ஏப்ரல் 2023
பட்டினப்பாலை
பாடல் (141 – 158/301)
குறு தொடை நெடு படிக்கால்
கொடு திண்ணை பல் தகைப்பின்
புழை வாயில் போகு இடைகழி
மழை தோயும் உயர் மாடத்து
சே அடி செறி குறங்கின்
பாசிழை பகட்டு அல்குல்
தூசு உடை துகிர் மேனி
மயில் இயல் மான் நோக்கின்
கிளி மழலை மெல் சாயலோர்
வளி நுழையும் வாய் பொருந்தி
ஓங்குவரை மருங்கின்
நுண்தாது உறைக்கும்
காந்தள் அம் துடுப்பின்
கவிகுலை அன்ன
செறி தொடி முன்
கை கூப்பி செவ்வேள்
வெறி ஆடு மகளிரொடு
செறிய தாஅய்
குழல் அகவ யாழ் முரல
முழவு அதிர முரசு இயம்ப
விழவு அறா வியல் ஆவண்த்து

பொருளுரை:
மேற்காணும் பாடல்கள் புகார் நகரில் உள்ள அங்காடித் தெருக்களின் சிறப்பு நிலையை உரைக்கின்றது. புகார் நகரின் அங்காடித் தெருக்களில் நெருங்க அமையப்பெற்ற படிகளும், பல அடுக்குகளும், சுற்றுத் திண்ணைகளும், சிறியதும் பெரியதுமான நுழைவாயில்களின் நடுவே அமைந்த இடைக்கழிகளும். மழைப்பொழியும் மேகங்கள் தீண்டும் உயர்ந்த மாளிகைகளின் மாடங்களில் காற்று வந்து புகும் சாளரங்களில் நிற்கும் சிவந்த பாதங்களும் செறிவான அழகும் மயிலைப் போன்று மென்மையும், கிளியைப் போன்று இனிமையும் உடைய மகளிர், புதிய அணிகலன்கள் பருத்தியினாலான ஆடை இவற்றுடன் மலை முகடுகளில் உள்ள காந்தள் மலர்களின் தாதைப்போன்று நெருக்கி அமைந்த வளையல்களை அணிந்துக்கொண்டு குழல், முழவு, முரசு போன்ற இசைக்கருவிகள் முழங்க செவ்வேள் வைத்து வெறியாட்டு ஆடும் மகளிரைப் பொருந்த அசைந்து மலர்கள் தூவி வணங்குவர்.
திரு. மறைமலை வேலனார்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.