அக்டோபர் 2023
பட்டினப்பாலை
(பாடல் 228 – 239/301)
“பெற்றவை மகிழ்தல் செய்யான், செற்றோர்
கடி அரண் தொலைத்த கதவு கொல் மருப்பின்
முடி உடைக் கருந்தலை புரட்டும் முன் தாள்
உகிர் உடை அடிய ஓங்கு எழில் யானை
வடி மணிப் புரவியொடு வயவர் வீழப்
பெரு நல் வானத்துப் பருந்து உலாய் நடப்ப,
தூறு இவர் துறுகல் போலப் போர் வேட்டு
வேறு பல் பூளையொடு உழிஞை சூடிப்
பேய்க் கண் அன்ன பிளிறு கடி முரசமாகக்
கண் அகல் அறை அதிர்வன முழங்க
முனை கெடச் சென்று, முன் சமம் முருக்கித்
தலைதவச் சென்று தண் பணை எடுப்பி”

பொருளுரை:
பகைவரை வென்று தனது அரச உரிமையை பெற்ற பின்பும் கரிகாற்சோழனின் சீற்றமும் பகைவர் நிலத்தை மென்மேலும் கைப்பற்றவேண்டும் என்ற வேட்கையும் குன்றவில்லை. பாதுகாக்கப்பட்ட பகைவர் கோட்டைகளைத் தாக்கினான். அவனது நெடிய கவின்மிகு களிறுகள் பகைவரின் கோட்டைக் கதவுகளை அவற்றின் கூரிய தந்தத்தால் துளைத்துத் தகர்த்தன. பகைவரின் மணிமுடி ஏந்திய கரிய தலைகளை யானைகள் கூரிய நகங்கள் கொண்ட முன்னங்காலால் உதைத்துப் புரட்டின.
பருந்துகள் உலவும் பெரிய நல்வானம் கொண்ட போர்க்களத்தில், மணிகள் பொருத்திய புரவியில் போரிட்டு கரிகாற்சோழன் பகைவரை அழித்தான். பூளை மலர்களும் உழிஞை மலர்களும் அணிந்த, போரை பெரிதும் விரும்பும் தனது படை வீரர்களைக் கொண்டு பகைவரின் கோட்டையைச் சுற்றி வளைத்தான். பாறைகளில் படர்ந்த செடி கொடிகளைப்போல அவர்கள் தோற்றமளிப்பர். பேய்களின் கண்களைப் போன்று தோற்றமளிக்கும் கரிகாற்சோழனின் போர் முரசம் போர்க்களம் அதிர முழங்கும். அவன் பகைவரின் கோட்டைகளை அழித்து குளிர்ந்த அந்நிலத்திலிருந்து மருத நிலத்தின் மக்களை விரட்டினான்.
திரு. மறைமலை வேலனார்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.