இன்றைக்கே எழாமல், நீ
என்றைக்குத் தான் எழுவாய்? எண்ணிப் பார்ப்பாய்! என்றைக்குக் காலமினி ஏற்றபடி
கனிந்துவரும், இந்நாள் போல?
குன்றைத்தூள் செய்கின்ற வல்லுணர்வை உன்நெஞ்சில் குவிக்கும் வண்ணம்
என்றைக்குப் பாவேந்தன் இனியொருகால்
எழுந்துவந்தே எழுதித் தீர்ப்பான்?
இந்நொடியே எழாமல், நீ எந்நொடியில்
தான் எழுவாய்? எண்ணிப் பார்ப்பாய்!
எந்நொடியும் செந்தமிழை வீழ்த்துதற்கே
எதிர்பார்க்கும் ஆரியத்தை
அந்நொடியே இடுப்பொடிக்கும் மொழிவல்லார்
தேவநேயப் பாவாணர்போல்
இந்நிலத்து வேறொருவர் இனிவந்தா
ஆய்ந்துண்மை எடுத்துச் சொல்வார்?
இன்றைக்கே நீ யெழுதல் இல்லையெனில்
இனியடுத்து வரப்போகின்ற
என்றைக்கும் தமிழா, நீ எழப்போதல்
இல்லையென எண்ணிக் கொள்வாய்!
அன்றைக்குப் போனதடா நின்னுரிமை!
நின்பெருமை! அனைத்தும் வாழ்வும்
என்றைக்குச் சிறப்பாயோ? நந்தமிழ்த்தாய்க்
குலகநிலை ஏற்று வாயோ?
- “கனிச்சாறு” நூலில் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.