ஆகத்து 2022
வணிகமயமான கல்வியும் தனியார்பள்ளிகளின் அட்டூழியங்களும்! – ஒரு குடிமைச் சமூக வீழ்ச்சியின் குறியீடு
கள்ளக்குறிச்சி சக்தி பள்ளியில் நடந்த நிகழ்வு, அண்மையில் கள்ளக்குறிச்சி மனசாட்சியை உலுக்கியெடுத்தது என்றால் அது நிச்சயம் மிகையல்ல. ஒரு சிறுமியின் மரணம், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த நிகழ்வுகள் நமக்குக் காட்டும் தீநிமித்தங்கள் என்பன என்று இந்தச் சமூகத்தில் அரசு, அதன் அதிகாரிகள், அரசியல்வாதிகள், அவர்கள் வளர்த்தெடுக்கும் முதலாளிகள் போன்ற பலர், மக்கள் மீது எல்லையற்ற சுரண்டலை, மனித உரிமை மீறலை இலாப நோக்கங்களின் பொருட்டு நடத்தி வருகின்றனர் என்பதை உணர்த்துகின்றன.
ஒரு அரசு எனும் கருத்தாக்கம், பரிணாமப் படிக்கற்களூடே மனித நாகரீகத்தின் வளர்ச்சியின் பொருட்டு பல நிலைகளைக் கடந்து வந்துள்ளது. ஒரு காவல் அரசு எப்போதும் தனது குடிகளை அடக்கியாள மட்டுமே நினைக்கிறது. ஒரு மக்கள் நல அரசு தனது குடிகளைக் குழந்தைகள் போலப் பராமரித்துக் காக்க வேண்டும் என அரசியல் அறிவியல் தொடர்பான நூல்கள் சொல்கின்றன. ஆனால் குழந்தைகளுக்குக்கூடப் பாதுகாப்பு இல்லாத நாட்டில் தான் நாம் வாழ்கிறோம் எனில் அரசு என்ற கட்டமைப்புக்கான அவசியமே அடிபட்டுப் போகிறது. இது அதீதமாக சொல்லப்பட்ட கூற்று அல்ல; இங்கொன்றும் அங்கொன்றுமாக இல்லாமல் தொடர்ச்சியாகவே ஆட்சிக்கு வந்த 15 மாதங்களில் அதிகரித்திருக்கும் குற்றங்கள், ஒன்பதுக்கும் மேற்பட்ட சிறைமரணங்கள். சட்டம் ஒழுங்கு சீர்குலைவையும், நிர்வாகத் திறனின்மையையும் தெள்ளத்தெளிவாக படம்பிடித்துக் காட்டுகின்றன.
ஒரு சமூகத்தின் செம்மாந்த நிலை என்பது, அதில் வாழும் குழந்தைகள் மற்றும் பெண்களின் நிலையை வைத்துத் தீர்மானிக்கப்படுகிறது. இன்றைய குழந்தைகளே, நாளைய பெரியவர்கள். ஒரு குழந்தை என்பது அந்தச் சமூகத்தின் பகுதி மட்டுமன்று, சொத்து, முதலீடு; அடையாளம்: எதிர்காலம். எனவே தான் ஒவ்வொரு நாடும் தங்கனது வருவாயில் குறிப்பிடத்தக்க பங்கை பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம், திறன் வளர்ப்பு ஆகியவற்றுக்கு ஒதுக்குகிறது. கல்வியும், ஆரோக்கியமும், ஆற்றலும், நல்வாய்ப்புகளும் கொண்டவர்கள் அந்த நாட்டின் மனிதவள மூலங்களாகி சமூகப் பொருளாதார பண்பாட்டு அரசியல் தளங்களில் பல்வேறு வியத்தகு விளைவுகளை ஏற்படுத்துகின்றனர். தன்னை, தான் வளரும் சூழலை, சுற்றியிருக்கும் உலகை அறிய கல்வியும், அதை தொடர்ச்சியாகவும், வீரியத்துடனும் நிகழ்த்த ஆரோக்கியமும் அவசியமாகிறது. ஆனால் நமது தாய்த்தமிழ் நாட்டில் இவ்விரு துறைகளும் இலாபம் கொழிக்கும் பணப்பசுக்களேயன்றி, ஆகப்பெரும் சேவைகள் அல்ல.
தமிழ்நாட்டில் 38000 அரசுப்பள்ளிகளும், 8500 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 11000 தனியார் பள்ளிகளும் உள்ளன. ஓர் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களின் சராசரி முறையே 147, 338 மற்றும் 392. இதைப் போலவே கட்டணத்தையும் அரசுப்பள்ளியைக் காட்டிலும் பல்வேறு மடங்குகளில் தான் தனியார் பள்ளிகள் பெற்றோரிடமிருந்து வாங்குகின்றன. கடந்த ஜூன் மாதம் வெளியான, 669 அரசு தொடக்கப்பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர் என்ற தகவலையும், குழந்தை பிறப்புக்கு முன்னதாகவே, தனியார் பள்ளிகளில் இடம் கேட்டுப் பதிவு செய்து காத்திருக்கும். செய்தியையும் பொருத்திப் பார்க்கையில், நமக்குக் களநிலவரம் தெற்றென விளங்கும்.
கல்விக்கண் திறந்த காமராசர், மூடப்பட்ட பள்ளிகளைத் திறந்ததோடு அல்லாது. 14000 புதிய பள்ளிகளை அமைத்தது. ஆதாரத்துடன் நிறுவப்பட்ட வரலாறு. அதன் பின்னே ஆட்சிக்கு வந்த திராவிட அரசுகள், கல்வியை வணிகமயமாக்கி, தனது ஆதரவாளர்களாக இருந்த முரடர்களையும், சாராய வணிகர்களையும் கல்வித் தந்தைகளாக்கிட, தமிழகத்தின் நீர்நிலைகளைத் தாற்று ஆக்கிரமித்துக் கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கின. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈகியர் சிந்திய உதிரச் சிவப்பில் பதவி பெற்றவர்களின் குடும்பத்தினர், இந்தியை முதல்மொழியாகக் கொண்ட பள்ளிகளை நடத்துகின்றனர். இன்று ஆட்சி இருக்கும் திமிரில், செந்தாமரை சபரீசனின் சன்ரைஸ் குழுமத்தின் பெயரில் பல பள்ளிகளையும் தொடங்கவுள்ளனர்.
அரசும், அதன் அதிகாரிகளும் இந்தத் தனியார் பள்ளிகளை நடத்துவோர், திராவிடத் தலைமைகள், அமைச்சர்களின் பினாமிகள் என்பதால் கண்டும் காணாதவாறு ஒத்துழைப்பு நல்குவதோடு, சிக்கல்கள் வந்தால் முடித்து வைக்கவும் உதவுகின்றனர். கிட்டத்தட்ட திமுகவின் எல்லா மாவட்டச் செயலாளர்களுக்கும் அந்தந்த மாவட்டங்களில் பள்ளிகளும், கல்லூரிகளும் உண்டு. எ.கா திருவண்ணாமலையில் அமைச்சர். எ. வ. வேலு, அதிமுகவும் இதற்குச் சளைத்தவர்களில்லை தான். முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்துக்குச் சொந்தமான தேனியின் ரோசி பள்ளிக் கட்டிடத்தின் மதிப்பு மட்டும் பல கோடிகளைத் தாண்டும். அது மட்டுமல்லாமல், ஒன்றிய அரசினது அதிகார மையங்களுடைய ஆதரவு பெற்ற சனாதனவாதிகளின் தனியார் பள்ளிகளையும் ஆரிய அடிவருடிகளான திராவிடத் தலைமைகள், செழித்து வளரவிட்டிருக்கின்றனர். இது போன்ற அரசியல் செல்வாக்குள்ளவர்களின் பள்ளிகளில் தான் எப்போதும் ஆர்.எஸ்.எஸ்.இன் ஷாகாக்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
அரசியல்வாதிகளின் தயவு இருப்பதால், இங்கு நடக்கும் குற்றச் சம்பவங்கள் பல வெளியே வருவதேயில்லை. வந்தாலும் ஊடக கவனம் பெறுவதில்லை. பெற்றாலும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. பல்வேறு ஐயத்துக்குரிய மரணங்கள், தற்கொலைகள், பாலியல் சுரண்டல்கள், மனித உரிமை மீறல்கள் எல்லாம் அதிகாரத்தின் கூச்சல்களுக்கிடையே கண்டுகொள்ளப்படுவதில்லை. வாங்கும் காசுக்கு நல்ல கல்வியையாவது தருகின்றனவா என்றால் மாணவர்களுக்கு மதிப்பெண்ணைத் தவிர வேறு எந்த விடயத்திலும் கவனம் செல்லாதவாறு, பண்ணைக் கோழிகளாக எவ்வித வாழ்க்கைத் திறன்கள், அறவியல் சிந்தனைகள், அடிப்படையான மதிப்பீடுகள் இல்லாமல் வெறும் ஏட்டுக் கல்வியை மட்டுமே தருகின்றன. இதனாலேயே, பெரும்பாலும் சமூகப் பொறுப்பற்ற, தன்னலமான, சோம்பேறியான, கேளிக்கைகளில் நேரவிரயம் செய்யும் இளைய தலைமுறையினரை இந்தத் தனியார் பள்ளிகள் உருவாக்கிச் சமூகத்துக்கு அளிக்கின்றன. ஒழுக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் தராத, சிறு ஏமாற்றத்தைக் கூட தாங்க முடியாத, மனவலிமையற்ற இக்குழந்தைகள் கடும்போட்டி மிகுந்த உலகை எதிர்கொள்வதில் ஏற்படும் தடுமாற்றங்களின் பிரதிபலிப்பை அதிகப்படியான தற்கொலைகள் மற்றும் சிறார் குற்றங்கள் ஆகியவற்றில் காண முடியும்.
அரசுப் பள்ளிகளில் சிறந்த கல்வியையும், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் வேண்டிய அளவு செய்து தராமல், பிள்ளைகளுக்கான திட்டங்களில் கூட ஊழல் செய்யும் திராவிட அரசுக்கு அரசுப் பள்ளிகளைத் தாமுயர்த்த வேண்டிய கட்டாயம் என்ன இருக்கிறது? ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால் தங்களுடைய வணிகம் பாதித்துவிடுமோ என்ற காரணத்தினாலேயே ஒப்புக்கு கல்வித்துறையை இயங்கவிட்டிருக்கின்றன. ஒன்றியத்தோடு ஒப்பிடுகையில் நாம் சிறப்பான சாதனைகள் செய்தது போலத் தோன்றும். ஆனால் நமது இலக்கு உலகத்தரமேயன்றி, சாதி மதப் பூசல்களில் உழலும் வட மாநிலங்கள் அல்லவே. தமிழகம் போன்ற பல்லாயிரம் ஆண்டு உற்பத்தி வணிக வரலாறு கொண்ட சமூகத்தின் பிள்ளைகளை வெறும் ஏட்டுக்கல்வித் தேர்ச்சியை நோக்கி மட்டும் செலுத்துவது என்பது உண்மையில் ஒரு உளவியல் வன்முறை. தனித்திறன் வளர்ப்பு, புத்தாக்கம், கலை மற்றும் அறிவியல் புலத்தில் செம்மையான படைப்புகளை உருவாக்கும் ஆற்றல் ஆகியவற்றில் கவனம் கொள்வதே தொலைநோக்கு மிக்க கல்விமுறையாக தமிழகத்துக்கு இருக்க முடியும். அதைத்தான் நாம் தமிழர் கட்சியின் செயல்பாட்டு வரைவும் முன்வைக்கிறது.
எல்லாவற்றையும் சாதிக்கும் வல்லமை பெற்ற அதிகாரம், தவறானவர்களிடம், தமிழரல்லாதவர்களிடம் இருப்பதன் விளைவுகள், சிறுபிள்ளை ஒன்றின் மரணத்தில் தொக்கி நிற்கும் மர்மங்களின் வழி புலப்படுகின்றன. மக்கள் போராட்டமும், ஒருங்கிணைந்த செயல்பாட்டின் வழி முன்னெடுக்கப்படும் அரசியல் புரட்சியுமே. குடிமைச் சமூகமாக நாம் தோற்றுவிட்டதை, வீழ்ந்துவிட்டதைச் சரி செய்து மீட்சியளிக்கும். குறைந்தது நம் வீட்டில் உள்ள பிள்ளைகளின் பாதுகாப்பு எனும் தன்னலமான காரணத்துக்காகவேனும், இதற்காக நாம் பங்களிக்க வேண்டியுள்ளது என்பதை நாம். உள்வாங்க வேண்டும். தனிப்பெரும் முதலாளிகளுக்காகவும், தத்தமது குடும்பத்துக்காகவும் பொதுமக்களது குறிப்பாகக் குழந்தைகளது எதிர்காலத்தைப் பணயம் வைப்பவர்களை சனதாயக முறைப்படி தூக்கியெறிந்து பாடம் கற்பிக்காவிடில், வரும் சந்ததியினர் நம்மை நோக்கி வீகம் வசவுகளை எதிர்கொள்ள நம்மால் முடியவே முடியாது என்பது மட்டும் திண்ணம்.
திருமதி. விமலினி செந்தில்குமார்
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.