செப்டம்பர் 2022
பாரதியும்! தமிழும்!
நம்மில் பலரும் மொழிப்பற்றும், இனப்பற்றும் உடையவர்கள் தான். ஆயினும், அம்மொழிக்கு நாம் ஆற்றும் தொண்டு என்ன என்பதை சிந்தித்துப் பார்க்கையில், பெரிதாக ஏதும் செய்துவிடவில்லை என்ற எண்ணம் தான் மேலோங்கும். இன்று தேசப்பற்று என்று கூறும் பலரும், அதன்மூலம் தனக்குக் கிடைக்கும் ஆதாயம் என்ன என்ற எண்ணம் கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள். தேசப்பற்று எனும் போர்வையில் அவர்கள் செய்யும் அநியாயங்கள் தான் எத்தனை! எத்தனை!!!
“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோவைபோல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை; ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!” என்று தமிழ் முழக்கமிட்டவர் நம் பாரதி.
தன் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும், மொழிக்காகவும், இனத்திற்காகவும் குரல் கொடுத்தவர்கள் தமிழ் வரலாற்றில் பலர் உண்டு. ஆயினும் கம்பீரமாய் குரல் கொடுத்தவர் பாரதி எனலாம். எட்டயபுரம் ஈன்ற முற்போக்குவாதி பாரதி. அவர் கொண்ட மொழிப்பற்றும், தேசப்பற்றும் தான் எத்தனை ஆழமானது. தான் கொண்ட மொழிப்பற்றை பிறருக்கும் பற்றச்செய்வது எத்துனை வீரியமானது. 39 ஆண்டுகளே வாழ்ந்த ஒருவர் நூற்றாண்டு கடந்தும் பேசப்படுகிறார் என்றால் அவர் விட்டுச் சென்றது வலிமையானது, தீர்க்கமானது என்றே பொருள்.
தன் ஐந்தாவது அகவையில் தாயை இழந்த பாரதிக்கு தந்தையே எல்லாமுமாய் இருந்தார். பள்ளி படிப்பில் நாட்டம் குன்றியவராகவே காணப்பட்ட பாரதி, தன் தந்தை பணி செய்யும் எட்டயபுர அரசவையில் உள்ள சான்றோர்களின் விவாதத்தை உற்று நோக்கிக் கொண்டே இருந்தார். இக்காலகட்டத்திலேயே “பாரதி” என்னும் பட்டம் எட்டயபுரம் மன்னரால் சுப்பையாவிற்கு வழங்கப்பட்டது. தன் தந்தையின் விருப்பத்தின் பொருட்டே உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து ஐந்தாம் படிவம் வரை படித்து தேர்ந்தார். பள்ளியில் படிக்கும் காலகட்டத்தில் பாரதி தமிழ் பண்டிதர்களை சந்தித்து உரையாடினார்; தமிழ் இலக்கியங்களை பற்றிய அறிவும் அவர்கள் மூலம் கிடைத்தது.
இன்றைய தமிழ்க் குழந்தைகள் ஏழு வயதில் தான் தன் தாய் மொழியின் அடிப்படை இலக்கணங்களை கற்க ஆரம்பிக்கிறார்கள் என்பது நிதர்சனம். ஆனால் அன்றைய காலத்தில் தன் ஏழு வயதில் முதல் கவிதையை தமிழுக்கு தந்தவர் பாரதி. இதில் பாரதியின் தந்தைக்கும், தாய்க்கும், ஆசிரியருக்கும் பங்கு இருக்காமல் போக வாய்ப்பில்லை என்று உணர முடிகிறது.
தாய் மொழியின் ஆழ அகலத்தை உணர முறையான உயர்கல்வி அவசியம் இல்லை. மொழியின் மீது காதலும், மொழியின் பெருமையையும், பண்பையும் உணர்தலே போதுமானது. ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே கற்ற ஒருவர், தன் மொழி மீது கொண்ட உண்மையான பற்றினால், அம்மொழிக்கு தன் இறுதி மூச்சு வரை தொண்டாற்ற இயன்றது. இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர் எனவும் அறியப்பட்டார்.
தன் பதினைந்தாவது வயதில் பாரதிக்கு செல்லம்மாள் என்னும் ஏழு வயது பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான ஓராண்டிற்குள்ளாகவே தன் தந்தையை இழந்து நின்றார் பாரதி, தன் தந்தையின் மரணத்திற்கு பின் காசிக்கு சென்ற பாரதி, சுதந்திர இந்தியாவிற்காக நடந்த போராட்டங்களை கண்டுணர முடிந்தது. ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த கூட்டங்களில் பாரதி அவ்வப்போது கலந்து கொண்டு வந்தார். காசியில் இருந்த காலகட்டங்களில் நூலகத்திற்கு சென்று ஆங்கிலப் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அதே காலகட்டத்தில் சமஸ்கிருதத்தையும், இந்தியையும் கற்றார். தாய்மொழியின் மேன்மையை உணர அதில் புலமை பெற்றிருப்பதோடு, பிற மொழியின் தன்மையையும் உணர வேண்டிய அவசியம் உள்ளது. பாரதி இதை அறிந்ததால் தான் என்னவோ வேற்று மொழிகளைக்கற்று, பின் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தீர்க்கமாய்ச் சொல்ல இயன்றது.
காசியிலிருந்து எட்டயபுரம் திரும்பிய பாரதிக்கு அரசவையில் பணி நிரந்தரமானது. ஆயினும் அரசருக்கு கைப்பாவையாக மட்டும் இருப்பது தன் வாழ்வின் நோக்கமில்லை என்றுணர்ந்த பாரதி அப்பணியைத் துறந்தார்.
புலவர் கந்தசாமி அவர்களால் நடத்தப்பட்ட ‘விவேகபானு’ எனும் பத்திரிக்கையில், பாரதி இயற்றிய, ‘தனிமை இரக்கம்’ என்ற கவிதை அச்சு வடிவில் முதன் முதலாக வெளிவந்த கவிதையாகும்.
பின் நாட்களில் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. பாரதியின் ‘தேசபக்தி பாடல்கள்’ விடுதலை வேட்கையை தூண்டும் வகையில் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் வெளிவந்தன. பின்னாளில், ‘சக்கரவர்த்தினி’ என்ற புதிய தேசிய இதழை பாரதியார் தொடங்கினார்; அதன் மூலம் தனது கருத்துக்களை சுதந்திரமாக எழுதி சுதந்திர இந்தியாவிற்கான தனது பங்களிப்பைச் செய்தார். வங்காளத்தில் பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய ‘வந்தே மாதரம்’ என்ற கவிதையை தமிழில் மொழிபெயர்த்து சக்கரவர்த்தினி இதழில் வெளியிட்டார். ‘இந்தியா’ என்னும் தமிழ் வார இதழில் பொறுப்பாசிரியராக பாரதியார் பணியமர்த்தப்பட்டார். அவ்விதழில், கேலிச்சித்திரங்களை வரைந்து எளிய மக்களுக்கும் புரியும்படி கருத்துக்களை கொண்டுபோய் சேர்த்தார்.
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது. சத்தியத்தின் நித்தியத்தை நம்பும்யாரும் சேருவீர்!” என்ற பாரதியின் கூற்றுக்கிணங்க, ஆயுதங்களில் எல்லாம் பேராயுதமாக இருப்பது பேனா. பத்திரிக்கை ஆசிரியராக பணியாற்றிய பாரதி, விடுதலை வேட்கையை கவிதையாக வடித்து, காகிதத்தில் பொரித்து, அச்சில் ஏற்றி, மக்கள் மத்தியில் வலம்வரச் செய்தார். இதனாலேயே எந்நேரமும் கைதாக கூடும் என்ற நிலையில் தன் நாட்களை நகர்த்தினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு, ‘குயில்பாட்டு, ‘பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியாரால் எழுதப் பெற்றன.
தமிழால் வாழ்ந்தவர் பலர் தமிழால் வீழ்ந்தவர் எவருமில்லை; மேலோட்டமாக பார்க்கையில், ஒரு தமிழ்க் காதலனுக்கு வறுமையே மிஞ்சியது என்றே அறிவோம். ஆனால் பாரதியாக அதைப் பார்க்கையில், தன் மொழிக்கான தன் கடமை பெரிதானதால் தான் அடைந்த இடர்கள் பெரும் பொருட்டாக இல்லை எனலாம். சுப்பையாவாக பிறந்து, கவிஞனாக, எழுத்தாளனாக, சமூக சீர்திருத்தவாதியாக வாழ்ந்து முண்டாசுக் கவிஞனாக, பாரதியாக, மகாகவியாக மரித்தவர் நம் பாரதி. அன்றைய காலகட்டத்தில் காலணியாதிக்கப்பீடியில் சிக்கித் தவித்த, தாய் நிலத்தை மீட்கப் போராடி, தன் எழுத்தின் மூலமும், வ.உசி போன்றோரிடம் தான் கொண்ட நட்பின் மூலமும், சுதந்திர தாகத்தை பற்ற வைத்த பெருமகனார் பாரதி. சூரத் மாநாட்டில் வ.உ. சிதம்பரனாருடன் கலந்துக் கொண்ட பாரதி, தாய் மண்ணை விட்டு வேற்றவரை வெளியேற்ற வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.
பாரதியின் வாழ்க்கை சொல்லும் பாடம் இன்னும் ஏராளம், பாரதியை உயிர்மை நேயமிக்கவராக பார்க்கத் தோன்றும், தான் இருந்த வறுமையிலும், காக்கைக்கும், குருவிக்கும் உணவிட தவறியதே இல்லை, தமிழ் அறத்தை போதிக்கும் தமிழர்கள் உயிர்மை நேயமிக்கவராய் இருப்பர் என்பதற்கு வரலாற்றில் உள்ள சான்றுகளே போதுமானது. அதில் பாரதிக்கு விதிவிலக்கு ஏதும் இல்லை.
நன்றி!
திருமதி பவ்யா இம்மானுவேல்,
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.