அக்டோபர் 2022
பட்டினப்பாலை (பாடல் 28-50/301)
பாடல்:
குறு பல் ஊர் நெடு சோணாட்டு
வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல் வாய் பஃறி
பணை நிலை புரவியின் அணை முதல் பிணிக்கும்
கழி சூழ் படப்பை கலி யாணர்
பொழில் புறவின் பூ தண்டலை
மழை நீங்கிய மாக விசும்பின்
மதி சேர்ந்த மக வெள் மீன்
உரு கெழு திறல் உயர் கோட்டத்து
முருகு அமர் பூ முரண் கிடக்கை
வரி அணி சுடர் வான் பொய்கை
இரு காமத்து இணை ஏரி
புலி பொறி போர் கதவின்
திரு துஞ்சும் திண் காப்பின்
புகழ் நிலைஇய மொழி வளர
அறம் நிலைஇய அகன் அட்டி
சோறு ஆக்கிய கொழும் கஞ்சி
ஆறு போல பரந்து ஒழுகி
ஏறு பொர சேறு ஆகி
தேர் ஓட துகள் கெழுமி
நீறு ஆடிய களிறு போல
வேறு பட்ட வினை ஓவத்து
வெள் கோயின் மாசு ஊட்டும்”

பொருளுரை:
மக்கள் செல்வ வளத்துடனும் எண்ணத்தில் எவ்வொரு துயருமின்றி சிறந்து வாழும் பல்வேறு ஊர்களும் ஒன்றுக்கொன்று அண்மையில் அமையப்பெற்ற நீண்ட சோணாட்டில் வாணிபம் நிமித்தம் பல்வேறு வலிய படகுகள் இயங்கியது.இப்படகுகள் எங்கும் சென்றது. அவ்வாறு சென்ற இடமெல்லாம் வெண்ணிற உப்பின் விலையைக் கூறி பண்டமாற்றாக நெல் தானியங்களை பெற்று ஏற்றி வந்த அப்படகுகள் பந்தியில் நிற்கின்ற புரவிகள் (குதிரைகள்) போன்று உப்பங்கழிகளில் வரிசையாக உள்ள தரிகள் தோறும் கட்டப்பட்டிருந்தன. இத்தகைய தன்மை கொண்ட பல உப்பங்கழிகள் சூழ்ந்த நெய்தல் நிலத்தில் அமைந்த படப்பைகள் (தோட்டங்கள்) எங்கும் நிறைந்துள்ளன.
உள்ளத்திற்கு இன்பமும் புதிய வருமானத்தை (புதுவருவாய்) வழங்குகின்ற பல்வேறு மரங்கள் நிறைந்த தோப்புகளும், அந்த தோப்புகளுக்கு புறத்தே உள்ள பகுதிகளில் பல்வேறு மலர்களை கொண்டுள்ள பூந்தோட்டங்களும், மேகங்கள் இல்லாத தெளிந்த வானில் ஒளிரும் நிலவுடன் சேர்ந்து நிற்கும் மகம் என்னும் வெண்ணிற விண்மீனைப் போன்று உயர்ந்த கரையை உடைய கோட்டங்கள் (கோயில்கள்) மனம் கமழும் பல்வேறு வண்ண மலர்களுடன் சேர்ந்து வண்ண மயமாக தோற்றமனிக்கும் குளங்களும் (பொய்கைகளும்) இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும் இன்பம் வழங்கும் காதல் இன்பத்தை அளிக்கவல்ல இணைந்து அமைந்திருக்கும் ஏரிகளும் சோணாட்டில் உள்ள காவிரிப்பூம்பட்டினம் எங்கும் நிறைந்துள்ளன.

சோழனின் புலி இலட்சினை பொறித்த, செல்வங்கள் தங்கியுள்ள வலிமையான நன்கு நெருக்கமாக அமையப்பெற்ற போர் கதவுகள் கொண்ட, வருவோர்க்கு மறுக்காது எப்போதும் சோறிடும் அகன்ற சமையற்கூடங்கள் (அட்டிற்சாலைகள்) காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ளன. இப்பிறப்பில் புகழ் சேர்க்கும் நற்சொற்களை வளர்க்கவும், நல்ல மறுபிறப்பை அளிக்கக்கூடிய அறவொழுக்கம் நிலைப்பெற பயன்படும் தன்மைக்கொண்டவை இவ்வட்டிற்சாலைகள். அங்கு சமைத்தலின்போது வடியும் கொழுமையான சோற்றுக்கஞ்சி வீதிகளில் ஒழுகி ஓடும். எருதுகள் அதை அருந்தும் பொருட்டு தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதால் அவ்விடம் சேறாகும். அச்சேற்றில் வீரர்களின் தேர்கள் ஓடி சென்று எழும் துகள்கள் அரண்மனையின் மதில்கள் மீது பரவும். அங்கனம் திருநீற்றில் புரண்ட யானையைப்போல அரண்மனையின் பல ஓவியங்கள் தீட்டப்பெற்ற மதில்கள் மீது அழுக்கேறும்.
இந்நூற்பாக்கள் (28 – 50) வாயிலாக பண்டைய தமிழகத்தில் பண்டமாற்றுமுறை வணிகம் சிறப்புற்று விளங்கியதும், எஞ்ஞான்றும் எளியோர் பசி தீர்க்கும் தமிழர்தம் உயிர்மநேயம் தழைத்தோங்கியதும், பசுமையான நாடாக சோணாடு செழிப்புற்றுத் திகழ்ந்ததும் புலப்படுகிறது. மேலும் நீர்வழி வணிகமும் நீர்வளமும் குன்றாது வளம் சேர்த்ததும், சோழரின் இலட்சினை புலி என்பதும் புலனாகிறது.
திரு. மறைமலை வேலனார்,
சுபைல் பண்டலம்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.