ஏப்ரல் 2024
பட்டினப்பாலை
(பாடல் 261 – 269/301)
கொடு கால் மாடத்து நெடு கடை துவன்றி
விருந்து உண்டு ஆனா பெரு சோறு அட்டில்
ஒள் சுவர் நல் இல் உயர் திணை இருந்து
பைங்கிளி மிழற்றும் பால் ஆர் செழு நகர்
தொடு தோல் அடியர் துடி பட குழீஇ
கொடு வில் எயினர் கொள்ளை உண்ட
உணவு இல் வறு கூட்டு உள் அகத்து இருந்து
வளை வாய் கூகை நல் பகல் குழறவும்
அரு கடி வரைப்பின் ஊர் கவின் அழிய

பொருளுரை:
உருண்ட தூண்களுடன் கூடிய மாடங்களின் நீண்ட வாசல்கள் வழியாக நுழைந்து, விருந்தினர் இடைவெளி இல்லாத, சமைக்கும் பெரிய அடுக்களையை அணுகினர். அங்கு அவர்கள் நெருங்கி இருந்து விருந்து உண்டனர். ஒளியுடைய சுவர்களையும், நல்ல இல்லங்களின் உயர்ந்த திண்ணையில் இருந்து பச்சைக் கிளிகள் பேசும் பால் நிறைந்த வளமான ஊர்களில், தோல் செருப்பைக் காலில் அணிந்து, துடி முழங்க திரண்டு வந்த வளைந்த வில்லையுடைய எயினர்கள் கொள்ளையால் உணவு இல்லாத நெற்கூடுகளில் வளைந்த வாயையுடைய கூகைகள் நண்பகலில் குழறும் காட்சியைக் கண்டனர். அரிய காவலையுடைய ஊர்களின் அழகு அழிய இவ்வாறு போரிட்டு அழித்தான், திருமாவளவன்.
திரு. மறைமலை வேலனார்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.