சூன் 2022
தமிழே இறை!! இறையே தமிழ்!!
“கரிகாலன் பதவியேற்ற புதிது. இப்போது நாம் படையெடுத்தால் வெற்றி பெறுவது எளிது”. இப்படியாக பதினொரு வேளிர் குலத்தவர் பாண்டியனிடம் சென்று கூறுகின்றனர். இருந்தும் அவன் தயங்குகிறான். இப்படியாக சேர மன்னன் சேரமான் பெருஞ்சேரலாதனிடமும் சென்று கூறுகின்றனர். சேரனும் படையெடுக்க ஒப்புக் கொண்டான். சேரன் ஒப்புக்கொண்ட செய்தி கேள்விப்பட்டதும் பாண்டியனும் ஒப்புக் கொண்டால். காரணம் சேரமான் பெருஞ்சேரலாதன் வீரம் அப்படியானது. இப்படியாக உருவாகிறது வெண்ணிப் பறந்தலைப் போர்.
சேர, பாண்டிய மற்றும் பதினொரு வேளிர்கள் ஒருபுறமும், அதற்கு எதிராக கரிகாற் பெருவளத்தான் தனியொரு படையாக தொடங்கியது பெரும்போர். இந்த போரில் பாண்டியர்கள் பின்வாங்கினர். பதினொரு வேளிர்களில் இருவர் மாண்டனர், மீதி ஒன்பது வேளிர்களும் பின்வாங்கினர். இறுதியில் சேரமான் பெருஞ்சேரலாதனும் கரிகாலனும் நேருக்கு நேர் போர் புரிந்தனர். அப்போது கரிகாலன் எய்த வேலானது பெருஞ்சேரலாதனின் மார்பை துளைத்து முதுகு வழியாக வெளியேறியது.
இறுதியாக கரிகாற் பெருவளத்தான் இந்த போரை வென்றதின் மூலம் தனது பெயரை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறித்து வைத்தான். இவையனைத்தும் அதிகாரப்போட்டியின் நிகழ்வுகள். ஆனால் இதன்பிறகு நடந்தவைகன்தான் தமிழரின், தமிழின் அறத்தினை பறைசாற்றுவது. வேல் துளைத்தது மார்பில் ஆனால் வெளியேறியதோ முதுகில், ஆனாலும் போர்க்களத்தில் தனது முதுகில் பட்ட காயத்தை எண்ணி நாணினான் சேரமான் பெருஞ்சேரலாதன். போர்க்களத்தில் வடக்கிருந்து உயிர் நீத்தான். சோழர்கள் போரில் வெற்றி பெற்று விட்டனர். கொண்டாட வேண்டுமல்லவா!!! ஆனால் கழாத்தலையார் எனும் சங்ககால புலவர் எழுதிய புறநானூற்றுப் பாடல் கூறுவது யாதெனில்
“மண் முழா மறப்ப, பண் யாழ் மறப்ப
இருங் கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்பச்,
சுரும்பு ஆர் தேறல் சுற்றம் மறப்ப,
புறப் புண் நாணி, மறத் தகை
மன்னன் வாள் வடக்கிருந்தனன்…”( புறம் 65)
சேரமான் பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து உயிர் துறந்ததிற்கு வருந்திய போர்க்களம் அமைதியாகிவிட்டது. மன்னர் கரிகாலச் சோழனின் வெற்றிமுரச முழங்கவில்லை. பாணர்கள் யாழிசை கூட்டிப் பாடவில்லை. போரில் வென்ற சோழ நாட்டு வீரர்கள் வெற்றிக் களியாட்டங்களில் ஈடுபடவில்லை. ஊரிலுள்ள மக்கள் சுற்றத்தாருடன் தேறல் (தெளிந்த கள்) அருந்தவில்லை. உழவர்கள் வயல்வெளியிலும் குரவை ஓசை எழுப்பவில்லை. ஊர் மக்கள் திருவிழாவைக் கூட மறந்துவிட்டனர். அதாவது தனது எதிரியாயினும் அவனது வீரத்தை, மாண்பை மதித்து அவன் செயலுக்காக தனது வெற்றிக் கொண்டாட்டங்களைத் துறந்து, அவனது இறப்பின் துக்கத்தினை தங்களது துக்கமாக கொண்டாடினரே. அதுதான் தமிழரின் அறம், தமிழின் அறம். அதேபோல் மாமூலனார் எனும் சோழநாட்டை சேர்ந்த சங்கப்புலவரும் இந்நிகழ்வினை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.
“கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருதுபுண்ணாணிய சேரலாதன்
அழிகள மருங்கின் வாள்வடக் கிருந்தென
இன்னா வின்னுரை கேட்ட சான்றோர்
அரும்பெற லுலகத் தவனொடு செவீஇயர்
பெரும்பிறி தாகி யாங்கு.”( அகம் 55).
அதாவது சேரனின் வீரமும் மானத்திற்காக உயிர் துறக்க எடுத்த முடிவும், அக்கால தமிழகம் முழுவதும் பரவியது. அப்படியான அச்சேரனைக் காண சான்றோர் பலரும் தமிழகம் முழுவதிலும் இருந்து போர்க்களம் நோக்கி விரைந்தனர் என்று பதிவு செய்திருக்கிறார். இதேபோல் வெண்ணிக் குயத்தி என்ற பெண்பாற் புலவர் சோழ நாட்டை சேர்ந்தவர். கரிகாலன் அரசவைக்கே வந்து அரசனைப் பார்த்தே பாடுகிறார்.
“நளியிரு முந்நீர் நாவாய் ஒட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலக எய்திப்
புறப் புண் நாணி வடக்கிருந்தோனே” (புறம் 66)
அதாவது கரிகாலா நீ கப்பற்படையில் பெரும் நாவாய்களை செலுத்தி கடலை ஆண்ட பெரியவன். கருத்த யானையின் மேல் அமர்ந்து போர்க்களம் புகுந்து, உன் எதிரிகளை சிதறடித்து வென்றாய். நீ மிகப்பெரிய வீரன். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் புறப்புண் பட்டதால் வடக்கிருந்து உயிர்விட்டானே சேரமான் பெருஞ் சேரலாதன். அவன்தான் உன்னைவிட நல்லவன் என்று பாடுகிறார். அதை கரிகாலனும் ஏற்றுக்கொள்கிறான். அவன் ஏற்றுக்கொண்டதால்தான் அந்த பாடல் சங்க இலக்கியத்துக்குள் வருகிறது.
இந்த மூன்று பாடல்களும் கரிகாற் சோழனின் வீரத்தினையும் சேரமான் பெருஞ்சேரலாதனின் அறத்தினையும் புகழ்ந்து பாடுகின்ற பாடல்கள். ஆனால் இவை பாண்டிய நாட்டில் அமைந்த தமிழ் சங்கத்தில் தொகுக்கப்பட்டன. இவைதான் உண்மையான தமிழன் அறம். இவற்றை இவர்களுக்கு ஊட்டியது தமிழ் என்னும் இறையே. அப்படியான தமிழை நீங்கள் திரமிளராக வந்தாலும், திராவிடராக வந்தாலும், திருடராக வந்தாலும் அழிக்க முடியாது. ஏனென்றால்…
தமிழே இறை!! இறையே தமிழ்!! …
திரு. பினோபின் ராஜ்
செந்தமிழர் பாசறை – ஓமன்