இளைத்துள்ள தமிழ்நெஞ்சே! எழுவாய் நீ!
எதன் பொருட்டா யெண்ணி யெண்ணிக்
களைத்துள்ளாய் வருந்தற்க; களிப்புறவே
ஒருவழியைக் காட்டு கின்றேன்;
முளைத்துள்ள தமிழ்ப்பயிரில் மூண்டெழுந்த
களையனைத்தும் முனைந்து நீக்கி
விளைத்துள்ள பசுந்தமிழை விரிவடையச்
செய்யவினை விரும்பு வாயே!
அயர்வுற்ற தமிழ்நெஞ்சே! ஆர்த்தெழு நீ!
அயர்வறுக்கும் ஆறு சொல்வேன்;
உயர்வுற்ற நறுந்தமிழர் உளச்சிறப்பில்
இழிகின்றார்; உழைப்பி லாது
மயர்வுற்ற சிறுசெயலில் மடிகின்றார்;
அன்னவர்க்கு மலைவு நீக்கிப்
பெயர்பெற்ற தமிழகத்தின் பெருமையெலாம்
உணர்வுபெறப் பேசு வாயே!
வருந்துகின்ற தமிழ்நெஞ்சே! வருந்தற்க;
வளப்பமுறு வழியு ரைப்பேன்;
இருந்தழிந்த சிறப்பெல்லாம் எடுத்தவர்க்கே
இயம்பிடுங்கால், இனியிந் நாட்டில்
பொருந்திவரா இழிசாதிப் புகைச்சலெல்லாம்,
சமயஞ்சேர் புரைக ளெல்லாம்
திருந்திவரா விடிலழிவு திகழுமென்று
மனங்கொளவே தெளிவிப் பாயே!
புகைசேர்ந்த தமிழ்நெஞ்சே! பொலிவுபெறு!
புகழ் சேர்ந்த தமிழ்நி லத்தில்
பகைசேர்ந்த தாற்சேர்ந்த பழியெல்லாம்
இழிவெல்லாம் பதைக்கக் கூறித்
தகைசேர்ந்த பண்பெல்லாம் உயர்வெல்லாம்
தமிழ் நிலத்துத் தழைக்க வாழ்த்தித்
தொகை சேர்ந்த தமிழ்க்குழுவைத் திரட்டியொரு,
துணையாக்கத் துடிப்பார் வாயே!
நைகின்ற தமிழ்நெஞ்சே! நலிவகற்று;
நலஞ்சேர்க்கும் நடையு ரைப்பேன்;
மெய்குன்ற, நலங்குன்ற, மேலோர்க்குக்
கீழோர்செய் மிடிமை முற்றும்
பொய்குன்றக் குன்றுமெனப் புகட்டி, அவர்
புன்செயலின் புரையை நீக்கி,
உய்கின்ற திறங்கூறி உணர்ந்தொழுங்கில்
உயர்வுறவே உரைசெய் வாயே!
வாடுகின்ற தமிழ்நெஞ்சே வனைந்தெழு நீ!
வாட்டமிலா வகையு ரைப்பேன்!
கூடுகின்ற மாந்தரெல்லாம் உன்னினத்தார்;
அன்னவரின் கூட்டுக் குள்ளே
ஒடுகின்ற குருதிதமிழ்; உணர்வுதமிழ்;
உயிரெல்லாந் தமிழ்; என் றாலும்
ஆடுகின்ற நாகரிக நிழலாட்டம்
அயலாமென் றறிவிப் பாயே!
நொடிகின்ற தமிழ்நெஞ்சே! உயர்ந்தெழு நீ!
நோவகற்றும் உளவு சொல்வேன்;
வடிகின்ற தமிழுணர்வில் உயர்வுளத்தைக்
குளிப்பாட்டி வனைவு செய்து,
படிகின்ற இலக்கியநீர் பருகிவரப்
பைந்தமிழ் நாட் டிருள்ம றைந்து
விடிகின்ற ஒளிக்கதிரை விழிகுளிரக்
காண்பமென விளம்பு வாயே!
துடிக்கின்ற தமிழ்நெஞ்சே! துள்ளுக நீ!
துன்பமில்லாத் தோது சொல்வேன்:
அடிக்கின்ற புயற்காற்றும் தமிழானால்
அதையேற்போம்! அயரா மின்னி
இடிக்கின்றவல்லிடியும் தமிழானால்
இனியதென ஏந்தும் நெஞ்சு!
குடிக்கின்ற கூழெல்லாம் தமிழாயின்
அமிழ்தென்று கூவு வாயே!
தத்தளிக்கும் தமிழ்நெஞ்சே! அயர்வகற்று;
தனித்தமிழ்க்குத் தாழ்விங் கில்லை;
முத்தளிக்கும் முழங்குகடல் முப்புறமும்!
முகில்முட்டுங் குன்றும் காவும்!
செத்தழியும் உளத்தினுக்குஞ் செழிப்பளிக்கும்
சிறப்பழியா இலக்கி யங்கள்!
பித்தளிக்கும் தமிழ்நறவு பிழைப்பளிக்கும்!
பெற்றியெலாம் பிளிற்று வாயே!
தேம்புகின்ற தமிழ்நெஞ்சே! தெளிவடைக!
சீர்பரந்த தமிழ்ம னத்தில்
கூம்புகின்ற மொழிப்பற்றில் ஒளிகாட்டிக்
குறைமதியால், அயலார் தம்மால்
சாம்புகின்ற இனப்பற்றைத் தமிழ்நீரால்
சலித்தெடுத்தே ஒளிரக் காட்டி,
ஒம்புகின்ற அறவாழ்க்கை உயர்வுபெற
உழைத்துழைத்தே உவப்பாய் நீயே!
• பாவலரேறு பெருஞ்சித்திரனார் (கனிச்சாறு)