்கும்போது நாம் வாழும் உலகத்தினுள்ளேயே உரைந்திருக்கும் பல்லடுக்கு நரகங்களை நமக்குக் காட்டித்தரும் விந்தை, உள்ளூர ஓர் உதறலைத் தருகிறது. நூலின் அட்டைப்படமே ஆயிரமாயிரம் கேள்விகளை நம்முள் எழுப்பும் வண்ணம், அடர்பச்சைவண்ணப் பின்புலத்தில் அழகிய காகமொன்றின் வாயில் இறுக்கிக் கட்டப்பட்ட வெண்ணிற நூலோடு இருப்பது ஒரு அட்டகாசமான குறிப்போவியம். அண்மையில் வேறெந்தவொரு நூலுக்கும் இத்தகு பொருத்தமானதொரு அட்டைப்பட ஓவியத்தை நாம் கண்டிருக்க முடியாது. அவ்வகையில் அட்டை வடிவமைப்பு செய்த சந்தோஷ் நாராயணனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
அட்டைப்படம் தான் இவ்வாறென்றால் நூலின் உள்ளடக்கப் பட்டியலுக்கு முன்பே காந்திக்கும் நாராயண குருவுக்கும் இடையே ஒடுக்கப்பட்ட மக்களின் கோவில் நுழைவு குறித்து நடக்கும் ஒரு உரையாடலின் சிறுபகுதி, இந்திய ஒன்றியத்தில் சாதி மறுப்பு, ஒளிப்பு, ஒழிப்பு ஆகியவற்றின் முக்காலத்தையும் காட்டும் காலக்கண்ணாடியாக மிளிர்கிறது. அதையும் தாண்டி உட்சென்றால் ஆசிரியரது முன்னுரையில் “பார்த்தீனியம்” எனும் முற்றுகைத் தாவரத்தோடு பார்ப்பனீயத்தை ஒப்பிட்டு, அது இந்நிலத்தில் விளைவித்த ஆபத்தை “சூழலியல் சாதீயம்” என்ற தலைப்பில் கருத்தரங்கமொன்றில் ஆற்றிய உரையின் விரிவான தொகுப்பாக இந்நூலைப் படைத்த பின்னணியினைக் கூறுகிறார் ஆசிரியர்.
காகம் – குருவி கதையின் பல்வேறு வடிவங்கள் சாதீய இழிவையும், கறுப்பு நிறத்தின் மீதான உள்ளார்ந்த வெறுப்பையும் உட்பொருளாகச் சொல்லி கோடிட்டுக் காட்டுகின்றன. அதோடு பழந்தமிழ் இலக்கியங்களில் முதலில் நன்னிமித்தப் பறவையாக அன்போடு பார்க்கப்பட்ட காகம் பின்னாள் இலக்கியங்களில் தூற்றப்பட்ட சோகத்தையும் அக்கட்டுரை பதிவு செய்கிறது. கறுப்பு ஒதுக்கப்பட்டு அருவெறுக்கப்படுவதற்கான காரணத்தை அடுத்தடுத்த தலைப்புகளில் ஆரியரது வரலாற்றினுள்ளாக மானுடவியல் வழி தேடி நாம் கண்டடைய, காகம் – அன்னம், எருமை – பசு, காரெள் – வெள்ளை எள் ஆகிய ஒப்பீடுகளோடு காளி எனும் நாட்டார் தெய்வம் சமசுகிருத வழிபாட்டுக்குள் நுழைக்கப்பட்ட கதையையும் சேர்த்துச் சொல்கிறார், ஆசிரியர்.
பார்ப்பனீயம் சாதீய வேற்றுமைகளைத் தலைமுறை கடந்து நிறுவப் பயன்பட்ட புராண இதிகாசங்களில் யுகக் கணக்கீடுகள் அறிவுக்கு அப்பாற்பட்டவையாக இருப்பதோடு, நால்வகை வேதத்தில் ஆரியர்களின் இடப்பெயர்வு வரலாற்றின் கூறுகள் வெளிப்படையாகத் தெரியுமிடங்களையும் ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார். ஆரியம் முன்னெடுத்த பிரம்மம் – பிரம்மன் – பிராமணன் என்ற கோட்பாடு ஒரு குறிப்பிட்ட சாதியினரை கடவுளுக்கு நிகராக நிறுத்தி எல்லாவற்றிலும் முன்னுரிமை வழங்கியதால் சமூகப் பண்பாட்டு ஆன்மீகத் தளத்தில் மலைக்கும் மடுவுக்குமான வேற்றுமைகள் வேரூன்றின என்கிறார் ஆசிரியர். நாஜிக்கள் முன்னெடுத்த சமூக டார்வினிசத்தோடு இதனை ஒப்பிட்டு, இதனால் இந்திய ஒன்றியத்தின் அரசியல் பொருளாதாரத் தளங்களின் உயர்பீடங்கள் மட்டுமின்றி அறிவியல் மற்றும் அறிவுப்புல இயக்கத்திலும் இந்தச் சமூகத்தினரே ஆதிக்கம் செலுத்துவதையும் ஆசிரியர் கூர்நோக்கக் குறிப்பிடுகிறார்.
ஐம்பூதங்கள், தாவரங்கள், விலங்குகள், உணவுப்பழக்கவழக்கங்கள் என அனைத்திலும் சாதியின் கறை படிந்திருப்பதையும், அது உளவியல் ரீதியாக தாழ்வு மனப்பான்மைச் சங்கிலியை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் மாட்டிக்கொண்டேயிருப்பதையும் ஆசிரியர் விளக்கும் பாங்கு மகத்தானது. முதலில் நமக்கு இவை குறித்த பிரக்ஞை வந்தாலொழிய நாம் கடைத்தேற வழியில்லை என்பதை இந்நூல் நமக்கு உணர்த்துகிறது. ஒவ்வொரு தலைப்பிலும் பல தகவல்களைப் பட்டியலிடும் ஆசிரியர், அவை தொடர்பான கருத்துக்களைத் தமிழிலக்கியப் பாடல்களில் தேடியிருப்பதும், சிறப்பான மேற்கோள்களை அவை இடம்பெற்ற நூல்களின் விவரங்களோடு உசாத்துணைகளாகக் கொடுத்திருப்பது மேலதிக வாசிப்புக்கு நம்மைத் தூண்டுகிறது. அட்டைப்பட ஓவியத்தில் இருக்கும் காகத்தை இந்திய ஒன்றியமாகக் கருதிக் கொண்டால் அதன் அலகில் மட்டுமின்றி கால்கள், கண்கள், இறக்கைகள் அனைத்தையும் கட்டி இருக்கும் நூலான பார்ப்பனீயம் கழன்று விழாதவரை மேலெழுந்து பறக்க அல்ல, உயிரோடு இருக்கக்கூட அந்தப் பறவையால் முடியாது என்பதே இந்நூல் சொல்லும் உண்மையிலும் உண்மையான செய்தி.
திருமதி. விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.