ஆகத்து 2022
பட்டினப்பாலை (பாடல் 1 – 19/301)
அறிமுகம் :
தமிழ் கழக இலக்கியங்கள் பதினெண் மேற்கணக்கு, பதினெண்கீழ்க் கணக்கு என இருவகைப்படும். பதினெண் மேற்கணக்கு பாடல்களின் தொகுப்பான “பத்துப்பாட்டு” நூற்களில் 301 அடிகள் கொண்ட நூல் “பட்டினப்பாலை”, ஆக்கியோன் கடியலூர் உருத்திரங்கண்ணனார்”. தமிழ் கழக இலக்கியங்களில், சோழன் கரிகாற் பெருவளத்தானின் சிறப்பை போற்றும் நூல்கள் பொரு நராற்றுப்படை மற்றும் பட்டினப் பாலை ஆகும்.
பொருள் எனில் உரி எனில் நிலம். ஐ வகை நிலங்களில் நிலவும் நிலை மற்றும் உணர்வை குறிப்பது உரிப்பொருள் என்ப. நிமித்தம் எனில் குறியீடு அல்லது அடையாளம். ஐவகை நிலங்களில் ஒன்றான பாலை நிலத்தின் உரிப்பொருள் “பிரிதல் மற்றும் பிரிதல் நிமித்தம்” என்ப. புகார் (காவிரிப்பூம்பட்டினம்) ஊர் ஓர் பட்டினம் (கடற்கரை நகரம்). காவிரி புகும் கடற்கரை ஊர், அவ்விடம் பாலை நிலத்தின் உரிப்பொருளான பிரிதல் நிமித்தத்தை, தலைவன் தாங்கி நிற்றலால் “பட்டினப்பாலை” எனப்பெயர் சூடினார் உருத்திரங்கண்ணனார் என்ப. பொருள் தேட தலைவியை நீங்குதல் எண்ணி தலைவன் கொள்ளும் உளத்தடுமாற்றத்தையும் அவன் எடுத்த இறுதி நிலைப்பாட்டையும் விளக்குவதே “பட்டினப்பாலை”.
நூற்சிறப்பு :
கரிகாற்சோழனின் அறம், மறம் (வீரம்) கொடை மற்றும் நல்லாட்சியின் சிறப்பு, புகார் நகரின் சிறப்பு, காவிரியாற்றின் சிறப்பு, சோணாட்டின் வளம், தமிழரின் வாழ்வியல் மற்றும் காதற் சிறப்பு இவற்றை உரைக்கின்றது. பட்டினப்பாலை. தமிழர் வரலாற்றின் இன்றியமையாத குறிப்புகளைத் தன்னுள் தாங்கிய செம்மையான இலக்கியம் இது, பட்டினப்பாலை நூலின் பாடல்களை கேட்டு வியந்து உளம் மகிழ்ந்த கரிகாற்சோழன், இந்நூலை ஆக்கியோன் உருத்திரங்கண்ணனார் புலவருக்கு பதினாறு நூறு ஆயிரம் (16 இலட்சம்) பொன்னும், மக்கள் தமிழ் கற்க ஏதுவாக பதினாறு கால்கள் கொண்ட மண்டபத்தையும் பரிசாக வழங்கினான் என்ப.

பாடல் (1 – 6/301 ): காவிரியாற்றின் மாட்சி:
“வசை இல் புகழ் வயங்கு வெள் மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தன் பாடிய தளி உணவின்
புள் தேம்ப புயல் மாறி
வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலை தலைய கடல் காவிரி”
பொருளுரை:
குன்றாத புகழ் கொண்ட குற்றம் நீங்கிய வான்மீன் “சுக்கிரன் (அ) வெள்ளி, கிழக்கிலிருந்து மேற்கில் நிற்காது தெற்கில் நின்று மழை பொய்த்தும், அம்மழைத்துளியை உண்ணும் வாய்ப்பை இழந்த வானம்பாடி பறவை வாடி நின்றாலும், வற்றாது கடல் போல் விரிந்து ஓடி வயல் வெளிகளை நிரப்பி சோணாட்டை வளப்படுத்தும் மாட்சியுடையது குடகு மலையில் தோன்றும் “காவிரியாறு”,

பாடல் (7 – 19/301) சோணாட்டு மருத நிலத்தின் மாட்சி:
“புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியல் கழனி
கார் கரும்பின் கமழ் ஆலை
தீ தெறுவின் கவின் வாடி
நீர் செறுவின் நீள் நெய்தல்
பூ சாம்பும் புலத்து ஆங்கண்
காய் செந்நெல் கதிர் அருந்தும்
மோட்டு எருமை முழு குழவி
கூட்டு நிழல் துயில் வதியும்
கோள் தெங்கின் குலை வாழை
காய் கமுகின் கமழ் மஞ்சள்
இன மாவின் இணர் பெண்ணை
முதல் சேம்பின் முளை இஞ்சி”
பொருளுரை:
பரந்து மாறாது பொன்னாக செந்நெற்கதிர்கள் விளைத்துக் கொண்டேயிருக்கும் கழனிகளில் (வயல் களில்) நெய்தல் உள்ள அருகே கருப்பஞ்சாறு காய்ச்சும் கொட்டில் களிலிருந்து மனங்கமழும் புகைப்பட்டு வரும் தீ தன் எழில் குன்றி வாடுகின்றன. விளைந்த செந்நெற் கதிர்களை உண்ட பருத்த எருமைக் கன்றுகள் ஆங்காங்கே உள்ள நெற்குதிர்களின் நிழலில் உறங்குகின்றன. நெருக்கிய குலைகளுடைய தென்னை, வாழை, பனை மரங்களும் பல்வேறு இன மாமரங்களும், காய்கள் கொண்ட பாக்கு மரங்களும், மனங்கமழும் மஞ்சள், அடி பரந்த சேப்பங்கிழங்கு, முளை கொண்ட இஞ்சி செடிகளும் சோணாட்டின் மருத நிலத்தில் நிறைந்துள்ளன.
திரு. மறைமலை வேலனார்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.