spot_img

பட்டினப்பாலை பாடல் (106 – 117/301)

பிப்ரவரி 2023

பட்டினப்பாலை

பாடல் (106 – 117/301)

துணை புணர்ந்த மட மங்கையர்
பட்டுநீக்கித் துகிலுடுத்து
மட்டுநீக்கி மதுமகிழ்ந்து
மைந்தர் கண்ணி மகளிர் சூடவு
மகளிர் கோதை மைந்தர் மலையவு
நெடுங்கான் மாடத் தொள்ளெரி நோக்கிக்
கொடுந்திமிற் பரதவர் குரூஉச்சுட ரெண்ணவும்
பாட லோர்த்து நாடக நயந்தும்
வெண்ணிலவின் பயன்றுய்த்துங்
கண்ணடைஇய கடைக்கங்குலான்
மாஅகாவிரி மணங்கூட்டுந்
தூஉவெக்கர்த் துயின்மடிந்து

பொருளுரை:

காவிரிப்பூம்பட்டினம் வாழும் பரதவர் முற்றத்தின் நிலை இவ்வாறு உள்ளது. கண் அடைந்து உறங்கும் இரவுப்பொழுதில் தங்கள் துணைவரை (கணவரை) சேர்ந்த மேன்மை பொருந்திய (மடப்பம் / மடம்) பெண்கள் பட்டால் ஆன ஆடையை நீக்கிப் பருத்தியால் ஆன துகில் ஆடையை உடுத்துவர். மிதமான கிளர்ச்சியினை வழங்கும் கள் தவிர்த்து வெறியூட்டும் கள் அருந்துவர். அவர்கள் தங்கள் கணவர் அணியும் கண்ணி மலர் மாலையை தங்கள் கூந்தலில் சூடுவர். அப்பெண்கள் சூடும் கோதை எனும் மலர்ச்சரத்தை தங்கள் தோளைச்சுற்றி கணவர் அணிவர்.

காவிரிப்பூம்பட்டினத்தில் , வளைந்த கட்டு மரங்களில் உள்ள பரதவர் நெடிய தூண்கள் கொண்ட மாடங்களில் பளிச்சிடும் ஒளிச் சுடர்களை நோக்குவர். பாடல்கள் இசைக்கக் கேட்டும், நாடகங்கள் கண்டு இன்புற்றும் பல்வேறு தூய்மையான மலர்களின் மணம் கொண்டு வந்து சேர்க்கும் காவிரியின் அகன்ற மணல் திட்டுகளில் உறங்குவர்.

பண்டு தமிழர் வாழ்வியலில் இயல் இசை நாடகம் ஒரு இன்றியமையாத பகுதியாக இருந்துள்ளதை அறிய முடிகின்றது. மீனவர்கள் (பரதவர்)  இயற்கை வாழ்வியலுடன் ஒன்றிய செம்மாந்த வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். அவர்கள் முழு நிலவு நாட்களில் கடலுக்குள் செல்லாது தங்கள் துணைவியருடன் இல்லத்தில் இருப்பது, துணைவியர் இரவில் பட்டாடை உடுத்தியிருத்தல் போன்றவை அக்கால பரதவர் முற்றத்தில் பின்பற்றப்பட்டு வந்த வழமையென அறிகிறோம்.

சொல்லாய்வு: 

மடப்பம் என்ற சொல் பெண்களுக்கே உரித்தான பண்புகளில் ஒன்றான “மடம்” என்பதென்றும் அறிகின்றோம். வெண்ணிலவு , நாடகம், மகளிர், ச்ட்மைந்தர் , மங்கையர் , பட்டு , பாடல் , மது, துகில் போன்ற சொற்கள் இப்பாடல்களில் தென்படுகிறது.இச்சொற்கள் இன்றளவும் நம் அன்றாட வழக்கில் உள்ளது நம் தமிழ் மொழியின் பெருமை.

திரு. மறைமலை வேலனார்,

செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles