spot_img

விழிப்பாய் இருத்தலே ஒற்றை வழி!

சூன் 2022

விழிப்பாய் இருத்தலே ஒற்றை வழி!

தமிழர் என்ற பெருமைமிகு இனம் இன்றளவும் கொள்வதற்கு இரண்டாம் நூற்றாண்டு பேரரசன் கரிகாலன், 10ஆம் நூற்றாண்டு சோழப்பேரரசு தாண்டி பெரிதாக ஒன்றும் கடந்த காலங்களில் நிகழவில்லை என்பது உண்மை. ஓர் இனக்குழு ஒரு காலத்தில் சிறப்புற்று வாழ்வதும், பல ஆண்டுகள் அல்லது ஓரிரு நூற்றாண்டுகளில் வீழ்வதும் உலகம் முழுவதும் உள்ள இயல்பான ஒரு முறைமையே.

ஜனநாயக முறைமை உலகம் முழுவதும் பரவி தழைத்திருக்கும் இந்நூற்றாண்டில், பெருமளவில் மண்ணின் மக்களே தனது நிலத்தை ஆளும் உரிமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். தன்னிலத்தில் அடிமையாக இருக்க எந்த ஒரு இனக்குழுவும் விரும்புவதே இல்லை. அவ்வாறு அடிமையாக இருக்கும் சூழல் ஏற்பட்டபொழுது மண்ணின் மக்கள் பாரிய போராட்டங்களை பல ஆண்டுகள் நடத்தி நிலத்தை மீட்ட வரலாறுகள் உலகம் முழுவதும் ஏராளம். ஆனால் இம்மீட்சி தமிழர்களுக்கு மட்டும் நிகழவில்லை. இன்றும் நாடற்ற தேசிய இனமாக தமிழர்கள் உள்ளனர்.

இந்தியா என்ற ஜனநாயக அமைப்பு முறையின் அரசியல் சாசன வரையறை தெரிந்தோ, தெரியாமலோ இன்றளவும் தமிழர் நிலத்தை பிறமொழியாளர்கள் ஆள வழிவகை செய்துவிட்டது. அதேபோல் தமிழீழத் தமிழர்களின் பூர்வீக நிலமான வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் சிங்கள இனவெறியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஜனநாயக முறைமையில் அல்லது ஜனநாயகம் நமக்கு வழங்கி இருக்கும் வழிகளில் நாம் மீண்டுமொரு சுதந்திரப் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. அந்த சுதந்திரப் போராட்டத்தின் இலக்கு என்பது நமது நிலத்தை நாமே (தமிழர்களே) ஆன்வது மட்டுமே. இந்த கனவை மட்டுமே இலக்காக கொண்டு தமிழர்கள், தமிழ் இளந்தலைமுறையினர் நகர வேண்டிய வரலாற்றுத் தேவை நமக்குள்ளது.

தற்பொழுது நல்ல விடயமாக நாம் நமது தாய் நிலத்தை இழந்து நிற்கிறோம் என்ற புரிதல் பெருமளவில் தமிழர்களிடம் பரவி, தாய் நிலமீட்பே நமது சுதந்திரம் என்று தெளிவான இலக்கில் தமிழர்கள் நிற்கிறார்கள். ஆனால் நமது எதிரிகளும், துரோகிகளும் தொடர்ந்து நம்மை அடிமைப்படுத்தி வைக்கவேண்டும், நமது நிலத்தில், நமது செல்வத்தில் அவர்கள் வசதியாக வாழவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள்.அதற்கு தமிழர் என்ற ஓர்மை ஏற்பட்டுவிடாமல் பத்திரமாக பார்த்துக்கொள்கிறார்கள். தமிழர் என்பது பெருமிதமல்ல, இன உணர்வு என்பது பிற்போக்கு என்று எதிர்மறை கருத்துக்களை வலிமைமிக்க ஊடகம் வாயிலாகவும், சுய லாபத்திற்கு விலை போனவர்களையும் வைத்து பரப்புகிறார்கள். தற்பொழுது நமது முதன்மை கடமை என்பது விழிப்பாய் இருப்பது மட்டுமே. இந்த நவீன உலகத்தில் எதிரிகள் பணபலம், ஊடக பலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சிறிது விழிப்பற்று இருந்தாலும் நம்மை பொது அடையாளத்திற்குள் தள்ளி, அதிலிருந்து காலத்திற்கும் மீள இயலாமல் செய்துவிடுவார்கள். நம்மை நித்தம் குழப்ப, சதிச்செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

அரும்பு மீசை முளைத்து, முதன் முதலாக அரசியல் பார்வைக்கொண்டு நாம் உலகை சந்தித்தபோது, முதன் முதலாக வாசித்தபோது நமது நாயகர்களாக இருந்தவர்கள், நவீன் இலக்கிய உலகில் பிதாமகனாகத் தெரிந்தவர்கள் இன்று தீவிர வலதுசாரி நிலைப்பாட்டில் பேசும்போது நாம் நிலைகுலைந்து போய்கிறோம். நாம் அறிவு ஜீவிகளாக எண்ணிய நபர்கள், தமிழர்கள் இணையத்தில் வரலாறு என்ற பெயரில் வெற்று பெருமைகளை ஏற்றி வைத்துள்ளனர் என்று கூறும்போது, இவரா இப்படி பேசுகிறார் என்று அதிர்ந்து நிற்கிறோம்.

ஒடுக்கப்பட்ட குடியில் பிறந்து, வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்குப் போராடி, அரசியலில் பங்குகொண்டு அதிகாரம் பெற்று, ஒடுக்கப்பட்ட மக்களின் முகமாக அறியப்பட்டவர்களில் சிலர், வலதுசாரி சக்திகளின் சதிவலையில் விழுந்து, இன்று, “நாமெல்லாம் இந்துக்கள்” என்று பேசும் சூழலை பார்க்க முடிகிறது. எளிய மக்கள் குழம்பி நிற்கிறார்கள். தனது தலைவன் கூட்டிச் செல்லும் வலதுசாரி உலகத்திற்கு மெல்ல நகர்ந்து, மண்ணின் பூர்வக்குடி என்று இதுவரை தான் கொண்டிருந்த தத்துவ நிலைப்பாட்டில் இருந்து மெல்ல விடுபட்டு, தற்காலிக பொது அடையாளத்தை நோக்கி நகர்வதை காணமுடிகிறது.

இன்னொரு பக்கம் சமூகநீதி மறுக்கப்பட்ட குடிகளுக்கு, சமூக நீதி பெற்றுத்தருவதே எனது இலட்சியம் என சிலர் ஊடகங்களில் தோன்றி திராவிடக் கட்சிகள் செய்த சாதி அரசியலில் வஞ்சிக்கப்பட்ட குடிகளிடம், நீங்கள் வஞ்சிக்கப்பட்டுவிட்டீர்கள் உங்கள் ஓட்டுகளை இதுவரை இலவசமாக திராவிடக் கட்சிகள் பெற்று உங்களுக்கு பிரதிநிதித்துவம் தராமல் ஏமாற்றிவிட்டனர் என்று கூறிக்கொண்டே இருக்கிறார்கள். உங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றால் சமூக நீதியை பின்பற்றும் “மோதியை” ஆதரியுங்கள் என்று பரப்புரை செய்கிறார்கள். உள்ளபடியே வஞ்சிக்கப்பட்ட தமிழ் குடி மக்கள், ஒன்றிய இந்துத்துவா அரசின் சதிச்செயல்கள் புரியாமல், தனக்கு பிரதிநிதித்துவம் கிடைத்தால் போதும் என்று அவர்களை நோக்கி நகர இசைவதை அறியமுடிகிறது.

மற்றொருபுறம் திராவிடக் கட்சிகளின் அட்டூழியங்களை சொல்ல வேண்டியதில்லை. ஒரு நாட்டை ஒரே குடும்பத்தை சேர்த்தவர்கள் தொடர்ந்து ஆளுவதையும், அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொள்ளை அடிப்பதையும், ஊடகம், சினிமா மற்றும் அரசு அதிகாரிகள் என சகல விடயங்களையும் தன் கைக்குள் வைத்திருப்பதையும் மக்கள் கேள்விப்பட்டால் பொதுவாக கோபமடைவார்கள், கொதித்தெழுவார்கள். ஆனால் தனக்கே அது நெடுங்காலமாக நிகழ்ந்து கொண்டிருந்தும், தமிழர்கள் அமைதியாக இருப்பதற்குக் காரணம் தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் செய்த சாதி அரசியல் தான். இங்கு இருக்கும் இருபெரும் திராவிடக் கட்சிகளும் தலா இருபெரும் தமிழ்குடிகளை தங்களுக்கான வாக்கு வங்கியாக வைத்துள்ளது. ஏதேனும் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் அந்த குறிப்பிட்ட இரு சாதிகளே நாட்டை ஆளுவது போல் ஒரு தோற்றம். மாற்று திராவிடக் கட்சி ஆட்சிக்கு வந்தால் மற்ற இரு பெரும்பான்மை சமூகம் நாட்டை ஆளுவது போன்ற தோற்றம். சாதி வயப்பட்டுள்ள பெரும்பான்மை தமிழர்கள், தாங்கள் பெரிய அளவில்”ஆரியர்களும் திராவிடர்களும் இரகசியமாக நெருங்கிய தொடர்புடையவர்கள். ஒரு நாள் இருவரும் கை குலுக்கி ஒன்றாய் சங்கமிப்பார்கள்” என்கிறார்  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

