சூன் 2022
அனைத்திலும் முதலானது…அனைத்திற்கும் உயிரானது!
ஒற்றைப்புள்ளி கருவொன்றின்
அதீத அழுத்தத்தால் திடீரென
நிகழ்ந்த பெருவெடிப்பொன்றின்
எச்சமே இப்பிரபஞ்சம்
முடிவில்லா துவக்கமொன்று
வெற்றிடத்தில் வழிகண்டு
இருளென்று பெயர் கொண்டு
இயக்கத்தை துவங்கிற்று
ஈர்ப்பு விசையென்பது
இயற்கையின் வரம் தானே
மாசுக்களுக்கு மட்டும்
மாற்று கருத்துண்டோ?
ஈர்ப்பின் பிணைப்பில்
இறுகிய எரிகற்கள் தீப்பிழம்பாய்
திசைக்கண்டு உருண்டோடி
உருவம் பெற்றது
எரிதலில் புகையென்பது இயல்பு தானே
வளிமண்டல வளைவுகளை
புகைமண்டலம் பூர்த்தி செய்தது
எரிவாயு இருப்புதன்னை
ஒற்றை தீப்பொறி உறுதி செய்யுமே….
அதுபோன்றே இதுவுமாகும்…
கார்மேகம் கரைத்தெடுக்க
சில்லென்ற குளிர்காற்றின்
சில நிமிட சிலிர்ப்பு போதும்.
அக்கனமே நீர்த்துளிகள்கீழ்
நோக்கி படையெடுக்க
அக்கினியின் ஆட்டம் அடக்கி
நிலமென்ற அரியணைக்கு பலயுக போராட்டம்…
எரிகற்கள் புயலொன்று
எதிர்திசையில் அவதரிக்க மையத்தின்
சுழற்சியதை சில பாகை நகர்த்தியது.
ஒருசெல் உயிரொன்று உயிர்பெற்றது.
அது கொண்ட பரிணாமம்
இப்புளிப்பத்தில் திசை கண்டது.
நீரென்ற மூலப்பொருள்
உயிர்காக்கும் வரம்பெற்றே
மேல்பரப்பின் முக்கால்பாகம்
அதன்வசம் பிடிகொண்டது.
திசையெட்டும் உயிரினங்கள் வழியெங்கும் மரம், கொடிகள்
நிலமது நிமிர்ந்து நின்று மலை என்று பெயர் கொண்டது,
நீரென்ற திரவமது இசைமீட்டும் அருவியென உருவானது.
விலங்கினங்கள் விளையாட்டில் குரங்கினங்கள் தனித்திசை கண்டது. நெடுந்தூரப் பயணத்தில் நான்குகால் பாய்ச்சலது இரண்டென்று குறைவுற்றது. இப்புள்ளியில் துவங்கிய அழிவுதான் இதுவரை முடிவில்லை.
அசைவுகளை அர்த்தமாக்கிய உயிரினமொன்று நாவசைத்து நாகரீகம் வளர்த்தது. உயிர் துடிப்பில் ஒருதுளி சிதறி மறுதுடிப்பில் உயிரெனும் மொழியானது. அம்மொழியே நாம் பேசும் தமிழானது.
தித்திக்கும் தேன் துளியை நா சுவைக்கும் சுகந்தன்னை தீ கொடுக்கும் விந்தையென்ன? ஒரு சொல் தனித்து நின்று பொருள் கொள்ளும் விந்தை என்ன? இப்புவிப்பந்தில் எத்திசையும் உன் உச்சரிப்பின் பிம்பமாகும் வியப்பென்ன?
உயிர் துடிக்கும் ஒவ்வொரு கணமும்
இவ்வுலகிற்கு உரத்த குரலில் பறைசாற்றுவோம்
அனைத்திலும் முதலனாவள் நீ!
அனைத்திற்கும் உயிரானவள் நீ!!
இரவு பகல் நீர் நிலம் நெருப்பு காற்று இவையனைத்தும் ஒரு சேர சங்கமிக்க இயற்கையதின் விதிபடியே
திரு. சோழன் பாரதி,
செந்தமிழர் பாசறை- பகரைன்