நாம் தமிழர் இயக்கம் 1958ல் தமிழர் தந்தை சிபா. ஆதித்தனார் அவர்களால் நிறுவப்பட்டு 2010ல் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களால் மீளச் செயல்படத் தொடங்கி, இன்று தமிழகத் தேர்தல் அரசியல் களத்தைச் செலுத்தும் அச்சாணியாக, மூன்றாவது பெரிய கட்சியாகப் பரிணமித்துள்ளது. அதற்கு முழுமுதற்காரணம், ஈழத்தில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலை தான். இது குறித்து அண்ணன் ஆற்றிய இராமேசுவரம் உரை தான், தன்மானத் தமிழர்கள் பலரைக் கிளர்ந்தெழச் செய்தது.
அண்ணன் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டு சிறையிலிருந்த காலத்துக்குப் பின், 2011ம் ஆண்டுவாக்கில் வெளியான “திருப்பி அடிப்பேன்” என்ற நூலும், அதன் கருத்துக்களும் சராசரி தமிழர்கள் முதல் சாதனைத் தமிழர்கள் வரை, அனைவரது உள்ளத்தையும் உலுக்கிய படைப்பு என்றால், அது நிச்சயம் மிகையில்லை.
கிட்டத்தட்ட இந்த நூல் வந்து பத்தாண்டுகளுக்கும் மேலாகிவிட்டாலும் கூட, இன்றும் நாம் சந்திக்கும் அன்றாடச் சிக்கல்கள் பலவற்றுக்கான மூலமும், தீர்வும் தெளிவாக விளக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. தான் களத்துக்கு வந்த காரணத்தை, செய்ய வேண்டிய காரியங்களை, தன் போராட்டத்துக்கான நியாயத்தை, ஈழத்தில் நடந்த அநியாயத்தை, தமிழர்களது உன்னதக் கடமையை, அதைச் செய்யாது தவிர்க்கும் மடமையை, இனம் எதிர்கொள் சோதனைகளை, புரிய வேண்டிய சாதனைகளை எல்லாவற்றையும் தொட்டு, பல மலர்களால் ஆன மாலை போல இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
தன் மீதான விமர்சனங்களுக்கும் ஏன் எதிரிகளும் துரோகிகளும் இட்டுக் கட்டும் அவதூறுகளுக்கும் கூட அண்ணன் இந்நூலில் விளக்கம் சொல்லியிருக்கிறார். அந்த வகையில் முதன்முறை அந்த நூலைப் படித்ததற்கும், இப்போது அதை மீள வாசிப்பதற்கும் இடையே நிகழ்ந்துள்ளவைகள், பற்பல சித்திரங்களை நமக்குக் காட்டித் தருகின்றன. அவர் சொல்லி நடந்ததும், சொல்லாமல் கடந்ததும் கண் முன் விரியும்போது, நம் கனவுகளும் கடமைகளும் இன்னும் தெளிவாகப் புலப்படுகின்றன. எனவே ‘திருப்பி அடிப்பேன்” என்ற இந்நூலைத் திருப்பிப் படிப்போம்! இந்த இனவெழுச்சி நாளில் நாம் உறுதியேற்கும் இலக்குகளை வெல்லத் தூண்டும், தெளிவை, தேவையை, தினவை, திமிரைப் பெறுவோம்!
திருமதி. விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.