சூலை 2022
இனவெறி கோரத் தாண்டவமாடிய ஆடிக் கலவரம் எனும் “கறுப்பு சூலை”
தமிழரும், சிங்களரும் ஒருங்கிணைந்த இலங்கை தீவினிலே 1950களில் தமிழர்களின் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறை, குடி மறுப்பு ஒடுக்குமுறைகளால் கொந்தளிப்பான இனப் போராட்டம் வலுப்பெற்று வந்த நிலையில், ஈழ வரலாற்றில் வன்முறை தாண்டவமாடிய ஒரு காலகட்டம் 1983 ஆம் ஆண்டு. சிங்கள அரசின் அடக்குமுறை தீவிரமடைய, தமிழ் போராளிகளின் எதிர் தாக்குதல்களும் உக்கிரம் அடைந்தன. தமிழர் விடுதலைப் போராட்டம் திசை திருப்பப்பட்டு, சிங்கள அரசின் சதியால் இனக் கலவரமாக வெடித்தது. பல ஆயிரம் தமிழர்கள் ஈவிரக்கமின்றி கொன்றொழிக்கப்பட்ட கொடிய மாதம் 1983 ஜூலை. இக்கொடு நிகழ்வை ஆடிக் கலவரம் அல்லது கருப்பு ஜூலை என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
1970-களில் துவங்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மிக வேகமாக வளர்ந்து 1980களில் சிங்கள அரசுக்கு பெரும் சவாலாக இருந்தது. 1983 ஆம் ஆண்டின் முற்பகுதியில், தனது ராணுவ அரசியல் நடவடிக்கையால், சிங்கள அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக செயல்பட்டது. வடக்கில் குவிக்கப்பட்ட சிங்கள காவல்துறை மீதும் ஆயுதப் படையினர் மீதும் தொடர்ச்சியான பல கெரில்லா தாக்குதல்களை நடத்தியது. 1983 பிப் 18 ஆம் நாள் காவல்துறை ரோந்து பணியில் காவல்துறை அதிகாரி விஜயவர்த்தனாவும், அவரது ஒட்டுனர் ராஜபக்சவும் கொல்லப்பட்டனர். பரந்த உமையாள்புரத்தில் மார்ச் 4 அன்று ராணுவ தொடர் வண்டிகள் மீது விடுதலைப் போராளிகள் நடத்திய கெரில்லாத் தாக்குதலில் கவச பீரங்கி வண்டி ஒன்று சிதைத்து அழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் இராணுவத்தினர் 5 பேர் படுகாயமடைந்தனர்.

இதேசமயம், அரசியல் அரங்கில் விடுதலைப்புலிகள் ஒரு சிறப்பான பரப்புரை முயற்சியை முடுக்கி விட்டனர். அரசின் ஒடுக்குமுறை கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மே 18 அன்று நடைபெற இருந்த உள்ளுராட்சித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். புலிகளின் தலைவர் பிரபாகரனும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். சிரிலங்கா அரசின் நிர்வாகத்தை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தேசிய விடுதலைக்காகத் தமிழ் புலிகள் நடத்தும் ஆயுதப் போராட்டத்தை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் வேண்டி நின்றார்.
விடுதலைப்புலிகளின் மேற்கண்ட பரப்புரைக்கு இசைந்து வடக்கில் உள்ள பெரும்பாலான தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்தார்கள். தமிழ் மக்கள் அரசியல் வரலாற்றில் இதுவரை இடம்பெறாத தேர்தல் புறக்கணிப்பாக இது அமைந்தது. விடுதலைப் புலிகளுக்கு மிகப்பெரிய அரசியல் வெற்றியை ஈட்டிக் கொடுத்தது. விடுதலைப்புலிகளின் வேண்டுகோளை புறக்கணித்து, தேர்தலில் நின்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அவமானத்தைச் சந்தித்தது. 95 விழுக்காடு வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்ததால் கட்சியின் நம்பகத்தன்மை வெகுவாக பாதிக்கப்பட்டது.
தேர்தல் நாளன்று வாக்களிப்பு முடிய ஒரு மணி நேரம் இருக்கும் போது, யாழ்ப்பாணம் நல்லூரில் தேர்தல் வாக்களிப்பு நிலையம் ஒன்றில் காவல் புரிந்த காவல்துறையினர் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தினார்கள். அங்கு நடந்த துப்பாக்கிச் சமரில் சிங்களப் படையினர் ஒருவர் கொல்லப்பட்டார். இன்னொருவர் கடும் காயம் அடைந்தார். இரண்டு காவல்துறையினரும் கடும் காயம் அடைந்தனர். அன்று தேர்தல் தொடர்பாகவும், புலிகள் வெற்றியீட்டினர். வாக்களிப்பு நிலையம் மீதும் வெற்றிகர தாக்குதல் நடத்தினார்கள்.

இதனால் சீற்றமடைந்த அரசு, புதிய அவசரகால ஒடுக்குமுறை சட்டங்களை நடைமுறைப்படுத்தியது. தமிழ் போராளிகளுக்கு எதிராக மேலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆயுதப் படைகளின் கரங்களை புதிய சட்டங்கள் வலுப்படுத்தின. அன்று இரவு, யாழ்ப்பாண நகர எல்லைக்குள் பணியிலிருந்த 600 இராணுவத்தினர் வன்முறை வெறியாட்டத்தில் இறங்கினர். கடைகள், வீடுகள் எரிபொருள் நிலையங்கள், வாகனங்கள் ஆகியவை தீயில் எரிக்கப்பட்டன. பொதுச் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பொதுமக்கள் கடுமையாக தாக்கப்பட்டார்கள். தமிழ் மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்திற்கு இலக்கான யாழ்ப்பாண நகரம் தீப்பற்றி எரிந்தது.
அரச பயங்கரவாத வன்முறை உச்சத்தை தொட்ட காலப்பகுதியாக 1983 ஜூன் மாத பகுதியை குறிப்பிடலாம். அவசரகால சட்டங்கள் வழங்கிய அதிகாரத்தினால், சிங்கள ஆயுதப் படையினர் வவுனியா, திருகோணமலை நகரங்களில் கண்மூடித்தனமான வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டனர். தமிழ் பொதுமக்களை சுட்டுக் கொன்றதுடன், கடைகள், வீடுகள், பள்ளிகள், கோவில்கள் ஆகியவற்றிற்கு தீ வைத்தனர். திருகோணமலையில் ஆயுதப் படையினருடன், சிங்கள காடையர்கள் கூட்டுச்சேர்ந்து புரிந்த கலவரத்தில் 19 தமிழர்கள் வெட்டி சரிக்கப்பட்டார்கள். அங்கு இருநாறு வீடுகள் 24 கடைகள் 8 இந்து கோவில்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு, கொல்லப்பட்டார்கள், அரசின் உந்துதலோடு தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட இனப்படுகொலை ஆரம்பமானது.

அரசுத்தலைவர் ஜெயவர்த்தனா வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்று அதை உறுதிப்படுத்தியது. யாழ்ப்பாண மக்களின் கருத்து என்ன என்பது பற்றி எனக்கு அக்கறை இல்லை. அவர்களைப் பற்றி நான் இப்போது சிந்திக்க முடியாது, அவர்களுடைய உயிர்களைப் பற்றியோ, அவர்கள் என்னைப் பற்றி எத்தகைய கருத்துக்கள் வைத்திருக்கிறார்கள் என்பது பற்றியோ, சிந்திக்க முடியாது என்று ஜெயவர்த்தனா பிரித்தானிய நாளிதழான “டெய்லி டெலிகிராம் பத்திரிகைக்கு 1983 ஜூலை 11ஆம் நாளன்று பேட்டியளித்திருந்தார். சிங்கள் ஆயுதப் படைகள், திட்டமிட்டு தமிழ் மக்களை அழித்தொழிக்க, அதற்கு சிங்கள அரசு ஆதரவு வழங்கிக் கொண்டே இருக்கிறது என்பதை ஜெயவர்த்தனாவின் கூற்று ஐயமற உறுதிப்படுத்தியது.
ஜூலை மாதம் நடுப் பகுதியில் நிகழ்ந்த சோக சம்பவம் ஒன்று விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பேரிடியாக அமைந்தது. 1983 ஜூலை 15 அன்று மாலை யாழ்ப்பாண நகரில் இருந்து 15 மைல் தொலைவில் உள்ள மீசாலை கிராமத்தில் இந்த துன்பவியல் சம்பவம் நிகழ்ந்தது. ஒரு மினி பஸ், இரண்டு ஜீப் வண்டிகள், ஒரு ராணுவ டிரக் ஆகியனவற்றில் மீசாலை கிராமத்தில் நுழைந்த நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர், அங்கிருந்த விடுதலைப் போராளிகளின் இருப்பிடத்தை நோக்கி விரைந்தனர். இராணுவத்தினரின் இந்த சுற்றி வளைப்பில் விடுதலைப்புலிகளின் தாக்குதல் தளபதியான சார்ல்ஸ் ஆன்டனி எனும் ஈவன் மற்றும் மூன்று போராளிகளும் மாட்டிக் கொள்கின்றனர். சுற்றி வளைத்த படையினருடன் புலி வீரர்கள் துப்பாக்கி சமரில் குதிக்கின்றார்கள். இராணுவத்தினர் பனைமரங்கள் சூழ்ந்த பாதுகாப்பான இடங்களில் இருந்து சரமாரியாக சுட, பொட்டல் வெளியில் மாட்டிக் கொண்ட போராளிகள் திருப்பித் தாக்குகின்றனர்.

இராணுவத்தினரின் துப்பாக்கி இரவைகள் மார்பை துளைக்க குருதி வழிய நிலத்தில் சரிகிறார் சீலன், தப்ப இயலாத நிலை, எனினும் எதிரியிடம் உயிருடன் சிக்கக் கூடாது என்ற உறுதிப்பாடு உந்த தன்னை சுட்டுக் கொன்றுவிடுமாறு சக போராளிகளிடம் பனிக்கிறார் சீலன். தனது தளபதியை சுடத் தயங்குகிறான் தோழன். அப்போது கண்டிப்பான கட்டளையிடுகிறார் சீலன். வேறு வழி தெரியாது. சீலனின் கட்டளையை நிறைவேற்றுகிறார் அந்த போராளி, அதேவேளை ஆனந்த் என்ற மற்றொரு போராளியும் எதிரியின் சூட்டுக்கு இலக்காகி படுகாயங்களுடன் சாய்கிறார். தன்னையும் சுட்டுக் கொன்றுவிடும் படி மன்றாடுகிறார் ஆனந்த். அவரது வேண்டுகோளும் நிறைவேற்றப்படுகிறது. உயிருக்கும் மேலாக நேசித்த சக போராளிகளை, உயிருடன் எதிரிகளிடம் விட்டுவிடாது செய்து, அவர்களது ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு முற்றுகையில் இருந்து தப்பி சென்றனர் மற்ற இரு போராளிகள். மாவீரர் சீலனின் சாவு என்பது விடுதலை இயக்கத்திற்கு ஒரு பேரிழப்பாக அமைந்தது. அபாரமான துணிவும், தமிழீழ இலட்சியத்தில் பற்றுறுதியும் மிக்க சீவன் பல களங்கள் கண்ட வீரன். ஆற்றல் படைத்த கட்டளைத் தளபதி. தலைவர் பிரபாகரனின் மிகவும் நெருங்கிய தோழன்.
அந்த மாவீரனின் மறைவு தலைவரின் ஆன்மாவை உலுக்கியது. ஒருபுறம் கடும் துயரும், மறுபுறம் கடும் சீற்றமும் அடைந்த தலைவர், சிங்களப் படையணிக்கு தகுந்த பதிலடி கொடுக்கத் தீர்மானித்தார். அதற்கான தாக்குதல் திட்டத்தையும் அவரே வகுத்தார். விடுதலைப் புலிகள் மீதும், பொதுமக்கள் மீதும் அரச பயங்கரவாத வன்செயல்களை ஏவிவிடும் ஆயுதப்படையினர் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்பதை எதிரிக்கு உணர்த்தவேண்டும் எனவும் தலைவர் பிரபாகரன் எண்ணினார். யாழ் நகரபகுதிக்குள் இராணுவ வண்டித் தொடர்கள் இரவு நேரங்களில் நடமாடும் வழித்தடங்கள் பற்றிய விவரங்களை புலனாய்வின் மூலம் திரட்டி, பிரசித்தி பெற்ற திருநெல்வேலி கெரில்லா தாக்குதலை தலைவர் திட்டமிட்டார். இந்த தாக்குதலுக்கு செல்லக்கிளி அம்மான் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். ஆனாலும் தாக்குதல் நடவடிக்கை முழுவதையும் தலைவரே நெறிப்படுத்தினார். சூலை மாதம் 23 ஆம் நாள் நள்ளிரவு தலைவருடன் அன்றைய மூத்த தாக்குதல் தளபதிகளான செல்லக்கிளி, கிட்டு, புலேந்திரன், விக்டர், சந்தோசம் ஆகியோருடன், 14 விடுதலைப்புலி அதிரடி வீரர்கள் ஆயுதங்களுடன் இயக்க சீருடை அணிந்து யாழ் நகரிலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள திருநெல்வேலியில் பலாலி யாழ்ப்பாண வீதியோரமாக தாக்குதலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். பொது வாகனங்களும், பாதசாரிகளும் வீதியில் செல்லாதபடி தடை ஒழுங்குகள் செய்து, கேந்திர நிலைகளில் கண்ணிவெடிகளை புதைத்துவிட்டு, புலி வீரர்கள் நிலையெடுத்து காத்து நிற்கின்றனர்.

இராணுவ முகாமிலிருந்து சிரிலங்காவின் முதலாவது காவாட்படை பிரிவை சேர்ந்த 15 பேர் கொண்ட அணியொன்றின், இராணுவ வண்டித் தொடராக திருநெல்வேலி நோக்கி வந்துகொண்டிருந்தது. முதலில் ஒரு ஜீப் வண்டி, அதற்குப் பின்னால் ஒரு இராணுவ ட்ரக் வண்டியாக படையினர், பதுங்கி நிற்கும் புலி வீரர்களின் நிலையை அண்மிக்கிறார்கள். புலிகளின் பதுங்கு காவல் நிலையை, இராணுவ வாகனங்கள் கடந்த போது நிலக்கண்ணி தகர்ப்பி இயக்கப்படுகிறது.
திருநெல்வேலியை அதிரவைத்த பயங்கர வெடியோசையோடு இராணுவ ஜீப் வண்டி காற்றில் உயர எகிரி துண்டம், துண்டமாக சிதறியது. பின்னே வந்த ட்ரக் வண்டி அதிர்ச்சியுடன் நிற்கிறது. பீதியடைந்த படையினர் அச்சத்தோடு வெளியே ஓட புலிகளின் துப்பாக்கிச் சல்லடை அவர்களை பதம்பார்த்தது. ட்ரக் வண்டியிலிருந்து அவர்கள் வெளியே வர, வர அச்செட்டாக சுடுவதில் பெயர் பெற்ற தலைவரின் துப்பாக்கி அவர்களில் பலரை அடுத்தடுத்து வீழ்த்தியது. சிலர் இராணுவத்தின் வாகனத்திற்கு கீழே தவழ்ந்து சென்று படுத்து இருந்தபடி திருப்பி சுடுகிறார்கள். ஆனால் புலிகளின் எரிகுண்டுகள் அவர்களை செயல் இழக்கச் செய்கின்றன.
துல்லியமான புலிகளின் போரியல் தேர்ச்சியை இத்தாக்குதல் பறைசாற்றியது. 13 சிங்களப் படையினர் அதே இடத்தில் கொல்லப்பட்டார்கள். இரண்டு பேருக்கு படுகாயம். அந்த நாட்களில் சிங்கள இராணுவத்தினருக்கு இது ஒரு பெரும் உயிரிழப்பாக அமைந்தது. விடுதலைப்புலிகளின் தரப்பில் வெப் செல்லக்கிளி வீரச்சாவை தழுவிக்கொண்டார். சொல்லக்கிளி அம்மான் செல்வநாயகம் அஞ்சா நெஞ்சம் படைத்த வீரர். தலைசிறந்த தாக்குதல் தளபதி, தலைவரின் இளம்பருவத் தோழன். ஆரம்ப கால போராட்ட வரலாற்றில் பல சாதணைகளை படைத்தவர். அந்தாளில் சிங்கள தேசத்தையே கிலிகொள்ள செய்த வெற்றிகரமான ஒரு கெரில்லா தாக்குதலுக்கு தலைமைதாங்கி அத்தாக்குதலிலேயே களப்பலியாகிய மாவீரர்.
தமிழரின் இனப்பிரச்சினைக்கு இராணுவ தீர்வே ஒரே வழி என்று உறுதியாக நம்பியிருந்த ஆட்சியாளர்களுக்கு, 13 இராணுவ படையினர் கொல்லப்பட்டது பலத்த அடியாகப்பட்டது. கொடுங்கோலரான செயவர்த்தனா இரும்புப் பிடிப்போடு நாட்டை ஆண்டு கொண்டிருந்தார். அவருடைய மூத்த அமைச்சர்கள் லலித் அதுலத் முதலி, பிலிப் குணவர்த்தனா, சிரில் மாத்யூ, காமினி திசநாயகா ஆகியோர் தீவிர இனவாதிகள் ஆவர். தமிழர் போராட்டத்தை இராணுவ அடக்குமுறையால் நசுக்க வேண்டும் என்ற கொடிய கொள்கையை பலமாக பற்றிக் கொண்டிருந்தவர்கள். இத்தகைய தலைமையை கொண்டிருந்த ஆட்சி பீடத்திற்கு, தமிழருடைய ஆயுதப் புரட்சி வளர்ந்து சிங்கள படைகளின் உயிர்களை பறிப்பது தாங்கமுடியாத அவமானமாகப்பட்டது.
ராணுவத்திடம் இருந்து கடுமையான பழிவாங்கல் நடவடிக்கை, மின்னல் வேகத்தில் வரலாம். என்ற பதற்றத்தில் யாழ்ப்பாண மக்கள் எதிர்பார்த்து நின்றார்கள். எதிர்பார்த்தபடியே மறுநாள் திருநெல்வேலியிலும், கந்தர் மடத்திலும் வன்முறை புரிந்த அரசப் படையினரால் 60 தமிழ் பொதுமக்கள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டார்கள். தலைநகர் கொழும்புவில் தொடங்கிய இனக்கலவரங்கள், நாடு முழுவதும் பரவி இதுவரை நடைபெறாத அளவுக்கு தமிழர் உயிர்களையும், உடைமைகளையும் அழித்தொழித்தன.
முந்தைய காலங்களில் நடந்த இனக்கலவர தாக்குதலுக்கு தமிழ் மக்கள் அவ்வப்போது முகம் கொடுத்திருந்தாலும், 83 சூலையில் நடந்த இன அழிப்பு முன்பு நடந்த எதனுடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு கொடுமையானதாக, குரூரமானதாக, மிகப்பெரியதாக அமைந்தது.
விடுதலைப்புலிகளால் சிங்கள இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதையொட்டி, திடீரென எழுந்த பழிவாங்கும் உணர்ச்சியாக இந்த கலவரம் காணப்படவில்லை. மாறாக இனக்கொலை என்று கூறும் அளவுக்கு அரசினால் ஏற்கனவே திட்டம் வகுக்கப்பட்டு தருணம் பார்த்து நடத்தப்பட்ட பெரும் தாக்குதலாக சூலை 83ல் வெறிபாட்டம் காணப்பட்டது. திருநெல்வேலி தாக்குதலுக்கு பின்பு உருவான பதட்ட நிலையை, அரசு முடிச்சுப்போட்டு கையாண்ட விதம் அதன் விஷமப் போக்கை கோடிட்டு காட்டியது. இளவெறியை தூண்டும் செய்தி அறிக்கைகள் மறுநாள் பத்திரிகையில் தலைப்புச் செய்திகளாக தடித்த எழுத்துக்களில் வெளிவந்தன. இவை சிங்கள மக்களிடையே கொதிப்புணர்வை கிளறிவிட்டன. வீழ்ந்த படையினர் 13 பேரும் கொழும்பு பிரதான மயானத்தில் இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. எண்ணிலடங்கா சிங்களர்கள் தலைநகருக்கு திரண்டு வர இது வழிவகுத்தது.
ஆனால் அறிவித்தபடி மரணச் சடங்குகள் நடைபெறவில்லை. இறந்த ராணுவத்தினர் உடலங்கள் மயானத்திற்கு வந்து சேர தாமதமானது. இதன்பின் சம்பந்தப்பட்ட படையினரின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கப் போவதாக அரசு அறிவித்தது. அடக்கத்திற்கு வந்து சேர்ந்த மக்களிடையே இது பெருங்குழப்பத்தையும், பொறுமையின்மையையும் தோற்றுவித்தது. நேரம் செல்லச் செல்ல பொறுமை எல்லை மீற தொடங்கியது. மாலை இருளத் தொடங்கியதும் மக்கள் கும்பல் கொதித்தெழுந்து வன்முறையில் இறங்கியது. கலவரம் இரத்தப் பிரளயமாக மாறியது. தமிழர்களை படுகொலை செய்வதும், சொத்துகளை நிர்மூலமாக்குவதுமான கொடுஞ்செயல்கள் தொடர்ந்தன. இன வெறியாட்டம் தட்டிக் கேட்பாரின்றி நான் கணக்கில் இழுபட்டது.
தலைநகரில் தொடங்கிய இந்த கொடூர வெறியாட்டம், அதே வடிவங்களில் தென்னிலங்கை மாவட்ட நகரங்களுக்கும் அலை, அலையாக பரவியது. தமிழர் மரணமும், தமிழர் சொத்துக்களை அழிப்பதும் எங்கும் தலைவிரித்தாடியது. பாதுகாப்பு நிலையில், மூவாயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்யப்பட்டார்கள். பெரும்பாலான தமிழர்கள் சிங்கள காடையர் கும்பல்களால் கண்டம், துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டார்கள் அல்லது அடித்துக் கொல்லப்பட்டார்கள். பல தமிழ் குடும்பங்கள் உயிரோடு எரிக்கப்பட்டனர். தமிழர்களுக்கு சொந்தமாக இருந்த ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள், கட்டிடங்கள், கைத்தொழில் வளாகங்கள், திரையரங்குகள், எரிபொருள் நிலையங்கள் எரித்து தரைமட்டமாக்கப்பட்டன. கொழும்பு நகரில் ஒரு லட்சத்து ஐம்பதுஆயிரம் தமிழர்கள் இரவோடு இரவாக, வீடு வாசல் இழந்து அகதிகள் ஆனார்கள்.
கலகக்காரர்கள் கண்மூடித்தனமாக தறிகெட்டு தாக்கவில்லை. நன்கு திட்டமிடப்பட்டு, நெறிப்படுத்தப் பட்டதாக இருந்ததாக அமைந்திருந்தது. கலவரக் கும்பல்களுக்கு தமிழர்களின் வசிப்பிடங்கள், சொத்துக்கள், உடமைகள் தொடர்பான துல்லியமான விவரங்கள் வழங்கப்பட்டிருந்தன. இது இந்த இனக் கலவரத்தில் அரசு அதிகாரிகளின் துணையும் கலந்திருந்தது என்பதை தெளிவாக்கியது. தலைநகர் கொழும்புவில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான தமிழர்களின் தொழிற்சாலைகளும் வர்த்தக நிலையங்களும் சாம்பல் மேடாக்கப்பட்டது. கொழும்பில் இனவெறி கலவரத்தை நேரில் கண்காணித்த பிரித்தானிய பைனான்ஸ் டைம்ஸ் பத்திரிக்கையாளர் நிலைமையை பின்வருமாறு நாளிதழில் எழுதியிருந்தார்.
“வன்செயல்கள் கூடியதாகவும், ரத்தக்களறியாகவும் தோற்றமளித்தது. ஏனைய ஆசிய நாடுகளில் நடந்த கலவரங்களில் இருந்து இந்த கலவரத்தில் காணப்பட்ட தெளிவான வேறுபாடு என்னவென்றால், குறித்த வர்த்தக தளங்களை கலகக் கும்பல்கள் குறிப்புகளை வைத்து கண்டுபிடித்தது. கொழும்பிலே வீதிக்கு வீதி சென்ற கலக கும்பல்கள், தமிழர்களின் தொழிற்சாலைகளையும் வீடுகளையும் மட்டுமே தாக்கியமையாகும். அவர்கள் கவனமாக தேடி, தேடித் திரிந்தது ஏன் என்று இப்போது புரிகிறது. ஒவ்வொரு வீதியிலும் குறித்த வர்த்தக வளாகம் தீ மூட்டப்பட்டிருக்கும். அடுத்து அமைந்திருக்கும் வளாகம் எந்த பாதிப்பும் இன்றி அப்படியே பத்திரமாக இருக்கும். அரச படையினரும் காவல்துறையினரும் கலகக்காரர்களுடன் சேர்ந்து கொண்டார்கள் அல்லது வேடிக்கை பார்த்து, கண்டும் காணாதது போல் நின்றார்கள் (பைனான்சியல் டைம் 1983 ஆகஸ்ட் 12) பத்திரிக்கையில் இவ்வாறு வெளிவந்தது.
கொழும்பு நகரத்தில், தமிழர்களின் பொருளாதார அடித்தளத்தை நாசம் செய்யும் நோக்கத்துடன் திட்டமிட்டு மேற்கொண்ட செயற்பாடாகவே இந்த இனக்கலவரம் அமைந்தது. இக்கலவரம் தமிழின அழிப்பையும் இலக்காகக் கொண்டிருந்தது. ஏனென்றால் தமிழர் என்ற தேசிய இன அடையாளத்தை குறி வைத்து தமிழர்களின் உயிர், உடமைகள், அவர்களது பொருளாதார வாழ்வு ஆகியவை அழிக்கப்பட்டன. நாடு முழுவதும் தலைவிரித்தாடிய இனக்கலவர வன்செயல்கள் 6 நாட்கள் வரை தொடர்ந்தது. ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதும், அதனை செயல்படுத்த சிங்கள ஆயுதப்படைகன் மறுப்பு தெரிவித்தன.

தமிழர் வரலாற்றில் இருள் படர்ந்த இந்த காலத்தில் மிகவும் அருவருக்கத்தக்க சம்பவமொன்று ஜூலை 25 அன்று, வெளிக்கடை சிறையில் இடம்பெற்றது. சிங்களக் கைதிகள் சிறை அதிகாரிகளுடனும் சிறைக் காவலர்களுடனும் கூட்டு சேர்ந்து சிறை கூண்டுகளை தாக்கி உடைத்து 35 தமிழ் கைதிகளை கண்டந்துண்டமாக வெட்டிக் கொன்றனர். சிங்கள சிறை குற்றவாளிகளால் குத்திக் கிழிக்கப்பட்டு, அடித்து நொறுக்கப்பட்டு, மிருகத்தனமாக கொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் நால்வர் முக்கியமானவர்கள். தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் ஆகியோர் ஒப்பற்ற விடுதலைப் போராளிகள், மாவீரர்கள், இன்னொருவர் கலாநிதி ராஜசுந்தரம். காந்தியம் அமைப்பை உருவாக்கியவர்.
இனக்கலவரம் ஒருவாறு ஓய்ந்து அடங்கியது. அளவற்ற குண்டு வீச்சினால் சிதைந்து போய் தீய்ந்து கருகிய நகராக கொழும்பு கோர காட்சி அளித்தது. எலும்புக்கூடு போல் கருகிய கட்டிட மீதங்களில் இருந்து புகைமண்டலம் எழுந்து கொண்டிருந்தது. கலவர காலத்தில், வாய்மூடி, மௌனிகளாக இருந்த சிங்கள அரசியல்வாதிகள் வாய்திறக்க தொடங்கியபோது, பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்களுக்காக அனுதாபமான ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை.
நேர்மாறாக, அரக அதிபர் ஜெயவர்த்தனா சிங்கள தேசத்திற்கு விடுத்த செய்தியில், திருநெல்வேலியில் வீழ்த்தப்பட்ட சிங்கள வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட நியாயபூர்வமான நட்ட ஈடாக தமிழருக்கு எதிரான கலவர கொடுமையை நியாயப்படுத்த முயன்றார். தமிழ் தேசிய ஆன்மாவில் ஆழமான வடுவை ஏற்படுத்திய மாபெரும். துன்பியல் நிகழ்வாக இனக்கலவரம் முடிந்தது. என்றுமே சீர்செய்ய முடியாத அளவுக்கு இரு இனங்களுக்கு மத்தியிலான உறவை இக்கலவரம் நிரந்தரமாக பாதித்தது.
சிங்கள இனவாத அரசு, அனைத்துலக சமூகத்தின் கண்டனத்துக்கு இலக்காகியது. கருணையை போதித்த புத்தரின் புண்ணிய பூமியில், மனிதத்துவமற்ற மிருகத்தனமான கொடுமைகள் எவ்வாறு சாத்தியமாயிற்று என உலகத்தின் மனசாட்சி திகைத்து நின்றது.
தமிழ்நாடு உணர்ச்சிவசப்பட்டு கொதித்து வெடித்தது. சென்னையிலும், தமிழ்நாட்டின் ஏனைய நகரங்களிலும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இலங்கையில் உள்ள தங்கள் தமிழ் சகோதரர்களை காப்பாற்ற மத்திய அரசு இந்தியப் படைகளை அங்கு அனுப்ப வேண்டும் என தமிழ்நாட்டுத் தலைவர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.இந்திய அரசு கடும் சினம் கொண்டது. இந்திரா காந்தி அம்மையார் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், புதுடில்லி அரசின் பெரும் அதிருப்தியை நேரடியாகஎடுத்துக் கூறும் பொருட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் நரசிம்மராவை கொழும்புக்கு அனுப்பி வைத்தார்.
1983 ஜூலை மாத இனக் கலவர பேரழிவானது. மடை உடைந்து ஓடும் வெள்ளம் போல தமிழ் தேசிய உணர்வை எங்கும் பிரவாகம் எடுக்கச் செய்து, நாடுகள், கண்டங்களின் எல்லைகளைக் கடந்து இன உணர்வுடன் ஈழத் தமிழர் அனைவரையும் பற்றி கொண்டது. தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட தாங்கொனா கொடுமைகளை அறிந்து இரத்தம் கொதித்த தமிழ் இளம் சமூகம் ஆயுதம் தரித்த போராட்டத்தில் இணைந்துகொள்ள பல்லாயிரக்கணக்கில் அணிதிரண்டனர். விடுதலைப்புலிகளின் படையணியில் நூற்றுக்கணக்கில் இளைஞர்கள் இணைந்தனர்.
கருப்பு ஜூலை கலவரத்தை கட்டமைத்துவிட்டதன் மூலம், சிங்கள இனவாத சக்திகள், தமிழ் தேசிய மறுமலர்ச்சியை தோற்றுவித்ததுடன், தனியரசு போராட்டத்திற்கான அகப், புற சூழ்நிலைகளையும் உருவாக்கிக் கொடுத்தனர். இந்த இனக்கலவரம் தமிழீழ மக்களது அரசியல் வரலாற்றுப் பாதையை மாற்றியமைத்தது.
இந்த கறுப்பு சூலை எனும் ஆடிக்கலவரம் தமிழர் வரலாற்றில் என்றுமே மறக்கக்கூடாத துயரமாகவும், உலகத் தமிழர்களுக்கு பாடமாகவும் அமைந்தது.
திரு. இராமகிருஷ்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.