சூன் 2024
பட்டினப்பாலை
(பாடல் 283-301/301)
காடு கொன்று நாடாக்கிக்,
குளம் தொட்டு வளம் பெருக்கிப்,
பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கிக்,
கோயிலொடு குடிநிறீஇ,
வாயிலொடு புழையமைத்து,
ஞாயில்தொறும் புதை நிறீஇப்,
பொருவேம் எனப் பெயர் கொடுத்து,
ஒருவேம் எனப் புறக்கொடாது,
திரு நிலைஇய பெரு மன் எயில்
மின் ஒளி எறிப்ப,
தன் ஒளி மழுங்கி,
விசி பிணி முழவின் வேந்தர் சூடிய
பசு மணி பொருத, பரு ஏர் எறுழ்க் கழல் கால்,
பொன் தொடிப் புதல்வர் ஓடி ஆடவும்,
முற்று இழை மகளிர் முகிழ் முலை திளைப்பவும்,
செஞ்சாந்து சிதைந்த மார்பில், ஒண் பூண்
அரிமா அன்ன அணங்கு உடைத் துப்பின்,
திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய,
வேலினும் வெய்ய கானம்,
அவன் கோலினும் தண்ணிய தட மென்தோளே!

பொருளுரை:
காடாகிய இடங்களை அழித்து நாடாக்கி, குளங்களைத் தோண்டி, வளமையைப் பெருக்கி, பெரிய மாடங்களையுடைய உறந்தை நகரை விரிவுபடுத்தி, அரண்மனைகளுடன் குடிகளை நிறுவி, கடவுள் உறையும் கோயில்கள் எனினுமாம், அரண்களில் பெரியதாகவும் சிறியதாகவும் வாயில்கள் அமைத்து, அரண்களின் ஏவல் அறைதோறும், அம்புக் கூட்டை நிறுவி, போர் செய்வேன் என்று உறுதிமொழி உரைத்து, விட்டு அகலமாட்டேன் என்று கூறி, புறமுதுகு இடாது, வீரத் திருமகள் நிலைத்த, செல்வம் நிலைத்த பெரிய நிலையான கோட்டை மதில் மின்னலைப் போன்று ஒளி வீச தங்களின் மறம் குறைந்த, வார் இறுக்கமாகக் கட்டிய முழவினையுடைய வேந்தர்களின் பச்சை மணியையுடைய முடி, பருத்த அழகிய வீரக் கழலினைக் கட்டிய கரிகாலனின் கால்களைத் தொட, பொன்னால் செய்த தொடிகளை அணிந்த அவனது புதல்வர்கள் ஓடி ஆடி விளையாடவும், அணிகலன்களை அணிந்த அவனது மனைவிமார் தொடுவதால் அவனது சிவந்த சந்தனம் அழிந்த மார்பில் உள்ள ஒளியுடைய அணிகலன்களுடன் சிங்கத்தைப் போன்ற வலிமையுடன் கூடிய கரிகாலன் பகைவர்மேல் உயர்த்திய வேலைக் காட்டிலும் கொடியது காடு. அவனது செங்கோலைவிட, குளிர்ச்சியானவை என் தலைவியின் பெரிய மெல்லிய தோள்கள் எனவே நான் தலைவியை விட்டு நீங்க மாட்டேன் – இவ்வாறு பட்டினப்பாலையை இயற்றிய புலவர் இறுதி வரிகளில் செப்புகிறார்.
பட்டினப்பாலை முற்றும் !
மேலதிகத் தகவல்கள்:
* பட்டினப்பாலை பாடியமைக்காக கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்கு கரிகாற் சோழன் பதினாறு நூறாயிரம் பொற்காசுகள் பரிசளித்தான் என கலிங்கத்துப்பரணி கூறுகிறது.
* இந்நூல் அரகேற்றப்பட்ட இடம் “பதினாறு கால் மண்டபம்” உறையூரில் இருந்துள்ளது
* பிற்காலப் பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் சோழநாட்டை வென்று அதன் தலைநகர் உறையூரை அழித்தபோது, அந்நகரில் இந்நூல் அரங்கேற்றப்பட்ட பதினாறு கால் மண்டபத்தை அழிக்காதிருக்க ஆணையிட்டான் என “திருவெள்ளரைக் கல்வெட்டு” கூறியுள்ளதை கீழ்வரும் பாடல்கள் தெரிவிக்கின்றது.
“வெறியார் துவளத் தொடைச்செய மாறன் வெகுண்டதொன்றும்
அறியாத செம்பியன் காவிரிநாட்டில் அரமியத்துப்
பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டிணப்பாலைக் கன்று
நெறியால் விடுந்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே”
அகழ்வாராய்ச்சிகள் மூலமாக உறையூரில் புதைந்துள்ள அந்த மண்டபத்தை கண்டெடுத்தல் தமிழர்களாகிய நமது கடமை.
திரு. மறைமலை வேலனார்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.