spot_img

தனித்தமிழ்த்தந்தை மறைமலை அடிகளார்

சூலை 2022

தனித்தமிழ் மலை, தமிழ்க் கடல், பல்லாவரம் முனிவர், தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை, தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை, தன்மான இயக்கத்தின் முன்னோடி, தமிழ் கால ஆராய்ச்சியின் முன்னோடி, போன்ற பல பெயர்களை தாங்கி வாழ்ந்தவர் மறைமலை அடிகளார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தமிழோடு பிறமொழிச் சொற்கள் பிரிக்க முடியா வண்ணம் கலந்திருந்ததைக் கண்டு தனித்தமிழ் இயக்கம் என்னும் எழுச்சிமிக்க இயக்கத்தை உருவாக்கியவர் மறைமலை அடிகளார்.

வேதாச்சலம் என்னும் இயற்பெயரைக் கொண்ட அடிகளார் 1876 ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் பிறந்தார். இளமையிலேயே தந்தையை இழந்த அவர் வீட்டின் ஒரே மகனாக இருந்த காரணத்தினால் குடும்பத்தின் மொத்த பொருளாதாரத் தேவைகளையும் சந்திக்கும் நோக்கில் நாகை, வே.நாராயணசாமி எனும் புலவரின் புத்தகக்கடையில் பணி அமர்ந்தார். தன்னுடைய 16ம் அகவையில் தமிழ் கற்க துவங்கி 21 வயதிற்குள் தமிழ் இலக்கண இலக்கியங்களை முழுமையாக கற்று தேர்ந்தார்.

இளமையிலிருந்தே படிப்பின் மீது ஆர்வம் கொண்ட மறைமலை அடிகளார் நாகப்பட்டினத்தில் திண்ணைப் பள்ளியில் சமற்கிருதம் சொல்லித் தருவதைக் கேள்விப்பட்டு அங்கு சென்று பயில முற்பட்டார். ஆனால் அந்த ஆசிரியர் இவர் பிராமணர் அல்லாதவர் என்ற காரணத்தினால் இவருக்கு சமற்கிருதம் சொல்லித் தர மறுத்துவிட்டார். அந்நிலையில் அங்கிருந்த மாணவன் ஒருவன் தான் அடிகளாருக்கு சமற்கிருதம் கற்பித்துத் தருவதாகவும், அதற்கு பதிலாக ஆங்கிலத்தை தனக்கு கற்றுத்தரும்படியாகவும் கேட்டுக்கொண்டு, அதன்மூலம் ஆசிரியர் ஒவ்வொரு நாளும் நடத்தும் சமற்கிருதப் பாடத்தை மறைமலை அடிகளார் கற்று வந்தார். இவ்வாறு சமற்கிருதத்திலும் பெரும் புலமை பெற்ற மறைமலை அடிகளார், பின்னாளில் காளிதாசர் இயற்றிய சகுந்தலை நாடகத்தை மொழியாக்கம் செய்தார். தன்னுடைய 12ம் அகவையில் ஆங்கிலத்தில் முருகனுக்கு பாட்டு செய்தவர் மறைமலை அடிகளார். இவ்வாறு சமற்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் பெரும் புலமை பெற்றவர் அடிகளார்.

மீனலோசனி என்ற செய்தித்தாளுக்குத் தொகுப்பாளராகப் பணியாற்றி வந்த அடிகளார், பின்னர் சைவ சித்தாந்த தீபிகை என்ற இதழிலும் பணியாற்றினார். 1902ஆம் ஆண்டு மறைமலை அடிகளார் ஞானசாகரம் என்ற இதழை தொடங்கி நடத்தினார் அதனைப் பின்னர் அறிவுக்கடல் என்று தனித் தமிழில் பெயர் மாற்றம் செய்தார். இருப்பினும், எப்போதும் அவர் உள்ளத்தில் தமிழ் ஆசிரியராக வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால், அதற்காக தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டு நல்லதொரு வாய்ப்பிற்காக காத்திருந்தார்.

அக்காலகட்டத்தில் சென்னை கிருத்தவ கல்லூரியில் தமிழ் பேராசிரியர் பணியிடம் இருந்ததை அறிந்து அதற்காக விண்ணப்பித்திருந்தார். பரிதிமாற் கலைஞர் அக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராக இருந்தார். மறைமலை அடிகளார் நேர்காணலுக்காக அக்கல்லூரிக்கு சென்றபொழுது அவரிடம், “குற்றியலுகரம், முற்றியலுகரம் இரண்டிற்குமான வேறுபாடு என்ன?” என்ற பரிதிமாற் கலைஞரின் வினாவிற்கு. “அஃது எனக்குத் தெரியாது’ என்று பதிலளித்தார். இதில் “அஃது” என்பது ஆயுதத்தொடர் குற்றியலுகரம், “எனக்கு” என்பது குற்றியலுகரம், ‘தெரியாது” என்பது முற்றியலுகரம். இவ்வாறு கேள்விக்கான பதிலை ஒரே வரியில் சொல்லியதை பாராட்டி அக்கனமே அவருக்கு அப்பணி வழங்கப்பட்டது. மறைமலை அடிகளாரின் தமிழ்ப் புலமையை வெளிப்படுத்தும் விதமாக இந்நிகழ்வு அமைகிறது. 1911ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆங்கிலமும் சமற்கிருதமும் கட்டாயப் பாடம் என்றும் தமிழ் விருப்பப்பாடம் என்றும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தன்னுடைய ஆசிரியப்பணியை துறந்தார் மறைமலை அடிகளார்.

தனித்தமிழ்ப்பற்று காரணமாக 1916இல் தம் பெயரை மறைமலை (வேதம் = மறை, அசலம் = மலை) என்று மாற்றிக் கொண்டார். அவர் தம்முடைய பிள்ளைகள் திருநாவுக்கரசு, நீலாம்பிகை தவிர மற்றவர்களின் வடமொழிப் பெயர்களை, திருஞான சம்பந்தம்: அறிவுத்தொடர்பு, மாணிக்க வாசகம் மணிமொழி, சுந்தரமூர்த்தி: அழகுரு. திரிபுரசுந்தரி: முந்நகரழகி எனத் தனித்தமிழாக்கினார்.

ஆங்கிலம் சமற்கிருதம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் தமிழில் அதிகம் இருந்ததைக்கண்டு, அதிலிருந்து மீட்டெடுத்து தனித்தமிழில் தமிழர்கள் பேசவும் எழுதவும் ஊக்கப்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்டதே தனித்தமிழ் இயக்கம். பிறமொழிக் கலப்பால் உருவானதே தனித்தமிழ் இயக்கம். பேராசிரியராகப் பணியாற்றியபின், பல்லாவரத்தில் இராமலிங்க வள்ளலாரின் கொள்கைப்படி 1912ல் “சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” தொடங்கினார். பின்னர், தனித்தமிழ் மீது கொண்ட ஈடுபாட்டால் அதனைப் “பொதுநிலைக் கழகம்” எனப் பெயர் மாற்றினார். திருமுருகன் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திப் பல நூல்களை வெளியிட்டார். மணிமொழி நூல்நிலையம் என்னும் நூல்நிலையத்தையும் உருவாக்கினார்.

ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்களை இயற்றினார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை, இரு தொகுதிகள் (1933), பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் (1921), சாகுந்தல நாடக ஆராய்ச்சி (1934), ஞானசாகரம் மாதிகை (1902), Oriental Mystic Myna Bimonthly (1908-1909), Ocean of wisdom, Bimonthly (1935), Ancient and Modern Tamil Poets (1937), முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் (1936), முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை (1903) பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை (1906) சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் (1911), முதற்குறள் வாத நிராகரணம் (1898) திருக்குறள் ஆராய்ச்சி (1951).

அறிதுயில் எனப்படும் ஹிப்னாடிசம் பயின்று இருந்தார் அடிகளார். தனது மகனுக்கு ஏற்பட்ட இளைப்பு இருமல் நோயை குணப்படுத்த அறிதுயில் முறையை கையில் எடுத்து குணப்படுத்தினார், கணியத்திலும் புலமை வாய்ந்தவர். மூச்சுப்பயிற்சியும் கற்று தேர்ந்தவர்; மருத்துவத்தை முதலில் தான் அறிந்து உணர்ந்து பின்பு அதனை நூலாக எழுதினார்: மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் பற்றிய நூலை எழுதியுள்ளார்; தமிழ் மொழியில் உள்ள சொல் வளங்களை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளார்; தமிழர்களுக்கு சாதி இருக்கக்கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார்; மறைமலை அடிகளாரின் சொற்பொழிவைக் கேட்டு தங்களின் பெயர்களை மாற்றியவர்கள் பலர். அவர்களுள் திருஞானசம்பந்தம் தன் பெயரை நந்நனார் என மாற்றினார், ராமையா, அன்பழகன் எனவும், நாராயணசாமி, நெடுஞ்செழியன் எனவும், பாலசுந்தரம், இளவழகன் எனவும் மாற்றினர்.

குலசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுட்பற்றும், சமயப்பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர்: சைவத் திருப்பணியும் சீர்திருத்தப் பணியும் சிறப்பாகச் செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர். தென்னாட்டிலிருந்து பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் தமிழகத்திற்குள் நுழைய முற்பட்ட காலத்தில் மறைமலை அடிகள் சைவ சித்தாந்தத்தை முன்னிறுத்தினார்.

பரிதிமாற் கலைஞரும், மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தில் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள். ஆனால் அதன் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தவர் மொழி ஞாயிறு வேர்ச்சொல் ஆய்வாளர் பாவாணர். இன்றளவும் தனித்தமிழ் இயக்கம் இயங்கிவருவது தமிழர் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்தோர் இருப்பதால்தான்.

பல்லாவரத்தில் மறைமலை அடிகளார் ஒரு நூற்றாண்டு வாழ்ந்த இல்லம் இருக்கும் தெருவிற்கு “சாவடி தெரு’ என்ற பெயரை மாற்றி மறைமலை அடிகள் தெரு என பெயரிட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர் தமிழ் ஆர்வலர்கள்.

பிறமொழி கலப்பின்றி பேசுவதே தமிழுக்கும். அடிகளாருக்கும் நாம் ஆற்றும் தொண்டு எனலாம்.

திருமதி பவ்யா இம்மானுவேல்,

மகளிர் பாசறைப் பொறுப்பாளர்,

செந்தமிழர் பாசறை, அமீரகம்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles