ஆகத்து 2022
தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார்
பெரிய குடும்பத்தில் பிறந்த எளிய சிறுவன். ஆரம்பக்கல்வியை தன் அன்பு தகப்பனாரிடம் இருந்தே தொடங்கி, பின்னர் சென்னையில் உள்ள பள்ளியில் பயின்றார். இடர்கள் பல வந்த போதிலும் நெஞ்சில் கொண்ட உறுதியும், தமிழ் மீது கொண்ட பற்றிலும் கற்றலை தன் வாழ்வின் இறுதிவரை தொடர்ந்தவர். உடல் ஊனமுற்ற போதும், கைகளும், கால்களும் செயலிழந்த போதும் கல்விக்கு முற்றுப்புள்ளி ஆனதே அன்றி தன் கற்றலுக்கு அல்ல என்பதை உணர வைத்தவர். “தாமின் புறுவது உலகின் புறக்கண்டு கமுறுவர் கற்றறிந் தார்” என்னும் வள்ளுவர் பெருமகனாரின் கூற்றுக்கிணங்க தன் வாழ்வை வாழ்ந்தவர்.
யாழ்ப்பாணம் கதிரவேற்பிள்ளை என்னும் தமிழ் அறிஞரிடம் தமிழ் மீது கொண்ட பற்றினால் தமிழ் மொழியில் உள்ள நூல்களை சிறந்த முறையில் பயின்றார். அன்னாரின் மறைவிற்கு பின் மயிலை தணிகாசல முதலியாரிடம் நூல்களை கற்றார். பெரு நிறுவனத்தில் கணக்கராக இருந்தபோதிலும் விடுதலையின்பால் கொண்ட வேட்கையினால் தன் வேலையை துறந்தவர்.
பாலகங்காதர திலகரால் ஈர்க்கப்பட்டு நாட்டின் விடுதலைக்காக தன் நேரத்தை செலவழித்தார். கற்றலின் மீது ஆர்வமுடையவர்க்கு உகந்த பணி ஆசிரியர் பணி என்பதைப் போன்று தனக்கான பணியாக ஆசிரியப் பணியை தேர்ந்தெடுத்தார். தன் மனைவியின் வேண்டுதலுக்கு இணங்க அவருக்கு கல்வி கற்றுக் கொடுத்தார். எப்பணியைச் செய்த போதிலும் தன் தாய் நாட்டிற்கான தன் பணியே மேன்மையானது எனக் கருதி பத்திரிகையாளராக சிறிது ஆண்டுகள் பணிபுரிந்தார். இளம் வயதிலேயே தன் மனைவியை இழந்த போதிலும் மறுமணம் செய்வது அறமற்றது என்ற கருத்தினை கொண்டதால் மறுமணத்தை அவர் செய்ய முற்படவில்லை. தேசபக்தன் எனும் கட்டுரைக்காக எப்பொழுது வேண்டுமானாலும் சிறைக்கு செல்ல நேரிடும் என்பதாலும் மறுமணம் செய்வது தனக்கு உகந்ததல்ல என்று கருதினார்.
அம்மை நோய் பரவலாக இருந்த காலகட்டத்தில் தற்போது உள்ள தொற்று நோயைப் போலவே மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆயினும் தன் நண்பருக்கு அம்மை நோய் வந்தபோது தானே சென்று உதவி அவரது உடல் நிலை மோசமான நிலையில் மரணத்தை தழுவிய வேளையிலும், அவரது இறுதி சடங்கிற்கு இளைஞர்கள் செல்ல தடை இருந்த போதிலும் தான் கொண்ட நட்பின் காரணமாக சடங்கில் முழுமையாக பங்கெடுத்த தகைமையாளர், தன்னை பகையாளி என எண்ணியவர்களுக்குக்கூட தானே அவர்களின் துயர் கண்டு உதவும் பண்பாளர்.
உழைப்பாளிகளின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் அயராது உழைத்து சென்னை தொழிலாளர் சங்கம் எனும் இயக்கத்தை உருவாக்கியவர், காவலாளர்களின் சங்கம், அச்சகத் தொழிலாளர்களின் சங்கம், ரயில்வே தொழிலாளர்களின் சங்கம் ஆகியவை தோன்றக் காரணமாய் இருந்தவர். “தொழிலாளர் சேவை நாட்டுக்கு மட்டும் உரியதன்று. அது, உலகுக்கும் உரியது. தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபடுவது உலகத் தொண்டில் ஈடுபடுவதாகும்” என்று தொழிலாளர் தொண்டுக்குக் குரல் கொடுத்ததோடு அதற்கு உறுதுணையாக நின்றார். சொல்லிலும் செயலிலும் மிகவும் தன்மையாக நடந்து கொள்ளும் மாமனிதர் இவர்.
சிறந்த மேடைப் பேச்சாளராகவும், சமயம், சமுதாயம், அரசியல் சார்ந்த நூல்களின் ஆசிரியராகவும் அறியப்பட்டவர். சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்பட்டவர். காந்தியடிகள் சென்னையில் ஆற்றிய உரையை சிறந்த முறையில் மொழிபெயர்த்து அவரின் நன்மதிப்பை பெற்றார். காந்தியடிகளின் கோட்பாடுகளை நூல்களாகவும் இயற்றியுள்ளார். இதனாலேயே இவர் தென்னாட்டு காந்தியடிகள் என்றும் அழைக்கப்பட்டார். இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது அதனாலேயே “தமிழ்தென்றல்” என்று அறியப்பட்டவர். இனி எங்கும் எவரும் தமிழிலேயே பேச வேண்டும் என்ற தீர்மானத்தை, தான் முன்னின்று நிகழ்த்திய கூட்டத்தில் கொண்டு வந்தவர்.
பாலினங்களைக் கடந்து பெண் பிள்ளைகளோடு இணைந்து சிறுவயதிலேயே விளையாடிய காரணத்தினால் பெண்களைப் போற்றும் உயர்ந்த எண்ணம் உடையவராக பிற்காலத்தில் விளங்கினார். “பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை”, “இந்தியாவும் விடுதலையும்”, “திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள்”, “பரம்பொருள் அல்லது வாழ்க்கை வழி”, “உள்ளொளி” ஆகிய நூல்களை எழுதியுள்ளார். முருகன் அல்லது அழகு, சைவத்திறவு, சைவத்தின் சமரசம், கடவுட் காட்சியும் தாயுமானவரும், இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம், தமிழ்நாடும் நம்மாழ்வாரும், நாயன்மார் வரலாறு, தமிழ் நூல்களில் பௌத்தம், சீர்திருத்தமா?, தமிழ்ச் சோலை போன்ற உரைநடை நூல்களையும் இயற்றியுள்ளார்.
தாய் மொழியான தமிழ் மீது அதீத பற்று கொண்ட திரு.வி.க. வடமொழிச் சொற்கள் இல்லாமல் தூய தமிழிலேயே பேசவும் எழுதவும் வேண்டும் என வற்புறுத்தினார். அதனை நடைமுறையில் பின்பற்றவும் செய்தார், அதே சமயம் தமிழை வளர்க்க வேண்டும் என்றால், பிறமொழியை வெறுக்க வேண்டும் என்று பொருள் இல்லை என்ற கொள்கை கொண்ட இவர் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். உரைநடை, சொற்பொழிவு, பத்திரிகைக் கட்டுரை, கவிதை, உரை, பதிப்பு முதலான பல்வேறு துறைகளின் வாயிலாகத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அயராமல் பாடுபட்டவர். புதிய உரைநடையின் தந்தை என்றும் தமிழ் மேடைப் பேச்சின் தந்தை என்றும் போற்றப்பட்டவர்.
சென்னையின் கவர்னராக வெலிங்டன் பதவி வகித்தபோது, பத்திரிகை ஆசிரியர்களைக் கண்டு பேசு விரும்பினார். அதன்படி அனைத்து ஆசிரியர்களும் அவரைச் சந்தித்தனர். அப்போது, “ஆங்கில அரசாங்கத்தைத் தாக்கி எழுதக் கூடாது’ என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார் வெலிங்டன். மேலும் திரு.வி.கவைப் பார்த்து, “உங்களுடைய எழுத்து வேகம் உடையது என்றும், மக்களைக் கொதித்து எழச் செய்யக்கூடிய தன்மை உடையது என்றும் நான் அறிகிறேன். ஆகையால், வேகத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு அவருடைய எழுத்தில் அனல் பறந்தது. அதுபோல் ஒருமுறை ஞானியார் அடிகள், தியாகராயரிடம், “நீர் யாரிடம் தமிழ் பயின்றீர்” என்று வினவியிருக்கிறார். அதற்கு தியாகராயர், “நான் எந்தப் பள்ளிக்கும் போனதில்லை. எவரிடமும் தமிழ் பயிலவில்லை. என் பள்ளி திரு.வி.கவே. அவர் பேச்சும், எழுத்தும் நான் பயின்றவை” என்று பதில் அளித்தாராம்.
தமிழுக்குக் கிடைத்த இரு சுடர்கள்… இரு திருவிளக்குகள் மறைமலையடிகளாரும், திரு.வி.கவும்” என்றார் அறிஞர் அண்ணா. “தமிழ்நாட்டுக்கு காத்தியாகவும், தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் தந்தையாகவும், தொழிலாளர்களுக்குத் தாயாகவும் விளங்கியவர்” என்று பாராட்டினார் கல்கி. “இன்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் விதைத்த விதை வளர்ந்தே வருகிறது” என்று எப்போதோ அவர் சொன்ன வரிகள், இன்று அவர் விதைத்த அனைத்துத் தொண்டுகளிலும் வனர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தன் மொழிக்காகவும் இனத்துக்காகவும் மக்களுக்காகவும் எவரொருவர் தன்னலமின்றி உழைப்பாரோ அவரே வரலாற்றில் இடம் பெறுவர்.
திருமதி பவ்யா இம்மானுவேல்,
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்,
செந்தமிழர் பாசறை – அமிரகம்.