ஆகத்து 2022
தமிழ்த்தேசியத்தாய் வே.பார்வதியம்மாள் – தகைசால் தலைவரினை தமிழர்க்கீந்த தாய்க்கு புகழ்வணக்கம்!
உப்புக் கடற்காற்று மோதி, பாறை கரையும் வெண்மணற் உபிரதேசக் கடற்கரைக் கிராமங்களுன் ஒன்று வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்துக்கு வடக்கே பதினாறே மைல்கள் வேதாரண்யத்திலிருந்து கடல் வழி முப்பது மைல்கள் தொலைவிலுமுள்ள, இலங்கையின் வடகிழக்கில் அமைந்த துறைமுகப்பட்டினம்.
1930களில், பிரித்தானிய ஐக்கிய ஆட்சியின் கீழ், இன்றைய இலங்கை, சிலோனாக இருந்த போது அவர் பிறந்தார். இங்கிலாந்திலேயே 28 வயது வரை குடியுரிமை பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்ட அன்றைய நாளில், இலங்கையில் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்ட டோனமூர் கமிஷன் செயலாக்கக் காலம்! அன்றைய மக்கள் தொகையில் 12% இருந்த தமிழர்களுன் ஒருத்தியாகப் பிறந்தவர்.
பின்னாளில், சிவபக்தி மிகுந்த நில அளவையாளர் ஒருவருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டு, நான்கு பிள்ளைகளையும் பெற்று பெரு வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டிய பெண்மணி: காலம் அவருக்கு வைத்திருந்த கணக்கின்படி, கணவனையும். மகனையும், அவனின் சந்ததிகளையும் காலனுக்குக் கொடுத்து, சர்வதேச அரசியல் விளையாட்டில் உடலும், மனமும் நொந்து, வல்வெட்டித் துறையின் மருத்துவமனையில் காலமானார் அவர்.
நான்கு பிள்ளைகளில் இளையவர் அவர்; தம்பி என்று மூத்தோர் அனைவரும் இளமையில் கொஞ்சி விளையாடினாலும், பலராலும் “தம்பி” என்றே பின்னாளிலும் அழைக்கப்பட்டவர். இந்தியப் பெருங்கடலை ஏரியாய் மாற்றி விளையாண்ட சோழனின் புலிக்கொடியைப் பின்னாளில் தானும் ஏந்தி, விடுதலைப் போராட்ட இயக்கங்களிலேயே அன்றும், இன்றும், என்றும் சிறந்த புலிப்படையை உருவாக்கி, வரலாற்றுச் சுவடுகளிலே ஆழப்பதித்த கரிகாலர் அவர். பின்னவர் பிரபாகரனைப் பெற்றெடுத்த தமிழ்த் தேசியத் தாய், முன்னவர் பார்வதியம்மாள்.
10ம் வகுப்பு வரை மட்டும் சிதம்பரா கல்லூரியில் படித்துவிட்டு, பதின்ம வயதிலேயே ஓடிப்போய்விட்ட கடைசி மகனை, ஒரு பின்னிரவில் காவல்துறையினர் தேடி வந்த போது, பார்வதியம்மாள் அதிர்ந்து தான் போயிருப்பார். வல்வெட்டித் துறையின் சிவாலயங்களைப் பராமரித்த வரலாறு கொண்ட குடும்பத்தின் வாரிசு, யாழ்ப்பாண மேயர் துரையப்பாவைக் கொன்றுவிட்ட செய்தி கேட்டு ஒரு நிமிடம் அதிர்ச்சியிலும் உறைந்து தான் போயிருப்பார்.
கொலையையும், மரணவோலத்தையும் உணர்ச்சியின்றி எளிதில் கடக்க இலங்கை மண் கற்றுக்கொண்டுவிட்ட காலமது. வரைமுறையற்ற கொடூரம், அரச பயங்கரவாதமெனும் பேயுருக் கொண்டு, இலங்கையில் தமிழர் குருதி விரும்பிக் குடித்த காலகட்டத்தில்தான், பிரபாகரன் ஆயுதமேந்தினார். தன் இருப்பை இருத்திக் கொள்ள, தமிழ்த்தாய் ஒரு தலைவனைப் பிரசவித்த தருணமது. பின்னாளில், அவனையீன்ற அந்தத் தாயுமதைப் புரிந்து கொண்டிருப்பார். இந்திய ஒன்றியத்தின் விடுதலை, காந்தியின் அகிம்சைக் கொள்கையாலேயே நிகழ்ந்ததென்று உறுதியாக நம்பினார், ஈழத்தந்தை செல்வா.

பல நூறு அகிம்சைப் போராட்டங்களை உள்ளபடியே நிகழ்த்தியும், சிங்களப் பேரினவாத அரசின் அடக்குமுறை அணுகுமுறையால், வேறு வழியேயின்றி 1976 வட்டுக் கோட்டையில் தன்னாட்சி உரிமை கோரியவரும் அவரே. எந்த நிலையிலும், சிங்கள அரசியல்வாதிகள் அகிம்சையின் கோட்பாட்டுக்கு அப்பாற்பட்டவர்கள் மட்டுமல்ல; கனவிலும் அதன் அர்த்தம் தெரிந்து கொள்ள விழையாதவர்கள் என்று புரிந்தபின்னரே, இலங்கையின் ஆயுதக் குழுக்கள் சாமானியர்களால் தொடங்கப்பட்டன.
அவற்றுள் ஒன்றாய்த் தொடங்கப்பட்டு, பிற்காலத்தில் மற்ற அமைப்புகளும், காலத்தின் கட்டாயத்தால் ஓரியக்கமாக உள்வாங்கப்பட்டு, தமிழரின் ஒற்றைக்குரலாக விடுதலைப் புலிகள் ஆன பிறகும் கூட பார்வதியம்மாள் உள்ளிட்ட குடும்பத்தினர், தேசியத் தலைவரை விட்டு விலகியே இருந்தனர். பின்னாளில், பல ஆண்டுகள் கழித்து சில சந்திப்புகள் நிகழ்ந்தாலும், நான்காவது இறுதி ஈழ யுத்தத்தின் இறுதி நாட்களுக்குப் பின், தந்தை வேலுப்பிள்ளை அவர்களுடன் பார்வதியம்மாளும், இலங்கை ராணுவத்தின் கண்காணிப்பில் தான் இருந்தார்.
தந்தை அவர்கள் இறந்துவிட்ட பின்னர், உடல் நலிந்த நிலையில், மருத்துவ உதவி பெறும் பொருட்டு மலேசியா சென்று, அங்கிருந்து சென்னைக்கு வர முற்பட்ட போது, சில அரசியல் சதி விளையாட்டுக்களால், விமானத்தில் இருந்து கூட தரை இறங்காதவாறு, திருப்பி அனுப்பப்பட்டதையெல்லாம் தமிழகம், மெனை சாட்சியாகக் கண்டிருக்கிறது. தமிழர் நிலத்தின் அன்றைய அரசியல் இழிநிலை சொன்ன நகை முரண் நிகழ்வு அது.
பிந்தைய நாட்களில், அனுமதி வழங்கப்பட்டு, வலியவே சென்று அழைக்கப்பட்ட போதிலும், மறுத்து வல்வெட்டித் துறைபின் மருத்துவமனையில், சாதாரண நோயாளியாகவே அவர் இறந்தார். ஆயிரக்கணக்கான புலிகளையும், உலகத் தமிழர் அனைவரையும் குடும்பமாகவே கருதிய தலைவரின் தாய், அந்த மக்களுள் ஒருவராகவே வாழ்ந்து இறந்தார். அது தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் போற்றிய நெறி. பிறர் வாழ தன் உறவுகளைக் களத்தில் கொடுக்கத் துணிந்த பெருவீரர், தேசியத் தலைவரின் ஈக நெறிக்கு, உடன்நின்ற அவர் தாயை இந்த நேரத்தில் நாம் நினைவு கூற வேண்டும்.
வீரமும், தியாகமும், சீலமும் கொண்ட பலர், தம் உயிரையே திரியாக்கி ஏற்றிய சுடர், எம்மினத்தின் விடுதலை வாழ்வுக்கு என்றென்றும் வழிகாட்டும். அச்சுடரோடு சுடராய்க் கலந்த பல உறவுகளில் ஒருவரான தமிழ்த் தேசியத் தாயின் ஈகத்தை யாம் நன்றியுடன் நினைவிலிருத்துகிறோம்.
தமிழர் யாரென்று தமிழருக்கும், உலகினருக்கும் ஒருங்கே தெரிவித்து, தமிழ் கூறும் நல்லுலகம் உய்விக்க உழைத்த தேசியத் தலைவரை நமக்குத் தந்ததினாலேயே நாம். பார்வதியம்மாளுக்குப் பெருங்கடன் பட்டுள்ளோம். அவர் தம் கடமை முடித்து விண்ணுலகெய்தினாலும், நமக்குக் கையளிக்கப்பட்ட இன விடுதலைக் கடமையை, அறிவாயுதம் ஏந்திச் சாதிக்க தமிழ்ப் பிள்ளைகள் நாம். உளகத்தியுடன் உழைப்போமென்று உறுதியளிப்பதே அவருக்கு நாம் செய்யத்தக்க உண்மையான புகழ் வணக்கம்.
தமிழ்த்தேசியத்தாய் வே.பார்வதியம்மாள் பிறந்த நாள்: ஆகத்து 7, 1931
திருமதி. விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா