spot_img

வருக விடுதலை வாழ்வு!

விடுதலை வாழ்வே வாவா! – எம்‌
வெற்றிப்‌ பயனே வாவா!
கெடுதலை மாய்த்தாய்‌ வாவா! – ஓரு
கீழ்மை தொலைத்தாய்‌ வாவா!
தடதடவென்றே சாதி – எனும்‌
தடையை இடித்தாய்‌ வாவா!
அடிமை தவிர்த்தாய்‌ வாவா! – நல்‌
அன்பில்‌ உயர்ந்தாய்‌ வாவா!
வாழ்வின்‌ பயனே வாவா! – தமிழ்‌
மக்கள்‌ விருப்பே வாவா!
தாழ்வு தவிர்த்தாய்‌ வாவா – எம்‌
தமிழின்‌ காப்பே வாவா!
ஏழ்மை துடைத்தாய்‌ வாவா! – நல்‌
இன்பக்‌ கடலே வாவா!
ஆழப்‌ புதைத்தாய்‌ மடமை – நல்‌
அறிவில்‌ உயர்ந்தாய்‌ வாவா!
ஒரு மொழியால்‌ ஓர்‌ இனமாம்‌ – அவ்‌
வோரினமே ஒரு நாடாம்‌!
ஒரு நாடின்னொரு நாட்டைப்‌ – போய்‌
ஓடுக்குதல்‌ ஒப்பாய்‌ வாவா!
ஒருவன்‌ வாழ ஒருவன்‌
உழைக்க வேண்டும்‌ என்னும்‌
இருளைப்‌ பிளப்பாய்‌ வாவா! – இங்‌
கெவர்க்கும்‌ ஒளியே வாவா!
ஊணும்‌ உடையும்‌ வீடும்‌ – நல்‌
உயிரின்‌ நலமொடு கல்வி
பேணும்‌ வகையில்‌ யாண்டும்‌ – காணில்‌
பெரியர்‌ சிறியவர்‌ இல்லை!
ஆணுரிமை பெண்ணுரிமை – நல்‌
அறத்தின்‌ காப்பே வாவா!
வாணாள்‌ இடையில்‌ தமிழர்‌ – பெற்ற
மாசு துடைத்தாய்‌ வாவா!
உரிமை வாழ்வே வாவா! – எம்‌
ஒற்றுமை விளைவே வாவா!
பெரிது முயன்றார்‌ தமிழா்‌ – அவர்‌
பெற்றதோர்‌ பேறே வாவா!
அரிது புரிந்தார்‌ தமிழர்‌ – அவர்‌
ஆர்ந்த புகழே வாவா!
வரைகடல்‌ உலகும்‌ தமிழும்‌ – வானும்‌
வாழ்நாள்‌ வாழ்வாய்‌ வாவா!

  • பாவேந்தர் பாரதிதாசன் ( வேங்கையே எழுக! )

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles