சூன் 2022
ஓருநாள் தந்தையும் மகளும், கடற்கரையில் கரை ஓரத்தில் கடலின் அழகைப் பார்த்து இரசித்துக் கொண்டே வந்தார்கள். வெயிலின் தாக்கம் சற்று அதிகமானதால், அந்தச் சிறுமியும் தண்ணீர் கேட்க, தந்தை பக்கத்தில் இருந்த மரத்தின் நிழலில் அமர வைத்துவிட்டு, அருகே இருந்த கடைக்குச் சென்று, தண்ணீர் வாங்கி வந்தார். அப்போது மகள், “அப்பா”, இந்த மரத்தில் கனிகள் ஆங்கொன்றும், இங்கொன்றும் உள்ளது” என்றாள்.
“அப்பா”, இங்குதான் கடவில் தண்ணீர் இவ்வளவு அதிகமாக இருக்கிறதே? இதைக் குடிக்காமல் ஏன் கடையில் குடுவையில் அடைத்தத் தண்ணீரை வாங்கி வந்தீர்கள்?” எனக் கேள்விகளை தனது தந்தையிடம் கேட்கத் தொடங்கினாள். அம்மா இது கடல் நீர்; உப்புத் தண்ணீர் சுவையைக் கொண்டது; குடிக்க இயலாது” என்றாரவர். அப்பா, “இந்த மரங்கள் இருக்கும் இடத்தில் காற்று குளிர்ச்சியாக உள்ளது. பேராசை மனிதர்கள் ஏன் தினமும் மரத்தினை அழிக்கத் துடிக்கிறார்கள்?” என்றாள் மகள். உடனே தந்தை, மரமே தனது கதையைச் சொல்வதுபோல் சொல்லத் தொடங்கினார்.
நான் உங்களின் மரம் பேசுகிறேன். பூமியில் அனைத்து உயிர்களுக்கும் நான்தானே வரம். அனைத்து உயிர்களின் உயிர் மூச்சு நாள். நல்லவர், கெட்டவர் என்ற பேதம் நான் பார்ப்பதில்லை. மண்ணில் கிடைக்கும் நீரை உட்கொண்டு, நாளும் நல்ல காற்றைத் தருகின்றேன். தென்றலாக உங்கள் முன் வீசுகிறேன்.மேகங்களை அறுவடை செய்து மழைப்பொழிவைக் கொடுக்கின்றேன். மழை வளத்தைக் கொடுத்து உயிர்ப் பெருக்கத்திற்கு கருவாக நான் இருக்கின்றேன். ஆறும், நதியும் வளைந்து ஓடுவதற்கும் நானே உதவுகிறேன்.
மனிதப் பெருக்கத்தால் நவீன வாகனங்களில் வரும் நச்சுப் புகையை உண்டு, நான் பாதித்த போதும் உங்களை காக்கின்றேன். தேவைக்கு அழித்தார்கள் பொறுத்துக் கொண்டேன். பணத்திற்காக அழித்தார்கள், புயலெனச் சீறிப் பாய்ந்தேன். என்னை மட்டும் குற்றம் சாட்டுகின்றார்கள். காலத்தின் சுழற்சியில், தேவைகள் அதிகமாக, அதிகமாக, நயவஞ்சகர் கூட்டம் எங்கள் கால்களை முறிக்கின்றார்கள். கொடுத்து சிவந்த எங்கள் கரங்களை வெட்டுகின்றார்கள். உங்களை காக்கும் எங்களுக்கு, இந்த நிலை ஏனோ?
காடுகளில் தானாக வளர்ந்தேன், அனைத்து உயிரும் வாழ, என்னை அர்ப்பணிக்கின்றேன். இதனை சிலர் மறந்து எங்களை அழிக்க நினைக்கும்போது, அந்த பேராசை மாத்தரை அழித்திடவே கதிரவன் கருணையும் காட்ட, காட்டுதீயாக விரைந்து கயவர்களை அழிக்கின்றேன். கயவர்கள் அழியும்போது, ஒன்றும் அறியாத உயிர்களும் அழிகின்றன. என் கண்ணீர், வருணனின் பார்வையினால் அணைந்து போக, நானும் அமைதியும் கொள்கின்றேன்.
எங்களில் ஒருவரை அழித்தால் குறைந்தது பத்து மரங்களைக் நடுங்கள். நாங்கள் உங்களின் தலைமுறையைக் காப்பாற்றித் தருகின்றோம். கருணை உள்ளம் கொண்டவர்களே, இனியேனும் இந்த தவறைச் செய்யாதீர்கள். நான் உங்களின் உயிர்க்காவலன் என்றது மரம்.
இவ்வாறு கதையை முடித்தார் “அப்பா”
அப்போது காற்றும் மீண்டும் வீசிடத் தொடங்கியது. மரமும் அசைந்தபடியே தனது கனியை உதிர்த்துவிட, அந்தக்கனியும் சிறுமியின் தந்தையின் கைகளில் தழுவிச் செல்ல, அந்தப் பழத்தை தந்தையும், மகளும் உண்டு மகிழுந்து, அதன் விதையினை அங்கேயே ஊன்றி, கையில் வைத்திருந்த குடுவையின் தண்ணீரை ஊற்றி இருவரும் மகிழ்ச்சியாய் வீடு சென்றார்கள்
ஆம்… அந்த மரம் இன்றும் இங்கே பல தந்தை, மகன்களுக்கு, நிழலாக, நண்பராக நிற்கின்றது.
திரு. பா.வேல் கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்