மே 2023
பட்டினப்பாலை
பாடல் (159 – 175/301)
மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய
மலரணி வாயிற் பலர்தொழு கொடியும்
வரு புனல் தந்த வெண் மணல் கான் யாற்று
உரு கெழு கரும்பின் ஒள் பூ போல
கூழ் உடை கொழு மஞ்சிகை
தாழ் உடை தண் பணியத்து
வால் அரிசி பலி சிதறி
பாகு உகுத்த பசு மெழுக்கின்
காழ் ஊன்றிய கவி கிடுகின்
மேல் ஊன்றிய துகில் கொடியும்
பல் கேள்வி துறை போகிய
தொல் ஆணை நல் ஆசிரியர்
உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடியும்
வெளில் இளக்கும் களிறு போல
தீம்புகார் திரை முன் துறை
தூங்கு நாவாய் துவன்று இருக்கை
மிசை கூம்பின் அசைக் கொடியும்

பொருளுரை:
குற்றமற்ற சிறப்பினையுடைய தெய்வங்கள் உள்ள, மலர்கள் பொருந்த அமையப்பெற்ற இடங்களின் வாயிலில், பலரும் தொழும் கொடிகளும், சந்தனத்தால் மெழுகிய தரையில், கூழ் நிரம்ப வைக்கப்பட்டுள்ள கூடையும், கீழே விரிக்கப்பட்ட துணியின் மீது உள்ள பல்வேறு பண்டங்களும், அரிசியும் மலர்களும் பலியாகச் சிதற, மெழுகிய தரையில் வேல் ஊன்றிக் கேடயங்கள் கவிழ்த்து வைக்கப்பட்டு , காட்டாற்று வெள்ளத்தில் வந்து சேர்ந்த வெண்மையான மணலில் முளைத்த கரும்பின் மலர்களைப் போன்ற துணியால் செய்த கூரையின் மீது நட்டுள்ள வீரமரணம் அடைந்த வீரர்களுக்கான துகில் கொடிகளும், பல நூல்களைக் கற்ற சான்றோர்களின் அறமன்றத்தில் உள்ள கொடிகளும், தறியில் வரிசையாக கட்டப்பட்ட களிறுகள் தறியை அசைப்பது போன்று துறைமுகத்தில் நெருக்கமாக நிற்கும் படகுகளில் அசையும் பல்வேறு கொடிகளும் புகார் நகரில் இருந்தன.
திரு. மறைமலை வேலனார்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.