தமிழர்க்குத் தமிழே தாய்மொழி என்றோம்
தமிழகம் தமிழர்க்குத் தாயகம் என்றோம்
தமிழ்நாட்டில் அயலார்க் கினி என்ன வேலை?
தாவும் புலிக்கொரு நாய் எந்த மூலை?
தூங்கியதுண்டு தமிழர்கள் முன்பு – பகை
தூளாகும் அன்றோ எழுந்த பின்பு?
தீங்கு புரிகின்ற வடக்கரின் என்பு
சிதைந்திடச் செய்திடும் தமிழரின் வன்பு
அவனவன் நாட்டில் அவனவன் வாழ்க – மற்
றயல் நாட்டைச் சுரண்டுதல் அடியோடு வீழ்க!
துவளாத வாழ்க்கை உலகெலாம் சூழ்க!
தூக்கிய கைகள் அறம் நோக்கித் தாழ்க!
– பாவேந்தர் பாரதிதாசன்.
புதுவையில் உலவிய தமிழ் நெருப்பாம் பாவேந்தர்தம் எண்ணத்தினின்று, சிதறிய கிளவிக் கங்குகள் இவை. இன்றும் ஊழித்தீ வேகத்துடன் இயங்க நமக்கு உரமூட்டுவதும் இவை தாம். புரட்சியின் கூறுகளைத் தன் கவிதைகளாக, எழுதுகோல் வழி உருக்கி, நம் இதயங்களுக்குள் ஊற்றும் சொற்கொல்லன், சுப்புரத்தினம் எனும் பாரதிதாசன்.
பல பத்தாண்டுகளுக்கு முன் அவர் சொன்னவை, சமகாலத்திலும் நடப்பவற்றுக்குப் பொருத்தமாக இருப்பதுதான், என்னே வியப்புக்குரியதோர் விந்தை? அவரது நெஞ்சிலும், நாவிலும் இனித்த தமிழுக்கும், அதன் ஒவ்வொரு சொற்களிலும் தெறித்த பொருளுக்கும் உள்ள உள்ளாற்றலாலேயே இது சாத்தியப்பட்டிருக்கும். ஆமாம்! தமிழ் பேச்சு மொழி மட்டுமா? வீச்சு மொழியும் தானே?!
தகைசால் தமிழரெல்லாம் கொண்டாட வேண்டிய தமிழ்த்தேசியத்தையும், தமிழரது உரிமை வேட்டலையும் தொடர்ச்சியாகத் தன் பாக்களில் பயின்று வரும் வண்ணம் பாடிய அவரை, வெறும் ஒரு கவிஞர் என்ற அளவில் மட்டும் குறுக்கியது யார் செய்த சதி என்பதை நாம் அறியாமலில்லை. தொய்வொன்று வந்து நம்மைத் துவளச் செய்யும் போதெல்லாம், பெய்யெனப் பெய்யும் பேய் மழை போல, கிளர்ச்சிமிகு கவிதைகளை உடனடியாகத் தந்து, நம் உணர்ச்சிகளைக் கொதிக்க வைக்கும் ஆசுகவி, நம் பாவேந்தர். எனவே வரும் இனவெழுச்சி நாளன்று, மிகவும் பொருத்தமான அவரது எழுத்துக்களை ஆழமாக உள்வாங்கிப் படிப்போம்! இனியேனும், அவரது கவின்மிகு கருத்தாக்கங்களை, தரமிகு படைப்புகளை, தனித்துவமிகு தத்துவங்களை, நயமிகு நூல்களைத் தொடர்ந்து வாசிப்போம்!!! தமிழ்த்தேசியத்தை மூச்செனச் சுவாசிப்போம்!!! கனவென அவர் கண்டவற்றைச் சாதிப்போம்! அதுவே சொல்லேர் உழவர், சோர்வுற்ற தமிழினத்தைத் தன் சொற்கங்குகளால் சுட்டு எழுப்பியவர், பாவேந்தர் பாரதிதாசனாருக்கு நாம் செய்ய தகுந்த நனிபுகழ் வணக்கம்!!!
திருமதி. விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.