ஆகத்து 2022
தொலைந்து கனவாயிற்றோ…!
வாழவைக்கும் என்றோர் எண்ணம் கொண்டு பூமித்தாயை தொட்டு வணங்கி வாழ்வொன்றை தொடங்கிய நெல் விதையே செங்கதிரோன் கரம் நீட்ட நீருடன் ஆரத்தழுவி என்னை காணவா ஓடோடி வந்தாய்…
இம்மண்ணை விட்டு அத்தருணம் உன் அழகு கொள்ளையழகன்றோ உன்னிடம் விடைபெற்றுக் கொள்ளும் தருணங்கள் மனது சஞ்சலம் கொள்ளுமே ஆறு திங்கள் உனை காணத் துடித்தும் இன்றல்லவோ உணை காண வந்தேன்…
கண் பார்ப்பவை யாவும் எனதென்றாகாதோ என்றல்லவா ஆசை கொண்டேன் பசுமை நிறப் போர்வை ஒன்றோடு போர் தொடுக்கிறது என் மனம் உன் அழகில் மனதை கொன்றுவிட்டு சிரம் அசைத்து சிரிக்கிறாய்…
உன்னிடம் தோற்றுவிட்ட என்னைப் பார்த்து இடையை ஒடித்து தலையைக் கவிழ்த்து எனை கண்ட போது நாணம் கொண்டாயோ
ஓ… உன் பெயரைக் கேட்டதால் வெட்கத்தில் தலைகுனிந்தாயோ நெற்கதிர் என சொல்லிவிட்டு அவ்வழகை காண கோடி கண் வேண்டுமென்பேன்…
அதனால் என் சிந்தை மயங்கி உன்வசம் ஆயிற்றோ மழையோடு உரையாடும் நீ என் கைகோர்த்து ஆட வா
என் விழி சிந்தும் விழிநீர் காண முடியாமல் கண்பட்ட தூரம் விட்டு ஒளிந்து கொண்டாயோ…
மீண்டுபொருமுறை திரும்பாத நாளெண்ணி கால்கள் பின்னோக்கி நடை போடுமுன்னே மனதோடு ஒன்று நினைத்துக் கொண்டு உரையாடல் தொடர்கின்றேன் உன்னில் தொலைந்த மனதோடு வானுயர் மனைகளுடன்…
திருமதி. அனு,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.