டிசம்பர் 2023
பட்டினப்பாலை
(பாடல் 239 – 245/301)
“தலைதவ சென்று தண்பணை எடுப்பி
வெள் பூ கரும்பொடு செ நெல் நீடி
மா இதழ் குவளையொடு நெய்தலும் மயங்கி
கராஅம் கலித்த கண் அகன் பொய்கை
கொழு கால் புதவமொடு செருந்தி நீடி
செறுவும் வாவியும் மயங்கி நீர் அற்று
அறுகோட்டு இரலையொடு மான்பிணை உகளவும்”

பொருளுரை:
கரிகாற்சோழன் தாக்குவதற்கு முன்பாக மருத நிலத்தின் நிலை இவ்வாறு வயல்களில் வெண்மையான மலர்களையுடைய கரும்புடன், நீண்டு வளர்ந்த நெற்பயிர்களும் இருந்தன. நீர் நிறைந்திருந்த அகன்ற குளங்களில் பெரிய இதழ்களும் அடர்ந்த நிறமும் கொண்ட குவளை மலர்களுடன் நெய்தல் மலர்களும் கலந்து இருந்தன. அவற்றுடன் சீற்றம் கொண்ட முதலைகளும் இருந்தன. அவன் தாக்குதலுக்குப் பிறகு அவ்விடங்கள் தடித்த தண்டுகள் உடைய அறுகம்புற்களும் கோரை புற்களும் நீண்டு வளர்ந்தும் கலந்தும் நிறைந்திருந்தன. ஏரிகளிலும் வயல்களிலும் நீர் வற்றி இருந்தன. கூர்மையான கொம்புகள் உடைய இரலை மான்கள் பெண் மான்களுடன் திரிந்தன.
திரு. மறைமலைவேலனார்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.