சூலை 2022
தமிழீர்ப்பு விசை!
புத்திக்குள் யுத்தம் நடத்தி அவன் சித்தம் போல் போர்கொடி உயர்த்தி, உங்கள் சிந்தனையில் சில நிமிடம் நந்திபோல் நகராதிருக்க துடிக்கிறேன்!
வர்ணிப்பில் வக்கிரம் வைத்து வான்வழி நுழைகிறேன், கார்மேகம் புடைசூழ கச்சிதமாய் கைகூட, மழைச்சாரல் மத்தியிலே தேன்துளியை சுவைத்ததுண்டா?
கதிரவனோ மையங்கொள்ள கானல்நீர் கரைபுரண்டோட உச்சிவெயில் மத்தியிலே தென்றலதை உணர்ந்ததுண்டா? பார்கழியின் பௌர்ணமியில் உடல் உறையும் குளிர் நடுவில், தேகத்தின் கதகதப்பை தெளிவாக அறிந்ததுண்டா?
ஆம் என்றால் அமைதிகொள்க… இல்லையென்றால் இறுதிவரி தொடர்க…
உனை உச்சரிக்கும் ஒவ்வொரு கனமும் என் உயிர்நாடி உருகித் துடிக்கும்! உன் எழில் கண்டு, கண்ணிரண்டில் ஒளி உள்ளும்! தித்திக்கும் தேன் துளியாய் அள்ளி பருகிடவே நா கொண்ட சுரபிகளோ நாற் திசையும் வழிந்தோடும்!
நீ கொண்ட ஒளியோ மின்னலுடன் போட்டியிடும். நிறுத்தாமல் உன் புகழை இடிகூட இசைபாடும், தமிழே நமது முன்னேற்றம், தமிழே நமது விஞ்ஞானம், தமிழே நமது சிந்தனை ஊற்று, தமிழே நமது பேராற்றல், தமிழே நமது பெருமை, தமிழே நமது பண்பாடு, தமிழே நமது கலாச்சாரம், தமிழே நமது வாழ்வியல். தாய்மொழிக்கல்வியே சிறந்த கல்வி.
அறிவியல், விஞ்ஞானம், பொருளாதாரம் 67601 அனைத்திலும் முன்னேறியுள்ள உலக நாடுகள் ஜப்பான், ஜெர்மணி, இஸ்ரேல், சீனா, கொரியா, குசியா உட்பட பல நாடுகள் தங்களது தாய்மொழிக் கல்வியையே கற்பித்து வருகின்றனர். அதேபோல் நமது தாய்மொழி கல்வியை மீட்டெடுக்க வேண்டுமெனில் அதற்கு ஒரே தீர்வு நாம்: அனைவரும் சேர்ந்து ஆட்சி அதிகாரத்தில் தமிழ்த் தேசியத்தை அமர வைக்க வேண்டும்.
நமது பெருமைமிக்க தமிழ் தேசிய இனத்தின் அடையாளத்தை இழந்து, திராவிட மாயையில் சுழன்று, நமது தாய்மொழிக் கல்வியை நாமே நிராகரிக்கும் அவலநிலைக்கு நம்மை வழிநடத்தி வந்த திராவிடக் கட்சிகளை, அந்த திராவிட கட்சிகளிடம் பணமும், பதவியும் பெற்றுக்கொண்டு வேலை செய்யும் திராவிட இயக்கங்களை முழுவதுமாக தமிழர்களாகிய நாம் நிராகரிக்க வேண்டியது இக்காலத்தின் கட்டாயம். இதை இப்போது நாம் செய்யாமல் விட்டுவிட்டால், நாளைய நமது தலைமுறை, நமது தமிழ் இன அடையாளத்தை இழந்து ஏதிலிகளாக நிற்க வேண்டிய பேராபத்தை நோக்கி செல்லும் என்பதை உணரவேண்டும். நம்மை கொஞ்சம், கொஞ்சமாக அழித்து வரும் திராவிட கூட்டத்தை இனிமேலும் ஆதரிப்பது நமக்கு நாமே தயார் செய்யும் சவப்பெட்டி என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
நெற்றியிட்ட திலகமாய் உன் ஒரு சொல் பொருள் கூறும்! எண்ணிக்கை எதுவரையில்? உன் எச்சமது அதுவரையில், உலகத்தின் கீர்த்தியெது? உன் உயிர்சொற்கள் தானே அது!
உயிர் உருகும் பாக்கள் எது? கேட்கும் செலிகளுக்குள் உன்னொலி மையங்கொள்ள, காணும் கண்களுக்குள் உன்னெழில் உயிர்கொள்ள, உச்சரிக்கும் உதடுகளோ உணர்ச்சியில் உயிர் பொங்க… தேகத்தில் தித்திப்பை தெளித்திட்டு…
புத்திக்குள் கர்வத்தை புகுத்திட்டு…
உச்சந்தலைமேல் உயிராய் உட்காரும் பாக்களது….
விரல்கொண்ட மகுடம்தான் வினைடெச்சம் என்றானதோ? உன் உயிர்கொண்ட தேகத்தால் மெய்சொற்கள் உண்டானதோ? உயிர்மெய்யை உட்கொண்டு
இவ்வுலகமது உயிர்கொண்டதோ?
இப்புவிப்பந்தின் இயக்கம் தன்னை புவி ஈர்ப்புவிசையென்று புலம்பல்கள் கேட்கின்றன…. விண்வெளியில் விசாலயாய்
விவரித்து எழுதிடுங்கள் அது புவிஈர்ப்புவிசையல்ல என் தமிழீர்ப்பு விசையென்று…
திரு. சோழன் பாரதி,
செந்தமிழர் பாசறை – பகரைன்.