spot_img

பெருந்தமிழர் இரட்டைமலை சீனிவாசன்

சூலை 2022

பெருந்தமிழர் இரட்டைமலை சீனிவாசன்

“போரும் அமைதியும்” போன்ற புகழ்பெற்ற நாவல்களை எழுதிய தால்ஸ்தாய்க்கு, காந்தி எழுதிய கடிதத்தில், துன்புறுத்துவோரை, தண்டிக்காது, மன்னிக்கும் குணம் குறித்து நீங்கள் எழுதிய வரிகள் உணர்வுப்பூர்வமானது என்று சொல்லும்போது, அதற்கு மறுமொழியாகத் தால்ஸ்தாய், இன்னா செய்தாரை ஒறுத்தல் எனும் திருக்குறளில் இருந்தே இதைக் கற்றேன் என்று கூறினார். மிகவும் வியந்து போய், தமிழ்மொழி பற்றியும், திருக்குறள் பற்றியும் காந்தி கற்க விரும்பியபோது, அவருக்குப் போதித்ததோடு மட்டுமல்லாது, மோ.க.காந்தி என்று இன்பத்தமிழில் கையொப்பமிடக் கற்றுத் தந்தவர் நம் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள்.

சாதியெனும் முடைநாற்றம், தமிழ்ச்சமூகத்தின் அடித் தளத்துக்குத் தள்ளப்பட்டோரின் மூச்சடைத்துக் கொண்டிருந்த காலகட்டம், நம் வரலாற்றின் பல நூறாண்டுகள். உரித்த மாட்டுத் தோலைப் பதப்படுத்கும். சிறு குட்டையின் வீரிய நெடி, புதிதாய் உள்நுழைவோரை மயங்கிச் சரியத் தள்ளும்போது, அதில் இறங்கிச் சுத்தம் செய்யும் பழையவர், பழகிப்போய்ச் சிரிக்கும் வகையில், ஆதித்தமிழ்ச் சமூகமும், சாதிய அமிலத்தின் எரிச்சலைத் தாங்கத் தன் தோலைப் பழக்கியிருந்தது.

ஆயிரமாண்டு அசுத்தத்தை, அடித்துக் கழுவத் தலைப்பட்ட தமிழர்களுள் முதல்வரான நம் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் கடந்த மலைகள் கணக்கிலடங்கா. இன்றைய மதுராந்தகத்துக்கருகே 1850களில் பிறந்த அவரை, ஏழ்மையும், சாதீயமும் இரட்டைப்பிசாசுகளாய்த் துறத்த, தஞ்சைக்கும், பின் கோவைக்கும் நகர்ந்து, பின் அங்கேயே வாழத் தொடங்கியது அவர் குடும்பம். பள்ளியும் மட்டுமென்ன வானத்திலா இருந்தது? 400ல் 390 பிராமணக் குழந்தைகளாயிருக்க, சாதியச் சேற்றுக்குப் பயந்து மணியடித்த பின்பு பள்ளிக்கு ஓடுவதும், மணியடிக்கும் முன்பு பன்ளியிலிருந்து பறப்பதுமாய், அவரது இளமைப்பருவம் கடந்தது. நீலகிரியிலொரு வெள்ளைக்காரத் துரையிடம், பத்தாண்டுப் பணிக்குப் பின், சமூகப்பணி செய்யச் சென்னைக்கு 1890ல் வந்தார் நம் தாத்தா….

இராயப்பேட்டை அருகே தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சமூகப் பொருளாதார உரிமைகள் குறித்து விவாதிக்க அவர் கூட்டிய மாநாடே, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான முதல் அரசியல் முழக்கமாக வரலாற்றில் அறியப்படுகிறது. பின் பறையர் மகாசபையைக் கூட்டியதோடு, சமூகத்தில் எது தனக்கு அவமானமாகக் கற்பிக்கப்பட்டதோ, அந்தப் பெயரிலேயே “பறையன்” எனும் இதழையும் தொடங்கி, சமூகப் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டி, அரசுக்கு மனுக்களெழுதி, மக்களிடையே அரசியல் கருத்தாக்கங்களை விதைத்தார்.

1900களில், இலண்டனுக்குச் செல்ல முயன்று, பின் தென்னாப்பிரிக்காவில் அரசுப்பணி கிடைக்கப்பெற்று இன பேதத்துக்கெதிராகத் தமிழ்ச் சமூகத்தினர் முன்னெடுத்த போராட்டங்களில், காந்தியுடன் பங்கு பெற்றார். பின் இந்திய விடுதலைப் போராட்டத்தால் உந்தப்பட்டு, 1921ல் மீண்டும் சென்னை திரும்பி, 1923 முதல் 1939 வரை சட்டசபை உறுப்பினராக இடையறாது பணியாற்றி, பல முற்போக்கான அரசியல் போராட்டங்களை நிகழ்த்தி, ஒடுக்கப்பட்டோருக்கு பல உரிமைகளைப் பெற்றுத்தந்த தகைமையாளர் இவர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் அகில இந்திய அடையாளமாய்த் திகழும் அம்பேத்கருடன், சீனிவாசன் அவர்கள் கொண்ட உறவு, போரில் ஈடுபடும் ஒரு நாட்டின், இரு படைத் தளபதிகளின் மனநிலை போன்ற ஒத்திசைவுடையது.

இலண்டனில் நடந்த மூன்றில் இரு வட்ட மேசை மாநாடுகளில் அம்பேத்கரும், சீனிவாசன் அவர்களும், ஒருங்கே பங்கேற்று. ஒடுக்கப்பட்டோரின் அரசியல் உரிமைகளுக்காக முழங்கினர். பின்னாளில், தாழ்த்தப்பட்டவர்களின் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தொடர்பாக எரவாடா சிறையில், காந்தி உண்ணாவிரதமிருந்த போது, காந்திக்கெதிராகவும், அம்பேத்கருக்கு ஆதரவாகவும் வலுவான குரலெழுப்பியவர் என்பதோடு, தனக்குக் கிடைத்த அரசியலதிகாரத்தின் பொருட்டு, பல்வேறு அரசாணைகள் மூலம், தன்னாலியன்ற அனைத்தையும் செய்து காட்டிய செயல்வீரர் என்பது மெச்சத்தகுந்தது.

பின்னாளில், அம்பேத்கரும், அயோத்தி தாசப் பண்டிதரும் (இவரின் மைத்துனர்) இன்னும் பலரும், சாதீய இழிவிலிருந்து விடுபட இறுதி விமோசனமாக, புத்த மதத்தைத் தழுவியபோது, நாம் தான் இந்துக்களல்லாத, வருணாசிரமத்துக்கப்பாற்பட்ட அவர்ணஸ்தராயிற்றே! நாம் இந்துவாகவே இல்லாத போது, ஏன் மதமாற வேண்டும்? என்று கூறி தனக்குச் சரியென்று பட்டதை, ஐயமற உரைக்கும் பேராண்மைக்குச் சொந்தக்காரராக இருந்தார்.

தன்னளவில் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், ஒடுக்கப்பட்டோர் தம் ஆன்மிக மரபுகளைத் தேடுவதிலும், ஆலயப் பிரவேசம் தொடர்பான போராட்டங்களின் போதும் ஆதரவளித்தமையும் அவரின் நோக்கம் எதுவென்று காட்டுகிறது. பல்வேறு கோயில்களில், தாழ்த்தப்பட்ட மக்கள் முற்காலத்தில் பெற்றிருந்த உரிமைகளை எடுத்துக்காட்டியும், திருவாரூர் தியாகராஜ பெருமாள் கோயிலில் தியாகசாம்பான் வழிவந்தோர்க்கென்று அளிக்கப்பட்ட உரிமைகள், கும்பக் கோணத்தில் பாழாக்கப்பட்ட நந்தன் கோட்டை மதில் போன்றவற்றைப் பற்றியெல்லாமும் சீனிவாசன் வாதிட்டிருக்கிறார்.

விகிதாச்சார அடிப்படையிலான இடவொதுக்கீட்டுக்கும், சமூகப் பொருளாதார, கல்வி உரிமைகளுக்கும், அரசியல் அதிகாரத்தினால், பல அரசாணைகள் மூலம் வழியமைத்து, 86 வயதுவரை உழைத்த பெருமகனாரின் சமூக வாழ்வில், பன்முகத் திறமையும், அவர் கற்ற கல்வியும், அதனால் பெற்றுக் கொண்ட மெய்யறிவும், சமூகப்பணியாற் கிட்டிய பட்டறிவும் முக்கியப் பங்காற்றின!

கள நிலவரமும், சமூகத்தின் கடைநிலை மனிதனின் தேவையும் அறிந்ததாலேயே, பொதுவிடத்தில் நடத்தல், பொதுக் கிணற்றில் தண்ணீரெடுத்தல், விடுமுறை நாட்களிளேனும் மது விலக்கு போன்றவற்றை அரசிதழில் வெளியிட்டுச் சாதித்தார். 1927 வரை, பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்டோர் சேர்த்துக் கொள்ளாமலிருந்த நிலையை மாற்றி, 1928ல் தாழ்த்தப்பட்டோர் மாகாண மாநாட்டை நடத்திச் சிறப்பித்தார். அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பறையர், பஞ்சமர் எனும் பெயரில் பத்திரப்பதிவுகள் நடத்த தடையாணை விதிக்க, அன்றைய பனகல் அரசரிடம் முறையிட்டதாக வரலாறு பதிவு செய்திருக்கிறது. எந்தக் காலத்திலும் பெயர்மாற்றம் மட்டுமோ, சட்டதிட்டங்கள் மட்டுமோ, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை முன்னேற்றிவிடாது… உடனடித் தேவை நிலைமாற்றம்… இன்று போய் நாளை திரும்பும் இயற்பியல் மாற்றமன்று; என்றுமே திரும்பாத வேதியியல் மாற்றம்… சமூகத்தின் ஆணிவேர், சல்லிவேர் வரை நிகழ வேண்டிய உயிர்நிலை மாற்றம். அத்தகைய சமநீதி என்று நிகழ்கிறதோ. அன்று தான் அன்னார் போன்று, ஓய்வின்றி உழைத்த பெருமகன்கள் மனமகிழ்ந்திருக்கும்; மனிதமும் தமிழ்நிலத்தில் சிறந்திருக்கும். ஆனால் அவர் வாழ்ந்த நிலத்திலேயே, பள்ளியில் சமையல் செய்யக்கூடச் சாதியைக் கொண்டு அரசியல் செய்யும் நிலையில், இன்றும் சமூகத்தில் சாதி புரையோடிப் போனது கவலைதரக்கூடியது.

அடவியில் திரிந்து, குடலின் பசி போக்க, ஆவினத்தினையடக்கி, ஊன் புசித்து, எச்சத் தோல் மிஞ் சியிருக்க, அதைக் கட்டித் தட்டி ஒலியெழுப்பினான் மலைக் குகைவாழ் குறிஞ்சிச் சேயோனொருவன்.

அவன் வழிவந்தவன் அத்தனை பேருக்கும். ஏரோ, போரோ, வாழ்வோ, சாவோ, வழிபாடோ, சுடுகாடோ பறையோதி முன்செல்ல, உணர்ச்சிக் கொதிப்போடு சனம் பின்சென்ற வரலாற்றைச் சங்கம் பாடும்போது, பறையனும், பஞ்சமனும் தீட்டென்றால், பறை பாட்டுப் பாடி, எம் இறை வந்த வரலாறு பொய்யாடா? பின் வந்த பிற்சேர்க்கைகள் தான் மெய்யோடா தமிழா? வாழ்வியல் வழி வந்த எம் வழிபாடு சொல்லுமுண்மை கேள்… தொழிலாற் வந்த குடியே, பொல்லார் சதியால் சாதியாகி, உன்னை வஞ்சிக்க, மதி மலடாக்கப்பட்ட வரலாற்றின் பக்கங்கள் கிழித்தெறி… ஆதிப்பாட்டன் இடையில் முதல் வந்து மானங்காத்த தோல், பின் வந்த நூலுக்கிணையாடா நற்றமிழா? தமிழ்வேலெனும் ஊசிக்கு, மொழி நூலாக ஓட தொல்குடித் தமிழ்த்தாயின் ஒற்றுமைச் சீலைக்கிழிசலைத் தைத்திட அறிவாயுதமேந்தி, ஆதித்தமிழர் விடுதலைக்குழையடா மீதித்தமிழா….!

திருமதி விமலினி செந்தில்குமார்

செய்தித் தொடர்பாளர்,

செந்தமிழர் பாசறை, வளைகுடா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles