நவம்பர் 2022
பட்டினப்பாலை (பாடல் 51-59/301)
தண் கேணி தகை முற்றத்து (51)
பகட்டு எருத்தின் பல சாலை
தவ பள்ளி தாழ் காவின்
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம்
மா இரும் பெடையோடு இரியல் போகி
பூதம் காக்கும் புகல் அரு கடி நகர்
தூது உணம் புறவொடு துச்சில் சேக்கும்
முது மரத்த முரண் களரி (59)

பொருளுரை:
கரிகாற்சோழன் ஆட்சி புரியும் சோணாட்டின் காவிரிப் பூம்பட்டினத்தில் பல கிணறுகள் உள்ளன. இவை குளிர்ந்த தன்மையினையுடையவை. மேலும் உருவில் பெரிய எருதுகள் தங்கும் சாலைகளும் உள்ளன.
தாழ்மையாக வளர்ந்து நிற்கும் மரங்கள் கொண்ட சோலைகளில் அமனர், சமணர் போன்ற பல்வேறு சமயத்தோர் தவநெறி பேணும் பள்ளிகள் உள்ளன. மிளிர்கின்ற சடையையுடைய அறவோர் (சைவர்) அச்சோலைகளில் நெய்யிட்டு தீ வேள்வி செய்வர்.
வேள்வியின் விளைவாக எழும்பும் புகையை வெறுத்து அஞ்சி அவ்விடம் தங்கியிருந்த குயில்கள் தன் பெரும் கரிய பெண் குயில்களோடு பறந்து சென்று யாரும் நுழைய இயலாத பூதங்கள் காவல் செய்யும் கடுமையான காவல் கொண்ட காளிக்கோட்டத்திற்குச் செல்லும்.
அந்தக் காளிக்கோட்டத்தில் அவை அங்குள்ள தூக்கணங் குருவிகளோடு சென்று ஒதுங்கித் தங்கும். இவற்றோடு நெடுநாட்கள் வளர்ந்து நிற்கும் மரங்கள் உள்ள இடத்தில் மறவர்கள் மற்போர் (களரி) செய்யும் களங்களும் கொண்டது, சோணாட்டின் காவிரிப்பூம்பட்டினம்.
அகவலுரை:
மேற்கண்ட நூற்பாக்களின் வாயிலாக யாம் கீழ்க்காணும் செய்திகளை அறிகிறோம்.
1. பல்வேறு சமய தத்துவங்களை நம்பிக்கைகளைக் கொண்ட பல்வேறு சமயத்தோர் சோழநாட்டில் எவ்வித முரணும் பகையும் இன்றிச் சமய நல்லிணக்கத்துடன் வாழ்ந்துள்ளனர்.
2. உயிர்கள் வாழத் தேவையான நீர் நிலைகளும் (கிணறுகள் முதலியன), விலங்குகளும், பறவைகளும் மற்றும் பழமையான மரங்களும் பேணிக் காக்கப்பட்டுள்ளன. இயற்கையோடு இயைந்த வாழ்வியல் முறை இருந்துள்ளது.
3. இன்று வரை களரி எனும் தற்காப்புக்கலை மலையாளிகளது சொத்து என்று உலகெங்கும் அவர்களால் பறைசாற்றப்படுகிறது. தமிழர்கள் அவர்களுக்கு வழங்கிய கொடையே அது என்று களரி சார்ந்து குறிக்கப்பட்டுள்ள நூற்பாவால் அறிய முடிகிறது.
4. மற்போர் செய்து பழகும் மற்போர் களங்களில் போர்ப் பயிற்சிகள் மேற்கொண்டு ஆற்றலுடன், உடல் வலிமையுடன், வீரமுடன் தமிழர் நாம் வாழ்ந்துள்ளோம்.
திரு. மறைமலை வேலனார்,
சுபைல் மண்டலம்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.