சூலை 2022
வரலாற்றுப் புதினங்கள் வாசிப்பில் கிடைப்பவை!
புதினங்கள் ஒரு எழுத்தாளனின் கற்பனைகளில் அவை முழுக்க உண்மை என்று எடுத்துக்கொள்ள முடியாது, மேலும் அதை ஒரு வரலாற்றை அறியும் ஆவணம் என்றும் எடுத்துக்கொள்ள முடியாது.
ஒரு தேசிய இனத்தின் மக்கள், தன் வரலாற்றை முழுவதும் ஆய்ந்து, நிபுணத்துவம் பெற்று வாழ்வது என்பது பொதுவாகக் கடினம் மற்றும் எதார்த்த மனித வாழ்க்கையில் சற்றுச் சாத்தியமற்றது. ஆனால் ஒரு தேசிய இனத்தின் மக்கள் குறைந்தபட்சமாவது தன்னின வரலாற்றைத் தெரிந்துகொள்வது, தன்னினத்தை மண்ணில் நிலைநிறுத்த அடிப்படைத் தேவையாகிறது. தமிழ்ச்சூழலில் பொதுமக்களில் கணிசமான மக்கள் புத்தக வாசிப்பை பழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களில் சிலர் வரலாற்று புதினங்களை வாசிக்க தேர்வு செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கக்கூடும் என்பதை இக்கட்டுரை விளக்கும் என நம்புகிறோம்.
பொதுவாக தமிழ்ச்சூழலில், வரலாற்றுப் புதின எழுத்தாளர்கள், தங்கள் படைப்புகளில் பல கற்பனை கதாபாத்திரங்களை உருவாக்கி இருக்கிறார்கள். உதாரணமாக பொன்னியின் செல்வனில் புகழ்பெற்ற கதாபாத்திரமான பூங்குழலி என்ற பாத்திரத்தை குறிப்பிடலாம். கதையின் சுவைக்காக எழுத்தாளர் கையாண்ட கற்பனை கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே எழுத்தாளர்கள் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு முக்கிய நிகழ்வை கருவாகக்கொண்டே வரலாற்று புதினத்தை தனது சிந்தனைப்படி எழுதுகிறார்கள். அந்த புதினங்கள் உருவாக உதவிய, சில தரவுகளையும், ஆக்கங்களையும் அவர்கள் மேற்கோள் காட்டுகிறார்கள். இவைகளில் இருந்து நாம் நேரமொதுக்கி வாசிக்கும் வரலாற்று புதினங்கள், குறைந்தபட்சம் நம் வரலாற்றைச் சுவைபட சொல்லும் ஆவணங்கள் என்ற முடிவிற்கு வரலாம்.
வரலாற்று புதினங்கள் வியத்தகு கேள்விகளை உங்களில் எழுப்ப வல்லது. அதற்கான பதிலையும் உங்களுக்கு அளித்து ஈராயிரம் ஆண்டுகால எழுதப்பட்ட வரலாற்றைப்பற்றி குறைந்த பட்சம் ஒரு சிறு புரிதலை ஏற்படுத்தக்கூடியது. உதாரணமாக தமிழ் மன்னர்கள் காலத்தில் பெண்களின் நிலை என்ன? மன்னர்களின் போர் முறை என்ன? சமூக அடுக்குகள் என்ன? அவர்களின் நிலப்பரப்பு என்ன? பேசிய மொழிகள் யாவை? என உங்களுக்குள் கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு விடையும் அளிக்கும். சில உதாரணங்களை கீழே பார்க்கலாம்.
உதாரணமாக “வரலாற்றில் பெண்கள் போரில் பங்கேற்றார்களா?” என்ற கேள்வி எழலாம். அரையன் இராஜராஜன் என்னும் ஒரு தளபதி அரசேந்திரச் சோழன் ஆட்சியில் முதன்மை படைத்தளபதியாக விளங்கியுள்ளார். அவர் கீழ சாளுக்கியர்களுடன் உடன்பாடு செய்துகொண்டு, சக்கரக்கோட்டம் என்ற பகுதியின் கோட்டையைத் தாக்கி அக்கோட்டையின் மன்னன் பிரதாபருத்ரனை வெல்கிறார். அப்போரில் மூன்று கோட்டை கதவுகளும், மூன்று சோழத் தளபதிகளால் முற்றுகை இடப்படுகிறது. ஒரு வாயில் அரையன் இராஜராஜன் அவர்களாலும், மற்றொரு வாயில் தளபதி பிரம்ம மாராயராலும், மூன்றாவது வாயில் தளபதி செங்கமலச்செல்வியாலும் முற்றுகை இடப்பட்டது. ஒரு மிகப்பெரிய போர், மூன்று தளபதிகள், அவற்றில் ஒருவர் பெண் என்று குறிப்பிடுகிறார் புதின ஆசிரியர். இவை நடந்த காலம் சரியாக இன்றிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்.
மேற்கூறிய உதாரணத்தை கூறும்போது இன்னொரு விடயமும் எனக்கு தோன்றுகிறது. நான் குறிப்பிட்ட பிரம்ம மாராயர் என்பவர் பிறப்பால் ஒரு அந்தணர். அரசேந்திரச் சோழன் படைத்தளபதிகளில் மிகவும் உக்கிரமான, அதிகம் கோபப்படக்கூடிய தளபதி இவர்தான். பொதுவாக சத்திரியர்கள் தான் போர்செய்வார்கள் என்ற கருத்து உள்ளது.
விதிவிலக்காக பரசுராமர், துரோனாச்சாரியார் எனச் சில இதிகாசப் பாத்திரங்களை கூறுவார்கள். ஆனால் தமிழ் மன்னர்கள் காலத்தில், அந்தணத் தளபதி இருந்துள்ளார். அதுவும் பெரும் வீரனாக இருந்துள்ளார் என்று புதினங்களில் காணமுடிகிறது. இராஜராஜ நரேந்திரன் என்னும் கீழ சாளுக்கிய மன்னன், மன்னன் விமலாதித்தனுக்கும். அரசேந்திரச் சோழன் சகோதரி குந்தவை அவர்களுக்கும் பிறந்து, பின்னாளில் கீழ சாளுக்கிய மன்னனாக மாறியவர். இவர் இளமையில் போர்திறனற்று இருந்த காலத்தில், அரசேந்திரச் சோழன் படையின் உபதளபதி கரிகாலனின் உபதளபதியாக ஏறக்குறைய ஒரு சாதாரண படைவீரர் போல் செயல்பட்டுள்ளார். பிறப்பிலே அரியணை உறுதி செய்யப்பட்டாலும், அரியணையேற ஒருவர் எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பதை இதிலிருந்து அறியலாம்.
மற்றொரு நிகழ்வு, நாகப்பட்டின புத்த விகாரத்தில் வளர்ந்த கரிகாலன் என்னும் இனைஞன் விதியின் வசத்தால் வேங்கிநாட்டு இளவரசி நிரஞ்சனாதேவியை அந்தப்புரத்தில் சந்திப்பான். இவர்கள் இருவரும் சரளமாக உரையாடுவார்கள். இறுதியில் நிரஞ்சனாதேவி, “தமிழர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்கள்” என்று கரிகாலனை நோக்கி கூறுவார். இதிலிருந்து நிரஞ்சனாதேவியின் தாய்மொழி தமிழ் இல்லை என்பதை அறியலாம். அப்படியானால் எவ்வாறு இருவரும். சானமாகப் பேச முடிந்தது? யாரேனும் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ பல மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். இதன் தொடர்ச்சியாக அதே கரிகாலன், சக்கரக்கோட்டத்தில் பிரதாபருத்திரன் என்ற மன்னனோடு வடமொழி கலந்த ஆந்திர பாஷையில் பேசுவான். இந்த நிகழ்வுகள் அந்த கால மன்னர்கள் மற்றும் இனவரசிகளுக்கு இருந்த மொழிப் புலமைகளையும், தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்ல, செல்ல, சீரான இடைவெளியில் வெவ்வேறு பேச்சு மொழிகள் இருந்ததையும் காட்டுகிறது.
ஒற்றன் அல்லது உளவாளி அமைப்பு முறை இன்று ஜனநாயக அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட அங்கமாக மாறியுள்ளது. உறுதியாக இதன் தோற்றுவாய் மன்னர் முறைமையில் ஒற்றர்களின் பங்கிலிருந்தே ஆரம்பமாகிறது. மகேந்திர பல்லவன் போன்ற பெரும் சாம்ராச்சியத்தை நிறுவியவர்கள் கூட, ஒற்றன் குண்டோதரன் உத்தரவு என்ன என்று அறிந்தே போர் செய்த வரலாறுகள் உண்டு. ஒற்றன் என்பவன் வெறுமனே உளவு பார்ப்பவன் என்ற எண்ணம் ஒருவேளை நமக்கிருந்தால் அது பெரும்பிழை, மன்னர் முறைமையில் ஒற்றர்கள் போர் திறன் அறிந்தவர்களாகவும், பல மொழிகள் பேசக்கூடியவர்களாவும், எளிதாக உடல் தோற்றத்தை தேவைக்கேற்ப மாற்றக்கூடியவர்களாகவும், அதிநுட்ப மதி கொண்டவர்களாவும், தாய் நாட்டிற்க்காக உயிரையே தியாகம் செய்பவர்களாகவும் இருந்துள்ளனர்.
மேலே நான் குறிப்பிட்ட சில விடையங்கள் வரலாற்று புதின வாசிப்பில் அறிந்தவையே. தானே கேள்விகள் பிறந்து, வாசிப்பின் தொடர்ச்சியில் பதில்கள் கிடைக்கப் பெற்றுவிடும். மேலும் புதினத்தின் தன்மை என்பது அடுத்து என்ன, அடுத்து என்ன என்ற ஆவலை ஏற்படுத்தி முழுமையாக உங்களை வாசிக்க உந்தும். வாசிப்பின் முடிவில் புனைவுகளூடே நம்மைப்பற்றிய சில வரலாற்று அறிவுகளும் எளிதாக நம்மை வந்தடையும்.
இந்த கட்டுரையின் உண்மையை உணர, ஒரு வரலாற்று புதின வாசிப்பில் இறங்கிப்பாருங்கள்.
திரு. கோபாலகிருஷ்ணன் பால்ராஜ்
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.