சூன் 2023
பட்டினப்பாலை
(பாடல் 176-194 / 301)
மீன் தடிந்து விடக்கு அறுத்து
ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்
மணல் குவைஇ மலர் சிதறி
பலர் புகு மனை பலி புதவின்
நறவு நொடை கொடியோடு
பிற பிறவும் நனி விரைஇ
பல் வேறு உருவின் பதாகை நீழல்
செல் கதிர் நுழையா செழு நகர் வரைப்பின்
செல்லா நல் இசை அமரர் காப்பின்
நீரின் வந்த நிமிர் பரி புரவியும்
காலின் வந்த கரு கறி மூடையும்
வட மலை பிறந்த மணியும் பொன்னும்
குடமலை பிறந்த ஆரமும் அகிலும்
தென் கடல் முத்தும் குண கடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரி பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளம் தலை மயங்கிய நன தலை மறுகின்
நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும்

பொருளுரை:
சோழன் திருமாவளவனின் புகார் நகரின் முற்றத்தில், மீன்கள் அறுக்கப்பட்டு அதன் இறைச்சி நீக்கப்படுகிறது. அந்த முற்றத்தில் அவ்வாறு பெறப்பட்ட இறைச்சியைப் பொரிக்கும் ஒலி நிறைந்திருந்தது. மணல் குவிக்கப்பட்டு மலர்கள் தூவிய பலி இடும் இடத்தில், பலரும் வந்து செல்லும் கள் விற்கும் விற்பனைக்கூடம் என்று விளங்கும்படியாக கொடி நடப்பட்டுள்ளது. அத்துடன் ஞாயிறின் ஒளி நுழைய இயலாத வகையில் பல்வேறு பெருங்கொடிகளும் அங்கு நிறைந்துள்ளன.
புகார் நகரின் துறைமுகத்தில் குன்றாத புகழினையுடைய காவலர்கள் காவல் புரிகின்றனர். அங்கு நீரின் வழி வந்த மரக்கலங்களில் கொண்டுவரப்பட்ட நிமிர்ந்த குதிரைகளும் , நிலத்தின் வழியே வண்டிகளில் வந்து இறக்கி வைக்கப்பட்ட கரிய நிறம் கொண்ட மிளகுகள் நிறைந்த பொதிகளும், “வடமலை” எனும் வடக்கு திசையில் உள்ள இமய மலையில் தோன்றிய மணிகளும் பொன்னும் நிறைந்த பண்டங்களும் , “குடமலை” எனும் மேற்கே உள்ள பொதிகை மலையில் தோன்றிய சந்தனம், அகில் முதலான நறுமணப் பண்டங்களும் , தென்கடலில் தோன்றிய முத்துக்களும் , “குண கடல்” எனும் கிழக்கு திசையில் உள்ள கடலில் தோன்றிய பவளங்களும் , கங்கை மற்றும் காவிரி ஆறுகளின் நீர் வளத்தில் உற்பத்தியான பொருள்களும், ஈழத்தேயத்தினிலிருந்து கொண்டுவரப்பட்ட உணவுப் பண்டங்களும், காழகத்தில் (கடாரம்) உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களும், பிற இடங்களிலிருந்து வந்து இறங்கிய அரிய மற்றும் பெரிய பொருட்களும், நிலம் நெளியும்படியாக பெருமளவில் இருபுறமும் தெருக்களில் குவிந்துள்ளன.
திரு. மறைமலை வேலனார்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.