அரசியல் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளோம் என்று எண்ணி தன்னிறைவு அடைந்துவிடுகிறார்கள். நாடு நமது, ஆளும் உரிமை நமது என்று எண்ணமற்று, பிற மொழியாளர்களின் அரசியல் கட்டுமானத்தில் தளபதிகளாக நெடுங்காலம் இருந்து பழகி, பிற மொழியாளரையே தம்மினத்தலைவராக ஏற்று வழிபட்டு நெடுங்காலமாக வாழப் பழகிவிட்டது தமிழ்ச் சமூகம்.

மேற்குறிப்பீட்ட பல்வேறு விடயங்கள் ஜனநாயக முறைமையில் கண்ணுக்கு தெரியாமல் தமிழர்களை சூழ்ந்துள்ள சதிவலைகளின் மிகச்சிறு கூறுகள் மட்டுமே. இந்துத்துவா ஒன்றிய அரசின் தற்போதைய நோக்கம் என்பது ஒற்றைமைய இந்தியா. இதனால் நிகழ்ப்போவது ஒன்றுமில்லை. இந்திய ஒன்றியம் முழுவதும் பரவிவாழும் பூர்வக்குடி தேசிய இன மக்களும் மற்றும் அவர்களின் வளங்களும் தனியார் முதலாளிகளிடம் அடமானம் வைக்கப்படும். நம் போன்ற எளிய மக்கள் அடிப்படை வசதிகளுக்கும், கல்விக்கும் போராடி வாழும் வாழக்கையை, “இந்து, இந்தியா” என்ற வெற்றுப் பெயருக்காக ஏற்க வேண்டுமா? இந்துத்துவா ஒன்றிய அரசின் மாநில வடிவமே, திராவிடம், நாட்டை தனியார் முதலாளிகளிடம் அடகுவைக்க மத்திய அரசு நினைக்கிறது, ஒரு குடும்பத்திற்கு அடிமையாக்க திராவிட அரசு நினைக்கிறது.

உள்ளபடியே எளிய மக்களுக்குச் சிக்கலான காலம். சாதி, சமூக நீதி, மதம், வேலைவாய்ப்பு என பல்வேறு கூறுகளை உங்கள் முன் உலவவிட்டு ஏதேனும் ஒரு வழியில் உங்களை அடைத்து, உங்கள் ஓட்டுகளை அறுவடை செய்வதைத்தவிர வேறு எந்த நோக்கமும் இந்த திராவிட, ஆரிய கட்சிகளுக்கு இல்லை. தமிழர்களுக்கு என்று நிலம், அதில் சுதந்திரமான நமது ஆட்சி என்ற விடயத்தை நாம் கூர்மையாக்கிக் கொள்ளவேண்டும்.

நம்மை சிக்க வைக்கும் ஏதேனும் ஒரு வழியை (சதிவலையை) எடுத்துக் கொண்டு நொடிதோறும் ஆரிய, திராவிட கட்சிகள், நம்மை அணுகுகிறார்கள். நாம் பொறுமையாக, விழிப்பாக இருந்து தமிழர் ஓர்மையை, தமிழ்த்தேசிய இலக்கை குலைக்கும் எந்த சித்தாந்தமும் நம்மை நோக்கி வரும்போது அடித்து விரட்டவேண்டும். விழிப்பாய், போராட்ட குணத்தோடு இருப்பது மட்டுமே, நம்மை காக்கும் ஒற்றை வழி.

திரு. கோபாலகிருஷ்ணன் பால்ராஜ் 

செய்தி தொடர்பாளர்

செந்தமிழர் பாசறை, வளைகுடா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles