சூன் 2022
தமிழர்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டவர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் தேசிய இனங்களில், பெருமைமிக்க வரலாறுகள் கொண்ட முற்போக்கு எண்ணங்கள் நிறைந்த, அறிவில் சிறந்த இனம் தமிழ் இனம், என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சுதந்திர இந்தியாவில் பிற தேசிய இனங்களுக்கு, அரசியல் போராட்டங்களை முன்னெடுப்பது பற்றியும், அவ்வாறு எடுத்த முன்னெடுப்பின் காரணமாக, அரசியல் சாசன மாற்றங்கள் நிகழ்த்த இயலும் என்பது பற்றியும் எடுத்துத்துரைத்தவர்கள் தமிழர்கள். அதற்குச் சான்றாக இந்திய அரசியல் சாசனத்தில் இடஒதுக்கீடு சார்பாக திருத்தப்பட்ட முதல் திருத்தத்தில் இருந்து, சல்லிக்கட்டு சட்டத்திருத்தம் வரை கூறலாம்.
சுதந்திர இந்தியாவில், தமிழகத்தில் பல்வேறு சித்தாந்தங்கள் இருந்துள்ளன. இருந்துவருகின்றன. இந்திய தேசியம் பேசும் காங்கிரசு, பாஜக, பாட்டாளிகன் நலன் பேசும் இடதுசாரிக் கட்சிகள், மாநில உரிமை பேசும் திராவிடக் கட்சிகள், ஒடுக்கப்பட்ட குடிகளின் முன்னேற்றத்திற்குப் போராடும் கட்சிகள், தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனப் பல்வேறு சித்தாந்தக் கட்சிகள் இயங்குகின்றன. இக்கட்சிகள் நெடுங்காலமாக தனது சித்தாந்தத்தை பரப்புரை செய்து அரசியல் அங்கீகாரம் பெற முயல்கிறார்கள், பல்வேறு காலங்களில் அரசியல் அங்கீகாரம் பெற்றுள்ளனர். அரசியல் மயப்படுத்தப்பட்ட இளைஞர்கள், தங்களை பாதித்த, கவர்ந்த சித்தாந்தத்தை நோக்கி நகர்வார்கள். இவ்வாறே தமிழக அரசியல், கடந்த காலங்களில் இருந்துவந்துள்ளது.
ஆனால் கெடுவாய்ப்பாக தற்போது தமிழக மக்கள், தத்துவ நிலப்பாடற்று, இலக்கற்று வாக்களிக்க சில ஆண்டுகளாகப் பழகிவிட்டார்கள். இந்த போக்கு மிகவும் ஆபத்தானது. மக்கள் ஏதேனும் ஒரு தத்துவத்திற்கு வாக்களித்தவரை அதாவது திராவிடக் கட்சிகளுக்கோ, இந்துத்துவா கட்சிகளுக்கோ, அல்லது தமிழ்த் தேசிய கட்சிகளுக்கோ வாக்களித்தவரை, பொது சமூகத்திற்கு ஒரு தத்துவ பின்னணி இருக்கிறது, சமூகம் அரசியலோடு ஒன்றி இருக்கிறது என்று நிறைவடைந்து கொண்டிருந்தோம். ஆனால் தற்போது பொது சமூகம் அரசியலில் இருந்து விலகுவது போன்றே தோன்றுகிறது. அரசியலற்ற சமூகம், மேன்மையடையாது, சமத்துவமடையாது என்பது எனது திண்ணமான கருத்து. சில சம்பவங்களே என்னை, இந்த நிலைப்பாட்டிற்கு வரவைத்துள்ளது.
சமீபத்தில் சனாதனக்கூட்டம் தமிழன்னை ஓவியத்தை, தொடர்பற்ற விமர்சித்து வருகிறது. அவர்களுக்கான பதில். உங்களுக்கு வடநாட்டு இலட்சுமி மற்றும் சரஸ்வதியின் வடிவமாக, பவ்யமாகத்தான் தமிழன்னை இருக்க வேண்டும் என்றால் அதை நான் ஏற்க வேண்டிய தேவை இல்லை. ஆரவாரத்தோடு இருக்கும் தமிழன்னையையும், நான் ஏற்பேன், கொண்டாடுவேன். உங்களுக்கு ஆரிய நிறத்துடன், பனீரென்று இருக்கும் தமிழன்னையை மட்டும்தான் கொண்டாடுவீர்கள் என்றால் அதற்கு நான். ஆளல்ல. இம்மண்ணின் நிறத்துடன் கம்பீரமாக ரௌத்திரக் கூத்தாடும் தமிழன்னையை நான் கொண்டாடாமல் வேறு யார் கொண்டாடுவது.
கலைஞர் இறப்பிற்கு பிறகு பொறுப்பேற்ற ஐயா ஸ்டாலின் அவர்கள், கலைஞரைவிட பெரிய அரசியல் வெற்றியை பெறுகிறார். ஜெயலலிதா அம்மையாருக்குப் பிறகான அதிமுக, அவர் எதிர்க்கட்சியாக இருக்கும்போது வைத்திருந்த சட்டமன்ற உறுப்பினர்களைவிட அதிகம் வைத்துள்ளனர். தற்போதைய திமுக, தற்போதைய அதிமுக என்பது கடுகளவும் கொள்கை தொடர்பற்ற அரசியல் கட்சிகள் என்பதை நாடறியும். “80 விழுக்காடு இந்துக்கள் கட்சி” என்கிற திமுக வாசகமும், “எந்த பிரச்சனை வந்தாலும், மேல இருக்கிறவன் பாத்துக்குவான்” என்கிற அதிமுக வாசகமும் இவர்களின் கொள்கைகளுக்கு சான்று.
மேற்கொண்டு இவர்களின் கொள்கை நிலைப்பாட்டை பற்றி பேசுவதில் பொருளில்லை. கொள்கையற்றவர்கள், ஒரு பக்கச் செய்தியை முழுமையாக வாசிக்க முடியாதவர்கள், முழுமையாக சொற்களை உச்சரிக்கத் தெரியாதவர்கள், சொற்ப ஆங்கில அறிவுகூட இல்லாதவர்கள் எவ்வாறு முன்னத்தியவர்களைவிட பெரும் அரசியல் வெற்றியை பெறுகிறார்கள்? கேட்டால் “Poll management (தேர்தல் நிர்வாகம்)” என்ற ஒற்றை வார்த்தையை சொல்லி நகர்கிறார்கள். அப்படி என்றால் என்னவென்று, சிற்றறிவுக்கு எட்டிய அளவில் யோசித்தால், மக்களிடம் இருந்து எப்படி வாக்குகளை பெறுவது என்பதை தெரிந்தவர்கள் என்ற பொருள் கிடைக்கிறது. தத்துவமற்ற தகுதியற்ற நபர்களுக்கு, மக்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்ற கேள்விக்கு, “பணம்” என்ற காரணத்தை தவிர வேறு ஒன்றும் விடையாய் கிடைக்கவில்லை.
அறிவில் சிறந்தவர்கள், தொன்மங்கள் நிறைந்தவர்கள் “தமிழர்கள்” என்றெல்லாம் பேசிவிட்டு, தகுதியற்றவர்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வாக்களிக்கின்றனர் என்றால், தமிழ் சமூகம் அரசியலில் இருந்து வெளிவந்துவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. அரசியல் அற்ற சமூகமும், மக்களும் கைப்பாவையாக இருக்க மட்டுமே தகுதி படைத்தவர்கள். தன்னினம் சிறக்க, மேம்பட தமிழர்களே எண்ணவில்லை என்றால் நாம் யாரை குறை சொல்வது?! அரசியல்மயப்படுதலே, அரசியலோடு இருத்தலே சிறப்பு என்பதை எமது மக்கள் மீண்டும், மீண்டும் நினைவில் கொள்ளவேண்டும் என்பதே எனது அவா.
திரு. கோபாலகிருஷ்ணன் பால்ராஜ்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா