மே 2024
பட்டினப்பாலை
(பாடல் 270- 282/301)
பெரும் பாழ் செய்தும் அமையான், மருங்கு அற
மலை அகழ்க்குவனே, கடல் தூர்க்குவனே,
வான் வீழ்க்குவனே, வளி மாற்றுவன் எனத்
தான் முன்னிய துறை போகலின்
பல் ஒளியர் பணிபு ஒடுங்க,
தொல் அருவாளர் தொழில் கேட்ப
வடவர் வாடக் குடவர் கூம்பத்
தென்னவன் திறல் கெடச் சீறி மன்னர்
மன் எயில் கதுவும் மதனுடை நோன் தாள்
மாத்தானை மற மொய்ம்பின்
செங்கண்ணால் செயிர்த்து நோக்கிப்
புன் பொதுவர் வழி பொன்ற,
இருங்கோவேள் மருங்கு சாயக்

பொருளுரை:
பகைவரின் நாட்டைப் பெரியதாகப் பாழாக்கியும் தணியாத திருமாவளவன் , “முழுவதும் இல்லையாகும்படி மலைகளைத் தோண்டுவான், கடலை மணலால் நிரப்புவான், வானத்தை விழச் செய்வான், காற்றின் திசையை மாற்றுவான்” என்று எல்லோரும் கூறும்படியாக, தான் எண்ணியபடி செய்து முடிப்பான். ஒளி நாட்டார் பணிந்து ஒடுங்கவும், தொன்மையான அருவாள நாட்டு மன்னர்கள் வந்து பணிந்து அறிவுரை கேட்கவும், வடக்கில் உள்ள அரசர்கள் வாடவும், குட நாட்டு மன்னர் மகிழ்ச்சி குறையவும், ஆத்திரம் அடைந்து பகை மன்னர்களின் நிலையான கோட்டைகளைக் கைப்பற்றவும், பாண்டிய மன்னனின் வலிமை கெடவும், செருக்கினையும் வலிமையையும் உடைய முயற்சி, பெரிய தானை, மறமுடைய வலிமை ஆகியவை உடைமையால், சினத்தால் சிவந்த கண்களால் நோக்கி, புல்லிய முல்லை நிலத்தின் மன்னர்களின் வழிமுறை கெடவும், இருங்கோவேள் என்ற மன்னனின் சுற்றத்தார் கெடவும் மறத்தில் சிறந்து விளங்கினான்.
திரு. மறைமலை வேலனார்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.