மொழி, இனம், நாடு – உயர் முன்னேற்றம் தேடு! – பெரும்
பழியறியாத் தமிழர் புகழ் – பண்ணமைத்துப் பாடு! (மொழி)
அழிவு செய்யும் தீமைகளை ஆழப்புதைப் போமே! – நன்மை
குழவிதைப் போமே!
இழிவு கூறும் சாதிமத இன்னல் அழிப்போமே! – சூழும் இடர்கள் ஒழிப்போமே! (மொழி)
பொதுமை நலம் பூத்திட – ஓர் புரட்சி காணுவோமே! – பெரும் புதுமை பூணுவோமே!
புதுமை வளம் அறிவு பெருக போக்கை மாற்றுவோமே! – சம நோக்கை ஏற்றுவோமே! (மொழி)
நலிவு சேர்க்கும் மடமைகளை நடுவில் வைத்துக் கொளுத்துவோம் – நல் லறிவை நாளும் வழுத்துவோம்!
வலிவுதேக்கும் தாய்மைத்தமிழை வாழ வைத்துப் போற்றுவோம்! – நம் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம்! (மொழி)
• பாவலரேறு பெருஞ்சித்திரனார் (கனிச்சாறு)