ஆகத்து 2023
கொடு வரி குருளை கூட்டுள் வளர்ந்தாங்கு
பிறர் பிணி அகத்து இருந்து பீடு காழ் முற்றி
அரு கரை கவிய குத்தி குழி கொன்று
பெரு கை யானை பிடி புக்கு ஆங்கு
நுண்ணிதின் உணர நாடி நண்ணார்
செறிவு உடை திண் காப்பு ஏறி வாள் கழித்து
உருகெழு தாயம் ஊழின் எய்தி
பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர்

பொருளுரை:
பகைவரின் சிறையில் இருந்த கரிகாலன் வளைந்த வரிகளைக் கொண்ட புலிக்குட்டி கூண்டில் இருந்து வளர்வதைப் போன்று வளர்ந்தான். பகைவரின் இடத்தில் வைரமாகத் தன் பெருமை முற்ற அவன் திகழ்ந்தான். குழியில் விழுந்த யானை தன் தந்தங்களால் வலிய கரைகளைக் குத்தித் திறமையாக மீண்டு வந்து தன் கூட்டத்துடன் சேர்வதைப் போன்று , தப்பிப்பதற்கான சிறந்த வழி எது எனத் தன் அறிவாற்றலால் கண்டறிந்து கடுமையான காவலையுடைய பகைவரின் வாட்படையைத் திறம்பட ஓட்டித் தப்பித்தான். அவ்வாறு சென்று முறையாகப் போரிட்டு தன் அரசுரிமையை மீட்டான், இளவயது கரிகாலன். அவன் கடினமாகப் போராடிப் பெற்ற அரசுரிமையை எண்ணி மகிழ்ச்சி கொள்ளாது, தன் பகைவர்களைப் பழி தீர்க்கப் பெருஞ்சினத்துடன் இருந்தான்.
திரு. மறைமலை வேலனார்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.