2024 சூன் மாதம் 25ம் நாள் அன்று, இந்திய ஒன்றியத்தில் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டு சரியாக நாற்பத்தொன்பது ஆண்டுகள் முடிந்து ஐம்பதாவது ஆண்டு தொடங்கும். சரியாக அரை நூற்றாண்டுக்கு முன் நடந்த இந்த வரலாற்று நிகழ்வு, இந்திய ஒன்றியத்தின் அரசியல் நிர்வாகத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் எண்ணற்றவை; ஒரு தொடர் விளைவை உண்டாக்கியவை; இன்று வரையில் கூட தாக்கங்களை ஏற்படுத்துபவை என்றால் அது மிகையில்லை. அரசியல் பற்றி பெரிய அறிமுகமோ அறிவோ இல்லாதவர்களுக்குக் கூட வியப்பையும், அரசியல் பற்றி அறிந்த ஆளுமைகளுக்கு அதிர்ச்சியையும் ஒரு சேர அளித்த நிகழ்வு அது.
ஒரு தேர்தல் முறைகேடு குறித்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் தொடங்கியது நெருக்கடிநிலைக்கான ஆயத்தம் என்று சொல்வது மேலெழுந்தவாரியான பார்வையாக இருக்கக்கூடும். ஆனால் கிட்டத்தட்ட பல மாதங்களாகக் கனன்று கொண்டிருந்த எரிமலையொன்று வெடித்துச் சிதறி தீக்கங்குகளை நாலாபுறமும் விசிறியெறிந்தது போன்றதொரு பேரழிவின் உச்சம் அது. சட்டப்பூர்வமாகவே சட்டத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு அதிகாரத்தைத் தன்னிடம் குவித்துக் கொண்ட சிலரின் ஆட்சி தொடங்கிய நாள் அது. இந்திய ஒன்றியத்தின் விடுதலைப் போராட்டத்தில் பல தலைவர்கள் பல்வேறு கருதுகோள்களுடன் இணைந்து, தத்தமது பங்களிப்பை நல்கினர். அவர்களின் பலர் விடுதலை பெற்ற பின் அமைந்த அரசுகளின் பங்கேற்றிருந்தனர். அவர்களில் முக்கியமானவர் மற்றும் முதன்மையானவர் நேரு.
தத்துவங்கள் பல பொருது கொண்ட ஒன்றிய அரசியல் களத்தில், தத்துவங்களைப் பின்னிறுத்தி, தனிமனிதர்கள் மோதிக்கொண்டதன் விளைவு தான் நெருக்கடிநிலை. புதிதாகவும் பெரிதாகவும் அமைந்த ஒரு மக்களாட்சி நாட்டின் முதல் பிரதமரான நேரு, அம்மக்களாட்சித் தத்துவத்தைக் கேள்விக்குள்ளாக்கிய நெருக்கடி நிலையைத் தன் மகளே அறிவிப்பார் என எதிர்பார்த்திருக்கமாட்டார். நெருக்கடிநிலையை அறிவித்த போது “ஜனநாயகத்தின் பேரிரைச்சல் நிறுத்தப்பட்டது” எனக் கூறிய இந்திரா தான், பத்தொன்பது மாதங்கள் கழித்து நெருக்கடிநிலையை விலக்கி தேர்தலை அறிவித்தார். அதில் படுதோல்வியைச் சந்தித்தாலும் கூட, அடுத்த சில ஆண்டுகளில் மீண்டும் பிரதமராக ஆன இந்திராவின் ஆட்சிக்காலம் இந்திய ஒன்றிய அரசியல் வரலாற்றில் பல திருப்பங்கள் கொண்ட ஒரு புதிரான பக்கம்.
முன்னுரையில் நூலாசிரியர் திரு. ராதாகிருஷ்ணன், இப்புத்தகத்தை வாசிப்போர் நெருக்கடிநிலைக் காலத்தை நேரில் கண்ட அனுபவத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூலை எழுதியதாகச் சொல்கிறார். அதில் அவர் தெளிவாக வெற்றி பெற்றுள்ளார் என்பதை நூலில் உள்ளடக்கம் நமக்குத் தெரிவிக்கிறது. அவர் நெருக்கடி நிலைக்கு முன் , நெருக்கடி நிலையின் போது, நெருக்கடி நிலைக்குப் பின் நடந்த சம்பவங்களைக் கோர்த்த விதம் ஒரு புதினத்தைப் போல இருக்கிறது. இந்த நிகழ்வு நடக்க என்ன காரணம் என்பதில் தொடங்கி, கைது படலம், தணிக்கை, தலைமறைவு, மிசா சட்டம், இருபது அம்சத் திட்டம், மாநில ஆட்சிக் கலைப்புகள், இரகசிய பத்திரிக்கைகள் மற்றும் இயக்கங்கள், சட்டத்திருத்தங்கள், தென்மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களில் ஏற்பட்ட விளைவுகளின் ஒப்பீடு, அப்பாவிகள் முதல் அரச குடும்பத்தினர் வரை இந்திராவின் எதிரிகளாக எண்ணப்பட்டவர்களின் மீது நடந்த அடக்குமுறைகள், சஞ்சய் காந்தியின் தலையீடுகள், பன்னாடுகள் நெருக்கடிநிலைக்கு ஆற்றிய எதிர்வினைகள், திடீரென அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்தல், ஜனதா கட்சி உருவாக்கம், காங்கிரசின் தோல்வி, கூட்டணி ஆட்சி, குழப்பங்கள், இந்திராவின் மீளெழுச்சி, ஆட்சிக் கவிழ்ப்பு, மீண்டும் இந்திரா தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தல், நெருக்கடி நிலை தந்த பாடங்கள் வரையாக பல்வேறு தலைப்புகளில் சுவையான தகவல்களின் கோர்வையாக இந்நூலை ஆசிரியர் சமைத்திருக்கிறார்.
இந்திய அரசியல் வரலாற்றில் நெருக்கடி நிலை ஒரு கரும்புள்ளியே. அதுவரை அரசியலமைப்பில் இருப்பதே தெரியாத, தேவைப்படாது என நினைக்கப்பட்ட, பயன்படுத்தப்படாத பல்வகை அதிகாரங்களையெல்லாம் இந்திரா கையிலெடுத்தார். அசுரப் பெரும்பான்மையின் மூலம் அரசியலமைப்பையே ஒருமுறை திருத்தி எழுதினார். முடிவில்லாத இருளுக்குள் மாட்டிக் கொண்டோமோ என மக்களை நினைக்க வைத்த நேரம், மீண்டும் அவர் மக்களாட்சிக்குத் திரும்பினார். அன்று அவர் தொடங்கிய அதிகாரக் குவிப்பும் மையப்படுத்தலும் இன்று உச்சம் தொட்டிருக்கிறது. மாநிலங்களை அதிகாரமற்ற வெற்று அமைப்புகளாக மாற்றும் வழிமுறை புதுப்புது வடிவங்களில் தொடர்கிறது. இந்திராவின் காங்கிரஸ் ஆட்சி போட்ட நச்சு விதை வளர்ந்து மோடியின் பாஜக ஆட்சியில் முள்மரமாகி தீக்கனிகளைப் பரப்பி வருகிறது. அவசரநிலையை அறிவித்து விட்டு அன்று இந்திரா செய்ததை, அத்தகைய எந்த அறிவிப்புமின்றியே பாஜக கடந்த பத்தாண்டுகளில் செய்து வருகிறது.
மக்களாட்சி நடைமுறையில் அசுரப்பெரும்பான்மை என்னென்ன வகையான அனர்த்தங்களை விளைவிக்கும் என்பதற்கு இந்திரா மற்றும் மோடியின் சர்வாதிகார ஆட்சிகள் தெள்ளிய எடுத்துக்காட்டுகள். எண்களின் அடிப்படையில் ஆட்சியாளர்கள் ஆடும் அரசியல் ஆட்டத்தில், மக்களின் வாழ்வாதாரமும், வாழ்வோம் என்ற நம்பிக்கையும் ஆட்டம் கண்டுவிடுகின்றன. ஆட்சியாளர்களுக்கு அரசியலமைப்பால் வழங்கப்பட்ட அதிகாரம் மக்களைக் காப்பதற்கே தவிர, மக்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட அல்ல என்பதையும், சர்வ வல்லமை பொருந்தியதாகக் காட்சி தரும் ஆட்சி அதிகாரமும் மக்களாட்சியில் நிரந்தரமானது அல்ல என்று அரசியல் தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே அவசரநிலை நமக்குத் தரும் பாடம்.
திருமதி. விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா