மார்ச் 2023
பட்டினப்பாலை
பாடல் (118 – 140/301)
வாலிணர் மடற்றாழை
வேல்ஆழி வியன் தெருவின்
நல் இறைவன் பொருள் காக்கும்
தொல் இசை தொழில் மாக்கள்
காய் சினத்த கதிர் செல்வன்
தேர் பூண்ட மாஅ போல
வைகல்தொறும் அசைவு இன்றி
உல்கு செய குறைபடாது
வான் முகந்த நீர் மலை பொழியவும்
மலை பொழிந்த நீர் கடல் பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல
நீரினின்று நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர் பரப்பவும்
அளந்து அறியா பல பண்டம்
வரம்பு அறியாமை வந்து ஈண்டி
அரு கடி பெரு காப்பின்
வலி உடை வல் அணங்கினோன்
புலி பொறித்து புறம் போக்கி
மதி நிறைந்த மலி பண்டம்
பொதி மூடை போர் ஏறி
மழை ஆடு சிமைய மால் வரை கவாஅன்
வரை ஆடு வருடை தோற்றம் போல
கூர் உகிர் ஞமலி கொடு தாள் ஏற்றை

பொருளுரை :
வெண்மையான பூங்கொத்துகளும் மடல்களும் பெற்ற தாழை உள்ள கடற்கரையின் அருகே உள்ள அகன்ற பண்டசாலை முற்றத்தில் நன்மை பொருந்திய மன்னன் திருமாவளவனின் பொருட்களை வழுவாது காக்கும் தொன்மையான புகழையுடைய சுங்கச்சாலை பணியாளர்கள், சுடுகின்ற கதிர்கள் கொண்ட பகலவனின் தேரில் பூட்டிய புரவிகள் அசைவு (சோர்வு) கொள்ளாது தொடர்ந்து இயங்குவதைப்போன்று உல்கு (சுங்கம்) கொள்வர்.
குறைவு இல்லாது மேகம் மலையில் நீரை பொழிந்ததைப் போன்றும் , அம்மலையில் பொழிந்த நீர் கடல் வந்து சேர்வதைப்போன்றும் , மழைக்காலத்தில் பெய்யும் மழைப்பொன்றும் பிற தேயங்களிலிருந்து கடல் மேல் வரும் பண்டங்கள் நம் நாட்டிற்குள் வருவதற்கும் , நம் நாட்டில் உள்ளவை பிற தேயங்களுக்கு செல்வதற்குமாய் அளந்தறிய இயலா அளவில் பொருட்கள் பொதிகளில் காவிரிப்பூம்பட்டினத்தின் துறைமுகத்தில் வந்தவாரும் சென்றவாரும் இருந்தன.கடுமையான காவல் உள்ள ஆங்கே சுங்கம் கொள்ளும் வலிமைப் பொருந்திய காவற்காரர்கள் இருப்பர். தமிழ்நாட்டின் உள்ளே கொண்டு வரும் பண்டங்கள் நிறைந்த பொதி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காட்சியானது மேகங்கள் வந்து மோதும் மலை முகடுகளில் விளையாடும் வருடை ஆட்டை ஒத்ததாக தோற்றமளித்தது.
நம் நாட்டிற்குள் வந்து சேரும் பண்டங்களில் காவற்காரர்கள் சோழன் கரிகால் பெருவளத்தானின் புலி இலச்சினை பதித்தனர்.அவ்விடம் அவ்வாறு குவிந்த பண்டங்களின் மீது செம்மறி (கிடா) ஆடுகள், கூறிய நகங்கள் கொண்ட நாய்களுடன் துள்ளி விளையாடும்.
திரு. மறைமலை வேலனார்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.