சூன் 2022
“என் மொழி, என்னினம், என் நாடு நலிகையில் எதனையும் பெரிதென எண்ணமாட்டேன் வேறு எவரையும் புகழ்ந்துரை சொல்லமாட்டேன் வரும் புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும் பொருட்டென மதித்துளம் கொள்ளமாட்டேன் இந்தப் பூட்கையில் ஓரடி தள்ளமாட்டேன்” எனும் வரிகளையே வாழ்வின் தாரக மந்திரமாக கொண்டு தமிழுக்கு தொண்டாற்றி வாழ்ந்தவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். மொழி இருந்தால்தான் இனம் செழுமைக்குரியதாய் இருக்கும். அந்த இனத்தின் செழுமைதான் நாட்டை உயிர்ப்பிக்கும்; விடுதலைக்குள்ளாக்கும் என்று கூறி,மொழி, இனம், நாடு எனும் இம்மூன்று சொற்களுக்கான இணைப்பை முன்னிறுத்தி அடையாளப்படுத்தியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
தமிழ்த் தேசத்தின் தலை மகன் என்று அறியப்படும் பாவவரேறு பெருஞ் சித்திரனார் மே 10, 1933 ஆம் ஆண்டு சேலத்தில் கல்வி கற்பதற்கான அடிப்படை வசதி வாய்ப்பற்ற சமுத்திரம் எனும் சிற்றூர் ஈன்ற பெரும் பாவலர். புரட்சிப் பாவலரால் ஈர்க்கப்பட்டு பள்ளிப் பருவத்திலேயே பாக்களை இயற்றி, தன் பதினான்காம் அகவையில் முதல் பாவியமான “கொய்யாக்கனி” என்னும் நூலை எழுதியவர். அந்நூலிற்கான அணிந்துரையை பெருஞ் சித்திரனார் கேட்காமலேயே பாவேந்தர் எழுதிக் கொடுத்தது இந்தூவிற்கு மேலும் சிறப்பைத் தந்தது. தொடக்க காலத்தில் வனத்துறையில் தான் செய்து வந்த பணியைத் துறந்து, பாவேந்தரோடு இணைந்து பயணிக்கும் நோக்கில் அஞ் சல்துறையில் புதுச்சேரியில் பணியில் அமர்ந்து செயல்பட்டு வந்தவர். 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் அடக்குமுறையால் சிறைபட்டு அஞ்சல் பணியையும் இழந்து நின்றபோதும் தமிழ்மீது அதீத பற்றுடையவராக நிகழ்ந்தவர். பாவாணரின் அறிவு பெட்டகங்களை வெளிக்கொண்டுவர, அதனை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க, மேலும் தமிழ்தான் ஆரியத்தின் மூல மொழி என்பதை பாமர மக்களுக்கு உணரச் செய்வதற்காக 1959 ஆம் ஆண்டு பெருஞ்சித்திரனாரால் தொடங்கப்பட்ட இதழ் “தென்மொழி” சிறைப்படுத்தப்பட்ட காலத்திற்குப் பின் தன் இதழின் பணியை முதன்மைப் பணியாக செய்தார், தமிழ் சிட்டு, தமிழ் நிலம் எனும் இதழ்களை நடத்தினார்.
தமிழ்நாட்டு விடுதலை பற்றி பலர் பேசியிருந்தபோதும் தன் வாழ்நாள் முழுவதும் இக்கருத்தில் நிலைத்து நின்றவர்கள் சிலர். அதில் முதன்மையானவர் பெருஞ்சித்திரனார். அதனால்தான் தமிழ்த் தேசத்தின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். சாதி பகுப்புகள் தமிழ் இலக்கியப் பாடல் எழுதுவதிலும் இருந்த காலகட்டத்தில், மேல் மட்டத்து மக்கள் மட்டுமே எழுத வெண்பாக்களையும், ஆசிரியப்பாவையும் வைத்துக் கொண்டிருந்த நிலையில், வஞ்சிப்பாவை யாரும் கையில் எடுத்து எழுதாத நிலையில், “மகபுகுவஞ்சி” என்ற பாவியத்தை படைத்தவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். பலதரப்பட்ட துறைசார்ந்த தனிப் பாடல்களை எழுதும் ஆற்றல் படைத்தவர். சிறந்த கட்டுரையாளர்; ‘ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்’, ‘வேண்டும் விடுதலை’ போன்ற தொகுப்பு நூல்களை வழங்கியவர்.தமிழ் நாட்டு விடுதலைக்காக பல மாநாடுகளை திருச்சியிலும், மதுரையிலும், சென்னையிலும் நடத்தி காட்டியதற்காக சிறைப்படுத்தப்பட்டவர்.
மீசா சட்டத்தின் கீழ் சிறை பிடிக்கப்பட்டவர்களில் தமிழ்நாடு விடுதலைக்காக கைதாக்கப்பட்ட ஒரே ஒருவர் பெருஞ் சித்திரனார் ஆவார். தடா சட்டத்தின் கீழ் ஒரு முறையும் கைதானவர். இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல், தமிழீழப் போராட்டம் வரை 18 முறைக்கு மேல் சிறைப்படுத்தபட்டவர். சிறையிலிருந்து வெளியில் வந்தவர், “கதவு திறந்து கதிர்வான் எழுந்தது” என்று முழக்கமிட்டு, சிறை வாழ்வு தன் தமிழுக்கான பணியை எவ்வகையிலும் தடுக்க இயலாது என்பதை வெளிப்படுத்தினர். தான் நடத்தி வந்த தென்மொழி இதழ் தன்னுடைய சிறை காலத்தில் தடை செய்யப்பட்டது. அவ்வண்ணமே தமிழ் நிலம் இதழ் நள்ளிரவில் அரசு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. ஆயினும் எவ்வகையான அடக்குமுறைக்கும் அஞ் சாதவர், தமிழக மக்கள் விடுதலை கூட்டணி என்ற இயக்கத்தை அமைத்து புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன் போன்றவர்களை இணைத்து தமிழுக்காக போராடியவர். “எப்படியேனும் தமிழகத்தை முப்படி உயர்த்தி வேண்டும்; என் மூச்சு அதற்கு உதவிடல் வேண்டும்” என்ற பாடலின் மூலம் தமிழுக்கும் தனக்குமான இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழீழத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தமிழகத்திற்கு முதன்முறையாக வந்தபோது அவரையும் அவரது நண்பர்களையும் காத்து அவர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருந்தவர் பெருஞ்சித்திரனார்.
இந்திய அரசால் விடுதலைப்புலிகள் மீது தடை விதிக்கப்பட்டபோது,
“இதோ ஒருவன் நான் இங்கிருக்கின்றேன்
எனைச்சிறை செய்யினும் செய்க!
ஈழத்தமிழரை ஆதரிக்கின்றேன்
என் தலை கொய்யினும் கொய்க”
எனும் பெரும் முழக்கமீட்டவர்.
பெருஞ்சித்திரனார் ஒரு சிறந்த மெய்யியல் உணர்வாளர். சிறுகதை எழுத்தாளர், ஓவியர், மொழிபெயர்ப்பாளர், சிறந்த மேடைப்பேச்சாளர், தொடர் சொற்பொழிவுகளை ஆற்றும் திறன்கொண்டவர், பாட்டரங்கத் தலைவர், அறிஞர்களை பேணும் பண்பு உடையவர், பாவாணர் இன்னலுக்கு உள்ளான காலகட்டத்தில், “அருட்கொடையாளர்களே பாவாணருக்கு பொருட்கொடை தாருங்கள்” என்ற வேண்டுகோளைத் தன் இதழில் விடுத்து, அதன்மூலம் கிடைத்த தொகையை கொடுத்து உதவியவர், சிறுவர் இலக்கியப் படைப்பாளர், அறிவியல் கண்ணோட்டத்தைக் கொண்ட படைப்புகளை படைக்கும் ஆற்றல் பெற்றவர் சாதி ஒழிப்புப் போராளி; சாதி ஒழிப்பு திட்டம் என்ற ஐந்தாண்டு திட்டத்தை முன்வைத்து 20 ஆண்டுகளில் சாதியை ஒழிக்கும் வழிமுறையை தந்தவர்; அதனை நூலாகவும் பதிவு செய்தவர், சாதி மறுப்பு திருமணங்களை தன் பிள்ளைகளுக்கு செய்து வைத்தவர்.
தமிழ் மேல் கொண்ட நீங்கா பற்றினை,
“தமிழே எனக்கிங்கு உயிர் மலர்ச்சி;
தமிழே எனக்கிங்கு உடலம்;
தமிழே எனக்கிங்கு உள்ளுணர்வு;
பைந்தமிழே எனக்கிங்கு உலகம் ;
தமிழே எனக்கு இறைவன்”
என்று தமிழையும் தமிழினத்தையும் தமிழ்நாட்டையும் தொழுதவர். கொண்ட கொள்கையில் நிலைத்து நிற்பதும், துணிவும், வீரமும், குன்றா நல்மனமும் கொண்டிருப்பதும், அறம் செய் விரும்புவதும் தமிழனை மாற்றானிடத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டும் பண்புகள். இவையனைத்தும் ஒருசேர கொண்டிருந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார் வழி நடக்க உறுதியேற்போம்!!!
திருமதி. பவ்யா இம்மானுவேல்,
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.